திங்கள், 16 ஜனவரி, 2017


ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்புலமாக இருந்தவர்கள் யார்?






மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில், கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி, விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படையால் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையில் தொடர்புடைய ஒற்றைக்கண் சிவராசன், சுபா ஆகியோர் பெங்களூருவில் தங்குவதற்கு வீடு கொடுத்தவர் ரங்கநாத். இதனால் இவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.
பிறகு இந்த வழக்கில் 1999-ல், 26 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையில் 19 பேருக்கு ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை ஆனவர்களில் ரங்கநாத்தும் ஒருவர்.
ரங்கநாத் விடுதலை ஆன பிறகு பெங்களூருவில் உள்ள பசவனக்குடியில் தன் மனைவி மிர்துளாவோடு வசித்து வந்தார்.
ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பல சித்ரவதைகளுக்கு ஆளான நிலையில், உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு சரியாகப் பேச முடியாமல் தவித்தார்.
தலைக்குச் செல்லும் நரம்புகளில் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போனதால், அடிக்கடி மயங்கி விழுந்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் ரங்கநாத் மரணமடைந்தார். அவரது உடல் பசவனக்குடியில் இருந்து பனசங்கரியில் தகனம் செய்யப்படுகிறது.
ரங்கநாத்தைச் சந்தித்த போது அவரிடம் பல கேள்விகளை முன்வைத்து பேசி இருக்கிறோம். இத்தருணத்தில் அந்த கேள்விகளும், அவருடைய பதில்களும்....
"ராஜீவ் காந்தி கொலைக்கும் உங்களுக்குமான தொடர்பு என்ன?"
விடுதலைப் புலிகள் பெங்களூருவுக்கு வருவதும், போவதும், வாடகை வீடு எடுத்துத் தங்குவதும் சர்வ சாதாரண விஷயம். அவர்களின் தோழமைக் கழகம் கூட இங்குதான் இருந்தது.
ராஜீவ் கொலை 1991 மே 21-ம் தேதி நடந்தது. 2 மாதங்கள் கழித்து, ஆகஸ்ட் 1-ம் தேதி என்னுடைய நண்பர் ராஜன் 8 பேரை பெங்களூருவில் புட்டனஹள்ளியில் உள்ள என் வீட்டிற்கு கூட்டி வந்து . ‘இவர்கள் இலங்கையில் போரில் பாதிக்கப்பட்டவர்கள்.
ராஜீவ் காந்தி கொலையால் தமிழ்நாட்டில் மருத்துவம் செய்ய மறுக்கிறார்களாம். அதனால் பெங்களூருவில் தங்கி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வந்திருக்கிறார்கள்.
இவர்களுக்கு ஒரு மாதத்திற்கு வீடு வாடகைக்கு எடுத்துக் கொடு’ என்று கேட்டார். ஒரு மாதத்திற்கெல்லாம் யாரும் வீடு கொடுக்க மாட்டாங்க. எங்க மாடி போர்ஷன் காலியாகத் தான் இருக்கு. தங்கி கொள்ளுங்கள் என்றேன்.
தங்கிக் கொண்டார்கள். அடுத்த நாள் ஆகஸ்ட் 2-ம் தேதி நள்ளிரவில் சிவராசன், சுபா, நேரு, சுரேஷ் மாஸ்டர், அமான், கீர்த்தி, ரங்கன் என 7 பேர் வந்து அந்த 8 பேரோடு மாடியில் தங்கினார்கள்.
விடிந்ததும் புதிதாக வந்திருக்கிற இவர்கள் யார்? என்று சூரி என்பவரிடம் கேட்டேன். ‘இவங்கள் எங்கள் நண்பர்கள். அவர்களும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள். மருத்துவ சிகிச்சைக்காக வந்திருக்கிறார்கள். ஓரிரு நாட்களில் கிளம்பிடுவாங்க என்றார்.
இது எனக்கும், என் மனைவிக்கும் பிடிக்கவில்லை. சுமார் நான்கு, ஐந்து நாட்கள் கழித்து டி.வி-யில் தேடப்படும் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் என்று சிவராசன், சுபா, நேரு என இவர்கள் போட்டோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்.
எல்லோரையும் வீட்டை விட்டு காலி பண்ணச் சொன்னேன். மாறாக, எங்களை அவர்களின் கஸ்டடிக்கு உட்படுத்தி ‘வெளியில் ஏதாவது மூச்சு விட்டால் கொன்று விடுவதாக’ மிரட்டினார்கள்.
இதுதான் எங்களுக்கும் ராஜீவ் கொலைக்குமான தொடர்பு".
"ராஜீவ் காந்தி படுகொலை பற்றி அவர்களிடம் கேட்கவில்லையா?"
"முதல் இரண்டு நாட்கள் மிரட்டினார்கள். அப்புறம். சாதாரணமாக அன்பாகப் பேசினார்கள். அப்போது நானும், என் மனைவியும் காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கோபமாக ஏன் எங்க தலைவர் ராஜீவ்காந்தியை கொன்றீர்கள்? என்று கேட்டோம்,
அதற்கு சிவராசனும், சுபாவும் கத்தை கத்தையாக போட்டோக்களையும் பேப்பர்களையும் எடுத்து வந்து எங்களிடம் காட்டினார்கள். ராஜீவ் காந்தி அனுப்பிய அமைதிப் படையால் எங்கள் இனம் அழிந்த கொடுமைகளைப் பாருங்கள்.
உங்க ஊர் பத்திரிகைகளில், இதையெல்லாம் எழுத மாட்டார்கள் என்று இன்டர்நேஷனல் ஹெரால் ட்ரிமினல் என்ற பத்திரிகையை காட்டினார்கள். பள்ளி செல்லும் சின்னக் குழந்தைகள் முதல் வயதான பாட்டிகள் வரை கற்பழித்துக் கொலை செய்யப்பட்டிருந்ததை எழுதி இருந்தார்கள்.
இந்திய அமைதி படையால் 3,000 பேர் கற்பழிக்கப்பட்டதும், 5,000 பேர் காணாமல் போனதும், 12,000 பேர் இறந்து போனதும், 50,000 பேர் குடிபெயர்ந்து போனதையும் ஆதாரப்பூர்வமாக சொல்லி கண் கலங்கினார்கள்.
இவ்வளவு உயிர்கள், இறப்பதற்கு காரணமாக இருந்தவரை கொன்றது தப்பா? என்று எங்களிடமே கேள்வி கேட்டார்கள். இந்த நேரத்தில் ராகுலுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.
எல்லா உயிர்களையும் சமமாக மதிப்பவன்தான் தலைவன். பாவத்தின் சம்பளம் மரணம் என்று பைபிள் சொல்கிறது. ராஜீவ் தப்பு பண்ணினார், அனுபவித்தார். சிவராசன் தப்பு பண்ணினார் அனுபவித்தார்.
ஆனால், இந்த வழக்கில் தூக்கு தண்டனை வரை போன 26 பேரும் நிரபராதிகள். அவர்களை விடுவதுதான் நியாயம்".
"அப்புறம் என்ன நடந்தது?"
"அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு சந்தேகம் வந்துவிடும். அதனால். என் மூலமாகவே வேறு வீடு வாடகைக்கு எடுத்து தரச் சொன்னார்கள். கோனேகொண்டேவில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்தேன்.
அந்த வீட்டில் சிவராசன், சுபா, நான், என் மனைவி உட்பட 9 பேர் தங்கினோம். அடுத்து முத்தத்திக்காட்டில் உள்ள என்னுடைய நண்பர் வீடு காலியாக இருந்தது. அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொடுத்தேன்.
அதில் உடல் காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு தங்கினார்கள். அந்த இடம் வீரப்பன் ஏரியா என்பதால் வீரப்பன் தேடுதல் வேட்டைக்கு வந்த போலீஸை பார்த்து, 'நம்மைத்தான் பிடிக்க வருகிறார்கள்' என்று வீட்டின் கதவைப் பூட்டி குப்பியை நுகர்ந்து 12 பேர் இறந்தார்கள்.
காவல்துறை சத்தம் கேட்டு ஓடிவந்து சுற்றி வளைத்ததில், 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். இது ஆகஸ்ட் 17-ம் தேதி நடந்தது.
அடுத்த நாள் இரவே நாங்கள் தங்கி இருந்த கோனேகொண்டே வீட்டைச் சுற்றிவளைத்து ஆகஸ்ட் 19-ம் தேதி காலை துப்பாக்கியால் சூட்டார்கள்.
குப்பியை நுகர்ந்து வீட்டுக்குள்ளேயே 7 பேர் இறந்து விட்டனர். முத்தத்திக்காட்டில் 17-ம் தேதி சம்பவம் நடந்ததும் என் மனைவியை வீட்டை விட்டு கிளம்பிப் போக சொல்லி விடுகிறார்கள்.
அவரது தம்பி வீட்டுக்கு என் மனைவி போய் விட்டார். நானும் துப்பாக்கிச் சூடு நடந்தபோது வெளியே வந்து விட்டேன். மீண்டும் வீட்டிற்குப் போகும்போது என்னையும் அதன்பிறகு என் மனைவியையும் அரெஸ்ட் செய்தார்கள்".
"முதன் முதலில் முருகன், பேரறிவாளன், சாந்தனை எப்போது சந்தித்தீர்கள்? இதுபற்றி அவர்களிடம் கேட்டதுண்டா?"
"என்னைக் கைது செய்ததும், ஜெ நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனார்கள். பிறகு கங்கா நகரில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ஒப்படைத்தார்கள்.
ஹெலிகாப்டர் மூலமாக சென்னை ஆவடி மல்லிகை அரங்கம், பூந்தமல்லி சிறை, செங்கல்பட்டு சிறை என பல இடங்களில் மாற்றுகிறார்கள். செங்கல்பட்டு சிறைச்சாலையில்தான் இவர்களை சந்தித்திதேன்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் எல்லோருக்கும் 19, 20 வயது சின்னப் பசங்க விளையாட்டுத்தனமாக இருந்தார்கள்.
இரண்டு வருடம் கழித்து அவர்களிடம் நன்றாகப் பேசி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் ‘‘ஏன் தம்பி இந்த செயல்களில் ஈடுபட்டீர்கள்?’’ என்று கேட்டேன்.
சத்தியமாக இந்த கொலையைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று அவரவர் சூழ்நிலைக் கைதிகளான கதைகளைச் சொன்னார்கள்.
ஏன், எதற்கு என்று தெரியாமலேயே பேரறிவாளன் பேக்டரி வாங்கி கொடுத்ததும், சிவராசன் வந்த படகில் சாந்தனும் வந்த குற்றத்திற்காகவும், நளினியின் தம்பி இச்சம்பவத்தில் ஈடுபட்டதால் நனினி, முருகன் மாட்டியதும் தெரிய வந்தது.
இவர்கள் ஒருவர் கூட குற்றவாளிகள் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன். இவர்களோடு 9 வருடம் நானும் சிறையில் இருந்தேன்.
பேரறிவாளன் தனக்கு இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு உதவும் குணம் உடையவன். சாந்தன் சிறந்த சிந்தனையாளன். அற்புதமான கற்பனை நீதிக் கதைகளை எழுதக் கூடியவன்.
முருகன் தீவிர பக்திமான். இவர்கள் எல்லோரும் ஒரு எறும்புக்குக் கூட துன்பம் ஏற்படுத்தாதவர்கள்"
"ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்புலமாக இருந்தவர்கள் யார்?
26 பேருக்கு விதிக்கப்பட்டு இருந்த தூக்கு தண்டனை 1999-ல் 19 பேருக்கு ரத்து செய்யப்பட்டு விடுதலை ஆனோம்.
அப்போது, தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய காங்கிரஸ் பிரமுகர் சோனியா காந்தி, உங்களைப் பார்க்க வேண்டும் என்று அழைத்துக் கொண்டு போனார்.
டெல்லியில் அர்ஜூன் சிங்கை சந்தித்து விட்டு தனி அறையில் சோனியாவோடு 45 நிமிடம் பேசினேன். அப்போது நீங்கள் கேட்கும் அதே கேள்வியைத் தான் அவுங்களும் கேட்டாங்க.
ராஜீவ்காந்தியை எங்க வீட்டில் தங்கி இருப்பவர்கள்தான் கொலை செய்திருக்கிறார்கள். என்று எங்களுக்குத் தெரிந்ததும் எங்களை அவர்கள் ஹோம் அரெஸ்ட் பண்ணிட்டாங்க.
அதனால் யாரிடமும் எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருந்தோம். ஓரிரு நாட்களில எங்களிடம் எல்லா தகவலும் சொன்னாங்க.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கட்டுப்பாடுகள் அதிகம் என்பதால் வெளியில் வந்து விட்டோம். இந்திய அமைதிப்படை செய்த கொடூரத்தால்தான் ராஜீவைக் கொன்றோம்.
அதற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது சந்திரா சாமி. அவரின் உதவியால் ஓரிரு நாட்களுக்குள் நேபாளம் போயிடுவதாகவும் சொன்னாங்க.
அது சம்பந்தமாக, அடிக்கடி சந்திரா சாமியிடம் போனில் பேசியதை நானே கேட்டிருக்கிறேன். அவர்களுக்குள் சுப்பிரமணியசாமியைப் பற்றியும் பேசுவார்கள்’’ என்று சொல்லிவிட்டு... சந்திராசாமியை விசாரித்தால் எல்லாம் உண்மையும் தெரியும்.
அதுமட்டுமல்ல. ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் கொலையாவதற்கு 2 மாதத்திற்கு முன்பே அந்த இடத்தை சந்திரா சாமியும், சுப்பிரமணியசாமியும் ஒன்றாகச் சென்று பார்த்திருக்கிறார்கள்.
அதற்குப் பதிலளித்த சுப்பிரமணியசாமி, ‘‘டெல்லி செல்லுவதற்காக நானும் சந்திராசாமியும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தோம்.
நேரடியாக டெல்லிக்கு பிளைட் இல்லாததால் இருவரும் காரில் பெங்களூருக்கு விமான நிலையத்திற்குச் சென்றோம். அப்போது அந்த இடத்தில் சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்தினோம்’’ என்று சொல்லி இருப்பது ஜெயின் கமிஷனில் பதிவாகி இருக்கிறது.
இதையெல்லாம் தெளிவாக விசாரித்தால் உண்மைகள் தெரியவரும் என்றேன். அதன்பிறகு. சோனியா காந்தி சொல்லி, எனக்கு போலீஸ் பாதுகாப்பும் போட்டார்கள்.
என்ன, ஏது என்று தெரியாமல் வீடு கொடுத்தவனுக்கும், பொருள் வாங்கிக் கொடுத்தவனுக்கும் அடி, உதை, சிறைக் கொடுமை, தூக்குத் தண்டனை.
ஆனால் சிவராசன் இறக்கும் வரை சந்திரா சாமியிடமும், சுப்பிரமணியசாமியிடமும் தொடர்பில் இருந்தார்கள்.
அவர்களை விசாரிக்காததும், சிறையில் அடைக்காததும் ஏன்?" என்ற மர்மம் நிறைந்த கேள்விகளோடு நிறுத்தினார்.
இதையெல்லாம் நம்மிடம் பகிர்ந்து கொண்ட ரங்கநாத் இறந்து விட்டார்.
- Vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள