வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

"தாசுமகால்" கட்டமுதல்.....


"தாசுமகால்" கட்டமுதல் உண்மையாயுன் 
தங்கநிற மேனிக்கோர் உவமையிந்த 
ஆசியாவில் எங்கணுமே இருந்த தில்லை;
"அஜந்தாவி"ன் ஓவியத்தில் கண்டேனில்லை
வீசுமிளந் தென்றலிடை அசைந்தே ஆடி 
வீதியிலே நீபவனி போகுங் காட்சி 
தேசமெலாஞ சுற்றிடினுங் காண லாமோ?
தெரிசனந்தான் காணமல் தேய்கின்றேனே...

உண்ணாமல் இரவெல்லாம் உறங்கிடாமல் 
உனைக்கானத் தவிக்கின்ற உள்ளமொன்று 
புண்ணாகிப் பொடியாகிப் புழுக்கழூறும்
புற்றாகிப் போயிற்றே... பூவாய் இன்னும்
கண்ணாடிக் கன்னத்தால் கடைக்கண் வீச்சால்
கற்பூரங் கமழுந்தேன் கசிந்த வாயால் 
என்னோயைத் தீராத நீலி! என்னை 
எதற்காக நேசித்தாய் சொல்லு கண்ணே...

கொந்தளிக்கும் ஆழியிலோர் ஓடம்;கோரக் 
கூச்சலிடும் புலிக்காட்டில் ஒருமான் குட்டி 
வெந்தவியும் சுவாலையிலோர் விட்டில் வெய்ய 
விசநாகக் கொடுவாயில் தவளைக் குஞ்சு .....
இந்தரகப் பட்டியலில் என்றன் சீவன் 
ஏகாமல் ஓயாமல் எதிர்பார்க்கின்ற
உந்தனுக்கோர் உருகாத உள்ளம் கட்டி
உருக்காலே வார்த்ததடி சொல்லு கண்ணே...

சாகத்தான் போகின்றேன் என்னை நம்மூர்ச் 
சாலையதாற் பிணமாகக் காவிக்கொண்டு 
போகத்தான் போகின்றார் பொங்குங் கண்ணீர்ப் 
பொய்கையிலே என்னுயிர்ஓர் பூவாய்மாறும்
"ஆ"அத்தான் எனைவிட்டா   போனீர் என்று
அலறத்தான் போகின்றாய் அப்போதப்பூ 
சோகத்தால் கரிகிப்போய் வாடும் பின்னர்
சொர்க்கத்தில் வந்தா நீ என்னைக் காண்பாய்?  

கவிதையென்றால் என்னவென்று தெரியாத நேரம், இதுதான் கவிதை இப்படித்தான் எழுத வேண்டும்,பாரதியார், பாரதிதாசன், கம்பன், ஔவையார், திருவள்ளுவர் இவர்களை அறிமுகப்படுத்தி, தமிழை நன்றாகப் படிக்கவேண்டும் என்று,எனக்குத் தமிழை அள்ளியூட்டிய எனதருமை ஆசான்காலம்சென்ற திரு.பிரவுன் கிரகரி இராசதுரை இராஜ பாரதியின் இனிய கவிதைகளில் இதுவுமொன்று. தங்க மயில் விருது பெற்ற கவிதை.1980   களிற்கு முன்னர்  ஈழத்து
இலக்கிய உலகில் கொடிகட்டிப் பறந்தவர்களில் இவரும் ஒருவர்.ஈழத்துப் பூராடனார் திரு  செல்வராஜா கோபாலின் நெருங்கிய நண்பர். இவரின் படைப்புகள் ஒரு சிலதைத் தவிர எதுவுமே காணப்படவில்லை.இது ஒரு வேதனைக்குரிய நிலை.இணையதளத்தில் இவரின் பெயரில் ஒரு வரி கூடக் காணப்படாதது எனது நெஞ்சை ஏதோ செய்வது போலிருந்தது,அதற்காகத்தான் இந்தப் பதிவு . ஈழத்துக் கவிஞர்களில் இப்படி விடுபட்டுப் போனவர்களையும்,விடுபட்டுப் போன படைப்புகளையும் கண்டுபிடித்து தமிழ் இலக்கிய உலகிலும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் நிருபிக்க வேண்டும்              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள