ஞாயிறு, 4 டிசம்பர், 2016

மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய தேரர் -வீடியோ

ஊடகவியலாளர் நூர்தீனுக்கு ஏசிப் பேசிய மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய தேரர் (வீடியோ)மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு முன்னாள் இன்று (3.12.2016) சனிக்கிழமை மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய தேரர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்திக் கொண்டிருந்த போது அந்த இடத்தில் செய்திகளை சேகரித்துக் கொண்டும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு நின்ற ஊடகவியலாளர் நூர்தீனை அம்பிட்டிய சுமணரத்தின தேரர் அழைத்து மிகவும் கடுமையாக ஏசிப் பேசியுள்ளார்.மட்டக்களப்பு மங்களராமய தேரரின் செய்திகள் இருட்டடிப்புச் செய்யப்படுவதாகவும் ஒரு பக்க சார்பாகவே தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிடுவதாகவும் அவ்விடத்தில் தெரிவித்த தேரர் மட்டக்களப்பிலுள்ள தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்களை மிகவும் மோசமாக ஏசினார்.
கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் தான் உங்களை அழைத்தும் நீங்கள் வரவில்லை என்றும் எனது தரப்பு செய்திகள் வெளி வருவதில்லை எனவும் கூறிய தேரர் தூசன வார்த்தைகளை கொண்டும் அவ்விடத்தில் ஏசினார்.
பொறுமையாக தேரரின் ஏச்சுக்களை கேட்டுக் கொண்டு நின்ற ஊடகவியலாளர் நூர்தீன் உங்கள் விகாரைக்கு பல தடவைகள் வந்து நீங்கள் கூறிய உங்கள் கருத்துக்களை தமிழ் ஊடகங்களில் வெளியிட்டுள்ளோம். இறுதியாக உங்கள் விகாரைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வந்த நேரத்திலும் இங்கு வந்து தமிழ் ஊடகங்களில் செய்தி வெளியிட்டோம்.
நீங்கள் என்னை அழைத்த அன்று வரமுடியாமல் போய் விட்டது நான் ஊரிலில்லை என்று ஊடகவியலாளர் நூர்தீன் அவ்விடத்தில் தெரிவித்த போதிலும் அதை உள் வாங்கிக் கொள்ளாமல் தேரர் ஏசிப் பேசியதுடன் தேரரும் அவ்விடத்தில் நின்ற பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலரும் தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு கூய் போட்டனர்.
இதன் போது அங்கு பொலிசார் மற்றும் தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சிங்கள பொது மக்கள் என பலரும் நின்றனர்
எனினும் அங்கு செய்தி சேகரித்துக் கொண்டு நின்ற ஊடகவியலாளர் நூர்தீன் உட்பட தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர் அவ்விடத்தை விட்டு நகர வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.