நூற்றைம்பது வருட பூர்த்தியில் இலங்கை தேயிலை உற்பத்தி
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளுக்கு பொருந்தும். அந்தளவுக்கு மக்கள் மனங்களில் இடம்பிடித்துள்ள, அன்றாட வாழ்க்கையில் பங்களிப்பு செலுத்தி வருகின்ற தேயிலை இலங்கையில் அறிமுகமாகி 2017ஆம் ஆண்டுடன் 150 வருடங்கள் பூர்தியடைந்துள்ளன.
கமிலியா சைனேசிஸ் Camillia Sinensis Camillia Sinensis என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட தேயிலை 1867ஆம் ஆண்டு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் தேயிலையை உலகில் பயன்படுத்த ஆரம்பித்து பல ஆயிரம் வருடங்களாகின்றன. புத்தப் பெருமான் பிறப்பதற்கு 2700 ஆண்டுகளுக்கு முன்னர் தேயிலை கண்டறியப்பட்டதாக வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
வரலாற்றுக் குறிப்புக்களின் படி தேயிலையை சீன பேரரசனான சென்நுன் முதன்முதலில் கண்டுபிடித்துள்ளான். சீனாவில் திக்விஜயம் மேற்கொண்டிருந்த சென்நுன், களைப்பின் காரணமாக ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து வெந்நீர் பருகிக்கொண்டிருந்த வே
ளையில் மரமொன்றில் இருந்த காற்றில் அசைந்தாடி பறந்து வந்த மலரொன்று அவ்வெந்நீர் கோப்பையில் விழுந்ததாகவும் அதன் பின்னர் வெந்நீரில் ஏற்பட்ட சுவை மாற்றத்திற்கு பேரசன் அடிமையாகி அதனை சீனாவில் பிரபலமடையச் செய்தான் என்றும் வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இலங்கையின் பண்டைய வரலாறுகளை நோக்கும் போது பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விடயங்கள் இன்று போலவே அன்றும் பிரபலமடைந்திருந்தமையை காணலாம். பல தசாப்தங்களுக்கு முன்னர் தேயிலையை 'லிப்டனின் தேயிலைத் தோட்டம்' என்ற பெயரில் உலகில் பிரபலமடைந்திருந்த ஒரு யுகமும் காணப்பட்டது. எது எவ்வாறாயிருப்பினும் இந்தியாவுக்கு தேயிலை அறிமுகமாகி மிக நீண்டகாலத்திற்குப் பின்னரே இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இலங்கையில் தேயிலை அறிமுகப்படுத்தப்பட்ட காலம் தொடர்பில் ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு 1782ஆம் ஆண்டில் தேயிலைத் தொடர்பாக எழுதப்பட்ட குறிப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஒல்லாந்தரான கிரனஸ்டியன் புல்ப் என்பவர் எழுதிய குறிப்புக்களிலேயே தேயிலைத் தொடர்பான குறிப்புகள் காணப்பட்டன. அக்குறிப்பில் ''தேயிலை அல்லது அது சார்ந்த தாவரங்கள் இங்கு காணக்கிடைக்கவில்லை. அதனை வளர்ப்பதற்கு நாம் முயற்சித்த போதும் வெற்றி கிடைக்கவில்லை'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அக்குறிப்பு தவிர அதற்கு முன்னர் தேயிலை தொடர்பாக எழுதப்பட்ட குறிப்புகள் கிடைக்கவில்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள.
இலங்கையில் தேயிலையை பயிரிட ஒல்லாந்தர் முயன்றபோதிலும வெற்றியளிக்கவில்லை என்று 1802ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி வெளியான 'லண்டன் டைம்ஸ்' பத்திரிகையில் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இலங்கையில் தேயிலைப் பயிர் 19ஆம் நூற்றாண்டில்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதற்கு ஏற்றுக்கொள்ளத்தக்க சான்றுகள் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை.
அதற்குப் பின்னரான வரலாற்றுக் குறிப்புகளில் இலங்கையில் கோப்பிப் பயிர்ச் செய்கை மற்றும் அதன் ஆரம்பம் தொடர்பாக பல சான்றுகள் கிடைத்துள்ளன. வர்த்தகப் பயிராக அறிமுகப்படுத்தப்பட்ட கோப்பி ஒரு காலத்தில் மிகவும் முன்னேற்றமடைந்து காணப்பட்டது. எனினும் சில காலத்தின் பின்னர் கோப்பிப் பயிர்களில் ஏற்பட்ட இலை வெளிறல் நோய் (Hemileiavastatrix -coffee leaf rust) காரணமாக பயிர்கள் பாதிப்படைந்தன. இலங்கையில் கோப்பிப் பயிர்ச்செய்கை முழுமையாக நாசமடைந்தது.
இக்காலக்கட்டத்தில் கோப்பிக்கு மாற்றீடான பயிரின் அவசியம் காணப்பட்டது. இதேகாலகட்டத்தில் இந்தியாவில் தேயிலை தொடர்பில் மேலதிக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஸ்கொட்லாந்து நாட்டவரான ஜேம்ஸ் டெய்லர் 1867ஆம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் பணிநிமித்தம் இலங்கை வந்த அவர், பேராதனை தாவரவியல் பூங்காவில் இருந்து பெறப்பட்ட தேயிலை விதைகளை பெற்று அவர் பணிபுரிந்த கண்டி, பஹல ஹேவாஹெட்ட பிரதேசத்தில் உள்ள லூல்கந்து தோட்டத்தில் பயிர்செய்கைக்கு தயார் நிலையில் இருந்த 19 ஏக்கர் நிலப்பரப்பில் ஆய்வு செய்வதற்காக பயிர் செய்தார். இலங்கையில் பிரதான வர்த்தகப் பயிர்களில் ஒன்றான தேயிலைப் பயிர்செய்கையின் ஆரம்பம் இதுவாகும். பின்னைய காலத்தில் குறித்த தோட்டத்தில் சுமார் 100 ஏக்கர் அளவில் தேயிலை பயிர் செய்யப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளன (மூலம்- 20th century tea research in Sri Lanka by the Tea Research Institute of Sri Lanka)
இலங்கையில் தேயிலை பயிர் செய்யப்பட்டுள்ளன பிரதேசங்கள் - கண்டி, பதுளை, இரத்தினபுரி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, காலி, மாத்தறை, களுத்துறை
லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் ஜேம்ஸ் டெய்லர் பயிர் செய்த தேயிலை சிறந்த விலைக்கு சென்றமை இலங்கை முழுவதும் தேயிலை பயிச்செய்கையை மேற்கொள்ள காரணமாக அமைந்தது.
இன்று நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுகொடுக்கும் பல்வேறு துறைகள் உள்ளன. எனினும் இலங்கைக்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கு உற்பத்திகளில் தேயிலை நான்காம் இடத்தில் உள்ளமை தேயிலையின் முக்கியத்துவத்தை எமக்கு எடுத்தியம்புகிறது. மொத்த தேசிய வருமானத்தில் 2 வீதத்திற்கும் அதிகமாக தேயிலை ஏற்றுமதியினூடாக கிடைக்கிறது.
சிறந்த சுவையும் தரமும் வாய்ந்த இலங்கைத் தேயிலை 2015ஆம் ஆண்டில் உலக தேயிலைத் தேவையின் 6.2 வீதத்தை பூர்த்தி செய்துள்ளதுடன் சிறந்த தேயிலை உற்பத்தியில் நான்காம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது. உலகின் சிறந்த தேயிலை ஏற்றுமதி நாடுகளில் இலங்கை நான்காம் இடத்தில் உள்ளது.
புவியல் அடிப்படையில் இலங்கை தேயிலை மலைநாட்டுத் தேயிலை, மத்திய நாட்டுத் தேயிலை மற்றும் கீழ் நாட்டுத் தேயிலை என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. அதற்கமைய நாடு பூராவும் பரவிய தேயிலை உற்பத்தியானது இன்று இலங்கையின் 187,309 ஹெக்டேயரில் பயிரிடப்பட்டுள்ளது. இந்நாட்டு தேயிலை உற்பத்திக்கு 71 வீதமான பங்களிப்பை சிறு தேயிலைத் தோட்ட உற்பத்தியாளர்களே பெற்றுத் தருகின்றனர்.
ஒரு நாட்டுக்கு அந்நிய செலாவணியைப் பெற்றுத்தரும் உற்பத்திகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பாரிய பொறுப்பாகும். தனது பொறுப்பை உணர்ந்துள்ள தற்போதைய அரசாங்கம் தேயிலை உற்பத்தியை பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் மேற்கொண்டுள்ள பல பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமையை காணக்கூடியதாக இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக தேயிலை வர்த்தகத்தில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டமை கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. அதில் உலக சந்தையில் தேயிலை விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி தேயிலை உற்பத்திக்கு பெரும் சவாலாக அமைந்திருந்தது. குறிப்பாக ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சந்தையில் தேயிலையின் கேள்வி குறைவடைந்தமை எமது ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்நிலை மாறி வருவதை காணக்கூடியதாக உள்ளது என இலங்கை தேயிலைச்சபையின் தலைவர் ரொஹான் பெதியாகொட தெரிவித்துள்ளார். கடந்த 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பச்சை தேயிலை கொழுந்து ஒரு கிலோவின் விலை 360 ரூபாவாக காணப்பட்டதாகவும் இன்றைய சூழ்நிலையில் ஒரு கிலோ பச்சை தேயிலைக்கொழுந்தின் விலை 590 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரைக் காலமும் தேயிலை உற்பத்தித்துறையில் நிலவிய குறைப்பாட்டை கவனத்தில் எடுத்து தற்போது நாட்டில் அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும் தேயிலை பயிர் செய்யப்பட்டுள்ள காணிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை எழுத்து மூலமாக பதிவு செய்யப்படாத தேயிலை உற்பத்தி காணிகளை பதிவு செய்து தேயிலை உற்பத்தியில் அடையாளங்காணப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேயிலைக் காணிகள் தொடர்பாக தற்போதுள்ள சான்றுகள் என்று பார்க்கும் போது 1970ஆம் ஆண்டு எழுதப்பட்ட குறிப்பையே கூறலாம். எனினும் அதை எழுத்து மூலமான சான்றாக கொள்ள முடியாது. குறித்த பதிவு நடவடிக்கை படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் நாட்டில் அனைத்து தேயிலைக் காணிகளும் பதிவு செய்யப்படும். அதனூடாக எதிர்காலத்தில் பயிர்ச் செய்கையாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து மானியச் :சேவைகளும் இந்தக் காணிப்பதிவினூடாக வழங்கப்படும் இலக்கத்தினூடாகவே நடைபெறும். எதிர்காலத்தில் பச்சை தேயிலைக் கொழுந்தும் பெற்றுக்கொள்வதும் இப்பதிவினூடாகவே நடைபெறும். இதனூடாக நாடு முழுவதும் சுமார் ஐந்து இலட்சம் காணிகளை வரை பதிவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தேயிலை பயிர்ச் செய்கையாளர்களின் பதிவுக்கான விண்ணப்பப்படிவங்கள் நாட்டின் அனைத்து கிராம சேவகர் அலுவலகங்களினூடாக விநியோகிக்கப்படும். குறித்த விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்து அந்தந்த கிராமசேவர் அலுவலகங்களில் கையளிக்க வேண்டும்.
உள்விவகார அமைச்சின் அனுமதியுடன் இப்பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் ரொஹான் பெதியாகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
''இலங்கையில் தேயிலையினால் லாபம் இல்லை' என்பது சர்வதேசத்தினால் பொய்யாக பரப்பப்படும் வதந்தியாகும். உண்மை நிலை அதுவல்ல. உலக சனத்தொகை வளர்ச்சியடையும் அதேவேளை தேநீர் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் வளர்ச்சியடைந்த வண்ணமேயுள்ளது. அதனால் இலங்கை தேயிலைக்குள்ள கேள்வியில் இன்னும் மாற்றமேற்படவில்லை என்பதே உண்மை. சர்வதேச சந்தையில் இலங்கைத் தேயிலைக்கான கேள்வி இன்னும் அதிகரித்தே காணப்படுகிறது. அதனால் விலையும் அதிகரித்தே காணப்படுகிறது.
இன்று உலக சந்தையில் கென்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்னிலையில் இருந்தாலும் இலங்கைத் தேயிலை தரம் மற்றும் சுவை நிறைந்ததாக காணப்படுகின்றமையினால் உலக சந்தையில் அதிக வரவேற்பு காணப்படுவதுடன் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைத் தேயிலைக்கான கேள்வி உலக சந்தையில் 50 வீதத்திற்கும் அதிகமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய சூழ்நிலையில் இலங்கையில் 30 வீதமான தேயிலை ஏற்றுமதி வர்த்தகப் பெயர் மற்றும் பொதியிடலுடனேயே ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் போன்று தேயிலை மொத்தமாக ஏற்றுமதி செய்யப்படுவது மிகவும் குறைவடைந்துள்ளது. இன்று நாட்டில் தேயிலை ஏலத்தில் ஒரு கிலோ தேயிலையை 5 அமெ.டொலருக்கு கொள்வனவு செய்தாலும் அதன் பெறுமதி சேர்க்கப்படுவதனால் ஒரு கிலோ தேயிலைக்கு பத்து அமெ. டொலர் வரை சேர்கிறது. அதனால் தேயிலை விலை அதிகரித்து சர்வதேச சந்தையில் உயர்ந்த விலை நிர்ணயிக்கப்படுகிறது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தேயிலை உற்பத்திக்கு நவீன உற்பத்தி முறைகள் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும் இலங்கையின் பாராம்பரிய முறைக்கே முதலிடம் வழங்கப்படுகிறது. தேயிலை உற்பத்தி நீண்டகாலமாக நிலைத்திருப்பதற்கு அந்த பாரம்பரிய முறையே பிரதான காரணமாகிறது. அதனால் அதிக எண்ணிக்கையான மனித வளம் தேயிலை உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. நாம் அருந்தும் தேநீரின் வாசனையை இயந்திரத்தினால் நிர்ணயிக்க முடியாது. அதனல் இலங்கையில் மனித வள பங்களிப்புக்கென மதிப்பு காணப்படுகிறது. மனிதால் தீர்மானிக்கப்படுத்தும் தேயிலைத் தூளின் வாசனையும் சுவையும் சிங்க இலச்சினையுடன் சிலோன் டீ என்ற நாமத்துடன் உலக சந்தையில் வளம் வருவதற்கு பாரம்பரிய முறையே காரணம்.
இதுவரை காலமும் தேயிலைக் கொழுந்து மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன. கொழுந்து விலையை வழங்குவதற்கு உரிய பலமான பொறிமுறையொன்று இன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் கிடைக்கும் பணத்தல் 68 வீதம் விவசாயிக்கு செல்லக்கூடிய பொறிமுறையும் இன்று பலப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு உற்பத்தியாளருக்கும் தனது உற்பத்திக்கான உரிய விலையை பெற்றுக்கொள்ள முடியாது போகும்பட்சத்தில் அப்பணத்தை ஏலத்தினூடாக உற்பத்தியாளருக்கு பெற்றுக்கொடுக்கும் அதிகாரம் இன்று இலங்கை தேயிலை சபைக்குள்ளது. இதனூடாக இன்று தேயிலை உற்பத்தித் துறை பாதுகாப்பானதாக உள்ளது என்பதை ஆணித்தரமாக கூறலாம்.
நாட்டுக்குள் தேயிலை உற்பத்தித்துறைக்கு பாதுகாப்பிருந்தபோதிலும் சர்வதேச சந்தையில் நாம் போட்டிக்கு முகங்கொடுத்தேயாகவேண்டியுள்ளது. அந்நிலை முகங்கொடுக்கும் வகையில் இலங்கைத் தேயிலைசபை உலக அபிவிருத்தி திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. இன்று உலகின் சுமார் 20 நாடுகளில் சிலோன் டீ குறித்து பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சர்வதேச கண்காட்சிகள், இலங்கை தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிறுவனங்களினூடாகவும் சமூக வலைத்தளங்களினூடாகவும் இப்பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் சர்வதேச போட்டித்தன்மைக்கு முகங்கொடுக்கும் வகையில் தயார் செய்வது எவ்வாறு என்பது குறித்தும் தொடர்ச்சியாக கலந்துரையாடப்படுகிறது.
தற்போதைக்கு சிங்க இலச்சினையுடனான தேயிலையின் பெயர் சுமார் 100 நாடுகளில் பதிவு செய்தாகிவிட்டது. பறிக்கப்படும் கொழுந்துகள் தேயிலைத் தோட்டங்களில் இருந்து தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அவ்வாறு கொண்டு செல்லப்படும் கொழுந்து தொழிற்சாலையினுல் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.
பச்சைத் தேயிலை (Green Tea)
பதப்படுத்தாத தேயிலை (Unfermented Tea)
கறுப்புத் தேயிலை (Black tea)
அரைப்பதம் மிக்க தேயிலை (Semi Unfermented tea)
என தேயிலை நான்காக வகைப்படுத்தப்படுகிறது. அண்மைக்காலமாக ''உடனடித் தேநீர்'' என்ற ஐந்தாம் வகைத் தேயிலையும் தயாரிக்கப்படுகிறது.
சுவையான தேயிலையை அனைவரும் விரும்பினாலும் போலிகளையும் கழிவுகளையும் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கும் ஒரு கூட்டம் இருந்துக்கொண்டுதான் இருக்கும். கலிவுத் தேயிலை மாபியா தொடர்பில் எமது ஊடகங்களில் அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன. 'கழிவுத் தேயிலை' என்ற பெயரால்தான் இந்த பிரச்சினை நிலவுகிறது. கழிவுத் தேயிலை என்பதற்கான அர்த்தம் நீங்கள் நினைப்பது போன்று கழிவு என்பது அர்த்தமல்ல.
தேயிலை கொழுந்தின் முற்றிய காம்புதான் கழிவுத் தேயிலை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. தொழிற்சாலையில் தேயிலை கொழுந்து சுத்தப்படுத்தும் போது ஒரு குறிப்பிட்ட அளவுதான் சுத்தப்படுத்த முடியும். அதை விடவும் சுத்தப்படுத்த வேண்டியிருப்பின் அதற்கு புதிய முறையை கையாள வேண்டும். அதற்கு அனைத்து இயந்திரங்களையும் மாற்ற வேண்டும். இதற்கு சரியான சந்தை வாய்ப்பு கிடையாது. இதனை ஒழித்து மறைத்து விற்பனைச் செய்யப்படுவதாகவே மக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. எமது தேயிலையை ஐஎஸ்ஓ தரமின்றி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் மிகுதியாகும் கறுப்பு நிற துண்டுகளுடன் கபில நிற காம்புகளுடன் உள்ள தேயிலைத்தூளை சுத்தப்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை. அதனால் இந்த தேயிலையை வேறுபடுத்துவது தொடர்பில் அரசாங்கம் அறிக்கை வௌியிட்டுள்ளது. அதற்கே உரிய தொழிற்சாலை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். சிலர் இக்கறுப்பு நிற தேயிலையை ஒதுக்க விரும்புவதில்லை. அதனை அப்படியே விற்க முயற்சிப்பர். இதுதான் ஊடகங்களில் கூறப்படும் கழிவுத் தேயிலை மாபியாவாகும்.
உலகில், குறிப்பாக சூடான் போன்ற நாடுகளில் இத்தகைய தேயிலையை கிலோ ஒன்றரை டொலர் அளவு (225 ரூபாவரை) விலை கொடுத்து வாங்குவர். இலங்கையில் கழிவுத் தேயிலை ஒரு கிலோவின் விலை 80 ரூபா. இதில்தான் இதற்கான சந்தை வாய்ப்பு காணப்படுகிறது. இக்கழிவுத் தேயிலைக்கான சந்தை வாய்ப்பு காணப்பட்டாலும் ஐஎஸ்ஓ தரமின்றி தேயிலையை ஏலத்தில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
கறுப்பு தேயிலைக்கான சந்தைவாய்ப்பு காணப்படுகின்றமை இன்று ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் இலங்கை தேயிலைச்சபை இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் எடுத்துள்ளது. குறிப்பாக கழிவுத் தேயிலை என்ற பெயரில் உள்ள அசுத்தமான தேயிலை என்ற பொருளைத் தவிர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த தேயிலையை களஞ்சியப்படுத்தல் முதல் அனைத்து விடயம் தொடர்பிலும் கவனமாயிருப்பதுடன் அது தொடர்பான சுற்றுநிரூபமும் வௌியிட்டுள்ளது.
அத்துடன் குறித்த தேயிலைத் தொழிற்சாலைகளை பதிவு செய்யும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான 10 தொழிற்சாலைகள் ஏற்கனவே பதிவு செய்யபட்டுள்ளது. எதிர்காலத்தில் இத்தேயிலையை சிறந்த சந்தை வாய்ப்பு உபாயத்தைப் பயன்படுத்தி ஏலத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்போம். அதனால் எமது ஏற்றுமதி இன்னும் இலகுவாக்கப்படுவதுடன் சிறந்த விலையுடன் கூடிய மாற்று சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும். மேலும் சட்டரீதியான சந்தை வாய்ப்பை தவிர்த்து மேற்கொள்ளப்படும் விற்பனை நடவடிக்கைகளையும் தடை செய்யலாம் என்றும் தேயிலைச்சபையின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் தற்போது சுமார் 4 இலட்சம் சிறு தேயிலைத் தோட்ட பயிரீட்டாளர்கள் காணப்படுவதுடன் 10 ஏக்கருக்கும் அதிகமான தேயிலைத் தோட்டங்கள் 2500 காணப்படுகிறது.
பசளைக்காக வழங்கப்படும் மாணிய நிதி சரியான முறையில் பயன்படுத்தப்படாமை காணக்கூடிய பாரிய பிரச்சினையாகும் என்று சுட்டிக்காட்டிய தேயிலைச் சபையின் தலைவர் எதிர்காலத்தில் நிதிக்குப் பதிலாக பசளைக்கான வவுச்சர்களை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு பல்வேறு தீர்வுகள், தீர்மானங்களுக்கு மத்தியில் வளர்ச்சியடைந்த தேயிலை உற்பத்தி எங்களை விடவும் வயதில் மூத்ததாக காணப்படுகிறது. அடுத்த ஆண்டாகும் போது எமது தேயிலைச் செடிக்கு 150 வயதாகிறது. அது தொடர்பில் நாம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம்.
விசேடவிதமாக 150 வருட பூர்த்தியை கொண்டாடும் வகையில் பல்வேறு செயற்றிட்டங்களை நாம் ஏற்பாடு செய்துள்ளோம். அதற்கான அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது. பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய 150 வருட பூர்த்தியை கீழ் மட்ட தொழிலாளர்களையும் மேல் மட்டத்தில் உள்ள நிறைவேற்று அதிகாரிகளை இணைத்து நாம் கொண்டாடவுள்ளோம். அதற்கமைய சர்வதேசரீதியில் சிங்க இலச்சினையை கொண்ட எமது தேயிலை தொடர்பில் விளம்பரப்படுத்துவதுடன் உலகளவில் இலங்கைத் தேயிலைக்குள்ள கேள்வியை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவுள்ளோம். இலங்கை தேயிலை வர்த்தகர்களுடன் இணைந்து இலங்கைத் தேயிலை சபை இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பிறக்கும் 2017 ஆம் ஆண்டு முழுவதும் 150 வருட பூர்த்தி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
150 வருட பூர்த்தியின் முதலாவது செயற்பாடாக ஜனவரி மாதம் 19ஆம் திகதி இலங்கை தேயிலை சபையின் பிரதான அலுவலகத்தில் ஜேம்ஸ் டெய்லரின் உருவச்சிலை திறந்து வைக்கப்படுவதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின்றது. பெப்ரவரி மாதம் முதலாம் திகதி கடித உரை மற்றும் முத்திரை வௌியிடப்படவுள்ளது. ஓகஸ்ட் மாதமளவில் 10 ரூபா நாணயக்குற்றி வௌியிடப்படவுள்ளது.
2017ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஜூலை மாதங்களில் ஏழு தேயிலை உற்பத்தி வலயங்கள் உள்வாங்கும் வகையில் கல்விக் கண்காட்சிகள் மற்றும் விளம்பரப்படுத்தல்கள் நடத்தப்படவுள்ளன. நாட்டின் அபிவிருத்திக்கு தேயிலை உற்பத்தியின் பங்களிப்பின் முக்கியத்துவம் மற்றும் தொழில்வாய்ப்பு மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவின் முக்கியத்துவம் பற்றியும் மக்கள் தௌிவடையும் வகையில் இக்கண்காட்சி மற்றும் விளம்பரப்படுத்தல்களின் நோக்கமாகும்.
உலகம் முழுவதிலும் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் அமைப்புக்களினால் இலங்கை தேநீர் உபசாரம் Global Ceylon Tea Party 2017 எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி உலகின் பல்வேறு பிரதேசங்களில் மாலை 5.00 மணிக்கு நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரமான இலங்கை தேயிலையுடன் இலங்கையின் மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட பிஸ்கட் உற்பத்தியாளர்களான மெலிபன் பிஸ்கட் நிறுவனம் விசேட பங்களிப்பு வழங்கவுள்ளது. அந்நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் விசேட பிஸ்கட்டை ருசி பார்க்கவும் இத்தேநீர் விருந்தில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
The 150 years of Ceylon Tea என்ற பெயரில் இலங்கை தேயிலை உற்பத்தி தொடர்பான நினைவேடு ஒன்றும் வௌியிடப்படவுள்ளதுடன் தேயிலை உற்பத்தித் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நன்மைப்பயக்கும் பல்வேறு திட்டங்களுக்கான நிதி பெற்றுக்கொள்ளும் வகையில் விசேட தேயிலை ஏலம் (Grand Charity Tea Auction) ஒன்றும் எதிர்வரும் ஜூன் மாதம் 14 நடத்தப்படவுள்ளது.
சுற்றுலாப்பிரயாணிகள் மற்றும் இலங்கையர் மத்தியில் சிலோன் தேயிலையில் உள்ள தனித்தன்மை மற்றும் தேயிலையுடன் கட்டியெழுப்பப்பட்ட கலாசாரத்தை சர்வதேச ரீதியில் மேம்படுத்தும் வகையிலான தேநீர் விழாவொன்றை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் தேநீருடன் தொடர்புபட்ட விடயங்களை வெளிகாட்டும் வகையில் வீதி பிரசார நடவடிக்கைகள், தேநீர் கூடாரங்கள், உணவு மற்றும் விற்பனை நிலையங்கள் மற்றும் களியாட்டங்களும் நடத்தப்படவுள்ளன. எதிர்காலத்தில் வருடாந்த விழாவாக கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச தேயிலை மாநாட்டில் சுமார் 300 வெளிநாட்டு உள்நாட்டு பிரதிநிதிகளின் பங்களிப்புடன் நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது. ஓகஸ்ட் மாதம 8ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இம்மாநாட்டை தேயிலை வர்த்தகம் தொடர்பில் சர்வதேச அளவில் புகழ் மற்றும் அனுபவம் மிக்க நிபுணர்கள் வளவாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர். இம்மாநாட்டில் நடைபெறவுள்ள கலந்துரையாடல்களில் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவிக்கும் வாய்ப்புக்களும் பங்குபற்றுனர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
Plantation Sri Lanka 2017” கண்காட்சி 2017 ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரை சிரிமாவோ பண்டாரநாயக்க மண்டபத்தில் நடைபெற்றது . இக்கண்காட்சியில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் தேயிலை தொழிற்றுறையில் பங்களிப்பு வழங்குவோர் தமது பொருட்களை காட்சிப்படுத்த வாய்ப்பளிக்கப்பட்டது .
அனைத்து வலயங்களையும் உள்வாங்கும் வகையில் தேயிலை தேயிலை உற்பத்தியில் விசேட திறமையுடன் செயற்பட்டோர் அடையாளங் காணப்பட்டு கௌரவப்படுத்தப்படுவத்தற்காக விருது வழங்கும் விழாவொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விருது வழங்கல் விழாவில் கொழுந்து பறித்தல், தேயிலை சுவைப்பார்த்தல், சிறந்த உற்பத்தி முறை, தேயிலை கலவை தயாரித்தல், புத்தாக்க கண்டுபிடிப்பு என பல துறைகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது.
இலங்கைத் தேயிலை உற்பத்தித் துறை முக்கியத்துவம் வாய்ந்த கண்டி நகரில் அமைந்துள்ள 'சிலோன் தேயிலை' நூதனசாலையும் புனர்நிர்மானம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது என்று இலங்கை தேயிலைசபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
தமிழில்- ஆர்த்தி பாக்கியநாதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள