திங்கள், 16 ஜனவரி, 2017

சீனாவின் விடாப்பிடியும்,சிங்களத் தலைவரின் தடாலடியும்


சீனாவின் விடாப்பிடியும்,சிங்களத் தலைவரின் தடாலடியும் 


இலங்கை ஒரு சிறிய நாடு அல்ல, மிகப்பெரிய வாய்ப்புகளைக் கொண்ட ஒரு நாடு, அதனால் தான் இங்கு கூடியிருக்கிறோம். இவ்வாறு கூறியிருந்தார் இலங்கைக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லிங்.
கடந்த 7ம் திகதி அம்பாந்தோட்டையில் சீனாவின் முதலீட்டில், கைத்தொழில் வலயத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே சீனத் தூதுவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையையும், அம்பாந்தோட்டையை உள்ளடக்கிய பகுதியில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளையும் சீனா 99 வருட குத்தகைக்குப் பெற்றுக் கொள்ளவுள்ள விவகாரம், இலங்கை அரசியலில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலங்களையும், துறைமுகத்தையும் சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவதை மஹிந்த ராஜபக்சவும், ஜே.வி.பி.யும் கடுமையாக எதிர்த்து வருகின்றன.ஆனாலும், எதிர்மறை சக்திகளின் இந்த எதிர்ப்புகளினால் சீனா பின்வாங்கி விடாது என்பதை சீனத் தூதுவர் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கையில் தனது முதலீடுகளை அபிவிருத்திக்கான உதவி என்று காட்டிக்கொள்ள சீனா முனைந்தாலும், உண்மை அதற்கும் அப்பாற்பட்டது.இலங்கைக்கு இப்போது தேவைப்படுவது, பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மேல் எழும்புவது மாத்திரமே. அதற்கு சீனாவைப் பயன்படுத்திக் கொள்கிறது அரசாங்கம்.
இந்தச் சந்தர்ப்பத்தை சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. பூகோள அரசியல் போட்டியில், இலங்கையை தக்கவைத்துக் கொள்ளல் என்பது முக்கியமான விடயம்.
இந்தியப் பெருங்கடலில் இலங்கைத் தீவின் அமைவிடம் மிகவும் முக்கியமானது. அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்காவின் பசுபிக் கட்டளை தளபதி அட்மிரல் ஹரி பி ஹரிஸ் இதனை தெளிவாகக் கூறியிருக்கிறார்.
இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் அண்மையில் எழுதியுள்ள நூல் ஒன்றில், இலங்கைத் தீவை ஒரு விமானந்தாங்கி கப்பல் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியப் பெருங்கடலின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருப்பதால் தான், இலங்கையை தமது வசம் வைத்திருப்பதற்கு, அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.
இந்தியா, அமெரிக்காவின் சார்பு நிலையில் இருந்து கொண்டு, சீனாவை ஓரம்கட்டிக் கொண்டு, ஆட்டத்தை ஆரம்பித்த தற்போதைய அரசாங்கத்தினால், பொருளாதார ரீதியாக பலம்பெற முடியவில்லை.
அதற்குப் பின்னர் தான் சீனாவையும் அரவணைத்துக் கொண்டு ஆடத் தொடங்கியிருக்கிறது.கொழும்பு நிதி நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம், அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயம் என்று தற்போது சீனா முப்பெரும் திட்டங்களில் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறது.
எல்லாம் சரியாக நடந்தால் அடுத்த 3 தொடக்கம் 5 ஆண்டுகளில், 5 பில்லியன் டொலர் முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என்று சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையைப் பொறுத்தவரையில் இனிமேல் கடன் வாங்கி பொருளாதாரத்தைச் சீரமைக்க முடியாது என்ற கட்டத்தில் தான் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து பொருளாதாரத்தை உயர்த்த முடிவு செய்திருக்கிறது.
சீனா மட்டும்தான் இப்போது பேரளவு நிதி முதலீட்டை மேற்கொள்ளக் கூடிய நாடாக இருக்கிறது.இலங்கையில் சீனாவுக்குத் தேவைகள் அதிகம் இருப்பதால், கண்ணை மூடிக் கொண்டு, கால்வைக்கவும் சீனா தயாராக இருக்கிறது.
அம்பாந்தோட்டையில் மஹிந்தவிடம் எதிர்பார்த்ததை விடவும் அதிகமான வாய்ப்புகளை தற்போதைய அரசாங்கம் கொடுக்கத் தயாராக இருப்பதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது சீனா.
மிகப்பெரிய ஒரு நாட்டுக்குரிய வாய்ப்புகளை கொண்ட நாடாக இலங்கையைப் பார்க்கிறது சீனா. வெறும் பொருளாதாரப் பெறுமானங்களை மட்டும் வைத்து, இந்த வாய்ப்புகளை எடை போடுவதற்கு சீனா தயாராக இல்லை. இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் அத்தகையதொரு முடிவுக்கு வர சீனாவைத் தூண்டியிருக்கிறது.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை இராணுவ நலன்களுக்குப் பயன்படுத்தும் திட்டம் சீனாவிடம் இருந்தாலும், அதற்கான வாய்ப்புகளை இலங்கை அரசாங்கம் இப்போது வழங்கத் தயாராக இல்லாவிடினும், தனது கட்டுப்பாட்டில் அம்பாந்தோட்டைத் துறைமுகம் இருப்பது சீனாவைப் பொறுத்தவரையில் பெரும் பலம்.
இப்போது சீனா அதனைத் தான் முக்கியமான விடயமாகப் பார்க்கிறது.கடல்கடந்த தளங்களை அமைக்கும் விடயத்தில் சீனா அக்கறை கொண்டிருந்தாலும், அவசரப்படவில்லை. இதுவரையில் டி.ஜி.போட்டியில் மாத்திரமே கடற்படைத் தளத்தை அமைக்க சீனா முடிவு செய்திருக்கிறது,
எனவே, அம்பாந்தோட்டையில் அத்தகையதொரு வசதியை ஏற்படுத்திக் கொள்ளும் அவசரம் சீனாவுக்குக் கிடையாது. ஆனால், அத்தகையதொரு ஆர்வம் சீனாவிடம் இருக்கிறது.
இப்போது அவசரப்பட்டு, அம்பாந்தோட்டையில் தளம் அமைக்கக் கோரினால் அது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பது சீனாவுக்கு நன்றாகவே தெரியும்.இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் அதனைக் கடுமையாக எதிர்க்கும். உள்நாட்டிலும் எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும்.
ஆனால், அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், அதனைச் சுற்றியுள்ள பகுதியில் கைத்தொழில் வலயத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டால், அடுத்த 99 ஆண்டுகளுக்குள் சீனாவின் கனவு நனவாகும் வாய்ப்புகள் இருக்கின்றன.
அந்தக் கால இடைவெளிக்கும் அரசியல் மாற்றங்கள் நிகழலாம். இராணுவ மாற்றங்கள் இடம்பெறலாம். அதைவிட, சீனாவின் பிரசன்னத்தை அச்சுறுத்தலோடு பார்க்கின்ற ஒரு நிலை அடுத்த பத்து அல்லது அதற்கடுத்தடுத்த ஆண்டுகளில் மறைந்துவிடும்.
காலடி எடுத்து வைக்கும் வரையில் தான் கடுமையான எதிர்ப்புகள் இருக்கும். கால் வைத்த பின்னர் அந்த எதிர்ப்புகள் படிப்படியாக குறையத் தொடங்கிவிடும்.அதனைத்தான் சீனா கவனத்தில் கொண்டிருக்கிறது.
இலங்கையில் சீனாவின் முதலீடு பொருளாதார நோக்கத்தைக் கொண்டதல்ல. அது முற்றிலும் பூகோள அரசியல் நலனையும், பாதுகாப்பு நலனையும் அடிப்படையாகக் கொண்டதேயாகும்.
இத்தகைய நிலையில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினால் ஏற்படக்கூடிய நட்டத்தை அல்லது கைத்தொழில் வலயத்தை அமைப்பதற்காக செலவிடுகின்ற முதலீட்டையிட்டு சீனா கவலைப்படாது.
இலங்கையிலிருந்து சீனாவுக்கு, தேவைப்படுவது போருளாதார இலாபங்களோ, வருமானங்களோ அல்ல. அதற்கு அப்பாற்பட்ட ஆதாயங்களை இங்கு நிலைகொள்வதன் மூலம் சீனாவினால் பெறமுடியும். எனவேதான், மெதுமெதுவாக தனது பலத்தை இலங்கையில் பெருக்கிக் கொள்ளத் திட்டமிடுகிறது சீனா.
இலங்கையில் மஹிந்த ராஜபக்ச என்ற தனது நண்பனின் எதிர்ப்புகளைக் கூடப் பொருட்படுத்தாமல், முதலீடுகளில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது சீனா.
மஹிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரையில் சீனாவுக்கு வேண்டியவராகவோ சிறந்த நண்பனாகவோ இருக்கலாம். ஆனால், அவர் அதிகாரத்துக்கு வரும் வரைக்கும், சீனாவினால் இலங்கையில் தனது நலன்களை விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது.
இலவுகாத்த கிளியாக இருப்பதற்கு சீனா தயாராக இல்லை. அதனால்தான், தற்போதைய அரசாங்கம் தள்ளாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
இப்போது மஹிந்த ராஜபக்ச எதிர்த்தாலும், உள்ளூரில் அல்லது, வெளிநாட்டிலிருந்து எதிர்ப்புகள் வந்தாலும், அம்பாந்தோட்டையில் முதலீடுகளைச் செய்யும் முடிவில் இருந்து சீனா ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.
உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்பதால், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டாம் என்று மஹிந்த ராஜபக்ச சீனாவிடம் எச்சரித்திருந்தார்.ஆனால் சீனா அவரது சொல்லைக் கேட்கவில்லை.
உள்ளூர் மக்கள் எதிர்த்தாலும், யார் எதிர்த்தாலும், ஹம்பாந்தோட்டையை வசப்படுத்தும் முடிவை மாற்றப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது.
இது மஹிந்த ராஜபக்சவுக்கு ஏமாற்றத்தைக்கூட அளித்திருக்கலாம்.எத்தகைய சக்திகள் எதிர்த்தாலும், தமது முடிவை மாற்ற முடியாது என்பதில் சீனா உறுதியான நிலையில் இருக்கிறது.
உள்நாட்டில் எதிர்ப்புக் கிளம்பினாலும், அதனை பெரிய விடயமாக சீனாவோ, அரசாங்கமோ கருதவில்லை.அதற்கு மாற்றான திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது,
தொழிற்பயிற்சி நிலையத்தை அமைத்து, தொழிற்சாலைகளில் பணியாற்றவுள்ளோருக்கு பயிற்சி அளிக்க சீனா திட்டமிட்டுள்ளது. இது தொழிற்சாலைகள் தொடங்கப்படுவதற்கு முன்னரே, அதற்கு எதிராகக் காணப்படும் எதிர்ப்புகளை உடைக்கும்.
தமக்கு வேலை கிடைக்கும் என்பது உறுதியானால், போராட்டத்தின் மீது ஆர்வம் குறையத் தொடங்கும். இந்த விடயத்தில் சீனாவும், இலங்கை அரசாங்கமும் திட்டம் போட்டு காய்களை நகர்த்துகின்றன.
இந்த நிலையில் மஹிந்த ராஜபக்சவின் எதிர்ப்பு படிப்படியாக குறையத் தொடங்கலாம். ஆனால் அரசியல் ரீதியாக பலமிழந்துள்ள மஹிந்தவுக்கு அம்பாந்தோட்டை அமைதியடைவது ஆபத்தானது.
எனவே அம்பாந்தோட்டையை சுற்றி, எப்போதும் குழப்பம் நீடிப்பதையே அவர் விரும்புவார்.அதனைத் தடுக்கவே தொழிற்பயிற்சி நிலையத்தையும் சீனா தொடங்கியுள்ளது.
இது அம்பாந்தோட்டை விடயத்தில் சீனா மிக திட்டமிட்டு செயற்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் போல இதுவும் பிசுபிசுத்து விடாதபடி சீனா, பார்த்துக் கொள்ளும் என்பது தெளிவாகவே தெரிகிறது.