போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது பொலிஸார் மற்றும் படையினர் தாக்குதல்
மட்டக்களப்பில், விகாராதிபதியின் அடாவடித்தனங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் எனக் கூறி இளைஞர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில் நேற்று(03) இரவு 8.45 மணியளவில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து போராட்டங்களை நடாத்தி வந்தவர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது,
நீதிமன்ற கட்டளையினை மீறி மங்களராமய விகாராதிபதி பொது மக்களை ஒன்று கூட்டி பொலிஸார் நிற்கும் போதே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் திட்டிய நிலையில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சட்டத்தை அமுல்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மங்களராமய விகாரைக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியில் நின்று, மங்களராமய விகாராதிபதியை கைது செய்ய வேண்டும்.
பொதுபலசேனாவை மட்டக்களப்புக்குள் அனுமதிக்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது பொலிஸார் மற்றும் படையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைத் தாக்கியதில் சிலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில்,
நீதிமன்ற உத்தரவினையும் மீறி ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்தை நடத்திய மங்களராமய விகாராதிபதியையும் அவரது ஆதரவாளர்களையும் பொலிஸார் கைது செய்யவில்லை.

அதற்கு மாறாக, அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி விட்டு அவர்கள் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொலிஸார் அமைதியான முறையிலே போராட்டத்தில் ஈடுபட்ட எம் மீது விசேட அதிரடிப்படையினர் ரி56 ரக துப்பாக்கியின் பின் பக்கத்தினால் தாக்குதலை நடத்தினர்.

இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு ஒரு சட்டம், தமிழர்களுக்கு ஒரு சட்டம் என இருக்கின்றது என்பதை பொலிஸார் நிரூபித்துள்ளனர். இது தான் நல்லாட்சியின் வெளிப்பாடு எனத் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள