இலங்கையின்,தமிழ் இலக்கிய வரலாற்றை, மு.வரதராசனார் ஐயா ஆராய்ந்து
இருக்கிறார்.அவர் பார்வையில் "இலங்கை தந்த இலக்கியம்".இந்த இலங்கை இன்று இருந்தால் எப்படி இருக்கும்? வாசிப்பவர்களின் எண்ணங்களின் இந்தக் கேள்வி கட்டாயம்
எழும்.இலங்கையில் இருப்பவர்களின் மனதில், நமது, இலங்கையில் இப்படி இருந்த
தமிழனுக்கா இந்தக் கெதி? என்ற ஆச்சரியம் தொக்கி நிக்கும்
பகுதியாகிய மட்டக்களப்பிலும் புலவர் பலர் வாழ்ந்து தமிழ் நூல்கள் பல இயற்றித் தந்துள்ளனர். இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈழத்துப் பூதன் தேவனார் என்ற புலவர் அந்த நாட்டினராய்த் தமிழ் வளர்த்திருக்கிறார்.அவர் இயற்றிய ஏழு பாட்டுக்கள் சங்க இலக்கியத்துள் சேர்ந்துள்ளன (ஈழம் என்பது இலங்கையைக் குறிக்கும் பழைய தமிழச்சொல்.)இலங்கையின் ஆட்சி மொழியாகப் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் தமிழே இருந்து வந்தது.
சிங்களவரும் தமிழ் கற்று வந்த்தனர்.சிங்களவரில் சிலர் தமிழ் நூல்கள் இயற்றியுள்ளனர்.சிங்கள அரசர்கள் ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்து கொண்ட காலத்திலும் தமிழிலேயே கையெழுத்து இட்டனர்.ஆகையால்
நெடுங்காலமாகத் தமிழ் இலக்கியம் இலங்கையிலும் வளர்ச்சி பெற்று வந்ததில் வியப்பு இல்லை.
இலங்கையின் தமிழ் நூல்களும்,புலவர்களும்.
வட மொழி காளிதாசரின் காப்பியத்தின் மொழிபெயர்ப்பாகத்தமிழில் இயற்றப்பட்டுள்ள இரகுவம்சம் என்ற காப்பியம் இலங்கையில் இருந்த புலவராகிய அரசகேசரி என்பவரால் (பதினாறாம் நூற்றாண்டில்) இயற்றப்பட்டதாகும்.ஈராயிரத்து நானூறு செய்யுள் கொண்ட காப்பியம் அது.
தமிழ் நாட்டில் தல புராணங்கள் பல எழுந்த காலத்தில் இலங்கையிலும்
அத்தகைய புராணங்கள் பல இயற்றப்பட்டன.தமிழ் நாட்டில் கோவை,உலா,
கலம்பகம்,சதகம்,தூது அந்தாதி,முதலான நூல்வகைகள் பெருகிய காலத்தில்
இலங்கையிலும் அவ்வகையான நூல்கள் படைக்கப்பட்டன.தக்கினா கைலாச
புராணம்,கோனாசல புராணம்,புலியூர்ப் புராணம்,சிதம்பர சபாநாத புராணம்,
முதலியன இயற்றப்பட்டன சிவராத்திரிப் புராணம்,எகாதாசிப் புராணம் என்பனவும் அங்கு பிறந்தவைகளே. சூது புராணம்,வலைவீசு புராணம் என்பன புதுமையானவை.கனகி புராணம் என்பது ஒரு தாசியின் வாழ்வு பற்றியது.
கிறிஸ்தவச் சமயச் சார்பான தமிழ் நூல்களும் இலங்கையில் இயற்றப்பட்டன.முருகேசு பண்டிதர் நீதி நூல் முதலிய சிலவகை நூல்களை
இயற்றினார்.சிவசம்புப் புலவர் என்ற ஒருவர் செய்யுள் நூல்கள் அறுபது இயற்றினார்.ஊஞ்சல் ஆடுதல் பற்றிப் பாடும் ஊஞ்சல் நூல்கள் பல இலங்கையில் இயற்றப்பட்டன.நவாலீயூர் சோமசுந்தரப் புலவர் ஏறக்குறையப்
பதினைந்தாயிரம் செய்யுள் இயற்றியுள்ளார்.ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்
முதலியவற்றைச் சுவையான முறையில் எளிய தமிழில் அவர் பாடியுள்ளார்.
அவ்வாறு பலவகைப் பக்திப் பாடல்களை அவர் இயற்றிப் புகழ் கொண்டார்.
கதிர்காமம் என்னும் தலத்து முருகக் கடவுளை பாடியுள்ள அவருடைய பாடல்களை இன்னும் மக்கள் போற்றி வருகின்றார்கள்.
புதியசெந் தமிழ்மாலை புகழ்மாலை பாடிப்
பொருவில் கந்தா சுகந்தா என்று பாடிக்
கதிரைமலை காணாத கண் என்ன கண்ணே
கற்பூர ஒளி காணாக் கண்என்ன கண்ணே
முதலான அடிகள் சிலப்பதிகாரப் பாடலை ஒட்டி அமைந்தவை
இலங்கை நாட்டுப்பாடல்கள்
பல நூற்றாண்டுகளாக மக்கள் தமிழ் பேசி வாழ்ந்த தீவு ஆகையால் இலங்கையில் நாட்டுப்பாடல்கள் பல உயிருள்ள இலக்கியமாக வழங்கி வந்திருப்பதில் வியப்பு இல்லை.பாடுபட்டு அவற்றைத் திரட்டி வெளியிட்டுவரும் முயற்சியில் அறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.அவர்களுள் இராமலிங்கம் என்பவரின் நன்முயற்சியால் நூற்றுக்கணக்கான இலங்கை
நாட்டுப்பாடல்கள் இன்று அச்சாகியுள்ளன.நாட்டுப்பாடல்கள் பல தமிழ்நாட்டின் நாட்டுப்பாடல்கள் போலவே அமைந்துள்ளன.இரண்டு நாடுகளுக்கும் இடையே அக்காலத்தில் மிகுதியாக இருந்துவந்த மக்கள் போக்குவரத்தும் கலப்புமே அந்த ஒற்றுமைக்குக் காரணம் எனலாம்.ஒரு
பாட்டுக் காணலாம்.
பாட்டி அடிச்சாளோ பால்வார்க்கும் கையாலே
அண்ணா அடிச்சானோ அரைஞான் கயிற்றாலே
ஆண் பனையில் நுங்கே அணில்கோதா மாம்பழமே
கூப்பிட்டு நான் கேட்பேன் குஞ்சரமே கண்வளராய்
என்பது இலங்கையில் அழுகின்ற குழந்தையைத் தாலாட்டித் தாய்மார் பாடும்
பாடல்.
அண்ணா அடிச்சானோ அரைஞான் கயிற்றாலே.
என்ற அடிக்கு ஈடாக
அத்தை அடிச்சாளோ அல்லிப்பூச் செண்டாலே
என்று தமிழ் நாட்டில் பாடுகிறார்கள்.இவ்வாறு சிறு சிறு வேறு பாடுகளுக்கு இடையே அடிப்படை ஒற்றுமை தெளிவாக உள்ளது.
பள்ளு முதலியவை.
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சின்னத்தம்பிப் புலவர்,பள்ளு என்ற வகையைச் சார்ந்த நாடகநூல் இயற்றினார்.அதில் உள்ள பாட்டுக்கள் பலவும் சுவையானவை.நாட்டுப்பாடல் முறையை ஓட்டிப்பாடிய போதிலும்,புலவர்கள் போற்றத்தக்க இலக்கிய நயத்துடன் பாடியுள்ளார்.தமிழ் நாட்டில் பள்ளு இலக்கியம் வளர்த்த காலத்தில்,இலங்கையில் பள்ளு இலக்கியம் படைத்தார் அவர்.
பக்திப்பாடல்களும் வேறு பல தத்துவப் பாடல்களும் பாடியவர் முத்துக்குமார
கவிராயர்.அவர் விருத்தம் பாடுவதில் வல்லவர்.மாணிக்கவாசகர்.தாயுமானவர் ஆகியோரின் நடையை அவர் இயற்றிய பாட்டுக்களில் காணலாம்.
தமிழ் நாட்டில் குறவஞ்சி நாடகப் பாடல்கள் பெருகிய காலத்தில்.இலங்கையிலும் அவ்வகை இலக்கியம் வளர்ந்த்தது.சேனாதிராய
முதலியார் நல்லக் குறவஞ்சி என்னும் சுவையான இலக்கியம் தந்தார்.
ஆறுமுக நாவலர்
யாழ்ப்பாணத்துத் தமிழறிஞருள் சிறப்பிடம் பெற்று விளங்கியவர் ஆறுமுக நாவலர்
(கி.பி.1822 -1889).அவர் சில காலம் தமிழ் நாட்டுக்கு வந்து சென்னையில் தங்கித் தமிழ்த்
தொண்டு செய்ததும் உண்டு.சைவ சமயப் பற்று மிகுந்த அவர்,பெரிய புராணம் முதலான நூல்கள் பரவுவதற்குப் பெரும் பணி புரிந்தார்.சென்ற நூற்றாண்டில் தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும், ஆங்கில நூல்களை தமிழில் பெயர்ப்பதிலும்
வல்லவராக விளங்கினார்.பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்புக்கு பெரும்துனையாக
இருந்து செம்மைப்படுத்தியவர் என்பர்.பலர் தமிழ் நூல்களைப் படிக்குமாறு பாடசாலை
ஏற்படுத்தியதோடு,அவர்களுக்குத் தேவையான பாட நூல்களை அச்சிட்டுத் தருவதற்குத்
அச்சகமும் வைத்து நடத்தினார்.அவற்றை நடத்துவதற்கு ஆகும் பணத்திற்கு வீடு
வீடாகச் சென்று அரிசிப்பிச்சை எடுத்துத் தமிழ்த்தொண்டு செய்த சான்றோர் அவர்.
தமிழில் எழுத்துப் பிழை இல்லாமல் நூல்களை அச்சிட்டுத் தரும் வகையில் சிறந்த வழிகாட்டியாக விளங்கினார்.மாணவர்களுக்கு உரிய தொடக்கப் பாடப் புத்தகங்களை
எளிய தமிழில் தாமே எழுதினார்.சைவ சமயத்தை விளக்கிக்கூறும் நூல்களை இயற்றினார்.இலக்கணத்தை எளிதில் கற்பதற்கு உதவும் நூல்களும் எழுதினார்.பெரிய புராணம்,திருவிளையாடற் புராணம்,ஆகிய செய்யுள் நூல்களை உரை நடையில் எழுதிப் பலர்க்கும் பயன் படுமாறு செய்தார்.வேறு சில செய்யுள் நூல்களுக்கும் நன்னூலுக்கும் உரை எழுதினார்.சென்ற ஆண்டில் தமிழில் உரைநடை வளர்ச்சி பெறத் தொடங்கிய
சூழ்நிலையில்,அதற்கு நல்ல வழி காட்டிப் பிழையற்ற எளிய உரைநடைத் தமிழை வளர்த்தார்.தமிழ் உரை நடையின் தந்தை என்று அவரைக் குறிப்பிட்டுப் போற்றுதல் தகும்.
(தொடரும் )
அன்புடன்,!.....
தெற்கில் மடகாஸ்கரிலிருந்து வடக்கில் இந்தியாவரை, கிழக்கில் ஆஸ்திரேலியா வரை விரிந்து பரந்திருந்திருந்தது நமது தமிழ் இனம். உலகின் தொன் மொழிகளில் நமது தமிழும் ஒன்று. அதில் இலங்கை தமிழர்கள் தமிழுக்கும் சைவத்திற்கும் மிகப் பெரிய தொண்டாற்றிவுள்ளனர்.
பதிலளிநீக்குஇலங்கை தமிழன் பங்களிப்பு இல்லாமல் தமிழ் இலக்கியம் இல்லை. நல்ல பதிவு தோழரே...
தங்களின் அன்பான வரவுக்கும்,விளக்கமான கருத்திற்கும்
பதிலளிநீக்குநன்றிகள்!
Sorry to type in English.
பதிலளிநீக்குGood work.
Keep it up.
- Kiri
சகோதரா!தங்களின் வருகைக்கும்,கருத்திற்கும்,ன்றிகள்
பதிலளிநீக்குமிக அருமையான கட்டுரையைத் தேடி இட்டதற்கு நன்றி!இலக்கியத்தில் இலங்கை சளைத்ததில்லை. அதை மேதை முவ எழுத்தில் படிப்பது மகிழ்வே! பாட்டி அடித்தாளோ? பாட்டின்3 வரி 'ஆன் பனையில் நுங்கே' என வருகிறது. இதில் ஆன் என்பதன் கருத்தை கூறமுடியுமா?'ஆண் பனையில் நுங்கே' - இல்லாத ஒன்று- ஆண்பனையில் நுங்கு கிடைக்காது.இது பற்றி அறிந்து கூறவும்.
பதிலளிநீக்குபிழை திருத்தம் தங்களின் ஆழ்ந்த அவதானிப்புக்கு,நன்றிகள்,தொடர்ந்து எழுதுங்கள்,பிழைகளைத் திருத்திக் கொள்கிறேன்
பதிலளிநீக்கு