செவ்வாய், 31 ஜனவரி, 2017

புலிகளிடமிருந்து முஸ்லிம்களுக்கு விடுதலை பெற்றுத்தந்த மஹிந்தவின் கூட்டத்தில் கலந்து கொண்டதில் தவறில்லை.


தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரப் பிடியிலிருந்து முஸ்லிம்களுக்கு விடுதலை பெற்றுத் தந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நுகேகொடை கூட்டத்தில் உலமா கட்சி கலந்து கொண்டதில் எவ்வித தவறும் இல்லை என அக்கட்சியின் தலைவர் அஷ்ஷெய்க் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கட்சியின் கல்முனை அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டத்திற்கு உலமா கட்சித்தலைவர் என்ற ரீதியில் கட்சி சார்பாகவே சென்றேனே தவிர அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பிரதிநிதியாக செல்லவில்லை.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் தன்னை மன்னித்துக் கொள்ளும்படி உலமா கட்சித்தலைவர் மூலம் மஹிந்தவுக்கு தூது அனுப்பியதாக சிலர் தெரிவித்திருப்பது மிகப்பெரிய அபாண்டமாகும்.
இவ்வாறு மஹிந்த பற்றி எத்தகைய கருத்தையும் இன்று வரை என்னிடம் அமைச்சர் ரிசாத் பேசவேயில்லை என்பதை இறைவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன்.
உண்மையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் பண்பட்ட, நல்ல அரசியல் சிந்தனைத் தெளிவுள்ள அரசியல்வாதியாவார். எமது உலமா கட்சியானது அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் ஒரு பங்காளிக் கட்சியாக இணைந்து, அதன் உயர் பீடத்தில் இருந்தாலும் தனியான கட்சி என்ற வகையில் எமக்கு சுதந்திரத்தை வழங்கியுள்ளார்.
இன்றுவரை அவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் போகும்படியோ போக வேண்டாம் என்றோ ஒரு வார்த்தையும் எம்மிடம் கூறாத அளவுக்கு எமது கட்சிக்குரிய இறைமையை அவர் மதிக்கின்றார்.
இப்படிப்பட்ட பண்பட்ட அரசியல்வாதிகள் எவரும் முஸ்லிம் சமூகத்தில் இல்லை என்பதை உறுதியாக கூறுவேன்.
ஒரு உயர் பீட உறுப்பினர் எதிர் கட்சியின் கூட்டத்திற்கு போக முடியுமா என சம்பந்தப்பட்டவர் கேள்வி எழுப்பியுள்ளமை அரசியல் தெரியாத முட்டாள் தனமாகும்.

முதலில் மஹிந்த ராஜபக்ஷ எதிர்கட்சியை சேர்ந்தவர் அல்ல. அவரை பாராளுமன்றம் ஆளும் சுதந்திரக்கட்சியின் உறுப்பினராகவே இன்னமும் பார்க்கிறது.
அதனால் தான் தமிழ்க் கூட்டமைப்பு எதிர்க் கட்சியாக உள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இணைந்துள்ள ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான கட்சியின் ஆலோசகர் பதவியில் இருப்பவரே மஹிந்த ராஜபக்ஷ.
இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரியின் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம் என்றால் மஹிந்தவின் கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ள முடியாது? முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்த மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா என சில கேட்கின்றனர். புலிகள் செய்த அளவுக்கு மஹிந்த ராஜபக்ஷ, முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்யவில்லை.
இன்று அதே புலிகளின் வாரிசுகளான தமிழ்க் கூட்டமைப்புடன் கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி செய்வது முஸ்லிம் சமூகத்திற்கான துரோகம் இல்லையா? அத்தகைய கட்சியொன்றின் கூட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர்கள் கலந்து கொள்ளும்போது புலிகளை ஒழித்து முஸ்லிம்களுக்கு விடுதலை பெற்றுத்தந்த மாவீரர் மஹிந்தவின் கூட்டத்தில் கலந்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது.
கடந்த மஹிந்த ஆட்சியில் சில தவறுகள் ஏற்பட்டன என்பது உண்மை. அதன் காரணமாகவே அமைச்சர் ரிசாத் பதியுதீன் துணிச்சலுடன் நல்லாட்சிக்கு ஆதரவளித்தார்.
முஸ்லிம் சமூகத்தின் அரசியலை பொறுத்தவரை மிகச்சிறந்த தேசியத்தலைவராக நாம் அமைச்சர் ரிசாத் பதியுதீனை பார்ப்பதால் அவரை பலப்புடுத்தும் நோக்கில் அவரது கட்சியுடன் இணைந்து செயற்படுகின்றோம் என தெரிவித்தார்.
மேலும் அவருக்கு இனவாதிகளால் ஆபத்து ஏற்படும்போது அக்கட்சியின் பதவிகளில் வசதிகளை அனுபவித்து கொண்டிருப்பவர்களை விட நாமே குரல் கொடுக்கிறோம் என்பதால் எம்மை எப்படியாவது அக்கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே முஸ்லிம் காங்கிரசின் போராளிகள், எம்மீது அபாண்டங்களை கட்டவிழ்த்து விடுகின்றனர் என அஷ்ஷெய்க் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார்.
Tamilwin.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள