செவ்வாய், 23 மே, 2017

ஆர்டிக்கில் உள்ள உலக விதை களஞ்சியத்திற்கு வெள்ள ஆபத்து

ஆர்டிக் ஸ்வால்பார்ட் தீவுகளில் உள்ள உலக விதை களஞ்சிய சுரங்கப்பாதை வாயிலில் நீர் நுழைந்ததால் அதன் வெள்ளப் பாதுகாப்பை நோர்வே பலப்படுத்தியுள்ளது.
எதிர்கால பேரழிவுகளில் இருந்து உலகின் பயிர்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த விதை களஞ்சியத்தில் மலை ஒன்றுக்குக் கீழ் மிக ஆழத்தில் சேமிப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
எனினும் கடந்த ஆண்டின் அசாதாரண உயர் வெப்பநிலை காரணமாக பனி உருகியதால் சுரங்கப்பாதை வாயிலில் நீர் கசிந்துள்ளது. விதைகளுக்கு பாதிப்பு ஏற்படாதபோதும் இந்த களஞ்சிய வசதியின் சுரங்கப்பாதை மற்றும் வெளியில் உள்ள வடிகால் துளைகளில் புதிதாக நீர்புகா சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த காப்பறைகளில் உலகெங்கும் இருந்து 5,000 பயிர் இனங்கள் சேமிக்கப்பட்டுள்ளன. இங்கு நிலவும் நிரந்தர பனி காரணமாக, உலகின் ஏனைய கிடங்குகளில் விதைகள் அழிந்துபோனாலும் இங்கு அவை உயிர்ப்புடன் பல நூறு ஆண்டுகள் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இங்கு பெரும்பாலான உலக நாடுகள் முக்கியமான விதைகளை சேமித்து வைத்துள்ளன.
இயற்கை பேரழிவு அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளால் தமது பயிர்களை இழக்கும் நாடுகள் ஆர்டிக்கில் உள்ள களஞ்சியத்தில் இருந்து விதைகளை பெற்று அவைகளை மீளுருவாக்கம் செய்ய முடியும். இந்த விதை களஞ்சியத்தை உலகின் மிக முக்கியமான அறை என்று விஞ்ஞானிகள் வர்ணிக்கின்றனர்.
13,000 ஆண்டு விவசாய வரலாற்றை பிரதிநிதித்துவப் படுத்தும் விதை மாதிரிகள் உலக விதைக் களஞ்சியத்தில் ஏற்கனவே சேமிக்கப்பட்டுள்ளன. உருளைக்கிழங்கு, நெல், கோதுமை, பார்லி, கடலை, பருப்பு முதலியவற்றின் விதைகள் இந்த களஞ்சியத்தில் பிரதானமாக சேமிக்கப்படுகிறது. இது வரை 100 நாடுகளில் இருந்து 20000 வகையான விதைகள் சேமிக்கப்பட்டிருக்கின்றன
யுத்தத்தால் சீரழிந்த சிரியாவின் அலெப்போவில் 141,000 விதைகள் கொண்ட விதை வங்கி பாதிக்கப்பட்ட போது, ஸ்வால்பார்ட் உலக விதை களஞ்சியத்திலிருந்து விதைகளை சர்வதேச ஆராய்ச்சி மையம் 2015இல் சிரியாவிற்கு வழங்கியது. அவற்றில் 15000 விதைகள் உலக களஞ்சியத்தில் திரும்ப சேர்க்கப்பட்டன. இங்கு 2.1 பில்லியன் விதைகள் சேமிக்கப்பட வசதி உண்டு.
எனினும் 2016 ஒக்டோபரில் பதிவான உயர் வெப்பநிலை காரணமாக பனிக்கட்டிகள் உருக ஆரம்பித்தன. இதனால் விதை களஞ்சியத்தின் நுழைவாயிலில் 15 மீற்றர் அளவுக்கு நீர் கசிந்து.