திங்கள், 5 டிசம்பர், 2016

"சாதியம்" யாழ்ப்பாணத்தில் சாதி செயற்படும் முறை

Mmc Nishanthan Suveeharan
"சாதியம்" யாழ்ப்பாணத்தில் சாதி செயற்படும் முறை
இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாடு ஒப்பீட்டளவில் மிகவும் சிறியது. எனினும் மக்கள் செறிந்து வாழும் ஒரு பகுதியாக இது உள்ளது. இங்கே வாழ்பவர்கள் 90 விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் தமிழர்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் சைவ சமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள். இவர்களுக்குத் தென்னிந்தியத் தமிழர்களுடன் விரிவான பண்பாட்டுத் தொடர்புகள் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகின்றன. அத்துடன் இலங்கையிலும் அந்நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணம் முழுவதிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனாலும் யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பு, தமிழ் நாட்டிலும், இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் உள்ள சாதியமைப்புக்களிலிருந்து வேறுபட்டுத் தனித்துவமான பண்புகளைக் கொண்டு விளங்குகிறது.
மேலோட்டமாகப் பார்க்கும்போது யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பின் உருவாக்கத்திலும், அதனைக் கட்டிக் காப்பதிலும் இந்து சமயக் கோட்பாடுகளின் தாக்கம் முன்னணியில் இருந்தபோதும், அதன் முக்கிய வெளிப்பாடுகளில் ஒன்றான பிராமண மேலாதிக்க நிலை யாழ்ப்பாணத்தில் முற்றாகவே இல்லாமல் இருப்பது கவனிக்கத் தக்கது. மதரீதியான பணிகளை செய்வதனால் பிராமணர்கள் உயர்வாகக் கருதப்பட்டாலும் சாதிய அமைப்பில் அவர்கள் நிலவுடமை சாதிகளில் தங்கி வாழ்பவர்களாகவே இருப்பதால் சாதியப்படி நிலையில் அவர்களுக்கு உயர்வுநிலை இல்லை. அதிகாரப் படிநிலையில் வெள்ளாளர் (வேளாளர்) சமூகத்தினரே உயர் நிலையில் உள்ளார்கள். யாழ்ப்பாண வரலாறு கூறும் யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலின் படி, யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆரம்ப காலத்தில் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டு அடிமை குடிமைகளுடன் குடியேற்றப்பட்ட பிரபுக்களுள் மிகப் பெரும்பாலானோர் வெள்ளாளர்களே என்பதைக் காண முடியும். இது வெள்ளாளர்களின் உயர் நிலைக்குக் காரணம் அவர்களுடைய ஆரம்பகால அரசியல் பலமே என்பதைக் காட்டுகின்றது.
யாழ்ப்பாண வைபவமாலை பல்வேறு பட்ட சாதியினரின் யாழ்ப்பாணக் குடியேற்றம் பற்றிக் கூறுகின்றது. பிராமணர், வெள்ளாளர், நளவர், மள்ளர், சான்றார், கோவியர், சிவியார் ஆகிய சாதிகள் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. ஒல்லாந்தர் ஆட்சியின்போது 1697 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட அறிக்கையொன்று யாழ்ப்பாணக் குடிகளிடையே 40 சாதிப்பிரிவுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருப்பது பற்றி க. வேலுப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலில், ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதிப்பகுதியில் 1790 ஆண்டில் தலைவரி வசூலிப்பதற்காக எடுத்த சாதிவாரியான கணக்கெடுப்புப் பட்டியலொன்று தரப்பட்டுள்ளது இதில் 58 சாதிப் பிரிவுகளும் அச் சாதிகளைச் சேர்ந்த 16 முதல் 70 வயதுக்குட்பட்ட ஆண்களின் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளன.
இப் பட்டியலிலுள்ள சில உண்மையில் சாதிகள் அல்ல. எடுத்துக்காட்டாக, பரதேசிகள் (பிறதேசத்தவர்), பறங்கி அடிமைகள் என்பவற்றைக் குறிப்பிடலாம். வேறு சில, தொழில் வேறுபாட்டால் உருவான சாதிகளின் உட் பிரிவுகளாக இருக்கின்றன.
இதிலுள்ள பெரும்பாலான சாதிகள் தமிழ் நாட்டுச் சாதிகளை ஒத்தவை. நளவர், கோவியர் ஆகிய இரு சாதிப்பிரிவுகள் மட்டும் யாழ்ப்பாணத்தில் மட்டுமே காணப்படுபவை.
முக்கியமான சாதிகள் அனைத்தும் தொழில் அடிப்படையில் அமைந்தவை. சில சாதியினர் தொன்று தொட்டு ஒரே தொழிலையே செய்துவர, வேறு சில சாதிகள் கால ஓட்டத்தில் தொழில்களை மாற்றிக்கொண்டு வந்ததையும் அறிய முடிகின்றது. ஆரம்ப காலத்தில் சான்றார் என்னும் சாதியினரே பனைமரம் ஏறும் தொழிலை மேற்கொண்டிருந்தனர். பின்னர் நளவர் எனும் சாதியாரும், சிலவிடங்களில் விவசாயத் தொழில் செய்த பள்ளரும் இத்தொழிலில் ஈடுபடவே, சான்றார் செக்கு ஆட்டி எண்ணெய் எடுக்கும் தொழிலை மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணத்துச் சாதிகளில் முக்கியமானவற்றின் தொழில்கள் பின்வருமாறு:
யாழ்ப்பாணத்தில் சாதி வேறுபாடுகள் பரம்பரையாக ஈடுபட்டு வரும் தொழில்களை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப் பட்டுள்ளன.
விவசாயத் தொழில் யாழ்ப்பாணத்தில் மிகவும் அதிகார சக்தி கொண்ட வெள்ளாளரின் தொழிலாகக் கருதப்பட்டது.
நளவர் மற்றும் பள்ளர் எனப்படும் சாதியினர் முறையே கள் இறக்கும் தொழில் செய்பவர்களையும்,தோட்டங்களில் கூலி வேலை செய்பவர்களையும் குறிக்கிறது.
மரணவீடுகளில் பறையடிப்பவர்கள் பறையர் என அழைக்கப்பட்டு அடிமைகளைப்போல் நடத்தப் பட்டார்கள்.
துணி துவைப்பவர்கள் வண்ணார் எனவும் சிகை திருத்தல் வேலை செய்பவர்கள் அம்பட்டர் எனவும் அழைக்கப்பட்டார்கள்.
வண்ணார், அம்பட்டர் சாதிகளிடையே அவர்களின் வாடிக்கையாளர்களின் சாதி அடையாளங்களை கொண்டு சாதி உட்பிரிவுகள் உண்டு.
உதாரணத்துக்கு சில சிகை அலங்கரிப்பாளர்களுக்கு வெள்ளாள சாதியிலிருந்து மட்டுமே வாடிக்கையாளர்கள் இருப்பார்கள், அதேநேரம் மற்றவர்கள் சிறப்புரிமை குறைந்த சாதியினருக்கு தமது சேவையினை பரிமாறுவார்கள்.
பல்வேறுபட்ட சாதிக்குழுக்களைக் கொண்ட சிறுபான்மைத் தமிழ் சமூகத்தினர் ஒவ்வொரு குழுவினருக்கும் இடையில் திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில்லை, அவர்கள் தங்கள் தனித்தன்மையை பாதுகாத்து வந்தார்கள்.
சிறுபான்மைத் தமிழரிடையே படித்து கௌரவமான தொழில் செய்பவர்கள் தங்கள் சாதி அடையாளத்தை மறைத்து சிறப்புரிமை குறைந்த சிறுபான்மை தமிழ் சமூக அங்கத்தினரிடையே தங்களை உயர்ந்தவர்கள் போல காட்டிக் கொண்டார்கள்.
சிறுபான்மைத் தமிழர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்துக் கோவில்களில் உள்நுழைவதற்கோ,வழிபாடு செய்வதற்கோ வெள்ளாள சாதியினரால் அனுமதிக்கப் படவில்லை. சிறுபான்மைத் தமிழர் மகாசபை இதற்கு எதிர்ப்புகளையும் ஆலயப் பிரவேச ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்தது.
1956ல் சாதி ஒடுக்குமறையைத் தடை செய்வதற்காக சமூகக் குறைபாட்டுச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. எப்படியாயினும் அது முதன்முறையாக நடைமுறைப் படுத்தப்பட்டபோது அதில் நிறைய ஓட்டைகள் இருந்தன.
தாழ்த்தப்பட்ட தமிழ் சமூகத்தினரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒருவர் 1950ன் பிற்பகுதியில் கோப்பாய் கிராமச்சபைக்கு தெரிவு செய்யப்பட்டார்.
ஆனால் அவர் கிராமச்சபைக் கூட்டத்தில் பங்கு பற்றியபோது அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலிகூட வழங்கப் படவில்லை பதிலாக ஒரு பழைய உரலின் மேல் அமரும்படி மற்றைய அங்கத்தவர்களால் அவர் கோரப்பட்டார்.
சிறுபான்மை தமிழ் சமூகத்தவர்கள் உயர்சாதியினரோடு சேர்ந்து உணவு உண்ணுவதற்கு அனுமதி கிடையாது.
தேனீர் கடைகளில் அவர்கள் உள்ளே போக முடியாது.
தேனீர் துருப்பிடித்த தகரப் பேணிகளிலும் சோடா போத்தல்களிலுமே வழங்கப் பட்டது.
கடைகளில் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டபோது நிலத்தில் விரிக்கப்பட்ட வெற்றுச் சாக்குகளில் அமரும்படி அவர்கள் கேட்கப்பட்டார்கள்.
இந்தப் பழக்கம் 1960 வரை சுபாஷ் கபே போன்ற இடங்களில் கூட நீடித்தது.
1930 மற்றும் 1940 களில் தாழ்த்தப்பட்ட தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சேலைகளுக்கு மேல் சட்டை அணிவதற்கு அனுமதி இருக்கவில்லை.
தங்கள் மார்பகங்களை மறைப்பதற்காக அவர்கள் ஒரு சிறு துணித் துண்டையே போர்த்த வேண்டியிருந்தது.
குடாநாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் சிறுபான்மை தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தலையை துப்பட்டாவால் போர்த்துவது தடுக்கப் பட்டிருந்தது.
உயர்சாதி மக்கள் சிறுபான்மை தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், தமிழ் ஆண்களின் தேசிய உடையான வேட்டியை அணிவதற்குக் கூட தடை போட்டிருந்தார்கள்.
அநேகமான பாடசாலைகளில் உயர்சாதி ஆசிரியர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச்சேர்ந்த மாணவர்களிடம் பாகுபாடு காட்டினார்கள்.
இந்த மாணவர்களக்கு மேசையோ அல்லது கதிரையோ வழங்கப்படவில்லை.
அவர்கள் நிலத்திலேயெ அமரவேண்டியிருந்தது. அவர்களுக்கு ஆசனங்கள் வழங்கப்பட்டாலும்கூட அவர்கள் கடைசி வரிசை ஆசனங்களையே பயன்படுத்த வேண்டியிருந்தது.
சிகை அலங்கரிப்பு நிலையங்களும் சாதிப் பாகுபாடுகள் அற்றவையாகவே உள்ளன.ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள அநேக ஆலயங்கள் தொடர்ந்தும் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்காக மூடப்பட்டனவாகவே உள்ளன.
தாழ்த்தப்பட்ட சாதியின் இளந் தலைமறையினர் இப்போது சாதிப் பாகுபாடு இல்லை என்றே எண்ணுகிறார்கள்.
அதேபோல உயர்சாதி மக்களும் சாதிப் பாகுபாடு ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவே எண்ணுகிறார்கள்.
ஆனால் சாதிப் பாகுபாடு பல வழிகளிலும் அடிப்படையாக இருந்து கொண்டே வருகிறது.
1995ல் யுத்தத்தின்போது யாழ்ப்பாண மக்கள் சாவகச்சேரிக்கு இடம்பெயாந்த போது உயர்சாதி கிணற்று உரிமையாளர்கள் பாவிக்கப்படாத காணிகளில் இருந்த கிணறுகளுக்குள் குப்பைகளையும் கழிவுகளையும் வீசி இடம்பெயர்ந்தவர்களில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதியினர் உபயோகிக்காதிருக்கும்படி செய்தனர்.
சமூக உறவுகளின் இறுதிக் காரணியாக சாதி தொடர்ந்தும் இருந்து வருகிறது.
எப்படியாயினும் யாழ்ப்பாணத்தில் சில சாதிக் கலப்புத் திருமணங்கள் நடந்தேறியுள்ளன.
யாழ்ப்பாண மாநகரசபைப் பகுதிக்குள் பெரும்பாலான வீதியமைப்பு வேலைகளையும் துப்பரவுப் பணிகளையும் செய்பவாகள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்.
இந்தத் தொழிலாளர்களுக்குப் பெரும்பாலும் குறைவான சம்பளமே வழங்கப் படுகிறது,அவர்கள் ஈடுபட்டுள்ள பணி மிகவும் ஆபத்தானதாக இருந்த போதிலும் கூட.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்கள் வேலை செய்யும் பொழுது அவர்களின் பாதுகாப்பையும் உடல் நலத்தையும் உத்தரவாதப்படுத்துவதற்கு உகந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.
இந்தத் தொழிலாளர்களில் அநேகர் தங்கள் உரிமைகளையும் உயர் வேதனத்தையும் கோருவதற்கான தொழிற்சங்க அமைப்புகளை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து குத்தகைக்கு விவசாயம் செய்பவர்களும் கஷ்டங்களை எதிhகொள்கிறார்கள்.
நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறியுள்ள உயர்சாதி தமிழர்கள் தங்கள் நிலங்களை சிறுபான்மைத் தமிழர்களுக்கு விற்பனை செய்வதை விரும்பவில்லை.
மொத்தத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினர் பல வழிகளினாலும் வறுமை நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார்கள்.
காரைநகர் பகுதியில் தாழ்த்தப்பட்ட சாதியினர் பயன்படுத்தி வந்த ஒரு பொதுக் கிணற்றுக்குள் அவர்களின் பயன்பாட்டுக்குத் தடங்கல் ஏற்படுத்தும் நோக்கில் உயர்சாதி ஆட்களினால் மனிதக் கழிவுகள் வீசி அசுத்தப் படுத்தப்பட்டது.அந்தப் பகுதியில் இயங்கி வந்த சில ஈபிஆர்எல்எப் அங்கத்தவர்கள் அந்தக் கழிவுகளை வீசியவர்களை இனங்கண்டு அவர்களைக் கொண்டே அந்தக் கிணற்றை சுத்திகரிக்க வைத்தார்கள்.
வட மாகாணத்திலுள்ள சனத்தொகை கொண்டிருப்பது சுமார் 40 விகிதமான தாழ்த்தப்பட்ட தமிழர்களை.
தாழ்த்தப்பட்ட தமிழ் சமூகத்தைச் சேர்ந்த அநேக இளைஞர்கள் போராட்ட இயக்கங்களில் இணைந்து கொண்டதற்கு காரணம் அவர்கள் வீடுகளில் நிலவிய வறுமையே.மேலும் அவர்கள் எண்ணியது தாங்கள் தனியாக இயங்கக்கூடாது அப்படிச் செய்தால் அது தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு குழி பறித்தது போலாகிவிடும் என்று.
இந்தக் குழுக்கள் உயர்சாதியினருக்கு நிகரான ஒரு சந்தர்ப்பத்தை தங்களுக்கு வழங்குவதையும் அவர்கள் கண்டார்கள்.
சிலவேளைகளில் ஒடுக்கப்பட்ட சாதியினரை விடுவிப்பதில் இந்தக் குழுக்கள் மிகவும் தீவிரமாக இல்லை என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள் போலும். தாழ்த்தப்பட்ட தமிழர்கள், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு பாரிய பங்களிப்பைச் செய்திருந்த போதிலும் உயர்சாதி தமிழர்கள் மற்றும் உயர்சாதி தமிழர் தலைவர்களும் தமிழ் சமூகத்தினுள்ளேயிருக்கம் சாதி ஒடுக்குமுறையினை களைந்தெறியத் தவறி விட்டார்கள். தகவல்: தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள