ஓரம் சொன்னால் உதிர்ந்து போவாய்!
ஆரம் பூண்ட அணிமார்பா அயோத்திக் கரசே அண்ணாகேள்,
ஈரம் மிக்க மரமிருக்க இலைகள் உதிர்ந்த வாறேது,
வாரங் கொண்டு வழக்குரைத்து மண்மேல் நின்று வலிபேசி,
ஓரம் சொன்ன குடியது போல் உதிர்ந்து கிடக்கும் தம்பியரே.
மாலைகளை அணிந்த அழகிய மார்புடைய அயோத்தியின் அரசே (ராமா), பசுமையாக மரம் இருக்க அதில் உள்ள இலைகள் காய்ந்து உதிர்ந்தது ஏன் அண்ணா? (என்று தம்பிகள் கேட்க), இவர் நமக்கு வேண்டியவர், இவர் வேண்டாதவர் என்று வரம்பு வைத்து வழக்கை விசாரித்து ஒருதலைப்பட்சமாக தீர்ப்புச் சொன்ன நீதியரசர்கள் வாழ்க்கையைப் போல உதிர்ந்து கிடக்கின்றன தம்பிகளே! (என்று ராமர் பதில் சொன்னார்.)