திங்கள், 27 டிசம்பர், 2010

பதினாறு பேறு.

தமிழ் பண்பாட்டில் தமிழர்களின் சைவத் திருமணச் சடங்குகளில் "ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என வாழ்த்தப்படுகின்றது. வாழ்த்துதல்,ஆசிர்வதித்தல் என்பவைகள்,அன்றாட வாழ்க்கையில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். வாழ்த்தும்போதும்,ஆசிர்வதிக்கும்போதும் எல்லோராலும் கூறப்படும்.வார்த்தை இந்தப் பதினாறு பேறு. இந்தப் பதினாறு பேறுக்குள் அடங்கியிருப்பது என்ன?.

எனது நண்பன் ஒருவர் கூறினார் பதினாறு பிள்ளைகளைப் பெற்று பெருவாழ்வு வாழ்வதுதான்.பதினாறு பேறு என்பதன் கருத்தென்றார். இரண்டு பிள்ளைகளைப் பெற்றவர்களே துண்டைக்காணோம்,துணியைக்காணோம் என்று ஓடிக்கொண்டிருக்கும்போது,பதினாறு பிள்ளைகளைப் பெறுவதென்பது நடக்கக்கூடிய காரியமா? கட்டுபடியாகிகின்ற ஒரு சாதனை தானா என்ற கேள்வியின் தேடல்தான் இந்தப்பதிவு.


  1. கலையாத கல்வி
  2. கபடற்ற நட்பு
  3. குறையாத வயது
  4. குன்றாத வளமை
  5. போகாத இளமை
  6. பரவசமான பக்தி
  7. பிணியற்ற உடல்
  8. சலியாத மனம்
  9. அன்பான துணை
  10. தவறாத சந்தானம்
  11. தாழாத கீர்த்தி
  12. மாறாத வார்த்தை
  13. தடையற்ற கொடை
  14. தொலையாத நிதி
  15. கோணாத செயல்
  16. துன்பமில்லா வாழ்வு

.இதைத்தான் கவி காளமேகப் புலவர் இப்படிக் கூறினாரோ. 

துதிவாணி வீரம் விசயம்சந்தானம் துணிவுதனம்
 மதிதானியம் சௌபாக்கியம் போகம் - அறி(வு)அழகு
 புதிதாம் பெருமை அறம்குலம்நோவகல் பூண்வயது
 பதினாறுபேறும் தருவாய்மதுரைப் பராபரனே 

இதையே அபிராமி பட்டர் இன்னும் ஒருபடி மேலே சென்று என்ன அழகாகக் கூறியிருக்கிறார்.  பாருங்கள்  

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே! 

இவை எல்லாம் சரிதான்,ஆசிர்வதிப்பவர்கள் வாழ்த்துபவர்கள் மணம் கனிந்து வாழ்த்த
வேண்டும்.அவர்கள் மணம் கனிந்து வாழ்த்தினால்தான் இந்தப் பதினாறில் ஒன்றாவது,
நம்மை வந்து சேரும்.வயிறு எரிந்து வாழ்த்தி, ஆசிர்வதித்தால், எந்தவித பயனும் கிடைக்கப் போவதில்லை.

இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.!

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

.இதயத்தைவிட்டகலாத ஈழத்துப் பூராடனார்

இதயத்தைவிட்டகலாத ஈழத்துப் பூராடனார் 
துள்ளுறாலுந் தேனிறாலும் தோகையர்தம் துவரிறாலும்
     அள்ளுசுவை மயக்கினிலே அகப்பொருளின் சிறப்போங்கும் 
விள்ளுதமிழ் தோழ் வலியார் வீரமதிற் புரமொளிரும்
வெள்ளமெனக் கவிப்பாடி விரிநிலமார் இருதிணையே.
ஈழத்துப் பூராடனார்.        
(மட்டக்களப்பு மாநிலத்தின் வளம் -02 -11 -1991 )


                                                    
                                   இலக்கிய மணி திரு.சாமுவேல் கதிர்காமத்தம்பி செல்வராசகோபால்.
                                                           (13.12.1928 -- 20.12.2010)

மீன் பாடும் தேனாட்டின்-இன்பத்
தேன்பாயத் தமிழ் யாத்த,
வானுயர் பெருமை கொண்ட -எங்கள்
தேனூர் பூராடன் புகழ் வாழ்கவே.

காலத்தின் கட்டாயம் உன்னை விரட்டினாலும்
கோலத்தைக் கொண்ட கொள்கையாய்க் கொண்டு
ஞாலத்தைத் திரும்பவைத்த தெய்வத் தமிழ்மகனே,-தமிழ்ப்
 பாலத்தைத்  திறந்துவைத்துப் பரலோகம் சென்றாயோ?

இங்கிருந்தாலும் இப்படி இந்தச்சேவை செய்யமுடியாது -ஆனாலும்
அங்கிருந்து தமிழ் அவனிக்கு ஆற்றியது பல்லாயிரம்
எங்கிருந்தாலும் இன்பத்தமிழ், உன் உயிர் மூச்சு!--என்றும்
மங்காது உனது புகழ், மறவாது உனது தமிழ்ப் பேச்சு!

தித்திக்கும் இன்பத்தமிழ் இணைந்திருக்க --உலகின்
எத்திக்கும் யுன் புகழ் பரந்திருக்க
பக்திக்கு தமிழ் மக்கள் பரந்திருக்க --ஜீவ
முத்திக்கு எங்கு சென்று நீ முயன்றாய்?

வார்த்தைகளை வளைக்க முடியவில்லை யுன் --தமிழ்ப்
போர்த் துடிப்பை மதிக்க முடியவில்லை
யார் நினைத்தார் இம் முடிவை --பாரில்
மார்தட்டி வாழ வழி வகுத்தவனே. !

நான் ஆரம்பப் பாடசாலையில் (மட் /தேற்றாத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன்
பாடசாலையில்)முதலாம் வகுப்பிருந்து ஐந்தாம் வகுப்புவரை படித்த நேரம்,1962 -1966 எனக்கு படிப்பித்த, வகுப்பாசிரியராக இருந்தவர்களில் திருமதி பசுபதி செல்வராசகோபால் அவர்களும் ஒருவர். அத்துடன் அவரது கடைசி மகன் ரிச்சட் சந்திரா எனது வகுப்பில் தான் படித்திருந்தார். அந்நாளில் அவர்களது வீட்டில்,மனோகரா அச்சகம் இருந்தது.அங்கு
அச்சடிக்கப்பட்ட "சாந்தி மார்க்கம்" ஜீவா பிரசுரம் என்ற புத்தகத்தின் உறை இந்த ரிச்சட் சந்திரா என்பவரால் பாடசாலையில் படிக்கும் அவரது நண்பர்களுக்கு வழங்கப்படும இவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு மனோகரா அச்சகத்திற்க்குச் சென்றதுண்டு,அந்
நேரம் அச்சு இயந்திரங்களைப் பார்த்து வியந்ததுண்டு. இன்றும் கல்முனைக்குப் போகும்போது அந்த இடத்தைப் பார்த்து பெருமூச்சு விடுவதுடன்,பசுபதி அக்காவையும்
நினைப்பதுண்டு. தேற்றாத்தீவில் ஆரம்பக்கல்வியை அனைவருக்கும் ஆரம்பித்து வைத்தவர் அல்லவா.

திரு செல்வராசகோபால் அவர்களை நான் அறிந்திருந்தாலும்,அந்த வயதில் அவர் பெருமை எனக்குத் தெரியவில்லை. பின்னர் அவரது மைத்துனர் திரு.பிரவுன் கிரகெரி
இராஜதுரை (இராஜ பாரதி) அவர்கள் மூலம்தான் இவர பெருமைகளைஅறியக்கூடியதாக இருந்தது.  காலங் கடந்த ஞானம் என்றாலும்,இவரது புத்தகங்களைத் தேடிப்பிடித்துப்
படிப்பதன் மூலம் அந்தக் குறை நிறைவேறியது. ஆனாலும் அவரது ஆக்கங்கள் மட்டக்களப்பு மக்கள் கைகளில் கிடைக்காமல், சூறவளியும், சுனாமியும் சதி செய்தது,
காலத்தின் கொடுமை.

இலக்கியமணியின் இனிய வாழ்க்கைக்குறிப்புகளை கீழ்வரும் இணைய தளங்களில்
சென்று பாருங்கள்.
  http://muelangovan.blogspot.com/2010/12/blog-post_941.html
http://www.palakani.com/showthread.php?tid=453

சூடாமணி உள்ளமுடையான்.

சோதிடத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.சோதிடத்தை விரும்பிப் படிபவர்களுக்கு இது ஒரு புதையல்.சோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம்.


நட்சத்திரங்களின் மறு பெயர்கள் 

புகலுருபரிமா வாசி புரவியேறுரசுஞ் சென்னி 
இகலுறு குதிரைமுந்நா ளிரலையைப் பசியின்பேராம்
மகலிய தாழிபூத மடுப்பொடு தராசு கங்குல் 
பகல்வறு கிழவன் சோறு பரணியின் பெயராமே.  01

அசுவினி நட்சத்திரத்தின் மறு பெயர்கள்::
பரி, மா வசி,புரவி,துரகம், சென்னி, குதிரை, முன்நாள், இரலை.

பரணி நட்சத்திரத்தின் மறு பெயர்கள்::
தாழி,பூதம்,அடுப்பு, தராசு, கங்குல், கிழவன்,சோறு.


ஆரலே யழலேயங்கி அலகிறாலறு மீனாவி 
சீர்கொள் கார்த்திகைப் பேராகுந் தெருருளயனாள் வையம்
பார் சகடு ரோகணிப் பேர் பரவு மான்றலை யைந்தானம் 
மார்கழி மதி பேராளன் நரிப்புறமிருகசீரப் பேர் -02


கார்த்திகையின்  பெயர்: 
ஆரல்,அழல்,அங்கி,அளகு,இறால்,அறுமீன்,ஆவி.



ரோகிணியின் பெயர். 
தேருருள்,அயன்நாள்,வையம், சகடு.     


மிருகசீரிடத்தின் பெயர்:
மான்றலை,ஐந்தானம்,மார்கழி, மதிபேராளன்,நரிப்புறம்.

பேரிறை செங்கை யாழ்வில் லாதிரைப் பெயராம்பிண்டி 
கார்திரள் மூங்கில்மாலை கரும்பொடா வணமேவிண்டல் 
கூரிய புநர் தமாகுங் குடந்தரா கொடிறுதையம்
பார்மதி பூசப்பேராம் பணிநாள் கவ்வை பாம்பாயில்யம்.03

திருவாதிரையின் பெயர்:
இறை,செங்கை,யாழ்,வில்,

புணர்பூசத்தின் பெயர்: 
பிண்டிகார், திரள்,மூங்கில், மாலை,கரும்பு,ஆவணம்,விண்டம்,புனர்தம்.

பூசத்தின் பெயர்:
குடம், தரா, கொடிறு,தையம், மதி,

ஆயில்யத்தின் பெயர்:
அரவினாள்,கவ்வை,பாம்பு.

பாவுமுற் சனியே வாயக்கால் வேட்டுவனெழிலி பாரிற்
கூவிய ஞமலி மாசி கொடு நுகமகப்பேர் துர்க்கை 
நாவிதனெலியே மாற்றை யிடைச்சனி பூரனாம்
மோவில் பாற்குனி பங்குனி கடைச்சனி யுத்தரப் பேர். 04

மக நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
முற்சனி,வாய்க்கால், வேட்டுவன், எழிலி,ஞமலி,மாசி,கொடுநுகம்.

பூர நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
துர்க்கை,நாவிதன்,எலி, இடைச்சனி.

உத்தர நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
பாற்குனி,பங்குனி,கடைச்சனி.

உத்தமக் களிறு நவ்வி யுயர் கெளத்துவ மாங்கைம்மீன் 
அத்தமென் கன்னியாடை யாம்பரம் பயறு நெய்மீன் 
சித்திரப் பெயர் மரக்கால் பதுமமே தீபஞ்சோதி
மொத்த வைகாசி முற்றில் சுளகுடன் முறம் விசாகம்.  05

அத்த நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
களிறு,நவ்வி,கெளத்துவம்,கைமீன்.

சித்திரை நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
கன்னி,ஆடை,ஆம்பரம்,பயறு,நெய்,மீன்.

சுவாதி நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
மரக்கால்,பதுமம்,தீபம்.

விசாகம் நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
வைகாசி,முற்றில், சுளகு,முறம்.


விசைகொள் புற்றாளி புன்றேள் மெய்ப்பெண்ணையனுடப்பேரா
மாசி வில் வல்லாரை வாளி துடங் கொளி கேட்டையாகுந் 
திசையுறு குருகு கொக்கு தேட்கடையாணி மூலம் 
வசையிலாக்குளமே பொய்கை வாவி பூரடமாமே. 06




அனுஷ நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
புல்,தாளி,தேள்,பெண்ணை.

கேட்டை நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
வல்லாரை,வாளி,துடங்கொளி.

மூல நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
குருகு,கொக்கு,தேட்கடை ஆனி

பூராட நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
குளம்,பொய்கை, வாவி.

மானெனிற்குளமேகூவன் மணிமுடியாடையூர்தி
கானவுத்தரடாஞ்சோணை சிரவண முலக்கை யோண
மானபுட் பறவை காக்கை யாவணி யவிட்டைப்பேராந் 
தேனனாய் சுண்டன் குன்று செக்கிவை சதையம் செப்பே.

உத்தராட நட்சத்திரத்தின் மறு பெயர்கள்: 
குளம்,கூவல்,மணிமுடி,ஆடை,ஊர்தி.

திருவோணம் நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
சோணை,சிரவணம்,உலக்கை.

அவிட்டம் நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
புள்,பறவை,காக்கை,ஆவணி,

சதய நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
சுண்டன்,குன்று,செக்கு.

செவ்விய கொழுங்கோல் நாழி புரட்டை சீர் புரட்டாதி 
யவ்விய முரசு வேந்த னறிவனுத்தரடாதிப்  பேர் 
வவ்விய கடைமீன் தோணி மரக்கலஞ்சூலம் நாவாய் 
நவ்விதரேவதிப்பே ரவைதினம் நாட்பொதுப் பேர்.

பூரட்டாதி நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
கொழுங்கோல்,நாழி,புரட்டை.

உத்தரட்டாதி நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
முரசு,வேந்தன்,அறிவன்.

ரேவதி நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
கடைமீன்,தோணி,மரக்கலம்,சூலம்,நாவாய்,



வியாழன், 23 டிசம்பர், 2010

பாரதிதாசனின் பொதினாத் துவையல்.


பொதினாத் துவையலின் அருமையைக் கூறும் புரட்சிக் கவிஞ்ஞரின் வெண்பா இது.

ஆய ஒருத்தி அரைக்க இரண்டுபேர்
போயதை வழிக்க ஐந்து பூவைமார் --ஓயார்கள்
நாவிலிட மூன்றுபேர் நண்ண  வேண்டும் பொதி
நாவிலிட்ட நல்ல துவையல்.

ஒருத்தி -ஒருகை
இரண்டு பேர் -இரண்டுகைகள்
ஐந்து பூவைமார்-ஐந்து விரல்கள்
நாவிலிட மூன்று பேர்- சுட்டுவிரல், நடுவிரல்,பெருவிரல். 

பொதினாவைத் துவைத்து, சுவைத்துப் பாருங்கள்.



ஞாயிறு, 5 டிசம்பர், 2010

துன்பத்தில் இருந்து வெளிப்பட.

துன்பத்தில் இருந்து வெளிப்பட.

மனிதர்களாகிய நாம்,இன்னல்களில் இருந்து வெளிப்பட,எந்தவித செலவுமில்லாமல்.
திருமூலர் நான்கு வரிகளில் நல்ல வழியைக் காட்டியுள்ளார்.முடிந்தவர்கள். ஏன்? எல்லாராலும் இதைக் கைக்கொள்ள முடியும். முயற்சி செய்து பாருங்கள்.காசி ராமேஸ்வரம் போகமுடியவில்லையே?தான தருமம் பன்னமுடியவில்லையே என்று
அங்கலாய்ப்பவர்கள்.இந்த நாலு வரியை வாசித்துப் பாருங்கள். நறுக்குத் தெறித்தாற்போல், எவ்வளவு எளிமையாக,இலகுவாக,யாவர்க்கும் புரியும்படி,
அழகாக தருமம் என்பது என்ன என்பதை விளக்கியுள்ளார்.உங்கள் மனதை இன்னல்களில் இருந்து,இலகுவாக வெளிக்கொணரலாம்.எனக்கு விளங்கிய முறையில் இதை எழுதியுள்ளேன்,இதை விட திறமையான முறையில் யாரும் எழுதியிருந்தாலும்
சொல்லுங்கள் திருத்திக் கொள்வோம்.


யாவர்க்கும் ஆம் இறைவற்கொரு பச்சிலை 
யாவர்க்கும் ஆம் பசுவுக்கொரு வாய் உறை
யாவர்க்கும் ஆம் உண்ணும் போதொரு கைப்பிடி 
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே.         (திருமூலர் திருமந்திரம்)

இறைவனைப் பூசிப்பதற்கு ஒரு பச்சிலை போதும்.பசுவுக்கு ஒரு கைப்பிடி அளவு புல் கொடுத்தால் அதுவே பெரிய ஜீவா காருன்யமாகும். உணவு உண்ணும் போது,ஒரு கவளம் உணவு தருமம் செய்தல்.பிறர் மணம் நோகாதவாறு, இனிய மொழிகளைப்
பேசுதல்.இவ்வாறு வாழத் தினமும் பழகிக் கொண்டாலே,வாழ்வில் துன்பம் என்றும்
நெருங்காது.



சனி, 4 டிசம்பர், 2010

சிரிப்...பூ

சிரிப்...பூ.

நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் சிரிப்புக்குக் கொடுத்துள்ள விளக்கம்,உங்களையும் கவரும்,கேட்டு ரசியுங்கள்.



வியாழன், 25 நவம்பர், 2010

காணக் கிடைக்காத வல்லுகங்கள்.

காணக் கிடைக்காத வல்லுகங்கள்.
நீங்கள் வேறு எதையாவது நினைத்து வேறு எதையோ கற்பனை பண்ணினால் நான் பொறுப்பாளி அல்ல. ஓவர் டு போடோஸ் மின் அஞ்சலில்கிடைத்தது.
மின்  அஞ்சலில் கிடைத்தது.நீங்களும் பார்த்து ரசியுங்கள். 



   


 


   


 


   


 


   


 


   

















   









   


 


   


 


   


 


   


 


   














பைகள் என்பதை தமிழில் வல்லுகம் என்றும் சொல்லுவார்கள் தமிழில். வெற்றிலை  வல்லுகம்.வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு,புகையிலை.மேலும் அதற்குத் தேவையானவை எல்லாம்,அதற்குள் இருக்கும்.மொத்தத்தில் ஒரு களஞ்சிய சாலை.   


வெள்ளி, 5 நவம்பர், 2010

.நாயும்,நரியும்.

நாயும்.நரியும் 


எல்லோரும் பாடசாலை நாட்களில்,அநேக நண்பர்களுடன் கூடித் திரிந்தவர்கள்தானே,
நானும் அப்படித்தான்,கூடித்திரிந்தேன். அப்பொழுது எனது சகோதரர் ஒருவர்,இந்தக் கதையையும் கூறி, பாட்டையும் படிப்பார்.படித்துப் பாருங்கள்.


பசியால் வாடி மெலிந்த நரி தின்பதற்கு ஏதாவது அகப்படுமா என்று தேடிக்கொண்டு காடு முழுவதும்,அலைந்து திரிந்து நொந்து நூடுல்ஸாகி .நடக்கவும் திரணியற்று, ஒரு மரத்தின் கீழ் அகோரப் பசியுடன் இருந்தது.அப்பொழுது, நல்ல கொளுத்த ஒரு பணக்கார வீட்டின் நாய், குஷியாக எதிரே ஓடி  வந்தது. நாயின் அழகையும்,அதன் மீதிருந்து வந்த மணமும். நரியைக் கிறங்கச் செய்தது. இது இருக்கிற நிலையில இன்றைய உணவை, இதை  வைத்தே கணக்குப் பண்ணலம்போல் எண்ணி ,வடிவேல் தனமாய் யோசித்தது.இருந்தாலும் தான் தற்போது இருக்கும் நிலையில்,இந்த நாயுடன் சண்டைபோட்டுத் தாக்குப் பிடிக்க முடியாது என்பதையும் கணக்குப் போட்டுத் தெரிந்து  கொண்டது.நரியின் ஆசையும் பசியும் அதிகமாகிக் கொண்டே போனது.அதனால் நாயுடன் நட்பாகப் பேச ஆரம்பித்தது.நாயினுடைய அழகையும்,கொழுத்துப் போயிருந்த உடம்பையும்.அதிலிருந்து வரும் சம்புவின் மணத்தையும் வாயாரப் புகழ்ந்தது.புகழ்ச்சியைக் கேட்டு மடங்கிய நாயர், நரியாரைப் பார்த்து "நண்பனே, நான் சொல்கிறபடி கேட்டால்,நீயும் என்னைப்போல் இருக்கலாம்.பசியுடனும் பட்டினியுடனும் இந்தக் காட்டில் இருந்து ஏன்?கஷ்டப்படுகிறாய்? என்னுடன் வந்தாயானால் நல்ல உணவும்,நேரத்திற்கு குளிப்பும், சௌக்கியமான படுக்கையும் கிடைக்கும்" என்று சொன்னது.  .
  
நரியும், சிந்தித்துப் பார்த்தது,எவ்வளவு நாளைக்குத்தான் நாமளும் இக்காட்டில்  கிடந்து கஷ்டப்படுவது.காட்டைச் சுற்றித் திரிந்தது போதும் கொஞ்சக்காலம் நாட்டையும் சுற்றிப்பார்ப்போம்.இந்தச் சிந்தனையுடன்,நாயைப் பார்த்துக் கேட்டது,"நண்பனே! நான் அங்கு வந்தால், என்ன வேலை செய்ய வேண்டும்?

"வேலையாவது, கீலையாவது,ஒன்றுமே கிடையாது.வீட்டுக்கு வருகிற பிச்சைக்காரர்களை குலைத்து விரட்டியடிக்க வேண்டும்.வீட்டுக்காரர்களைக் கண்டால்வாலைக் குழைக்க வேண்டும்.அவ்வளவுதான் வேலை.இதற்குப் பதிலாக வகை வகையான உணவுகள்,நேரம் தவறாத குளிப்புகள் எல்லாம் கிடைக்கும்.  நாம் நல்லவிதமாகவும், வீட்டுக்காரர்மனம்கோணாமலும்,அவர்கள் மீது பிரியமாகவும் நடந்தால் வீட்டுக்காரர் நமது தலையை தடவிக்கொடுப்பாகள்.என்ன ஒரு சௌகரியம் தெரியுமா?"என்று அல்வா கணேசன் ரேஞ்சுக்குச் சொன்னது.

நாயின் வர்ணனையைக்கேட்ட நரி  சொக்கிப் போயிற்று,"எல்லாம் சரி நண்பனே!உன்னைக் கண்டது முதல் ஒன்று கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.உனது கழுத்தில்
கிடக்கும்,இந்த அழகான கறுத்தப் பட்டி எப்படி வந்தது?"

"எனது வீட்டுக்காரர் என்மேல் கொண்ட அன்பால் இதை அணிவித்தார்.நாட்டுக்குள் நீ வந்தாயானால்,மனிதர்களும் இதைப்போல வகைவகையாக, அணிந்திருப்பதைக் காண்பாய்" என்றது நாய்.

நாயும் நரியும்,ஒரு முடிவுக்கு வந்து நாட்டை அடையும்போது நல்ல இரவாகிவிட்டது.வீட்டுக்காரரின் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் வெகு தடபுடலாக நடந்தது கொண்டிருந்தது. வழக்கத்தை விட,உற்றார் உறவினரின் நடமாட்டம் அதிகமாகவே தென்பட்டது, மறுபுறம்
சமையல் வெகு விமரிசையாக,ஆட்டுக் கொழம்பு,கோழிப்பொரியல்,முட்டை அவியல் என வீடே அமளிப்பட்டது.நாயும் நரியும் வீட்டை அண்மிக்கும்போது சாப்பாட்டின் வாசனை நரியை எங்கோ கனவு உலகுக்கு  கூட்டிக் கொண்டு போனது.நரி நினைத்தது நல்ல ஒரு இடத்திற்குத்தான் நாம் வந்து சேர்ந்துள்ளோம்.உணவை விட அதிலிருந்து வரும் வாசனைதான் பசியை அதிகரிக்கிறது,  இன்று ஒரு கட்டுக் கட்டவேண்டியதுதான் என்று மனதினில் நினைத்தவாறே நாயைப் பின்தொடர்ந்தது.

நரியை நாய் அழைத்தது,"நண்பரே! நீ முதன்முதலிலஎனதுவீட்டுக்குவருகிறாய்,முதலில்
உன்னை முன் வாசலால் அழைத்துப் போகமுடியாததற்கு மன்னித்துக் கொள்,"என்றது.
நரியார்,"பரவாயில்லை எனக்கும் மனிதர்களை முதன் முதலில் பார்க்கும்போது கொஞ்சம் பயமாகத்தான் உள்ளது.உனக்குத்தான் இங்குள்ள நிலவரங்கள் நன்றாகத்
தெரியும்,அதற்குத் தக்கபடி என்னை அழைத்துச் செல்,"என்றது.

நரியாரும் நாயரும் ஒரு மூலையால் புகுந்து உள்ளே நுழைந்து பார்த்தால்,திருமண
வீடல்லவா கூட்டம் சே, சே,என்று இருந்தது.  திரும்பிய பக்கமெல்லாம் உறவினர்கள்.

நாயார் யோசித்தார் இதில் நமது நண்பன் நரியார், மனிதர்களின் கண்ணில் பட்டால்
கதை கந்தலாகிவிடும்.நரியாரை மிகவும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல
வேண்டும் என்று யோசனையுடன்,அங்கும் இங்கும் பார்வையைச் செலுத்திக்கொண்டு
வந்தார்,திடீரென்று அவருக்கு மேல் மாடி காலியாக இருப்பது நினைவுக்கு வந்தது.
நாரியரை அழைத்துக் கொண்டு மாடத்துக்கு விரைந்தார். அங்கும் எல்லாம் தூசு தட்டி
சாமான்களையெல்லாம் ஒதுக்கி வைத்திருந்தார்கள்.நாயர் ஒரு மாதிரியாக ஒரு மறைவான இடத்தை ஒதுக்கிகொடுத்து கொண்டிருக்கும்போது யாரோ வருவது மாதிரி
சத்தம் கேட்டதும் நரியாரும் நாயரும் மறைந்து கொண்டார்கள்.வந்தவர்கள் சாப்பாட்டுச்
சாமான்களை இவர்கள் மறைந்து இருந்த இடத்திற் பாதுகாப்பாக வைத்துச் சென்றார்கள்.
நரியாருக்கோ ஒருபுறம் பசி,மறுபுறம் களைப்பு,எல்லாவற்றையும் விட உணவுவகைகளின் ஒன்றித்த மணம்,நரியாரின் கட்டுப்பாடு நிலை தளர்ந்து போய்க் கொண்டிருந்தது.

நரியார் நாயரிடம் "நண்பா! பசி கண்ணை மறைக்கிறது,சாப்பாடும் அருகில் இருக்கிறது,
சாப்பிடலாமா?" என்றார்.நாயார் நரியாரைப் பார்த்துச்  சொன்னார்,"நண்பா!அவசரப் படாதே,இது மனிதர்களுக்கான உணவு,நமது உணவு கிழே  இருக்கும்,நான் போய்ப்பார்த்து வருகிறேன் கொஞ்சம் பொறுமையாக இரு." என்று சொல்லிவிட்டுக் கீழ் இறங்கிப்போனது.

நேரம் ஆக, ஆக,நரியாருக்கு இருப்புக் கொள்ளவில்லை.பசி பொறுமையைக் கடந்து
கொண்டிருந்தது.நரியாருக்கு நாயின் வருகையை எதிர் பார்த்து கடுப்பாகி விட்டது.
துணிந்து முடிவெடுத்து செயலிலும் இறங்கத் தொடங்கிவிட்டார். கொண்டு வந்து
வைத்திருந்த உணவுப் பண்டங்களைக் காலிபண்ணத்தொடங்கியது.சாப்பிட்டது
திருப்தியாக இருந்ததால்,லேசாக மயக்கம் தாலாட்டத் தொடங்கியது,ஒருவாறு தனது
மறைவிடத்தை அடைந்தார்.நரியாருக்கு சந்தோசம் தலையெடுக்கத் தொடங்கியது.
எதற்கும் நண்பன் நாயார் வந்தால்,அவரிடம் சொல்லி தனது சந்தோசத்தைக் கொண்டாடலாம் என்று நினைத்தபோது,நாயார் வந்துகொண்டிருந்தார்.நாயார் வந்தவுடன்,ஒரு பார்வையில்,ஒரு நொடியில் களநிலைமையை உணர்ந்து கொண்டார்.
நரியார்,நண்பன் நாயாரைக் கண்டவுடன்,"நண்பா! என்னை அழைத்து,மதித்து இவ்வளவு பெரிய
விருந்து படைத்த உன்னை,எவ்வளவு வாழ்த்தினாலும்,தகும். இருந்தும் என் மனது உன்னை    வாழ்த்திப் பாடச் சொல்கிறது, பாடாவிட்டால்,நான் பிறந்த பிறப்புக்குப் பெருமையில்லை" என்று கூறி,நாயாரின் பதில் வெளிப்படும் முன்னரே  பாடத்தொடங்கினார்.நாயார் எவ்வளவு தடுத்தும்,எடுத்துக் கூற முயற்சித்தும்,எந்த  பயனுமில்லை.நாயார் நிலைமை மோசமாகுவதை 
அறிந்து தப்பி ஓடிவிட்டார். 

நரியாரின் ஓலம்,வீடு முழுவதும் எதிரொலித்தது,வீட்டில் இருந்தவர்கள் நரியின் ஓலம்   கேட்டதும் ,வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சியும்,ஆத்திரமும் ஒருங்கே வந்தது.கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு,
நரியின் ஊளைச்  சத்தம் கேட்ட திசை நோக்கி, வீட்டு மாடியை நோக்கி விரைந்து,வந்து  நரிக்கு நல்ல மரியாதை வழங்கி  சாத்துச் சாத்தி இடுப்பை உடைத்து விட்டார்கள்.இடுப்புடைந்த நரி இடுப்பை இழுத்து காட்டைநோக்கி நகர்ந்தது.நகர்ந்து போகும் போது,

                                          கூடாத கூட்டங்கள் கூடாதே, 
                                                     கூடாத கூட்டங்கள் கூடினாலும், 
                                           கூடங்கள் மாடங்கள் ஏறாதே!, 
                                                     கூடங்கள் மாடங்கள் ஏறினாலும்,
                                           கீதங்கள் நாதங்கள் பாடாதே! 
                                                    கீதங்கள் நாதங்கள் பாடினால், 
                                          மோசங்கள் நாசங்கள் வந்துசேருமே!. 

இது மனிதர்களுக்கும் பொருந்தும்,எப்படியோ இருந்தவர்களை,இவனும் நம்மைப் போல்,நல்ல இருக்கட்டும் என்று நினைத்து அழைத்து வந்து வைத்தால்.வழி காட்டியவனுக்கும் ஆப்புவைத்து,அலைக் கழிப்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

புதன், 3 நவம்பர், 2010

பெண்நோயியல் (சிறு நீர் சம்பந்தமான நோய்)


பெண்களுக்கு ஏற்படும் சிறு நீர் சம்பந்தமான நோய்களும், (urinary Incontinence )
அதற்குரிய நவீன சிகிச்சைகளும்.




நன்றி:வீரகேசரி