ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை அரசாங்கம் கைது செய்யாமல் விட்டிருந்தால் அவரைப் பற்றி நாட்டு மக்கள் பெருமளவுக்குப் பேசாமல் இருந்திருக்கக்கூடும். ஊடகங்களில் தலைப்புச் செய்திகளை அவர் ஆக்கிரமிப்புச் செய்வதற்கு வாய்ப்பும் இருந்திருக்காது. அத்துடன் அவரைப் பொதுவேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்திய எதிரணிக் கட்சிகளுக்கு ஆர்ப்பாட்டங்களைச் செய்வதற்கு ஆரவாரமான ஒரு கோஷம் கிடைக்காமல் போயிருக்கவும் கூடும். அரசாங்கம் ஜெனரல் பொன்சேகா விவகாரத்தைக் கையாளுகின்ற முறை அரசியல் ரீதியில் நோக்குகையில் விவேகமுடையதாக இல்லை என்பதே பரவலான அபிப்பிராயமாக இருக்கிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய ஆதரவாளரான ஜெனீவாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் தயான் ஜெயதிலக பொன்சேகா விவகாரத்தை "பூரணமான பெருந்தவறு என்று வர்ணித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
எதிரணிக் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு உத்வேகமுடையவையாக இல்லை. மக்களை அணிதிரட்டுவதில் இந்தக் கட்சிகளுக்கு இருக்கின்ற இயலாமையைத் தெளிவாகவே காணமுடிகிறது. அரசியல் மட்டத்தில் நிலைமை இவ்வாறானதாக இருந்தாலும் ஜெனரல் பொன்சேகா கைது தொடர்பில் தென்னிலங்கையில் பொதுஜன அபிப்பிராயம் மிகவும் குழப்பகரமானதாகவே இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. சிங்கள சமுதாயத்தின் கீழ்ப்பரப்பில் உறங்கிக் கிடக்கின்ற முரண்பாடுகள் வெளியில் தலைகாட்ட ஆரம்பித்திருக்கின்றன. இதன் ஒரு தெளிவான வெளிப்பாடே பௌத்த மத உயர்பீடங்களினால் பொன்சேகா கைது தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அதிருப்தியாகும். மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் உட்பட நான்கு மகாநாயக்கர்கள் முன்னாள் இராணுவத் தளபதியையும் அவரின் சகாக்களையும் தடுப்புக்காவலில் இருந்து விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் மகஜர் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். வெறுப்புணர்வை வெறுப்புணர்வினால் வெல்லமுடியாது என்றும் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஜெனரல் பொன்சேகாவினால் கூறப்பட்டிருக்கக்கூடிய விடயங்களைப் பொருட்படுத்த வேண்டாமென்றும் மகாநாயக்கர்கள் ஜனாதிபதியை வலியுறுத்திக் கேட்டிருக்கிறார்கள்.
நாட்டின் ஆட்சியாளர்களுக்கும் ஏனையவர்களுக்கும் இடையே மூண்ட தகராறுகளைத் தீர்த்து வைப்பதற்கு மகா சங்கத்தினர் புராதன காலத்தில் இருந்து கடைப்பிடித்து வந்திருக்கும் அணுகுமுறையின் அடிப்படையிலேயே ஜெனரல் பொன்சேகா விவகாரத்தில் தாங்கள் தலையிடுவதாகக் குறிப்பிட்டிருக்கும் மகாநாயக்கர்கள் மன்னன் துட்டகைமுனுவுக்கும் அவனது சகோதரன் திஸ்ஸவுக்கும் இடையேயான தகராறில் மகாசங்கத்தினர் தலையிட்டதை உதாரணமாகவும் சுட்டிக்காட்டி அதேபோன்றே அரசாங்கத்துக்கும் முன்னாள் இராணுவத் தளபதிக்கும் இடையிலான தகராறைத் தீர்த்துவைப்பதற்கு தற்போதைய தருணத்தில் தாங்கள் தலையிட வேண்டிய தேவை எழுந்திருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். மகாநாயக்கர்களின் இத்தலையீட்டைப் பொறுத்தவரை முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் தற்போதைய அரசியல் நிகழ்வுப் போக்குகள் தொடர்பில் தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்காக நாளை மறுதினம் வியாழக்கிழமை மகாசங்க உறுப்பினர்களை கண்டி தலதா மாளிகையில் உள்ள மகா மளுவ மண்டபத்தில் கூடுமாறு அவர்கள் விடுத்திருக்கும் அழைப்பேயாகும். உள்நாட்டுப் போர் உச்சக் கட்டத்தில் இருந்தவேளையில் கூட மகாநாயக்கதேரர்கள் மகா சங்கத்தினருக்கு இத்தகைய அழைப்பொன்றை விடுத்ததில்லை.
நான்காவது ஈழப்போர் என்று வர்ணிக்கப்பட்ட உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் பொன்சேகாவை அதுவும் சில மாதங்களுக்கு முன்னர் போர் வெற்றிநாயகன் என்று போற்றப்பட்ட ஜெனரல் பொன்சேகாவை அரசாங்கம் தற்போது நடத்துகின்ற முறையை மகாநாயக்க தேரர்கள் அங்கீகரிக்கவில்லை என்பது தெளிவானது என்ற போதிலும், கண்டி மகாநாட்டில் மேற்கொள்ளப்படக்கூடிய தீர்மானத்தில் அரசாங்கத்தின் தற்போதைய போக்கு தொடர்பில் மகாசங்கம் கடுமையான பொருதல் நிலைப்பாடொன்றை எடுக்குமென்று எதிர்பார்ப்பதற்கில்லை. ஆனால், ஜெனரல் பொன்சேகா விவகாரம் தொடர்பில் பௌத்த மத உயர்பீடங்களின் பிரதிபலிப்பு அரசாங்கத்துக்குப் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. தங்களது நிலைப்பாட்டை மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கிக் கூறுவதற்கான ஏற்பாடுகளில் அரசாங்கத் தரப்பினர் இறங்கியிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
மகா சங்கத்தின் தலையீட்டின் விளைவாக ஜெனரல் பொன்சேகா விவகாரத்தில் அரசாங்கம் ஒப்பீட்டளவில் ஒரு தணிவுப்போக்கை தற்காலிகமாகவேனும் கடைப்பிடிக்க நிர்ப்பந்திக்கப்படக் கூடும் என்று அரசியல் அவதானிகள் மத்தியில் அபிப்பிராயம் நிலவுகிறது. போர்க் காலகட்டத்தில் இடம்பெற்றிருக்கக் கூடிய நிகழ்வுகள் தொடர்பிலான ஆவேசப் பேச்சுக்களை அடியோடு நிறுத்தி விட வேண்டுமென்று முன்னாள் இராணுவத் தளபதியிடம் உத்தரவாதம் கோரப்படலாம் என்றும் இந்த அவதானிகள் எதிர்பார்க்கிறார்கள். எது எவ்வாறிருப்பினும், போருக்குப் பின்னரான சூழ்நிலையில் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்திற்குள்ளும் ஆட்சி அதிகார கட்டமைப்புக்குள்ளும் எல்லாவற்றிற்கும் மேலாக சிங்கள பௌத்த சமுதாயத்திற்குள் தீவிரமடையத் தொடங்கியிருக்கின்ற உள்முரண்பாடுகளையும் குமுறல்களையும் தற்போதைய நிகழ்வுப் போக்குகள் பிரகாசமாக அம்பலப்படுத்துகின்றன!
நன்றி:தினக்குரல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள