ஞாயிறு, 21 மார்ச், 2010

இலங்கை தந்த இலக்கியம்.



இலங்கையின்,தமிழ் இலக்கிய வரலாற்றை, மு.வரதராசனார் ஐயா ஆராய்ந்து  
இருக்கிறார்.அவர் பார்வையில் "இலங்கை தந்த இலக்கியம்".இந்த இலங்கை இன்று இருந்தால் எப்படி இருக்கும்? வாசிப்பவர்களின் எண்ணங்களின் இந்தக் கேள்வி கட்டாயம் 
எழும்.இலங்கையில் இருப்பவர்களின் மனதில், நமது, இலங்கையில் இப்படி இருந்த
தமிழனுக்கா இந்தக் கெதி? என்ற ஆச்சரியம் தொக்கி நிக்கும்    


இலங்கை
பழங்காலம் முதற்கொண்டே இலங்கை தமிழ் வளர்த்த நிலமாக இருந்து வருகிறது இலங்கையின் வட பகுதியாகிய யாழ்ப்பாணத்திலும் கிழக்குப்
பகுதியாகிய மட்டக்களப்பிலும் புலவர் பலர் வாழ்ந்து தமிழ் நூல்கள் பல இயற்றித் தந்துள்ளனர். இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈழத்துப் பூதன் தேவனார் என்ற புலவர் அந்த நாட்டினராய்த் தமிழ் வளர்த்திருக்கிறார்.அவர் இயற்றிய ஏழு பாட்டுக்கள் சங்க இலக்கியத்துள் சேர்ந்துள்ளன (ஈழம் என்பது இலங்கையைக் குறிக்கும் பழைய தமிழச்சொல்.)இலங்கையின் ஆட்சி மொழியாகப் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் தமிழே இருந்து வந்தது.
சிங்களவரும் தமிழ் கற்று வந்த்தனர்.சிங்களவரில் சிலர் தமிழ் நூல்கள் இயற்றியுள்ளனர்.சிங்கள அரசர்கள் ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்து கொண்ட காலத்திலும் தமிழிலேயே கையெழுத்து இட்டனர்.ஆகையால்
நெடுங்காலமாகத் தமிழ் இலக்கியம் இலங்கையிலும் வளர்ச்சி பெற்று வந்ததில் வியப்பு இல்லை.

இலங்கையின் தமிழ் நூல்களும்,புலவர்களும்.
வட மொழி காளிதாசரின் காப்பியத்தின் மொழிபெயர்ப்பாகத்தமிழில் இயற்றப்பட்டுள்ள இரகுவம்சம் என்ற காப்பியம் இலங்கையில் இருந்த புலவராகிய அரசகேசரி என்பவரால் (பதினாறாம் நூற்றாண்டில்) இயற்றப்பட்டதாகும்.ஈராயிரத்து நானூறு செய்யுள் கொண்ட காப்பியம் அது.
தமிழ் நாட்டில் தல புராணங்கள் பல எழுந்த காலத்தில் இலங்கையிலும்
அத்தகைய புராணங்கள் பல இயற்றப்பட்டன.தமிழ் நாட்டில் கோவை,உலா,
கலம்பகம்,சதகம்,தூது அந்தாதி,முதலான நூல்வகைகள் பெருகிய காலத்தில்
இலங்கையிலும் அவ்வகையான நூல்கள் படைக்கப்பட்டன.தக்கினா கைலாச
புராணம்,கோனாசல புராணம்,புலியூர்ப் புராணம்,சிதம்பர சபாநாத புராணம்,
முதலியன இயற்றப்பட்டன சிவராத்திரிப் புராணம்,எகாதாசிப் புராணம் என்பனவும் அங்கு பிறந்தவைகளே. சூது புராணம்,வலைவீசு புராணம் என்பன புதுமையானவை.கனகி புராணம் என்பது ஒரு தாசியின் வாழ்வு பற்றியது.
கிறிஸ்தவச் சமயச் சார்பான தமிழ் நூல்களும் இலங்கையில் இயற்றப்பட்டன.முருகேசு பண்டிதர் நீதி நூல் முதலிய சிலவகை நூல்களை
இயற்றினார்.சிவசம்புப் புலவர் என்ற ஒருவர் செய்யுள் நூல்கள் அறுபது இயற்றினார்.ஊஞ்சல் ஆடுதல் பற்றிப் பாடும் ஊஞ்சல் நூல்கள் பல இலங்கையில் இயற்றப்பட்டன.நவாலீயூர் சோமசுந்தரப் புலவர் ஏறக்குறையப்
பதினைந்தாயிரம் செய்யுள் இயற்றியுள்ளார்.ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்
முதலியவற்றைச் சுவையான முறையில் எளிய தமிழில் அவர் பாடியுள்ளார்.
அவ்வாறு பலவகைப் பக்திப் பாடல்களை அவர் இயற்றிப் புகழ் கொண்டார்.
கதிர்காமம் என்னும் தலத்து முருகக் கடவுளை பாடியுள்ள அவருடைய பாடல்களை இன்னும் மக்கள் போற்றி வருகின்றார்கள்.