கடவுள் மனிதனாக .......
"கடவுளுடைய திரு நாமம் பேசப்படும் இடமெல்லாம்,புண்ணிய தலங்களே" இது நான்
சொல்லல்ல,
திரு. கண்ணதாசன், சொன்னதுதான்,தொடர்ந்து படியுங்க அவர் இன்னும் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை..
கடவுளின் திருநாமத்தைக் கூறுகிறவர் எவ்வளவு புண்ணிய வடிவாய் இருக்க வேண்டும்?
தெய்வீக உண்மைகளை வெளிப்படுத்தும் இவர்களிடம், நாம் எவ்வளவு பக்தியுடன்,இருக்கவேண்டும்?
உலகத்தின் கடவுளின் பெருமையை எடுத்துக் கூறி,ஆன்மீக உண்மைகளை வழங்கும்
மகான்கள், மிகவும் குறைவானவர்களே உள்ளனர்.அவர்கள் இல்லாமல் உலகம் ஒருமித்து,வாழ்வது இயலாது. மானிட வாழ்க்கையின் அழகுமிக்க மலர்கள் அவர்கள்;
தமக்கென்று நோக்கமில்ல கருணா சமுத்திரம் அவர்கள்.
"குருவை நான் என்று அறி"என்று கிருஷ்ண பகவான் பாகவதத்தில் கூறியிருக்கிறார். இத்தகையோர்கள் எந்தக் கணம், முதல் இல்லாமல் போகிறார்களோ,அப்பொழுதே
உலகம் பயங்கரமான நரகமாகி,அதன் அழிவை நோக்கித் துரிதமாகச் செல்லத்
தொடங்குகிறது.
உயர்வும் மகிமையும் உள்ள ஆசாரியார்கள் உலகில் அவ்வப்போது தோன்றுகிறார்கள்.
அவர்களே ஈஸ்வர அவதாரங்கள்,அவர்கள் தங்கள் விருப்பத்துடன் ஒருமுறை
தொடுவதன் மூலமே,ஆன்மீக அறிவை மற்றவர்களுக்கு வழங்க முடியும்.அவர்கள்
கட்டளையினால் மிக இழிந்தவர்களும் ஒரு வினாடியில் பெரிய ஞானிகள் ஆக
முடியும். அவர்கள் ஆசாரியர்களுக்கும் ஆசாரியர்கள்;கடவுள் மனித உருவத்தில் தம்மைத் தெரிவித்துக் கொள்ளும் பெரிய அவதாரங்களே அவர்கள். அவர்கள் மூலமாக
வன்றிக் கடவுளை நாம் காண முடியாது.அவர்களை நாம் பூஜிக்காமல் இருக்க முடியாது.
உண்மையாக அவர்களே நம் பூஜைக்குரியவர்கள்.
கடவுளை அவரது பரிபூரண நிலையிலிருத்திப் பார்க்க முயலும்போதெல்லாம் ,நமக்குத்
தோல்வியே உண்டாகிறது.நாம் மனிதராய் இருக்குமட்டும்,மனித நிலையை விட்டு
வேறாக,நாம் அவரைக் கருத இயலாது.நாம் நம் மானிட நிலையைத்தாண்டி மேலேறுவோமானால்,அவரை அவர் உள்ளபடி நாம் உணரக்கூடும்.ஆனால் நாம்
மனிதராய் இருக்குமட்டும் கடவுளை மனிதரில் வைத்து மனிதராகவே பூஜிக்கவேண்டும்.
நீ எதை வேண்டுமானாலும் பேசலாம்.எப்படி வேண்டுமானாலும் முயலலாம். ஆனால்,
கடவுளை மனிதராகக் கருதி பூஜிக்கும்போது,அவர் உனக்கு அருகில் காட்சி தருகிறார்.
மானிடர்க்குரிய குறைகளைக் கடவுள் அறிகிறார்.மானிட இனத்திற்கு நன்மை புரியும் பொருட்டு அவர் மனிதராகிறார்.
"தர்மம் குறைந்து அதர்மம் தலையெடுக்கும் போதெல்லாம்,நான்,அவதரிக்கிறேன். ,யுகந்தோறும், அறத்தை நிலை நிறுத்தவும், மறத்தைஅளிக்கவும், நல்லோர்களைக்காக்கவும் நான் வருகின்றேன்" என்று கீதையில் பகவான் கிருஷ்ணன் கூறியுள்ளான்.
இந்துக்கள் கடவுளையே மனிதராகக் காண்கிறார்கள்.
சுவாமி விவேகானந்தர் சொல்வதுபோல்,எருமையின் கண்ணுக்குக் கடவுள் ஒரு பெரிய
எருமை என்றால்,மனிதனின் கண்ணுக்குக் கடவுள் ஒரு உயர்ந்த மனிதர்தான்.
அதனால்தான் அவதார புருஷர்களை நாம் வழிபடுகிறோம்.இராமாவதாரத்தையும்,
கிரிஷ்ணவதாரத்தையும் மனிதர்கள் என்றே வைத்துக்கொண்டாலும் கூட,அந்த இருவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த அவதாரங்கள்.
அவர்களிலே கிருஷ்ணன் ஒரு ஞானாசிரியன்;இராமன் ஒழுக்கத்துக்கு இலக்கணமான
பேராசிரியன். கடவுளை மனிதனாகப் பார்ப்பதால்தான்,அவனை நண்பனாக,தலைவனாக,
தாயாகப் பார்க்கிறோம்.
இந்த பாவனையில் தெய்வத்தின் ஸ்வரூபமல்லாது, விஸ்வரூபமும் வெளியாகிறது.
தாயைப்பார்க்கும் மகனைப்போல ஆண்டவனை நாம் பார்க்கிறோம்.
மனிதர்கள் அணியும் ஆடைகளையே,அவனுக்கும் அணிவிக்கிறோம்.மனிதர்கள் சூடிக்
கொள்ளும்,மலர்களையே இறைவனுக்கும் சூட்டுகின்றோம்.அந்த மனித பாவத்தில்
நம்முடைய அறிவு லயித்து விடுகிறது.
தெய்வம் என்பது எல்லாவற்றையும் கடந்தது என்ற நிலைபோய்.அது நம்மோடிருக்கும்
ஒன்று என்ற நிலை வந்து விடுகிறது.
மனிதனுடைய பகுத்தறிவு தெய்வத்தைப் பக்கத்தில் காணவே விரும்பி இருக்கிறது.
அந்த விருப்பத்தின் விளைவே கடவுளின் பல்வேறு வடிவங்கள்.
ஞானசிரியர்கள் பலர்,தங்களைக் கடவுளின் அவதாரங்கள் என்று அழைத்துக் கொள்வதில்லை.அவர்களில் ஒருவரை நாடி, நாம் உபதேசம் பெற்றுக்கொள்ளவேண்டும்.
பால வயதில் இருந்து குரு-சிஷ்ய பாவத்தில் ஈடுபடாதவர்கள், நடுத்தர வயதில் அப்படி
யொருவரை அணுகுவதே நிம்மதிக்கு வழி. வெறும் புத்தகங்களைப் படிப்பதின் மூலமே
ஞானம் பெற்றுவிட முடியாது.
ஸ்ரீ ஆதிசங்கரர் "குரு என்பவர் யார்?" என்பதை எடுத்துக் காட்டிய அவதார புருஷர்.
இன்றைய இந்து தர்மத் தத்துவங்கள் அவர் மூலம் மெருகேறி வளர்ந்த ஆன்மீகச்
சுரங்கம்.
யாராவது ஒருவர் ஆறுதல் சொன்னால்தான் அழுகை அடங்கும். யாராவது ஒரு ஞானசிரியரிடம் உபதேசம் கேட்டுக் கொன்ட பின்னாலேதான்,ஏற்கனவே இருந்த
மனோபாவம் மாற முடியும்.
வாழ்க்கை வெறும் கேள்விக்குறிகளாலே ஆனது.சிக்கல் விழுந்து விட்ட அந்த நூலை
அறுந்து விடாமல், ஜாக்கிரதையாகப் பிரிக்க வேண்டும்.அந்த வேலை தையைல்காரருக்குத் தெரிந்த அளவு நமக்குத் தெரியாது.
நாமே நமக்குள் பெற்றுக் கொள்ளக்கூடிய நிம்மதியை நூறு மடங்காக ஆக்கத் தெரிந்தவர்கள் ஞானிகள் மட்டுமே.அவர்களை அண்டி மிச்சக்கால வாழ்க்கையை
மேன்மைப்படுத்திக் கொள்ள முயல்வதே நிம்மதிக்கு ஒரே வழி.
கண்ணதாசன் இன்று இருந்தால் என்ன எழுதியிருப்பார்?அதை நீங்கள் பின்னூட்டமாக
எழுதுங்க.
அன்புடன்,!......