சனி, 17 டிசம்பர், 2016

இனவாதம் பேசி,இலங்கையை இன்னலுக்குள் கொண்டு செல்பவர்கள் யார்?

இனவாதம் பேசி,இலங்கையை இன்னலுக்குள் கொண்டு செல்பவர்கள் யார்?
ஒரு முஸ்லிமோ,ஒரு தமிழனோ,மட்டு நகர் விகாரையில் உள்ள அம்பிட்டியே சுமன ரத்தின தேரர் போல் கதைக்கமுடியுமா? பொலிசாரின் முன்னால் இப்படி நடந்து கொள்ளத்தான் முடியுமா?
நல்லிணக்கம் ஒற்றையாட்சி என்று அரசு பாடுபட்டு கொண்டு வரும் வேளையில் நாளுக்கு நாள் இனவாதம் எனும் பிரச்சினை அதிகரித்து கொண்டே செல்கின்றதே தவிர குறைவடைய வில்லை.
பௌத்தம் அழிக்கப்படுகின்றது, அதனை காக்க வேண்டும் என புறப்பட்ட கும்பல்கள் தற்போது கடும்போக்கான இனவாதத்தினை தூண்டும் வகையிலான வாதங்களை மக்கள் மத்தியில் புகுத்திக் கொண்டு வருகின்றார்கள்.
இங்கு கடந்த காலத்தை மீட்டிப்பார்க்கும் எந்த ஒரு நபரும் இனவாதம் பற்றி பேசமாட்டார்கள் என்றாலும் கூட யாருக்கு என்ன நடந்தால் என்ன எனக்கு இலாபம் கிடைத்தால் போதும் என்ற வகையிலேயே இப்போது காய் நகர்த்தல்கள் தொடர்ந்து கொண்டு வருகின்றது.
ஆரம்பத்தில் பௌத்தம் காக்க வந்தவர்கள், கடும்போக்காக வாதங்களை பரப்பியவர்கள் இப்போது மீண்டும் புலிகள் வந்து விட்டார்கள் அதனால் இராணுவ பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என்று பல கதைகள் வெளியிட்டு வருகின்றனர்.
இதில் வேடிக்கை என்னவெனில் முதலில் இனவாதம் பரப்பி பௌத்தம் காக்க வந்தவர்கள் கடைசியில் நாட்டின் பிரச்சினைகளுக்கு காரணம் விடுதலைப் புலிகள் என்று புதுக்கதைகள் பரப்புகின்றார்கள்.
இப்படியும் ஒரு புத்த துறவி கதைக்கிறார் என்று சிங்கள மக்களின் விமர்சனம் காணொளிஒரு அரச அதிகாரியை தனது கடமையை செய்ய விடாது தடுத்ததுமில்லாமல்.தனது இனத்தை இழிவு செய்து பேசியது இலங்கைக்கு காவல்துறையின் சிரேஷ்ட அதிகாரிகளின் முன்னால் இது இலங்கை அரசியலமைப்பின் படி ஒரு குற்றமில்லையா?. 
அதற்கடுத்து புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களே இந்தப்பிரச்சினைக்கு காரணம் என்றும் அவர்கள் மூலமாகவே நாடு இயக்கப்பட்டு வருகின்றது என்ற வாதத்தினை முன்வைக்கத் தொடங்கி விட்டனர்.

குறிப்பாக மட்டக்களப்பில் சுமன ரத்ன தேரர் பௌத்தம் அழிந்து விட்டது, விடுதலைப்புலிகள் கொல்ல வருகின்றார்கள், எனக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என்று கூறிவருவதோடு மட்டக்களப்பில் தனது விகாரை அழிக்கப்படப்போவதாக பிரச்சினைகளை சமூக வலைத்தளங்கள் மூலமும் ஏனைய ஊடகங்கள் மூலமும் பறைசாற்றிக்கொண்டு  வருகின்றார்
.
அவரின் இப்போதைய பிரச்சினையை சற்று பின்நோக்கி பார்க்கும் போது 30 வருடகாலம் ஆயுதபலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த விடுதலைப் புலிகள் மட்டக்களப்பில் நிலை கொண்டிருந்த போது கூட..,மட்டக்களப்பு புலிகளின் கட்டுப்பாட்டில் போலீஸ் நிலையம் உட்பட இருந்தபோது ஜனாதிபதி பிரேமதாசவின் ஆடசிக் காலத்தில்,இந்த மங்கள ராமாய விகாரை அப்படி.யேதான் இருந்தது.ஒரு சில அசம்பாவிதங்கள் திருடர்களால் ஏற்படுத்தப்பட்டு பின்னர் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டார்கள்.அதில் இருந்த ஹமதுரு பன்சாலைக்குச் சொந்தமான லங்கா பேக்கரிக் கட்டிடத்தை விற்றுவிட்டுத் தலை மறைவானார்.தமிழ் மக்கள் ஒரு நாளும் மதங்களையோ.மத வணக்கத்  தலங்களை அழித்ததாகச் சரித்திரம் இல்லை உதாரணம் யாழ்ப்பாணம் முஸ்லிங்கள் இல்லாதபோதும் விடுதலைப் புலிகள் அவற்றை அழிக்கவில்லை. 
அவ்வளவு ஏன் 1998ஆம் ஆண்டு தலதாமாளிகை மீதும் தாக்குதல் மேற்கொண்ட புலிகள் தனது காலத்தில் மட்டக்களப்பு விகாரை மீது தாக்குதல் நடத்தவில்லை.
அவர்கள் நினைத்திருந்தால் அப்போதே அதனை தரைமட்டமாக்கி விட்டிருக்கலாம் ஆனாலும் அப்படி எதனையும் செய்யவில்லை. இப்படியான ஓர் நிலையில் இப்போது எங்கிருந்து அந்த விகாரை அழிக்கப்படுவதாக கூறி பிரச்சினை எழுப்பப் படுகின்றது என்பது தெரியவில்லை.
ஆக மொத்தம் இது பிரச்சினையை ஏற்படுத்துவதற்காகவே எழுப்பப்பட்ட விடயம் என்பது தெளிவாகத் தெரியும். இது ஆட்சியாளர்களுக்கும் தெரிந்த விடயம் தான் என்றாலும் இதனை வளர விட்டு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது மட்டும் ஏன் என்று தெரிய வில்லை.
அது மட்டுமா ஆரம்பத்தில் தனியாக களம் இறங்கிய குறித்த பிக்கு இப்போது படையுடன் செயற்பட்டு வருகின்றார். அவருக்காக குரல் கொடுக்க ஓர் கூட்டத்தினையே உருவாக்கி விட்டார்.
அது மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கும் பௌத்தர்களுக்கும் அவர் தனது செய்திகளை பரப்பி வருவதோடு நிதி சேகரிப்புகளையும் மேற்கொண்டு வருகின்றார்.
போதாக்குறைக்கு தனது உயிருக்கு ஆபத்து உள்ளது எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அடிக்கடி கூறிக்கொண்டு வரும் இவரது திட்டம் எது வென்று தெரியவில்லை.
இப்போதைய நிலையில் வேண்டுமென்றே இவர் தலைமறைவாகி விட்டால் அந்த ஒரு பிரச்சினையே போதும் இலங்கையை ஆட்டிப்படைக்க என்பது தெரிந்த ஒன்று. அதன் காரணமாக இவர் அடிக்கடி இவ்வாறு சொல்லிக் கொண்டு வருகின்றாரா என்பதும் ஒரு வகை சந்தேகமே.
பௌத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் இலங்கை அரசு அதிரடியாக அவரை கைது செய்து விடாது. இப்போதைய நிலையில் சிங்களவர்கள் மத்தியில் ஓர் புரட்சி வீரராகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் இவர் ஓர் மத போதகரா? என்பது சிந்திக்கப்பட வேண்டியதே.
அதனையும் தாண்டி அவர் கைது செய்யப்பட்டு விட்டால் அதுவும் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்து விடும் அதனால் அரசு பொறுமை காத்து வருகின்றது என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
எவ்வாறாயினும் இவர்களுடைய புதுக்கதைகள், சகோதர இனத்தவரிடையே ஆழப் பதிய முன்னர் அரசு தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத்திலேயே இருக்கின்றது.
ஆனாலும் தொடர்கதையாக மாறிவரும் இவர்களுடைய பிரச்சினைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்குமா? அல்லது இது தொடர்ந்து சென்று பயங்கரத்தில் முடிய வழிசமைக்குமா? என்பது காலத்தில் பதில் மட்டுமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள