ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

அழகின் சிரிப்பு



அழகின் சிரிப்பு

காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்!
கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்
சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,
தொட்டஇடம் எலாம்கண்ணில் தட்டுப் பட்டாள்!
மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற
மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள்! ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்
தனில்அந்த ‘அழகெ’ன்பாள் கவிதை தந்தாள்.
சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெ டுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வ ளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோள்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.
திசைகண்டேன், வான்கண்டேன், உட்புறச்
செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன். யாண்டும்
அசைவனவும் நின்றனவும் கண்டேன். மற்றும்
அழகுதனைக் கண்டேன் நல் லின்பங் கண்டேன்.
பசையுள்ள பொருளிலெல்லாம் பசையவள் காண்!
பழமையினால் சாகாத இளையவள் காண்!
நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்!
நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை.
----பாவேந்தர் பாரதிதாசன்-----
தமிழன்னை பெற்றெடுத்த தவப்புதல்வர்,
அழகின் சிரிப்பு, பாடிவந்த நிலா.
அன்பு ஆசான்,புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்
அவர்களின் பிறந்தநாள் இன்று