சனி, 27 பிப்ரவரி, 2010

அதிகாரப்பகிர்வை நோக்கமாகக் கொண்ட அரசியலமைப்பு மாற்றத்துக்கு மில்லிபான்ட் அழைப்பு



 

உலகத் தமிழர் அமைப்பின் லண்டன் மாநாட்டில் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் கலந்துகொண்டதையிட்டு இலங்கை அரசாங்கம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருக்கும் அதேவேளை, பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுண் மாநாட்டில் பங்கேற்ற தூதுக் குழுவினரை சந்தித்திருக்கிறார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை பிரிட்டனின் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் உலகத் தமிழர் அமைப்பின் மாநாடு இடம்பெற்றது. இந்த மாநாட்டிற்கு உலகின் பல நாடுகளிலிருந்தும் வருகைதந்திருந்த தூதுக் குழுவினரை பிரதமர் கோர்டன் பிறவுண் சந்தித்ததாக பி.பி.சி. செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது.இந்த மாநாட்டில் ஆரம்ப உரையாற்றிய பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட், அதிகாரப் பகிர்வை நோக்கமாகக் கொண்ட அரசியலமைப்பு மாற்றங்களை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

உலகத் தமிழர் அமைப்பின் மாநாட்டில் டேவிட் மில்லிபான்ட் ஆற்றிய உரை வருமாறு:பாராளுமன்றத்திற்கு வருகைதந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நல்வரவேற்பளிக்க நான் விரும்புகிறேன். இதனை மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வாக நான் கருதுகின்றேன். 14 நாடுகளிலிருந்து மக்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருக்கின்றனர். இது பாரியதொரு வெற்றியாகும். உலகளாவிய ரீதியில் பரவியிருக்கும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் சுவாசத்தின் வெளிப்பாடாக இது காணப்படுகிறது. இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகள், எதிர்பார்ப்புகள் என்பவற்றுக்கு சேவையாற்றக்கூடிய ஐக்கியம் குறித்ததாக இந்த மாநாடு அமையுமென்று நான் எதிர்பார்க்கிறேன்.

இலங்கையுடன் பிரிட்டன் கொண்டிருக்கும் உறவு முறையின் வரலாற்றை அடையாளப்படுத்துவதாக இந்த மாநாடு காணப்படுகிறது. அருட்தந்தை இம்மானுவேல் இதனைப் பற்றிப் பேசியுள்ளார். வரலாற்றியலாளர்கள் மட்டுமன்றி, தமிழர்களும் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்வதற்கான தருணமாக இது காணப்படுகிறது. இலங்கையின் எதிர்காலத்திற்கான குறிப்பிடத்தக்க தருணமாக இது நோக்கப்படுகிறது. இலங்கையின் எதிர்காலம் தொடர்பான பிரிட்டனின் விவாதத்தில் சிறப்பான பங்களிப்பை ஆற்றிய மூன்று உறுப்பினர்கள் எனது பக்கத்தில் இங்கு காணப்படுகின்றனர். வீரேந்திரசர்மா,கீத்வாஸ்,ஷியோபாயின் மக்டொனா ஆகிய மூவரும் இலங்கையர்களின் உரிமைகளை தீவிரமாக நியாயப்படுத்துபவர்களாவர். அரசாங்கங்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பது மாத்திரமன்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆற்றிய பணிகளையும் சமூகக் குழுக்கள் ஆற்றும் பணிகளையும் அங்கீகரிப்பது முக்கியமாகும். சமூகக் குழுக்களில் சில தமிழர்களால் உருவாக்கப்பட்டவையாகும். ஏனையவை தேவாலயங்களால் அமைக்கப்பட்டவை. இலங்கையின் துன்ப நிலையை பார்த்திருந்த பிரிட்டிஷ் மக்கள் குழுவினர் அதற்குப் பதிலளிக்க வேண்டுமென விரும்பியிருந்தனர். அரசாங்கத்தின் தலைமையில் வழிநடத்தப்படும் இயக்கமாக அல்லாமல், பிரிட்டனிலுள்ள தாழ்ந்த மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் இயக்கமாக இதனை நான் கருதுகிறேன்.

உலகத் தமிழர் மன்ற அமைப்பின் அத்திவாரம் குறித்து நான் பேசுவதற்கு விரும்புகிறேன். சர்வதேச மட்டத்திலான இந்தப் பணியை ஆரம்பிப்பது அரசியலுக்கு மிகவும் முக்கியமான தருணமாகும். யாவற்றுக்கும் மேலாக இலங்கையிலுள்ள சகல அரசியலுக்கும் முக்கியமான தருணமாக இது காணப்படுகிறது. ஏனென்றால் அரசியல் உரிமைகளை நிலை நிறுத்தக் கூடிய அரசியல் ரீதியாகக் குரல் கொடுப்பதற்கான பதிலீட்டுத் தன்மையான பொருளொன்றும் காணப்படவில்லை. தமது பெயருக்கும் தமக்கும் எதிராக இடம்பெற்ற வன்முறைகளுக்கு அவர்கள் செலுத்திய விலை குறித்து தமிழர்களுக்குத் தெரியும். உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துவிட்டது. ஆனால், உள்நாட்டில் சமாதானம் இன்னமும் கட்டியெழுப்பப்பட வேண்டியுள்ளது. சமத்துவமானதும் நீடித்ததுமான அரசியல் சிவில் சமாதானத்தை இறுதியாக எட்டுவதற்கான அர்ப்பணிப்புடன் இந்த உலகத் தமிழர் அமைப்பு உள்ளது. சமாதானத்தை கட்டியெழுப்புவது எம் யாவருக்கும் பரீட்சையாக அமையும்.

அகிம்சைக் கொள்கைக்கு ஆதரவளிப்பது மட்டுமன்றி, அதனை உறுதியாக முன்னெடுப்பது என்பது பற்றிய உங்களின் உறுதியான தீர்மானத்தை நான் பாராட்ட விரும்புகிறேன். ஆயுதங்கள் ஊடாக இறுதியான சமாதானம் எட்டப்படுவதில்லை என்பதை வரலாறு எமக்குக் காட்டியுள்ளதாக நான் நினைக்கின்றேன். அரசியல் ஊடாகவே இறுதிச் சமாதானத்தை எட்ட முடியும் என்பதை வரலாறு எமக்குக் காட்டியுள்ளது. இதனை எமது ஐக்கிய இராச்சியத்திலேயே நாம் பார்த்திருக்கின்றோம். குறிப்பாக வட அயர்லாந்து மாகாணத்தில் நாம் இதனைக் கண்டிருக்கிறோம். இந்தப் பாதை மிகவும் நீண்டதாகும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. பற்றுறுதியான ஆதரவை வெளிப்படுத்துவது மாத்திரமன்றி, முழு அளவில் சகல தரப்பையும் உள்வாங்கிக் கொள்ளும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியமானதாகும். அகிம்சா வழியிலான ஆதரவு மூலம் இதனை வென்றெடுப்பது அவசியமாகும். இந்த விடயம் தமிழ் மக்களின் மத்தியில் ஆழமாகக் காணப்படும் பெறுமானங்களாகும்.

நான் ஏன் இங்கு வந்துள்ளேன் என்பதை சில சமயங்களில் சொல்லக்கூடும். இந்த முக்கியமான சந்திப்பு லண்டனில் இடம்பெறுகின்றதென்பதால் மட்டும் நான் இங்கு வரவில்லை. இலங்கை விவகாரங்கள் தொடர்பாக இறுதியான சமாதானத்தை எட்டுவதே இங்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைகிறது. பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆழமான பிணைப்புகள் உள்ளன. இலங்கையின் எதிர்காலமானது தெற்காசியாவின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானதாகும்.

26 வருடங்களாக இலங்கையின் சகல மக்களுமே உள்நாட்டு யுத்தத்தினால் துன்பமடைந்திருந்தனர். சகல சமூகங்களும் பாதிக்கப்பட்டிருந்த அதேசமயம், தமிழ்ச் சமூகம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததை நாம் அறிவோம். மோதல் தருணத்தில் தினமும் தமது வாழ்வுக்காக தமிழர்கள் அச்சத்துடன் இருந்து வந்தனர். விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் அகப்பட்டிருந்த தமிழர்களில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதை நாம் அறிவோம். சகல சமூகங்களையும் சேர்ந்த 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் அங்கவீனராகியும் உள்ளனர்.

பொதுமக்கள் இடம்பெயர்ந்ததையும் தனிப்பட்டவர்களும் பிள்ளைகளும் குடும்பத்தினரைவிட்டுப் பிரிந்தமையையும் வீடுகளும் வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டிருந்தமயையும் நாமறிவோம். பிரிட்டிஷ் தமிழர்கள் இந்த நாட்டிற்கு ஆற்றி வரும் பங்களிப்பையிட்டு நாம் பெருமையடைகின்றோம். நீங்கள் எமது அயலவர்கள்,எமது நண்பர்கள், எமது உறவினர்களாக உள்ளீர்கள். வர்த்தகம்,அரசியல் என்பவற்றில் நீங்கள் ஆற்றும் பங்களிப்பையிட்டு நாம் பெருமை கொள்கிறோம்.

தமிழர்கள் அச்சத்துடன் இருந்தார்கள். சிலர் தமது நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். அத்துடன், நீங்கள் புலிகளின் நிழலில் இருந்தீர்கள் என்பனவற்றைப் பற்றிக் கூறுவது முக்கியமானதாகும். பயங்கரவாத அமைப்பான புலிகள் எண்ணிக்கையற்ற அராஜகங்களை மேற்கொண்டிருந்தனர்.புலிகள் அமைப்பு கருத்து பேதம் உள்ளவர்களை

சகித்துக் கொள்வதை மறுத்துவந்தது. பலவந்தமாக சிறுவர்களை படைக்குச் சேர்த்திருந்தது. மோதலிலிருந்து தமிழ்ப் பொதுமக்கள் தப்பிச் செல்வதற்கு அனுமதியளிக்க மறுத்திருந்தது. இந்த விடயங்களைப் பற்றிக் கூறுவதும் முக்கியமானதென நான் நினைக்கின்றேன்.

தற்போது முன்னாள் மோதல் வலயத்தில் கண்ணிவெடிகள் காணப்படுவதை நாம் அறிவோம். அப்பகுதிகளில் உள்சார் கட்டமைப்பு குறைவாகவுள்ளது. மின்சாரம் இல்லை, நீர்ப்பாசனம் இல்லை, ஏனைய மாகாணங்களிலும் பார்க்க தமிழ்ப் பகுதிகளில் வறுமை வீதம் இரு மடங்காகவுள்ளது. உள்நாட்டு யுத்தம் முடிந்த பின்னர் இலட்சக்கணக்கான தமிழர்கள் இடம்பெயர்ந்தனர். இப்போதும் சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் முகாம்களில் உள்ளனர். கண்ணியமான மனிதர்களாக தம்மை நடத்த வேண்டுமென அவர்கள் விரும்புவதாக எனக்குக் கூறியிருந்தனர். தமது வாழ்க்கை கண்ணியமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர். இந்த விடயமே என்னையும் பிரதமரையும் அரசாங்கத்தையும் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டிற்கு தள்ளிவிட்டுள்ளது. இலங்கையிலுள்ள ஏனையவர்கள் போன்று தமக்கும் கண்ணியமான வாழ்க்கை கிட்ட வேண்டுமென்பது தமிழர்களின் அபிலாசையாகும்.

மனிதாபிமான நெருக்கடியின் பரிமாணம் இந்தளவிற்கு இருப்பதற்கு மத்தியில் இந்த விடயம் குறித்து நாம் கவனம்செலுத்த வேண்டிய தேவை அவசரமாகக் காணப்படுகிறது. அதேசமயம், நீண்டகால அடிப்படையிலான தேவைகள் குறித்து நாம் மறந்துவிடக்கூடாது. இலங்கையின் எதிர்காலம் பற்றிக் கவனம் செலுத்துவோர் எவ்வாறாகயிருப்பினும் பொருளுதவியினால் மட்டும் அவர்களின் தேவையை நிறைவேற்ற முடியாதென்பதை அறிந்துகொள்ள முடியும். புதிய அரசியல் இணக்கப்பாடு மூலமே இதனைக் கட்டியெழுப்ப முடியும். உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், பாராளுமன்றத் தேர்தல்கள் தொடர்பாக நாங்கள் எதிர்பார்ப்புடன் உள்ளோம். தேசிய நல்லிணக்கத்தை நோக்கிச் செல்வதற்கு தனக்குக் கிடைத்த மக்களாணையை ஜனாதிபதி பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு இலங்கையரினதும் உரிமைகளுக்கும் மதிப்பளித்து மேற்கொள்ள வேண்டிய கடப்பாடுகளை உண்மையான முறையில் நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பு மற்றும் இதர துறைகளில் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்.

சகல இலங்கையரினதும் உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்கான பாரிய முயற்சியை முன்னெடுப்பதற்கான தேவையுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 26 உறுப்பு நாடுகள் கொண்டிருக்கும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் சாசனத்தை அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். இலங்கைக்கான ஜி.எஸ்.பி.+ வரிச் சலுகைகளை இடைநிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் சிபாரிசு செய்திருந்தது. நாங்கள் அதனை ஆதரித்திருந்தோம். வர்த்தகமும் விழுமியங்களும் ஒன்றுடனொன்று தொடர்புபட்டவையாகும். அந்த விழுமியங்களானவை அரசியல் சிவில் உரிமைகள் சம்பந்தப்பட்டவை. வன்முறைகள்,தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் என்பன பற்றி நாம் கவலையடைந்திருந்தோம். அத்துடன், ஜனாதிபதி வேட்பாளராக நின்றவர் கைதுசெய்யப்பட்ட விவகாரமும் முக்கியமானதொன்றாகும். கைதுசெய்யப்பட்டிருக்கும் அவர் இலங்கைச் சட்டத்தின் பிரகாரம் நடத்தப்பட வேண்டும்.

வரலாறானது ஒரு முக்கியமான விடயசாகக் காணப்படுகிறது. எமது வரலாற்றிலேயே நாம் இருக்க முடியாது. ஆனால், வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். மீள்நல்லிணக்கம் ஒருபோதுமே இடம்பெறாவிட்டால் வரலாறானது புதைகுழிக்குள் தள்ளப்பட்டிருக்கும். அண்மையில் நெல்சன் மண்டேலா விடுதலையான 20 வருட நிறைவு தினத்தை நாம் கொண்டாடினோம். இது வரலாற்று ரீதியாக தென்னாபிரிக்கா கற்றுக்கொண்ட பாடத்தின் முக்கிய அம்சமாக விளங்குகிறது. அதனாலேயே சர்வதேச மனிதாபிமான சட்டத்தை இரு தரப்பினரும் மீறிய குற்றச்சாட்டுக் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாம் கோரிக்கை விடுப்பதற்கான காரணமாகக் காணப்படுகிறது.

பாரதூரமான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு நாம் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்து வருகிறோம். சுயாதீனமானதும் நம்பகரமானதுமான விசாரணைகள் இடம்பெற்றால் அந்த முயற்சிகள் இலங்கைச் சமூகங்களுக்கிடையில் மீள்நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முக்கியமான பங்களிப்பை வழங்கும்.

இன்று சிவில் அரசியல் உரிமைகள் பற்றிய கவலையை நான் கூறியுள்ளேன். இடம்பெயர்ந்தவர்கள் பற்றிய கவலை பற்றியும் குறிப்பிட்டுள்ளேன். இலங்கையில் சகல தரப்பினரையும் உள்ளீர்த்த அரசியல் நடவடிக்கைகளின் தேவை பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். பிரிட்டிஷ் அமைச்சரொருவர் இதனை எப்போதாது கூறுகிறாரோ அப்போது நாங்கள் தமது சொந்த விவகாரங்களை எவ்வாறு நடத்த வேண்டுமென இலங்கைக்குக் கூறுவதாக எம்மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. அதனை நான் மிகவும் தெளிவான முறையில் நிராகரிக்கிறேன். இலங்கை மக்களுக்கான எந்தவொரு எதிர்கால அரசியல் இணக்கப்பாட்டிற்கும் இந்த விடயம் மிகவும் முக்கியமானதாகும். இலங்கை மக்கள் தமது உரிமைகளை அடையாளம் கண்டுகொள்வதற்கும் இது அவசியமானதாகும். சிறுபான்மையினரின் உரிமைகளும் இதில் உள்ளடங்கியுள்ளன. இந்த விடயத்தை தீர்மானிப்பது அவர்களைப் பொறுத்தவிடயமாகும். ஆனால், உலகளாவிய மனித உரிமைகளுக்காக நாம் தொடர்ந்தும் ஆலோசனைகளைக் கூறிவருவோம். இந்த உலகளாவிய மனித உரிமைகள் ஜனநாயகத்திற்கு மட்டும் அடிப்படைக் காரணியாக அமைந்திருப்பது மாத்திரமன்றி, எங்குமுள்ள கண்ணியமான சமூகங்களுக்கும் இவை மிகவும் முக்கியமான விடயங்களாகக் காணப்படுகின்றன. பின்வரும் விடயத்துடன் எனது உரையை நிறைவுசெய்ய விரும்புகிறேன். அரசியலானது அரசாங்கங்களைப் பற்றிய விடயமாகும். அத்துடன், அது மக்களைப் பற்றியும் சமாதானமான எதிர்காலத்திற்காக முயற்சிக்கும் மக்களைப் பற்றியதுமான விடயமாக இது உள்ளது. அத்துடன், சமாதானமான எதிர்காலத்தை நாடும் உலக மக்களைப் பற்றியதாகவும் இந்த விடயம் காணப்படுகிறது. இன்றைய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த குழுவானது ஜனநாயக ரீதியிலான குழுவாகும்.

உலகளாவிய ரீதியில் காணப்படும் தமிழ்ச் சமூகங்களின் செயற்பாட்டுத் திறனுடனான ஈடுபாடே அரசியல் நல்லிணக்கத்திற்குத் தேவைப்படுகின்றதென்பது எனது கருத்தாகும். அகிம்சா வழியிலான தங்களின் விழுமியங்கள் பற்றி பேசுவதற்கான தேவை அவர்களுக்குக் காணப்படுகிறது. தனது சகல மக்களையும் மதிக்கும் கண்ணியமான இலங்கை என்ற தொலைநோக்குப் பற்றி நீங்கள் பேசுவதற்கான தேவை காணப்படுகிறது. ஒன்று சேர்ந்து வாழ்வதற்கான வழிமுறைகளை மக்கள் கண்டறிந்து கொள்ளாவிடின் அவர்கள் பகுதி பகுதியாக சிதறுண்டு விடுவார்கள்.

இந்த உறுதிப்பாடுகள் சொல்வதற்கு இலகுவானவை. பிரிட்டன் போன்ற ஜனநாயக நாடொன்றிலிருந்து கொண்டு சௌகரியமான முறையில் கூறுவது இலகுவானதாகும். ஆனால், இலங்கையர்களுக்காக எமது உறுதியான ஆதரவுடன் நாம் இதனைக் கூறுவது மிகவும் முக்கியமானதாகும். அதாவது இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் அதில் உள்ளடங்கியுள்ள உறுதிப்பாடுகளுக்கிணங்க வாழவிரும்புவோர் பீதி,அச்சமின்றி வாழும் நிலையேற்படுவதற்கு ஒவ்வொரு பிரஜையினது உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மிகவும் அவசியமாகும். சமத்துவம்,ஜனநாயகத்திற்கான போராட்டமானது சகல இலங்கையரையும் ஒன்றுபடுத்துவதாக அமைய வேண்டும். உலகளாவிய ரீதியிலுள்ள சகல அரசாங்கங்களையும் ஐக்கியப்படுத்துவதாக இருக்க வேண்டும். பிரிட்டிஷ் அரசாங்கம் அதனை மேற்கொள்ளுமென அரசின் சார்பாக நான் இது தொடர்பாக உறுதியளிக்கின்றேன்.


1 கருத்து:

  1. எத்தனை ஆயிரம் மைல்களுக்கப்பால் இருப்பவர்களுக்கு விளங்குது,அருகில் இருக்கும் நமது இந்தியாவுக்கு ஏன்? விளங்குவதில்லை

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துரைகள