இராணுவத்தை காப்பாற்றுவதில் அக்கறை காட்டும் அரசாங்கம்
குற்றச்சாட்டுகள் மற்றும் போர் தொடர்பான ஐ.நாவின் பரிந்துரைகள் விடயங்களில், சர்வதேச சமூகத்தின் ஆதரவில்லாமல், இலங்கைப் படைகள் தமது பெயரைக் காப்பாற்றிக் கொள்வது மிகவும் கடினமானது.”
இந்தக் கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான் கடந்த வாரம் கூறியிருந்தார்.
சபுகஸ்கந்தையில் உள்ள பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
இப்போதெல்லாம், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்புத் துறைசார்ந்த உயர்நிலைப் பிரமுகர்கள் படை அதிகாரிகளையும் படையினரையும் சந்திக்கின்றபோது கூறுகின்ற விடயங்கள் இரண்டு தான்.
முதலாவது இராணுவத்தின் ஒழுக்கத்தின் மீதான அவசியம். இரண்டாவது, இராணுவத்துக்கும் சர்வதேச சமூகத்துக்குமிடையில் இருக்க வேண்டிய உறவின் முக்கியத்துவம்.
போர்க்காலத்தில் இலங்கைப் படைகளின் ஒழுக்கம் எவ்வாறான நிலையில் இருந்தது என்பதை இங்கு விபரிக்க வேண்டியதில்லை. ஒழுக்கமீறல்கள் நிறைந்திருந்த ஒரு இராணுவமாகத்தான் இலங்கை இராணுவம் விளங்கியது.
அதனால்தான், சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகளை சுமந்து நிற்க வேண்டிய நிலை அதற்கு ஏற்பட்டது. குற்றச்சாட்டுகளிலிருந்து இராணுவத்தை விடுவிப்பதற்கு, முன்னைய அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் மேற்கொண்டிருக்கவில்லை.
இராணுவத்தை பாதுகாப்பது என்ற பெயரில் முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அத்தனை நடவடிக்கைகளுமே, இராணுவத்தின் பெயரைக் கெடுப்பதாகவே அமைந்திருந்தன.
கடந்த ஆண்டு ஜனவரியில் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், சர்வதேச அளவில் இராணுவத்தை குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
அரசியல், இராஜதந்திர மற்றும் இராணுவ ரீதியாக இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த விவகாரம் அரசாங்கத்தின் மீதான நெருக்கடிகளுடனும் தொடர்புடைய விவகாரமாக இருப்பதால், கூடுதல் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
சர்வதேச குற்றச்சாட்டுகளில் இருந்து இராணுவத்தைப் பாதுகாத்திருக்கிறோம் என்று ஜனாதிபதி பலமுறை கூறியிருக்கிறார். அவரது அந்தக் கருத்தில் நிறையவே உண்மைகள் இருக்கின்றன.
ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில், இருந்ததை விடவும் இப்போது, சர்வதேச அளவில் இராணுவத்தினர் மீதான அழுத்தங்களும் கெடுபிடிகளும் குறைந்திருக்கின்றன.
இது அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால்தான் சாத்தியமானது.
சர்வதேச சமூகத்துடன் முட்டிக்கொள்ளாமல் முரண்பட்டுக் கொள்ளாமல், நாசூக்கான முறையில் நடந்து கொண்டதால்தான் அரசாங்கத்தினால் இவ்வாறான சாதகமான நிலையை அடைய முடிந்தது. எனவேதான், அரசாங்கம் படையினரின் ஒழுக்கம் குறித்து அவ்வப்போது வலியுறுத்தி வருகிறது. மனித உரிமை மீறல்கள் சார்ந்த ஒழுக்கத்தை மாத்திரமன்றி, இராணுவ ஒழுக்கத்தையும் சேர்த்தே அரசாங்கம் குறிப்பிடுகிறது.
இராணுவ ஒழுக்கம் என்பது தலைமைத்துவத்துக்குக் கட்டுப்படுதலாகும். தலைமைக்குக் கட்டுப்படாத எந்த இராணுவத்தினாலும், நற்பெயரை தக்கவைத்துக் கொள்ளவோ, தேடிக்கொள்ளவோ முடியாது. இலங்கைப் படைகளைப் பொறுத்தவரையில் தலைமைத்துவ ஒழுங்கிற்கு கட்டுப்படாமல் நடந்த வரலாறு இல்லை.
எனினும் இராணுவப் புரட்சி, இராணுவ ஆட்சி பற்றி அவ்வப்போது வெளியாகும் தகவல்கள் இத்தகையதொரு இராணுவ ஒழுக்கத்தின் அவசியத்தை வலியுறுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசுக்கு ஏற்படுத்துகிறது.
இன்னொரு பக்கத்தில், போர் முடிவுக்கு வந்த காலத்தில் இருந்தே, மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும், குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக சர்வதேச சமூகத்தினால் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இது படையினரை ஒருவித பீதியான நிலைக்குள் வைத்திருந்தது என்பதில் சந்தேகமில்லை. போர் முனையில் குற்றங்களை இழைத்த படையினர், தம்மீது நடவடிக்கை எடுக்கப்படுமோ என்று கலங்கும் நிலை காணப்பட்டது.
*இதனை முன்னைய அரசாங்கம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. படையினரை சர்வதேச நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்ல விடமாட்டோம் என்று மேடைகளில் முழங்கியே வாக்குகளை வாரிக் கொண்டது.
சர்வதேச சமூகம், படையினரைத் தண்டிக்க முனைகிறது என்ற கருத்து பரப்பப்பட்டதால், சர்வதேச சமூகம் தமக்கு விரோதமாகச் செயற்படுகிறது என்ற எண்ணம், அவர்கள் மத்தியில் ஊன்றி விட்டது.
தற்போதைய அரசாங்கம், சர்வதேச சமூகத்துடன் இணங்கிச் செயற்படுகின்ற நிலையில், படையினர் மத்தியில் அது தவறான கருத்தை உருவாக்கி விடுமோ என்ற அச்சமும், அரசாங்கத்துக்கு இருக்கிறது.
சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு ஏற்பவே அரசாங்கம் செயற்படுகிறது என்று எதிரணியினரால் பரப்பப்படும் கருத்துக்களை எதிர்கொள்ள வேண்டிய சிக்கலும் அரசுக்கு உள்ளது.
இதனால்தான், சர்வதேச சமூகத்தின் ஆதரவு இல்லாமல், படையினர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவோ, ஐ.நா வின் பரிந்துரைகளை விலக்கிச் செயற்படவோ முடியாது என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியிருக்கிறார்.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சர்வதேச சமூகத்தை தனது கைக்குள் போட்டுக் கொண்டு படையினர் தொடர்பான விடயங்களில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறது.
முன்னதாக, ஒட்டுமொத்த இலங்கை இராணுவமும் குற்றமிழைத்த இராணுவமாக கருதப்படுகின்ற ஒரு நிலையே சர்வதேச அளவில் காணப்பட்டது. இராணுவமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், ஒட்டுமொத்த இராணுவமும் தவறு செய்யவில்லை, இராணுவத்தினரில் சிலர் குற்றமிழைத்திருக்கலாம், என்று இப்போதைய அரசாங்கம் புதிய நிலைப்பாடு ஒன்றை அறிமுகம் செய்தது.
இதன் மூலம் இராணுவத்தின் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகவே மாறியிருக்கிறது.
இப்போது ஒட்டுமொத்த இலங்கைப் படைகளையும் குற்றமிழைத்த படையினராக அடையாளப்படுத்த எந்த நாடும், அல்லது எந்த அமைப்பும் தயாராக இல்லை.
இராணுவத்தில் உள்ள சிலர் இழைத்த குற்றங்கள் என்பது போன்று, போர்க்கால மீறல்களின் தீவிரத்தன்மை சுருக்கப்படுகின்ற நிலை தோன்றி வருகிறது. இது அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் கிடைக்கின்ற மிகப் பெரிய வெற்றியாகும்.
ம ஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில், இராணுவத்தினருக்கு மறுக்கப்பட்ட சர்வதேசப் பயிற்சிகள் இப்போது கிடைக்கின்றன. அப்போது கிடைக்காத, ஆயுதங்கள், தளபாடங்களையும் கூட இப்போது பெறக்கூடிய சூழல் உருவாகி வருகிறது.
சர்வதேச சமூகத்தின் இந்த அணுகுமுறை மாற்றம் இலங்கை அரசாங்கத்துக்கும் படையினருக்கும் சாதகமான நிலையை தோற்றுவித்திருக்கிறது,
ஆனால், பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்களின் நிலையிலிருந்து பார்க்கும்போது, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேயில்லை.
இராணுவத்தின் பெயரைக் காப்பாற்றுவதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு அவசியம் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். ஆனாலும், கெட்டுப்போன பெயரை மீண்டும் பெற்றுக் கொள்வது, தனியே சர்வதேச சமூகத்தின் பங்களிப்பினால் மாத்திரம் சாத்தியப்படாது.
இராணுவம் மீதுள்ள கறைகளை அகற்றாமல் அதன் பெயரை காப்பாற்றிக் கொள்ள முடியாது, போர்க்கால மீறல்களுக்கு நீதி விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்காத வரையில், இராணுவத்தின் பெயரை காப்பாற்றிக் கொள்ள முடியாது.
சர்வதேச சமூகததின் சில நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்றுகின்ற போதிலும், போர்க்கால மீறல்களுக்கு நீதியை வழங்கும் செயல்முறை விடயத்தில் மாத்திரம், அரசாங்கம் கவனம் செலுத்தவேயில்லை.
கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையில், படையினர் மத்தியில் தீவிரமான மனித உரிமை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது,
ஐ.நா. அமைதிப்படைக்கு இலங்கைப் படையினரைச் சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கையில் இந்த ஆய்வு முறை உருவாக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கோரப்பட்டிருந்தது.
அரசாங்கம் இந்த பொறிமுறையை உருவாக்கி விட்டது. இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவு என்று உள்ளக ரீதியாக ஒரு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
வெளியக ஆய்வு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்குப் பின்னர் தான் ஐ.நா. அமைதிப்படைக்கு பட்டியல் அனுப்பப்படுகிறது.
அங்கிருந்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்துக்கு அந்தப் பட்டியல் அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட பின்னரே, அனுமதி அளிக்கப்படுகிறது.
பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களா, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களா என்று ஆய்வு செய்யப்பட்டே ஐ.நா. அமைதிப்படைக்கு இலங்கைப் படையினர் அனுப்பப்படும் நிலை உருவாகியிருக்கிறது.
இத்தகைய இறுக்கமான ஆய்வு முறைகளின் மூலம் ஐ.நா அமைதிப்படையில் ஒழுக்கமான படையினரை மாத்திரம் உள்வாங்கலாம் என்று ஐ.நா. கருதுகிறது.
ஆனாலும், போர்க்கால மீறல்களில் ஈடுபட்ட படையினரை ஆய்வு செய்யும் எந்த பொறிமுறையையும் அரசாங்கமும் உருவாக்கவில்லை, சர்வதேச சமூகமும் உருவாக்கவில்லை.
இங்கு இலங்கை இராணுவத்தின் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள இலங்கை அரசாங்கம் முயற்சிக்கிறது, இலங்கை இராணுவத்தை தூய்மைப்படுத்த சர்வதேச சமூகம் முயற்சிக்கிறது.
இதனால் தான் ஜனாதிபதி, சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல், இராணுவத்தின் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள