வியாழன், 9 பிப்ரவரி, 2017

எம்.எல்.ஏ.-க்களுக்கு மிரட்டல்



அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது பா.ஜ.க தலைமை
VikatanExclusive
அ.தி.மு.க எம்.எல்.ஏக்களை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ். ' தமிழகத்தில் நிலவும் சூழல்களை பா.ஜ.க மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் வகையில் அரசியல் காட்சிகள் அரங்கேறுவதால், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது பா.ஜ.க தலைமை' என்கின்றனர் டெல்லி வட்டாரத்தில்.
' முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்; போயஸ் தோட்ட இல்லம் நினைவுச் சின்னமாக்கப்படும்' என மன்னார்குடி உறவுகளை கலங்கடிக்கிறார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். நேற்று அ.தி.மு.க தலைமைக் கழகத்திற்கு வந்த எம்.எல்.ஏக்களை எங்கும் நகர விடாமல், அரண் அமைத்தார் சசிகலா. ' உங்களுக்கு என்ன தேவையோ அனைத்தும் வழங்கப்படும். மாத்திரை, மருந்து என எதற்கும் நீங்கள் தவிக்க வேண்டாம்' என உறுதி கொடுத்துவிட்டு, அனைவரையும் கல்பாக்கம் அருகில் உள்ள தனியார் ஓட்டலிலும் வேறு சில இடங்களிலும் தங்க வைத்தனர். முதலமைச்சர் பன்னீர்செல்வமும், ' என்னுடைய பலத்தை சட்டசபையில் நிரூபிப்பேன்' என உறுதியாகக் கூறிவிட்டார்.
" சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் வரையில் சென்னை வரும் முடிவில் ஆளுநர் இல்லை. ' பன்னீர்செல்வத்தை பா.ஜ.கதான் இயக்குகிறது. ஜனநாயகரீதியாக எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்ட சசிகலாவுக்கு ஏன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கத் தயங்குகிறார்?' என சில அரசியல் கட்சிகள் அறிக்கைகளை வெளியிட்டனர். கூடவே குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடவும் அ.தி.மு.க எம்.பிக்கள் விமானத்தில் ஏறினர். மத்திய அரசுக்கு எதிராக பேசப்படும் தகவல்களை அறிந்த பா.ஜ.க நிர்வாகிகள், ஆளுநரை உடனடியாக தமிழகம் செல்ல அறிவுறுத்தினர். இன்று பிற்பகல் சென்னை வரும் ஆளுநரை அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சந்தித்துப் பேச உள்ளனர். பன்னீர்செல்வமும் ஆளுநரை சந்தித்துப் பேச இருக்கிறார்" என விவரித்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர்,
" தமிழ்நாட்டில் நடக்கும் சூழல்களைப் பற்றி விரிவாக ஆலோசித்து வருகிறார் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா. ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களை சசிகலா சிறைப்படுத்தி வைத்திருப்பதும் அவர்களில் சண்முகநாதன் எம்.எல்.ஏ, ஓடும் பஸ்ஸில் இருந்து இறங்கி, பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு கொடுக்கச் சென்றதையும் கவனித்துள்ளனர். எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் விலை பேசப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். உறவினர்களுடன் பேசுவதற்குக்கூட எம்.எல்.ஏக்கள் அனுமதிக்கப்படவில்லை. நேற்று எம்.எல்.ஏக்கள் முன்னிலையில் பேசிய சசிகலா உறவினர் ஒருவர், ' உங்களுக்குத் தேவையான அனைத்தும் வந்து சேரும். எங்களுக்குத் துரோகம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டோம். உங்களுக்கு குடும்பம் என்று சொல்லிக் கொள்ள யாரும் இருக்க மாட்டார்கள்' என அச்சுறுத்தியிருக்கிறார். இதுகுறித்த அனைத்து தகவல்களையும் சேகரித்துள்ளது பா.ஜ.க தலைமை. நேற்று மாநிலத்தில் பல மாவட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக தொண்டர்கள் திரண்டனர். பன்னீர்செல்வத்திற்கு எதிராகவும் சசிகலா ஆதரவாளர்கள் உருவ பொம்மை கொளுத்தினர். சுவரொட்டி கிழிப்பு, ஆர்ப்பாட்டம், போராட்டம் என சட்டம் ஒழுங்கு சூழல்கள் கட்டுக்குள் இல்லை. இதைப் பற்றி நேற்று அமித் ஷாவிடம் விவரித்த தமிழகப் பிரமுகர் ஒருவர்,
' கிரிமினல் வழக்கில் உள்ளவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்பதற்கு பல சட்ட உதாரணங்கள் உள்ளன. தற்போது தமிழகத்தில் அசாதாரண சூழல்கள் நிலவி வருகின்றன. ' எம்.எல்.ஏக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள்' என சுதந்திரமாகக் கருத்துக்களை வெளியிட முடியவில்லை. அவர்கள் அனைவரும் அச்சுறுத்தப்பட்டு பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். இதையே காரணமாக வைத்துக் கொண்டு, தமிழகத்தில் ஆட்சியைக் கலைப்பதே சிறந்தது. இந்த முடிவை காங்கிரஸ் கட்சியும் ஏற்றுக் கொள்ளும். சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் சிதம்பரம் இருக்கிறார். நம்முடைய முடிவை அவரும் வரவேற்பார். அரசியமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்தினால், தி.மு.கவும் ஆதரிக்கும். தற்போதுள்ள சூழலில், 'தேர்தலை சந்தித்தாலும் வெற்றி பெறுவோம்' என ஸ்டாலின் நம்புகிறார். தேர்தலில் நமக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்தால், 15 சதவீத வாக்குகளைப் பெறுவோம். சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் பொதுமக்கள் இருக்கின்றனர். அ.தி.மு.கவின் ஒரு பிரிவை நாம் பயன்படுத்திக் கொண்டால், சட்டசபையில் பலம் பெறுவோம்' என விவரித்திருக்கிறார். இந்த முடிவை அமித் ஷாவும் ஏற்றுக் கொண்டார். தமிழக அரசைக் கலைக்கும் வேலைகள் வேகம் பெறத் தொடங்கிவிட்டன" என விரிவாகவே நம்மிடம் தெரிவித்தார்.
" அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் இன்று ஆளுநரை சந்திக்கும்போது, ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக ஆதரவு கடிதங்களைக் கேட்கும் முடிவில் இருக்கிறார் வித்யாசாகர் ராவ். ' உண்மையிலேயே, அவர்கள் சசிகலாவுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்களா? நிர்பந்திக்கப்பட்டு கையெழுத்து போட்டார்களா?' என்பதை அறியும் வகையில் இப்படியொரு முடிவை எடுக்க இருக்கிறார். இதன்பிறகு, பன்னீர்செல்வத்திற்கு உள்ள ஆதரவு குறித்து கேட்டறிய இருக்கிறார். ஒருவேளை சசிகலாவுக்கு மெஜாரிட்டி ஆதரவு என வந்துவிட்டாலும், ஒரு வாரத்திற்கு அந்த ஆட்சி நீடிக்குமா என்பதும் கேள்விக்குறிதான். அந்தளவுக்கு டெல்லி அரசியல் தமிழகத்திற்குள் கோலோச்சிவிட்டது.
சசிகலா மீதான வழக்குகளை மையமாக வைத்துக் கேள்வி எழுந்தாலும், அடுத்தபடியாக, வேறு சிலர் பெயரையும் முன்வைக்கும் முடிவில் இருக்கிறார் சசிகலா. ஆளும்கட்சியின் எம்.எல்.ஏக்கள் குழப்ப மனநிலையில் உள்ளனர். நேற்று இரவு எம்.எல்.ஏக்களையும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்துச் சென்று அணிவகுப்பு நடத்தும் வேலைகள் தொடங்கின. ஆளுநர் வரும் தகவலைக் கேள்விப்பட்ட பிறகே, சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார் சசிகலா. அப்போலோவில் சிகிச்சை பெறும் நடராசன், அரசியல் சூழல்கள் முடிவுக்கு வந்த பிறகே வெளியில் வருவார். அங்கிருந்தபடியே, சுப்ரமணியன் சுவாமி மூலமாகவே, டெல்லி லாபியை நடத்தி வருகிறார். ஆனால், சுவாமியின் செயல்களை பா.ஜ.க மேலிடம் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. தமிழக ஆடிட்டர் ஒருவரிடமே கலந்து ஆலோசிக்கிறது பா.ஜ.க மேலிடம். ஆளுநரின் முடிவுக்காக காத்திருக்கின்றனர் மன்னார்குடி உறவுகள்" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.
' 356 விதியைப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறதா?' என சட்ட வல்லுநர் ஒருவரிடம் கேட்டோம். " மாநில அரசு கலைக்கப்படுவது குறித்து, அரசியமைப்புச் சட்டப் பிரிவு 356 வரையறுக்கிறது. இதன்படி, மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியல் அமைப்புகள் இயங்காமல் இருக்கும்போது, மாநில அரசைக் கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. கூடவே, சட்டம் ஒழுங்கு சீர்குலையும்போது அதனைக் கட்டுப்படுத்த முடியாத மாநில அரசைக் கட்டுக்குள் கொண்டு வரவும் சட்டப் பிரிவு 356 பயன்படுகிறது. சட்டப் பேரவையில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால், குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வரலாம். இதற்கான பரிந்துரையை ஆளுநர் அளித்தால், ஆறு மாதங்கள் சட்டப் பேரவை இடை நிறுத்தம் செய்யப்பட்டு, மீண்டும் பெரும்பான்மை நிரூபிக்கப்படவில்லையென்றால், பொதுத் தேர்தல் நடத்தப்படும். அதுவரையில், நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் ஆளுநருக்கு மாற்றப்படும். ' எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக 356 பயன்படுத்தப்படுகிறது. மாநில சுயாட்சிக்குப் பொருத்தமற்ற விதி' என காலம்காலமாக குரல் கொடுத்து வருகின்றன' எதிர்க்கட்சிகள். இதைப் பற்றியெல்லாம் மத்தியில் ஆளும் அரசுகள் கண்டுகொள்வதில்லை. தமிழ்நாட்டில் அதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன" என்கிறார்.
'அரசியமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்கும்போது, அரசியல் சூழல்களை எந்த வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்பது பற்றித்தான் பா.ஜ.க வட்டாரத்தில் தீவிர விவாதம் நடந்து வருகிறது. ' பன்னீர்செல்வமா? சசிகலாவா?' என்ற விவாதம் மட்டும்தான் அ.தி.மு.க தொண்டர்களின் கண்களுக்குத் தெரிகின்றன. அதையும் தாண்டிய அரசியல் நகர்வுகளை உணர்ந்து கொள்ளும் நிலையிலும் அவர்கள் இல்லை.
VikatanExclusive

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள