இலங்கை போர்க்குற்றங்களை கட்டவிழ்த்து தமிழர்களை கொன்றழித்தது ராஜபக்ச அரசு - ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொலை செய்யப்பட்டது குறித்த விசாரணையில் என்ன நடக்கக் கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் எதிர்பார்த்தார்களோ அது தான் நடந்திருக்கின்றது.
போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்த முடியாது என்று இலங்கை அறிவித்திருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
கடந்த 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கைப் போரில் அனைத்துப் போர்க்குற்றங்களையும் கட்டவிழ்த்து விட்ட இராஜபக்சே அரசு, ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமாக தமிழர்களை கொடூரமாக கொன்றழித்தது.
தமிழர்கள் படுகொலைக்கு நீதி விசாரணை கோரி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வந்த நிலையில், அதுகுறித்து ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணை நடத்துவதற்கான தீர்மானம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அவ்விசாரணைக்கு இலங்கை தரப்பில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்ட நிலையில், அவற்றைக் கடந்து விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது.
அந்த விசாரணையில் தெரியவந்த குற்றச்சாற்றுகளை விசாரித்து தீர்ப்பளிக்க பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும், தமிழர் அமைப்புகளும் வலியுறுத்தியிருந்தன.
ஆனால், அதற்கு மாறாக பன்னாட்டு நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுனர்கள் அடங்கிய இலங்கை நீதிமன்றமே இதுபற்றி விசாரிக்கும் என இலங்கை உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்த தீர்மானம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பரில் நிறைவேறியது.
அதனடிப்படையில் கலப்பு நீதி விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில வாரங்களிலேயே அதை ஏற்க முடியாது என்றும், முழுக்க முழுக்க இலங்கை நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களைக் கொண்ட நீதிமன்றம் தான் விசாரணை நடத்தும் என்றும் இலங்கை அரசு பிடிவாதம் பிடித்தது.
ஆனால், உலக நாடுகளின் வலியுறுத்தல் காரணமாக, போர்க்குற்றங்கள் பற்றி எத்தகைய விசாரணை நடத்துவது என்பது குறித்து மக்களின் கருத்துக்களை அறியும் நோக்குடன், மொத்தம் 13 உறுப்பினர்களைக் கொண்ட வல்லுனர் குழுவை 26.01.2016 அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைத்தார்.
ஓராண்டாக விசாரணை நடத்திய இக்குழு நேற்று முன்நாள் அதன் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது.
அதில் இலங்கை அரசின் விசாரணை மீது வடக்கு மற்றும் கிழக்கு மாநில மக்களும், பிற பகுதிகளில் உள்ள மக்களில் ஒரு பிரிவினரும் நம்பிக்கையின்றி இருப்பதால், பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றம் தான் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.
ஆனால், இந்த பரிந்துரையை ஏற்க இலங்கை அரசு மறுத்து விட்டது. அரசின் சார்பில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் பரிந்துரைகளை ஏற்பதும், ஏற்காததும் அரசின் விருப்பம் இந்த பரிந்துரைகளை ஏற்க முடியாது என்பதால் நிராகரிக்கிறோம் என்று அரசின் செய்தித் தொடர்பாளர் ரஜித செனரத்ன கூறியிருக்கிறார்.
பன்னாட்டு நீதிபதிகள் கொண்ட நீதிமன்றம் தான் போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்ற பரிந்துரையை இலங்கை நிராகரிப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் இராஜபக்சே அதிபராக இருந்த போது, பன்னாட்டு விசாரணை குறித்து அரசுக்கு பரிந்துரைக்க கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரணகம தலைமையில் குழு அமைத்தார்.
பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றம் தான் போர்க்குற்ற விசாரணையை நடத்த வேண்டும் என்று நீதிபதி மேக்ஸ்வெல் பரணகம குழு பரிந்துரைத்த நிலையில், அதை ஏற்க இலங்கை அரசு மறுத்து விட்டது.
இப்போது வல்லுனர் குழு அளித்த இரண்டாவது பரிந்துரையையும் இலங்கை அரசு நிராகரித்து விட்டது.
இதன் காரணமாக, இலங்கை அரசின் மீதான போர்க்குற்றங்கள் பற்றி இனி உள்நாட்டு நீதிமன்றமே விசாரணை நடத்தும். இந்த விசாரணையில், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது.
அதுமட்டுமின்றி, தமிழர்களை திட்டமிட்டு படுகொலை செய்த போர்க்குற்றவாளிகள் அனைவரும் தப்பி விடுவார்கள். இதைத் தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும், பொறுப்பும் இந்திய அரசுக்கு உள்ளது. இலங்கை போர்க்குற்றங்கள் மீதான நீதிவிசாரணை குறித்த இறுதி அறிக்கையை தாக்கல் செய்வதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டம் பிப்ரவரி 27&ஆம் தேதி முதல் மார்ச் 24&ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்துவதாக மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வந்த நாடுகளில் இலங்கையும் ஒன்று. ஆனால், தனது தீர்மானத்தை தானே மதிக்காத இலங்கையிடம் பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்தும்படி மீண்டும் மீண்டும் கெஞ்சுவதில் எந்த பயனுமில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
எனவே, இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகள் குறித்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அல்லது அதற்கு இணையான அதிகாரம் கொண்ட நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை வரும் கூட்டத்தில் இந்தியா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என இவ்வாறு கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள