30 அரசியல் கட்சிகள், 32 சிவில் அமைப்புகள் புரிந்துணர்வு
Saturday, November 2, 2019 - 6:00am
சஜித் பிரேமதாசவுக்கு சந்திரிகா ஆதரவு
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயக தேசிய முன்னணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டது.
பதிவுசெய்யப்பட்ட 30 அரசியல் கட்சிகள் உள்ளிட்ட 36 கட்சிகளைச் சேர்ந்தவர்களும் 32 சிவில் அமைப்புகளும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. ஜனநாயக தேசிய முன்னணியை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போஷகர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோர் தலைமையில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்றுக் காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்களும் ஐ.தே.க. அரசின் பங்காளிக் கட்சித் தலைவர்களுமான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்தன, அர்ஜுன ரணதுங்க, வே.இராதாகிருஷ்ணன் மற்றும் ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் சிவில் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
‘நாட்டையும மக்களையும் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஜனநாயக தேசிய முன்னணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. உடன்படிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜாதிக ஹெல உருமய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், நவசமசமாஜ கட்சி, இலங்கை மக்கள் கட்சி உட்பட 30 கட்சிகள் கைச்சாத்திட்டதுடன், புரவெசி பலய, தேசாபிமான உட்பட 32 சிவில் அமைப்புகளும் இக்கூட்டணியில் கைக்கோர்த்துள்ளன. அத்துடன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான ‘ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும்’ அமைப்பும் ஜனநாயக தேசிய முன்னணியுடன் கைக்கோர்த்துள்ளது.
இப்புதிய கூட்டணியின் தலைவர் பதவி தொடர்பில் எவ்வித அறிவிப்புகளும் வெளியாகவில்லை. பொதுச் செயலாளராக ராஜித சேனாரட்ன செயற்படுகிறார். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்தான் தலைவர் பதவி உட்பட ஏனைய பதவிகள் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளன. இதேவேளை, எதிர்வரும் 5ஆம் திகதி ‘லங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும்’ அமைப்புச் சார்பில் பிரமாண்ட பொதுக் கூட்டமொன்று கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் அறிவிப்பை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியிடவுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ளது.
சுப்பிரமணியம் நிஷாந்தன்