எச்சரிக்கிறது ஹெல உறுமய; மீறி செயற்பட்டால் அரசின் தலைவிதியை தீர்மானிப்பதாக அமையும் என்கிறது
(எம்.ஆர்.எம்.வஸீம்)
"சிங்கள மக்களின் மனதை வெற்றிகொள்ளாமல் எந்தவொரு தீர்வையும் தமிழர்கள் பெறமுடியாது"
நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்களின் உள்ளத்தை வெற்றிகொள்ளாமல் ஒருபோதும் தமிழ் மக்கள் அரசியல் தீர்வோ வேறு எந்த தீர்வோ பெற்றுக்கெள்ள முடியாது என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்தார்.
அத்துடன் நாட்டின் ஒற்றையாட்சிக்கு ஆபத்து ஏற்படும் விதத்திலோ பெளத்த மதத்துக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருக்கும் அந்தஸ்தை குறைக்கும் வகையிலோ அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் ஜாதிக ஹெல உறுமய அதற்கு எதிராக வாக்களிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் அமைந் துள்ள ஜாதிக ஹெல உறுமயவின் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், ஜனவரி மாதம் புதிய அரசியல் அமைப்பை சமர்ப்பிக்கப்போவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு திருத்த குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தலைமை வகிக்கின்றார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அரசியலமைப்பு தொடர்பான அவர்களது கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் ஜாதிக ஹெல உறுமயவை பொறுத்தமட்டில் புதிய அரசியலமைப்பை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கு அரசியல் ரீதியில் இது பொருத்தமான காலம் அல்ல என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றது.
மேலும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு மக்கள் ஆணையை வழங்கியது அரசியலமைப்பை திருத்துவதற்கல்ல. சட்டத்தை நிலைநாட்டி மோசடிகாரர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும் என்ற காரணத்துக்கே முதலாவதாக மக்கள் அரசாங்கத்துக்கு ஆணை வழங்கியிருந்தது. அதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதனை அரசாங்கம் தற்போது மீறியுள்ளது. ஆனால் அரசாங்கம் அரசியலமைப்பு திருத்தத்துக்கு அவசரப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
அரசாங்கம் அவ்வாறு அரசியலமைப்பை பாராளுமன்றத்துக்கு முன்வைக்கும் போது அதில் நாட்டின் ஒற்றையாட்சிக்கு ஆபத்து ஏற்படும் விதத்திலோ பெளத்த மதத்துக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருக்கும் அந்தஸ்த்தை குறைக்கும் வகையிலோ திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் ஜாதிக ஹெல உறுமய அதற்கு எதிராக வாக்களிக்கும்.
அத்துடன் அரசியல் அமைப்பு திருத்தத்தில் மாகாணசபைகளுக்கு மத்திய அரசாங்கத்தால் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாத அதிகாரம் வழங்கப்படவேண்டும் என வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதெளிவாக அதிகார பகிர்வையே காட்டுகின்றது. அப்படியாயின் நாடு ஒற்றையாட்சியாக மாட்டாது. அத்துடன் ஆளுனரின் அதிகாரம் குறைக்கப்படவேண்டும் என்றும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் இல்லாமலாக்கப்படவேண்டும் என்றும் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தெளிவாகவே சமஷ்டி ஆட்சிக்கே திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறான திருத்தங்களுக்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்பதை பொறுப்புடன் கூறுகின்றேன்.
அத்துடன் தமிழ் மக்களுக்கு அளிக்கப்பட்ட சர்வதேச வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என வடமாகான முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் விடயங்களை நிறைவேற்றுவதாக அரசாங்கத்தில் யாரேனும் சர்வதேசத்துக்கு வாக்குறுதி அளித்திருக்கின்றனரா என நாங்கள் கேட்கின்றோம். அவ்வாறு திருட்டுத்தனமான ஒப்பதங்கள் செய்துகொள்ளப்பட்டிருந்தால் அவ்வாறான ஒப்பந்தங்களுக்கு நாங்கள் இணங்கப்போவதில்லை.
நாட்டின் அரசியலமைப்பு மக்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து மேற்கொள்ளப்படவேண்டும். சுமந்திரனோ, விக்னேஸ்வரனோ அல்லது சம்பந்தனோ நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்களின் உள்ளத்தை வெற்றிகொள்ளாமல் ஒருபோதும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வையோ வேறு எந்த தீர்வையோ பெற்றுக்கெள்ள முடியாது.
எனவே நாட்டில் தற்போது மக்கள் பொருளாதார கஷ்டத்தில் இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் புதிய அரசியலமைப்பு அரசாங்கத்துக்கு மரணப்பொறியாகவே அமைந்துவிடும் என்பதில் சந்தேகமும் இல்லை. எம்மை பொறுத்தமட்டில் அரசியலமைப்பில் தேர்தல் முறைமையில் மாத்திரம் மட்டுமே தற்போதைக்கு திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் அதனையும் மீறி அரசாங்கம் செயற்பட்டால் அது அரசாங்கத்தின் தலைவிதியாகவே அமையும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள