வெள்ளி, 17 டிசம்பர், 2021

எனக்கு இன்னொரு வீடு இருக்கு! –

 

எனக்கு இன்னொரு வீடு இருக்கு! – சிறுகதை

  

“ஆண்டி, அங்கிள் காபி ரெடி” காப்பாளர் சுதா சிரித்த முகத்துடன் ஜன்னல் வழியா சொல்லிவிட்டு சென்றாள். அறைக்கதவை மூடிவிட்டு காமன் கிட்செனுக்குப் போனார்கள் சுவாமிநாதனும் சகுந்தலாவும். பலர் அப்போ தான் உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர். அங்கே வைத்திருந்த டப்பாவில் இருந்து ரெண்டு பிஸ்கெட்டுக்களை எடுத்துக் கொண்டு காபி கோப்பையுடன் தோட்டத்தில் உட்கார்ந்தனர். பல பறவைகளின் காலை கீச்சுக்கள் மரக்கிளைகளின் இடையே இருந்து ஒலித்தன. பக்கத்தில் வந்து உட்கார்ந்த பாலுவிடம் சுவாமிநாதன், “சாந்தா மேடம்க்கு எப்படி இருக்கு? நீங்க நேத்து போய் பார்த்தீங்களே” என்று கேட்டார். “இப்போ நல்ல improvement சார். நல்லா தெளிவா பேசறாங்க. Electrolyte imbalanceஆம். உப்பு சத்து குறைந்து விட்டதாம். ட்ரிப் ஏத்தறாங்க, நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்ன்னு சொன்னாங்க.”

oldage2

அந்த இல்லத்தில் இருந்த சக வசிப்பாளர் சாந்தா. திடீரென்று முன்னுக்குப் பின் முரணாகப் பேச ஆரம்பித்தார். அங்கே இருந்த பராமரிப்பாளர் உடனே ஏம்புலன்சை கூப்பிட்டு மருத்துவமனையில் சரியான நேரத்தில் சேர்த்து மருத்துவ உதவி கொடுத்ததில் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம். சுவாமிநாதனுக்கும் சகுந்தலாவுக்கும் இந்த இல்லத்தில் பிடித்தது இரண்டு விஷயங்கள், ஒன்று இன்முகத்துடனான சேவை, இரண்டாவது சிறந்த மருத்துவ வசதி. உணவு ருசி முன்ன பின்ன இருந்தாலும் மற்ற வசதிகள் நன்றாக இருந்தன.

இதை ஒரு உயர்தரமான ஹோட்டல் என்று கூட சொல்லலாம். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் அறநூறு சதுரடி இருக்கும். ஒரு வரவேற்பறை, படுக்கை அறை, குளியல் அறை. அலங்கார விளக்குகளும், ஒரு மூலையில் இருக்கும் குட்டி ப்ரிட்ஜும், மின்சார அடுப்பும், மைக்ரோவேவும், சன்னமாக ஒலிக்கும் ஸ்ப்ளிட் ஏசியும், சுவரில் பதிந்திருக்கும் டிவியும், மெத்தென அமுங்கும் சோபா செட்டும் அவர்கள் இருந்த பழைய வீட்டின் நிலையை எண்ணிப் பார்க்கையில் சொர்க்கம் தான்.

oldagehome

அவர்கள் முன்பு இருந்து வளசரவாக்கத்தில், ஒரு கிரவுண்டில் சிறிய வீடு, சுற்றி மரம் செடி கொடிகள். ஆனால் வீடு ரொம்ப பழையது. அவர்கள் வீட்டை வாங்கும் போதே அது பத்து வருட பழைய வீடு. ஓர் அறை கொண்ட வீட்டை இரண்டு அறைகள் கொண்ட வீடாக மாற்றினார் சுவாமிநாதன். வீட்டுக் கடன் அடையவே பத்து வருடங்களுக்கு மேல் ஆகியது. அதுவும் அப்போ விலை ரொம்ப கம்மி. அவர்கள் சக்திக்கு இயன்றதை வாங்கினார்கள். வாங்கியபோது சுற்றி வயல் வெளி தான். பின்னாளில் இப்படி ஒரு பெரிய குடியிருப்பாகும் என்று அன்று அவர்கள் கொஞ்சமும் நினைக்கவில்லை. சுவாமிநாதன் போஸ்ட் ஆபிசில் கிளார்க். சாந்தா அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர். ரொம்ப சிரமப்பட்டு தான் இரு பிள்ளைகளையும் வளர்த்தனர். மகன் மேல் படிப்புக்கு அமேரிக்கா போன போது சுவாமிநாதனுக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது. படிப்புக்குக் கடன் வாங்க அந்த வீட்டை தான் இணையாகக் கொடுத்தார். அதன் பின் மகளுக்கு அமேரிக்கா மாப்பிள்ளை வரன் வந்தது. மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண்ணுக்கு ஒன்றும் சீர் செய்ய வேண்டாம் அனால் கல்யாணத்தை சிறப்பாக செய்து விடுங்கள் என்றனர். அந்த “சிறப்பாக” பல லட்சங்களை தொட்டது. அதற்கும் அந்த வீடு தான் கை கொடுத்தது.

oldhouse

இருவரும் ஒய்வு பெற்ற பிறகு கடனெல்லாம் அடைத்து பென்ஷன் பணத்தில் வாழும்போது தான் தனிமையின் துயரத்தையும் பணப் பற்றாக்குறையையும் உணர்ந்தனர். பழைய வீடானதால் நிறைய மராமத்து வேலைகள் வந்து கொண்டே இருந்தன. மின்சாரக் கசிவை சீர் செய்யக் கை வைத்தால் சீலிங்கில் உள்ள ஒழுகல் தெரிய வந்தது. டாய்லெட் அடைப்பை சரி செய்ய வந்த பிளம்பர் மெயின் டிரெயினேஜ் கனேக்ஷனே கட் ஆகியிருக்கு. தெரு வரை புது பைப் போடனும் என்று பெரிய லிஸ்டை நீட்டினார். பிளம்பரோ எலேக்டிரிஷியனோ சொன்ன நேரத்துக்கு வராமலும், வேலை முடித்த பிறகு சொன்ன எஸ்டிமேட்டை விட இரண்டு மடங்கு அதிகம் வாங்கிச் செல்வதுமே வழக்கமாக இருந்தது. எதோ சின்ன சின்ன ரிபேர்களை செய்து ஒப்பேத்தி வந்தவர்களை டிசம்பர் மழை புரட்டிப் போட்டுவிட்டது. உச்சக்கட்ட மழையின் போது அவர்கள் வீட்டில் எட்டடி தண்ணீர் நின்றது.

பிள்ளைகளிடம் தான் உதவி கேட்டாகவேண்டும் என்ற நிலை. ஆனால் மகளும் மகனும் உள்ளத்தாலும் அமெரிக்கர்களாகிவிட்டனர் என்பது தான் இவர்களின் மிகப் பெரிய இழப்பு. மகளும் மகனும் கடைசியாக இந்தியா வந்து ஐந்து வருடங்கள் ஆயிற்று. மருமகள் அவள் வீட்டு விசேஷம் எதற்காவது ஒரு வார லீவில் வந்து அட்டென்ட் பண்ணிவிட்டு போய்விடுவாள். அந்த பங்க்ஷனுக்கு இவர்களையும் அழைத்து இருப்பார்கள். அங்கேயே மாமியார் மாமனாரை பார்த்தாயிற்றே என்று வீட்டுக்குக் கூட வராமல் “அத்தை நிறைய பர்சேஸ் இருக்கு. ஸௌமியாவை டேன்ஸ் கிளாசில் சேர்த்திருப்பதால் மைலாப்பூரில் அவ டேன்சுக்குத் தேவையான நிறைய சாமான்கள் வாங்க வேண்டியிருக்கு. நீங்க இருக்கிறது வளசரவாக்கத்தில். இங்கே அம்மா வீடு ராயப்பேட்டை. அதனால் அம்மா வீட்டில் இருந்து கொண்டு சாமான் எல்லாம் வாங்கி சேகரித்துக் கொண்டு போக எனக்கு வசதியாக இருக்கும்” என்று இவர்கள் எதுவும் கேட்பதற்கு முன் அவளே தன் திட்டத்தைச் சொல்லிவிடுவாள். சகுந்தலாவும் மனசு கேட்காமல் செய்து கொண்டு போயிருந்த பலகாரங்களையும், பேத்திக்கு வாங்கி வைத்திருந்த காதணி, கழுத்தணிகளைக் கொடுத்து விட்டு வீட்டிற்குக் கணவனுடன் திரும்பி வருவாள்.

சுவாமிநாதனும் சகுந்தலாவும் இது வரை ஒரே ஒரு முறை தான் அமேரிக்கா போயிருக்கிறார்கள், அதுவும் மகளின் முதல் பிரசவத்துக்கு. அவள் இருந்தது பிலடெல்பியாவில், குழந்தை பிறந்தது டிசம்பர் மாதத்தில். ஸ்வெட்டரையும் கம்பளியையும் சுற்றிக் கொண்டு நாலு மாசம் சேவை செய்து விட்டு வந்து விட்டார்கள். அங்கிருந்த மளிகைக் கடையையும், பக்கத்தில் இருந்த சிவா விஷ்ணு கோவிலையும் தவிர வேறு ஒன்றையும் பார்க்கவில்லை. நடுவில் எண்ணி ஏழே நாட்கள் பீனிக்சில் இருந்த மகனையும் மருமகளையும் போய் பார்த்துவிட்டு வந்தார்கள். மகனும் மருமகளும் அப்பா அம்மா வந்திருக்கிறார்களே என்று ஓவரா கொண்டாடவும் இல்லை அதே சமயம் வெறுப்பாகவும் நடந்து கொள்ளவில்லை. வெளிநாடு போனாலே இந்த விட்டேத்திக் குணம் வந்துவிடுமோ என்று பல முறை நினைத்திருக்கிறாள் சகுந்தலா. அவர்கள் வீட்டிற்கு ஒரு விருந்தாளி வந்தால் அவளும் சுவாமிநாதனும் விழுந்து விழுந்து கவனிப்பார்கள். ஆனால் பெண்ணும் பிள்ளையும் யாருக்கு வந்த விருந்தோ என்று நடந்து கொள்வது அவளுக்கு வியப்பைத் தந்தது. “நம்ம இரத்தம் தானேங்க ஓடுது, ஏன் இப்படி இருக்காங்க” என்று பல முறை கணவனிடம் அங்கலாய்த்திருக்கிறாள் சகுந்தலா. அவரோ மௌன சாமியாக பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருப்பார்.

மகள் இரண்டாவது பிரசவத்துக்குக் கூப்பிடுவாள் என்று நினைத்திருந்தாள் சகுந்தலா. ஆனால் அவளோ “உன்னைக் கூப்பிட்டால் என் மாமியாரையும் ஒரு தடவை கூப்பிட வேண்டும், எல்லாம் நானே பார்த்துக் கொள்கிறேன்” என்று வேறு யார் தயவும் இல்லாமல் இரண்டாவது பிரசவத்தைக் கணவன் துணையுடன் முடித்துக் கொண்டாள். அவ்வளவு சாமர்த்தியம்! “ஒரு தடவை வந்துட்டுப் போடி, உன் குழந்தைகளோடு இருக்கணும்னு அப்பாக்கும் எனக்கும் ஆசையா இருக்கு” என்று ஒரு முறை சகுந்தலா சொன்னாள். “அதான் ஸ்கைப்பிலேயே அடிக்கடி பேசறோமே மா எதுக்கு அங்க பணம் செலவழிச்சிக்கிட்டு வரணும்? கார்த்திக் பாட்டிக்கு இங்க வந்து நீ புதுசா கத்துக்கிட்ட பாட்ட பாடிக் காட்டு” என்று அவள் மகனைக் கூப்பிட்டு அதோடு அந்தப் பேச்சுக்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டாள். அவள் மாமனார் இறந்த போது கூட அவள் கணவன் மட்டும் வந்து காரியம் செய்து விட்டுப் போனான்.

“அப்பா வேலைக்குப் போன உடனே கடனை உடனை வாங்கிக் கட்டின வீடு டா, அம்பது வருஷத்துக்கு மேல் ஆச்சு. போன டிசம்பர் மழைல ரொம்ப மோசமாயிடிச்சு. உனக்குத் தெரியாததா? அமபத்தூர்ல மாமா வீட்டில தானே ஒரு மாசம் இருந்து இந்த வீட்டை சரி பண்ணினோம். டாய்லெட் எல்லாம் பழசா பள்ளத்துல இருக்கு. அதனால அடிக்கடி வெளிய சாக்கடை தண்ணி வழியுது. வாசக் கதவெல்லாம் ரொம்ப பாழாயிருக்கு. ஒரு உதை விட்டா கதவு உடஞ்சிடும், அவ்வளவு இத்துப் போயிருக்கு.”

“அதுக்கு என்ன செய்ய சொல்ற மா?” என்றான் வேணு. “எங்க ரெண்டு பேருக்கும் பாதுகாப்பே இல்லடா. வயசானவங்க தனியா இருக்கோம்னு இங்க எல்லாருக்கும் தெரியும். இடிச்சு பிளாட்டா கட்டிடலாம். எங்களுக்கும் துணைக்கு பில்டிங்கில் மத்த குடித்தனங்கள் இருப்பாங்க. உனக்கு ஒரு பிளாட், காவ்யாக்கு ஒரு பிளாட் கொடுக்கணும்னு அப்பாக்கு ஆசை. ஒரு தடவை வந்துட்டுப் போடா. நல்ல பில்டரா பார்த்துப் பேசி, இந்த வீட்டு சாமானை ஒழுங்கு படுத்தி எங்களை வேற வீடு பார்த்து வெச்சிட்டு போனினா ரொம்ப சௌகரியமா இருக்கும். அப்பாக்கு எழுபத்தஞ்சு வயசு ஆகுது. எனக்கும் முடியலை, அப்பாக்கும் முடியலை” என்றாள் சகுந்தலா மகனிடம். ஸ்கைப்பில் அந்தப் பக்கம் அவள் மகன் வேணு எதையும் காதில் போட்டுக் கொண்டா மாதிரியே தெரியவில்லை. சகுந்தலாவிற்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. இவனெல்லாம் என்ன பிள்ளை! பாரின் போறான்னு நினச்சு எவ்வளவு சந்தோஷப் பட்டோம் ரெண்டு பேரும் என்று நினைத்துக் கொண்டாள்.

ஒரு நாள் மகளிடம் இதே வீட்டு மேட்டரை பேச ஆரம்பித்தாள் சகுந்தலா. “ எல்லாம் அண்ணா சொன்னான் மா. இப்படியே அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இருங்கம்மா. இப்போ எதுக்கு வீட்டை இடிக்கணும்? நானோ அண்ணனோ இந்தியா திரும்பி வரப் போறதில்லை. கட்டடத்துக்கு ஒன்னும் விலை கிடையாது எப்பவும் நிலத்துக்கு தான் மதிப்பு. இப்போ எதுக்கு அனாவசியமா இடிச்சு கட்டறீங்க. பின்னாடி நிலத்தை வித்து நானும் அவனும் பணத்தை அமெரிக்காவுக்குக் கொண்டு போயிக்கிறோம்” என்றாள் சர்வ சாதரணமாக.

மனம் நொந்துவிட்டது சகுந்தலாவிற்கு. வயதான பெற்றோரை கவனிக்க வேண்டும் என்கிற எண்ணமும் இல்லாமல், அவர்கள் சிரமப்படுகிறார்கள் என்பதை வாய் விட்டுச் சொல்லியும் கவலைப்படாமல் சொத்தை மட்டும் கனகச்சிதமாகப் பங்கு போட்டுக் கொள்ள அவர்கள் தயாராக இருப்பது உண்மையிலேயே அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. எப்பொழுதுமே தலைமுறை இடைவெளி இருப்பது சகஜம் தான். ஆனால் இவ்வளவு பெரிய இடைவெளியா என்று மனம் வேதனை பட்டது. அவள் மாமியாருக்குப் புற்று நோய் வந்து, கடைசி காலத்தில் இரண்டு வருடம் குளிப்பாட்டி, சோறூட்டி மற்ற உதவிகள் செய்து மாமியார் மனம் கோணாமல் பார்த்துக் கொண்டவள் சகுந்தலா. தனக்கும் தன் கணவருக்கும் உடல் நலமில்லாமல் போனால் ஸ்கைப்பில் விசாரிப்பதுடன் நின்று விடும் என்று புரிந்து கொண்டாள்.

இவர்களே தெரிந்தவர்கள் மூலம் ஜாயின்ட் வென்சருக்காக சில பில்டர்களை பார்க்க ஆரம்பித்தனர். சுவாமிநாதனின் மாமா பையன் சமீபத்தில் அவன் வீட்டை இடித்துக் கட்டியிருந்தான். அவனை சென்று சந்தித்ததில் அவன் தன் பில்டரைப் பற்றி நல்ல அபிப்பிராயம் சொல்லி அவர்களை அவனே பில்டர் ஆபிசுக்கும் கூட்டிச் சென்றான். பேசிக் கொண்டிருக்கையில் சகுந்தலா அங்கிருந்த சில மாடல்களை வியந்த வண்ணம் பார்த்துக் கொண்டிருந்தாள். அதை கவனித்த இஞ்சினியர் கோபால்சாமி வாருங்கள் நாங்கள் கட்டிய சில கட்டங்களின் மாடல்களை உங்களுக்குக் காட்டுகிறேன் என்று ஒரு பெரிய ஹாலுக்கு அழைத்துச் சென்றார். ஆசிரியர் ஆனதால் சகுந்தலாவுக்குக் குழந்தைகளுக்கு மாடல்கள் செய்ய சொல்லிக் கொடுத்திருக்கிறாள். பார்த்துக் கொண்டே வந்தவள் ஒரு மாடலைப் பார்த்து இது என்ன ஹாஸ்பிடலா இல்லை ஹோட்டலா என்று கேட்டாள். அதற்கு அவர், “இல்லைமா இது ஒரு முதியோர் இல்லம். ரொம்பப் பிரமாதமா கட்டியிருக்கோம். ஒரு பெரும் பணக்காரர் அவர் மனைவி ருக்மணி பெயரில் இதை காட்டியுள்ளார். மாச வாடகை அதிகம் தான். ஆனால் உயர்தர சேவை என்றார்.

பொறி தட்டியது சகுந்தலாவுக்கு. ஏன் இந்த வீட்டை இடித்துக் கட்டி கஷ்டப்படனும்? பேசாம இந்த மாதிரி ஒரு முதியோர் இல்லத்தில் போய் இருந்தால் இருவரில் ஒருவர் போன பின்பும் பழகிய இடத்தில் மற்றவர் தொடர்ந்து இருக்கலாமே! வீட்டிற்குத் திரும்பி வந்தவுடன் கணவரிடம் பேசினாள். அவருக்கும் அந்த யோசனை மிகவும் நல்ல யோசனையாகப் பட்டது. நாலு பில்டர்களை போய் காத்திருந்து பார்த்து, அவர்கள் சொல்லும் கணக்கு வழக்குகளை மனத்தில் ஏற்றிக் கொள்வதே அவருக்கு பெரும் சிரமாமாக இருந்தது. இதற்கு மேல் ஒரு பில்டரை முடிவு செய்து அக்ரீமென்ட் போட்டு ஏமாறாமல் பிளாட்களை கட்டி முடிக்க வேண்டுமே என்னும் கவலை அவர் மனத்தில் அரித்துக் கொண்டிருந்தது.

அடுத்த நாளே எஞ்சினியர் கோபால்சாமியிடம் தங்கள் முடிவை சொன்னார்கள். அவரும் உங்க வீடு நல்ல லொகேஷனில் உள்ளது அதனால் நானே நிலமாகவே வாங்கிக் கொள்கிறேன் என்று டோக்கன் அட்வான்சும் அன்றே கொடுத்து விட்டார். டாகுமென்ட்சை வக்கீலிடம் காட்ட அவர்களிடம் இருந்து எடுத்து சென்றார். அவரிடமே அந்த புதிய முதியோர் இல்லத்தில் தங்களுக்கு இடம் கிடைக்குமா என்று பார்க்க சொன்னார்கள். அவரும் விசாரிப்பதாக சொன்னார். அந்த வாரத்தில் மகளுடனும் மகனுடனும் பேசும் போது ஒரு முதியோர் இல்லத்தில் போய் தங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். இருவருமே பேசி வைத்துக் கொண்டு சொன்னா மாதிரி, ஓ நல்ல முடிவும்மா, வீடு ரிப்பேர் பத்தி எல்லாம் கவலைப்பட வேண்டாம் என்றனர். மகனும் மகளும் மறக்காமல் வீட்டை என்ன பண்ணப் போகிறீர்கள் என்று கேட்டனர். எளிதா வாடகைக்கு விட்டுடலாம். அந்த வாடகையும் எங்கள் செலவுக்கு சரியாகும் என்று சகுந்தலா கூறியதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டனர் இருவரும். ஒரு ஆறுதலுக்குக் கூட ஏம்மா அங்க போறீங்க, இல்லை மாதச் செலவுக்குப் பணம் அனுப்பறோம் என்று இருவரும் சொல்லவில்லை.

oldagehome1

 

 

விரைவில் வீட்டை விற்று ஒரு நல்ல நாளில் ருக்மணி முதியோர் இல்லத்துக்குக் குடி வந்தனர். மகிழ்ச்சியாக செல்கிறது வாழ்க்கை. அவர்கள் வயதுக்கு ஏற்ற ஏக்டிவிடீஸ் அவர்களை சுறுசுறுப்புடன் வைத்திருக்கிறது. தங்கள் காலத்துக்குப் பிறகு அவர்கள் வீட்டை விற்ற பணத்தை அந்த முதியோர் இல்லத்துக்குப் போய் சேர வேண்டும் என்று உயில் எழுதி வைத்தனர். அந்தப் பணத்தில் எத்தனை குடியிருப்புகள் கட்ட முடியுமோ அந்த எண்ணிக்கையில் கட்டி மாத வாடகை கொடுக்க முடியாதவர்கள் பயன் பெறும்படி இலவச விடுதியாகப் பயன் படுத்தப் பட வேண்டும் என்று தெளிவாக எழுதி வைத்தனர். எப்பவும் போல ஸ்கைப் கால்கள் தொடர்ந்தன, விசாரிப்புகள் தொடர்ந்தன. எப்போதாவது அவர்கள் சென்னை வந்து வீட்டைப் பார்க்க சென்றார்களானால் அது ஒரு 3 மாடி குடியிருப்பாக மாறி இருப்பதைப் பார்ப்பார்கள்.

நன்றி  அம்மாஸ் சிறு  கதை