சனி, 26 அக்டோபர், 2019

வியப்பூட்டும் வாக்குறுதிகள்

வியப்பூட்டும் வாக்குறுதிகள்

தேர்தல் திருவிழாக் காட்சிகளும் தலைவர்களின் கதைகளும் கட்சிகளின் அறிக்கைகளும் சிரிப்பைத் தருகின்றன.காலங்கள் மாறினாலும் இந்தக் காட்சிகள் மாறவில்லை.அதாவது எதிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதே பொருளாகும்.
இதனால்தான் இலங்கையில் இனப்பிரச்சினை உள்ளிட்ட எந்தப் பிரச்சினையும் தீர்க்க முடியாமலிருக்கின்றன. எளிய உண்மை என்னவென்றால், இலங்கையின் இனப்பிரச்சினை தொடக்கம் பொருளாதாரப் பிரச்சினை வரையில் உள்ள அத்தனை பிரச்சினைகளும் மேலும் வளர்ந்து முள்ளாகச் சடைத்துக் கொண்டேயிருக்கின்றன. இதைத் தீர்ப்பதற்கு ஆத்ம சுத்தமான முறையில் முயற்சிகளை எடுத்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது.
ஆனாலும் அரசியல்வாதிகள், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் திரும்பத் திரும்ப நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளோடு வருகிறார்கள். “இதைப் பற்றி மக்கள் என்ன சிந்திப்பார்களோ” என்று எந்தவிதமான அக்கறையோ கூச்சமோ இல்லாமல் மறுபடியும் மறுபடியும் அதே வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டு நமக்கு முன்னே வருகிறார்கள் என்றால், இப்படி வரக்கூடிய துணிச்சலை இவர்களுக்குக் கொடுத்தது வேறு யாருமல்ல. நாம்தானே!
எளியதொரு உதாரணம், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் என்று எத்தனை தடவை சொல்லி விட்டன இக்கட்சிகள்? இப்படிச் சொன்னதற்கு அமைய, வாக்குறுதிகளை வழங்கியதற்கு ஏற்ப இவை விசுவாசமாகப் பின்னர் செயற்பட்டுள்ளனவா? அப்படிச் செயற்படவில்லை என்றால் இவற்றை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது? 
இன்றுள்ள தலைவர்கள் எத்தனையோ தடவை இதைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஏராளம் வாக்குறுதிகளை நமக்குத் தந்திருக்கிறார்கள். இவர்கள்தான் ஐம்பது ஆண்டுகளாக (அரை நூற்றாண்டு காலமாக) மாறி மாறி அரசியல் அதிகாரத்திலிருக்கிறார்கள். தீர்மானிக்கும் நிலையிலிருக்கிறார்கள்.  இவர்களால் இந்த ஐம்பது ஆண்டுகளாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியவில்லை என்றால் இதை நாம் எப்படிப் பார்ப்பது? எப்படிப் புரிந்து கொள்வது? இனியும் இதைப் பற்றி பேசுவதற்கான தகுதி இவர்களுக்கு உண்டா? இனியும் அரசியலில் இவர்களை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது? 
ஏனெனில் தங்களுடைய கடந்த காலச் செயற்பாடுகளின் மூலமாக தங்களைத் தவறானவர்கள் என்று இவர்களே நிரூபித்திருக்கிறார்கள். தங்களின் பலவீனங்களையும் தகுதியின்மையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
கடந்த காலத்தில் இவர்கள் இந்த நாட்டு மக்களாக எங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை எடுத்துப் படித்துப் பார்த்தால் புரியும். 
காலமாற்றங்கள் என்பது சமூக வளர்ச்சியினாலேயே அடையாளப்படுத்தப்படும். சமூக வளர்ச்சி என்பது ஒரு தீப்பொறியைப் போன்றது. அது நிச்சயமாக ஒரு போது ஒளிகொண்டெழும். அதுவரையில் இந்த மாதிரியான சீரழிந்த நிலையே நீடிக்கும். அந்த நிலை இந்த மாதிரியான அரசியல்வாதிகளுக்கும் தவறான அரசியலுக்கும் வாய்ப்பாகும்.
இதை நாம் மேலும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், நம்முடைய பிரச்சினைகள் எதுவும் தீராதிருப்பதற்குக் காரணம் நாமும்தான் என்ற புரிதல் (பிரக்ஞை) நமக்கு வேண்டும். ஆனால், இதைப்பற்றி நாம் கவலைப்படுவதே கிடையாது.
ஆனாலும் அவ்வப்போது இதையெல்லாம் கண்டு கோபப்படுகிறோம். சலித்துப் பேசுகிறோம். பிறகு வேறு வழியில்லை என்று சொல்லிக் கொண்டு இவர்களுக்கே வாக்களித்து விட்டு வருகிறோம். இது நம்முடைய இயலாமையின் வெளிப்பாடா? அல்லது அறியாமையின் விளைவா? இதிலே சிங்களத் தலைவர்கள்தான் ஏதோ தவறானவர்கள், வாக்குறுதிகளைச் செயற்படுத்தாதவர்கள் என்றில்லை.  தமிழ்த் தலைவர்களும் தமிழ்க் கட்சிகளும் இதிலே சேர்த்தி.
2009க்குப் பிறகு வருகின்ற எல்லாத் தேர்தல்களிலும் போர் வெற்றி அரசியல் முதலீடாக்கப்படுகிறது.
விவசாயிகளின் கடன்களை ரத்துச் செய்வேன் என்கிறார் கோட்டாபய. விவசாயிகளுக்கு வேண்டியளவுக்கு மானியங்களை வழங்குவேன் என்கிறார் சஜித். நாட்டின் பாதுகாப்புக் கவசமாக இருப்பேன் என்கிறார் கோட்டாபய. பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்க மாட்டேன் என்கிறார் சஜித். புதிய பொருளாதாரத் திட்டங்களை உருவாக்குவேன் என்கிறார் கோட்டாபய. சம்பளத்தையே வாங்க மாட்டேன் என்கிறார் சஜித்.
இப்படி ஆளாளுக்கு மாறி மாறி ஏராளம் வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது இந்த ஜனாபதிபதிப் பதவி என்பது ஏதோ கடவுளுக்கு நிகரானது. சர்வ வல்லமை பொருந்தியது. எல்லா நோய்களுக்கும் நிவாரமளிக்கக் கூடிய சர்வரோக நிவாரணி போலவே படுகிறது.   இதொன்றும் புதிதல்ல. இதற்கு முன்பிருந்தவர்களுக்கு எந்த வகையிலும் குறைந்தவர்களில்லை இவர்களும் என்பதையே இவர்களுடைய கடந்த காலமும் எங்களுக்கு நிரூபித்திருக்கிறது.
 வந்தாலும் வந்தது ஜனாதிபதித் தேர்தல். இந்தத் தேர்தலையொட்டித் தினமும் ஏராளம் ஏராளம் வேடிக்கைக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் இருபத்தைந்து நாட்கள் இருக்கின்றன. அதற்கிடையில் இன்னுமின்னும் ஏராளம் காட்சிகளைப் பார்க்கலாம். ஆனால், இந்தக் காட்சிகள் ஒன்றும் முன்னரைப்போல இலகுவாகக் கடந்து செல்லக் கூடியனவல்ல. அல்லது இலகுவில் மறந்து விடக் கூடியனவாகவும் இருக்காது.
நன்றி :கருணாகரன்.தினகரன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள