திங்கள், 19 டிசம்பர், 2016

பிரதமரின் இனவாதத்திற்கு எதிரான அறைகூவல்!

பிரதமரின் இனவாதத்திற்கு எதிரான அறைகூவல்!
மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தம்மை தக்க வைத்துக் கொள்வதற்காகப் பயன்படுத்தும் ஒரே ஆயுதமாக இனங்களுக்கிடையே முரண்பாட்டைத் தோற்றுவித்து இனவாதத்தை தூண்டும் மோசமான செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்குவார்கள் என்ற மேற்குலக அறிஞர் ஒருவரின் கூற்றுக்கு ஒத்ததாக இன்று எமது நாட்டில் மீண்டும் இனவாத செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. ஜனநாயக நீரோட்டத்தை திசை திருப்பும் ஒரு முறை கேடானதும் கவலை தரக்கூடியதுமான விடயமாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது.
அரசியலில் ஓரங்கட்டப்பட்ட சக்திகள் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டிவிடும் அந்த முனைப்பான முயற்சிகளை முறியடிப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய கட்டாயம் இன்று அவசரமாக தேவைப்படுகிறது. நாட்டின் பாதுகாப்புக்கு பாரிய குந்தகமாக அமைந்து வரும் இந்த இனவாதம் கடந்த காலத்தில் நாட்டை எந்தத் திசைக்கு இழுத்து சென்றது என்பதை நாமறிவோம். கடந்த ஆட்சியின் இறுதிக் கட்டப் பகுதியில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்களால் நாடு எதிர்கொண்ட நெருக்கடியான சவால்களை மீட்டுப் பார்ப்போமானால் இன்னொரு தடவை அதுபோன்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படக் கூடாது என்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது.
இவ்வாறான நிலையில்தான் கடந்த திங்கட்கிழமை குருதலாவையில் இடம்பெற்ற தேசிய மீலாத் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு முக்கிய உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில் இனவாதத்தைத் தூண்டும் சக்திகள் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லையென கடுமையாக எச்சரித்திருக்கிறார். காவியுடை தரித்த சிலர் பௌத்த கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரண்பட்ட விதத்தில் செயற்படுவதாகவும் இது விடயத்தில் அரசாங்கம் விழிப்பாகவும், உன்னிப்பாகவும் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்போர் யாராக இருப்பினும் அந்தச் சக்திகளை முறியடிப்பதற்கு தயங்கப் போவதில்லை என அங்கு பிரதமர் சூளுரைத்திருக்கின்றார். இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் ஜனநாயக சுதந்திர உரிமை இருப்பது போன்று அவர்களது மத சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற உறுதியான நிலைப்பாட்டை அரசு கொண்டிருப்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். புத்தரின் அன்பு வழிப் பாதையிலிருந்து எமது மக்களை திசை திருப்பும் ஒரு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள இந்த சில காவியுடைச் சக்திகளின் பின்னணியில் இயங்கி வரும் மக்காளல் நிராகரிக்கப்பட்ட அரசியல் சக்திகள் குறித்து அரசு விழிப்புடனேயே இருப்பதை பிரதமர் இங்கு சுட்டிக்காட்டத் தவறவில்லை. அத்துடன் பாதுகாப்புத் தரப்பையும் உஷார் படுத்தியுள்ளார்.
தமது சுயநல அரசியல் செயற்பாடுகளுக்காக நாட்டு மக்களை பலிக்கடவாகப் பயன்படுத்துவது போதிமாதவனின் கோட்பாடுகளுக்குப் பொருந்துமா? என்பதை அவர் வழியைப் பின்பற்றும் பௌத்த மக்கள் உணர வேண்டும். எந்தவொரு சமயமும் மற்றைய சமயத்தை கசப்புணர்வுடனும் காழ்ப்புணர்வுடனும் நோக்க முடியாது.
எந்தவொரு மதமும் மானுடத்தை கழுத்து நெறித்துக் கொள்வதற்கு போதிக்கவில்லை. அறப்போதனை சகல மதங்களிலும் நல்லதை மட்டுமே போதிக்கின்றன.
அனைவரும் மனிதர்கள் என்ற அன்பு வழி தன்னைப் போதித்த பௌத்த கோட்பாடுகளை மீறி மற்றுமொரு தடவை நாட்டில் இரத்த ஆறு ஓடச் செய்யும் தவறான கைங்கரியத்தை முன்னெடுத்து இரத்தக்கறை படிந்த கரங்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் நாட்டுக்கு எதனைச் சொல்ல முற்படுகின்றனர்? ஜனநாயகத்தை மீண்டுமொரு தடவை கேள்விக்குட்படுத்தி சர்வாதிகாரத்தின் பக்கம் நாட்டைக் கொண்டு செல்லும் முயற்சிக்கு வாய்ப்பளிக்க முடியுமா? என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
யுத்தத்துக்கு வழிகோலும் சில மதக் குழுக்கள் எம்மிடையே இருப்பது நாடு கண்ட துரதிஷ்டமென அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சுட்டிக்காட்டி இருப்பதையும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது. திட்டமிட்ட முறையில் இச்சக்திகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கடந்த காலத்தில் களுத்துறையில் அரசியலிலீடுபட்டவர்களும் அம்பாந்தோட்டையில் நீலப்படையணியில் இணைந்து செயற்பட்டவர்களுமே இவ்வேலைத் திட்டத்தினை முன்னெடுத்து வருவதாகவும் இதில் சில பௌத்த துறவிகளும் இணைந்து செயற்படுவதையும் அவர் பகிரங்கப்படுத்தியிருக்கின்றார்.
கடந்த ஆட்சியில் திட்டமிடப்பட்டே இவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இந்தக் குழுவினர் இன்று மீண்டும் இரத்தக் களரியொன்றை ஏற்படுத்த முனைகின்றனர். இதனை ஜனநாயக அரசு கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது எமது பூமதாவில் இரத்த ஆறு ஓட இன்னொரு தடவை இடமளிக்க முடியாது. இந்தத் தீய சக்திகளின் இலக்கு எந்த வகையிலாவது அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்பதுதான் அதற்காக ஒவ்வொரு சமுகத்தையும் தமது வலைப்பின்னலுக்குள் சிக்கவைப்பதுதான் இவர்களது மறைமுகமான திட்டமாக காணப்படுகின்றது.
அவர்கள் சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் ஒன்றை கூறுகின்றனர். தமிழ், முஸ்லிம் மக்கள் முன் போய் வேறுவிதமாகக் கதைக்கின்றனர். அதேசமயம் இனவாதக் குழுக்களைத் தூண்டி சிறுபான்மை மக்களுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தூண்டி விடுகின்றனர். இந்த வகையில் பார்க்கின்ற போது, இந்த இனவாதத்தின் உண்மையான ஊற்று தோல்வி கண்ட அரசியலாகவே காணப்படுகின்றது. தமது அரசியல் பிழைப்புக்காக இனவாதம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு ஜனநாயக அரசியலில் இடமளிக்க முடியுமா என்பதை தாம் சித்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு இனவாத அரசியலை தோல்வியடையச் செய்வதற்கு மற்றொரு இனவாதச் செயற்பாடு மாற்றீடாக அமைய முடியுமா என்பதையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளது. இனவாதம் எந்தக் கோணத்தில் தலையெடுத்தாலும் அதனை முறியடித்தே ஆக வேண்டும்.
எவ்வாறாக இருந்த போதிலும் தவறான பாதையில் பயணிப்போருக்கு சரியான பாதையை காண்பித்தாக வேண்டும் அந்தச் சரியான பாதைக்குள் அவர்கள் வரத்தவறினால் நாடு இருளுக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதை உணர்ந்து. இனவாதத்தை முறியடிக்க எத்தகைய ஆயுதத்தையாவது பயன்படுத்தியே தீரவேண்டும் அதற்கமையவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் எச்சரிக்கையை நோக்க வேண்டியுள்ளது. நாம் பெற்ற சுதந்திரத்தையும், ஜனநாயக உரிமையையும் பாதுகாக்க இதுவொன்றே சரியான வழிமுறையாகும். மற்றொரு தடவை இந்த மண்ணில் இரத்த ஆறு ஓட இடமளிக்கப்படக்கூடாது என்ற விடயத்தில் உறுதியுடனிருப்போமாக!