புதன், 7 டிசம்பர், 2016

இலங்கை பௌத்த பிக்குவின் பெண்களை கொடுமைப்படுத்தும் கொடூரம்!அந்தப் புத்தரே மீண்டும் பிறந்து வந்தாலும் சீராக்க முடியாத கருணையில்லா புத்தமத பீடாதிபதிகள்!
இந்த மஞ்சள் அங்கி அணிந்த புத்த தேரர்கள் பாத்திரம் ஏந்தி பிட்சை எடுத்து, பசித்தால் புசித்து பெண், பொன், மண் ஆசைகளைத் துறந்து, புத்தம், சங்கம், தர்மம் என்ற மும்மணிகளிடம் சரண் அடைந்த துறவிகள் அல்ல.
அரண்மனை போன்ற வீடுகளில்j குடியிருந்து, பால் பழம் அருந்தி, பஞ்சு மெத்தையில் படுத்து பென்ஸ் தேரில் பவனி வரும் அஸ்கிரிய மல்வத்தை புத்தமத பீடங்களின் பீடாதிபதிகள். இவர்கள் காலில்நாடாளும் சனாதிபதி மைத்திரி தொடங்கி சாதாரண அப்புகாமி வரை விழுந்து தொழுது எழும் புத்த(ஆ)சாமிகள்.
கடந்த காலங்களில் இந்த புத்தமத பீடாதிபதிகள், சிங்கள-பௌத்த பேரினவாதிகள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண சிங்கள ஆட்சியாளர்கள் அவ்வப்போது எடுத்த அரைகுறை முயற்சிகளை முறியடித்திருக்கிறார்கள்.
மௌரிய பேரரசின் சக்கரவர்த்தியான அசோகன் கலிங்கப் போரில் ஏற்பட்ட மனித உயிரழிவுகளைப் பார்த்து மனம் உடைந்து போய் அமைதியைத் தேடுகிறான். அன்பு, கருணை, அகிம்சை இவற்றைப் போதிக்கும் புத்தபிரானின் போதனைகள் அவனுக்கு மனச் சாந்தி அளிக்கிறது. புத்தசமயத்திற்கு மதம் மாறிய அவன் புத்தரின் போதனையை பாரதநாட்டில் மட்டுமல்ல அதற்கு வெளியே கடல்கடந்தும் பரப்ப தீவிர முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டான்.
அங்கே போரினால் ஏற்பட்ட உயிர் அழிவை வெறுத்து அசோகன் மும்மணிகளிடம் சரண் அடைகிறான். ஆனால் இங்கே மும்மணிகளிடம் சரண் அடைந்த புத்தமத பீடாதிபதிகள் போருக்குத் தூபதீபம் காட்டுகிறார்கள். அமைதி வேண்டாம் போர்ப்பறை கொட்டட்டும் என்று முழங்குகினார்கள்.
துறவுக்கு அடையாளமாக மஞ்சள் அங்கி அணிந்து, சுகங்களைத் துறந்து, மும்மணிகளை வணங்கி, புத்தரின் பத்துவகைச் சீலங்களை மேற்கொண்டு, நான்குவகை வாய்மைகளைக் கடைப்பிடித்து, அட்டாங்க மார்க்கத்தில் ஒழுகுவதே பௌத்த தேரர் ஒருவருக்கு புத்தபகவானால் விதிக்கப்பட்ட உயரிய ஒழுக்க நெறியாகும்.
புத்தமதம் மனித உயிர்களுக்கு மட்டும் அல்லாமல் எந்த உயிர்களுக்கும் மனத்தினாலோ, வாக்கினாலோ தீங்கு விளைவிக்கக் கூடாதென்ற உயரிய கோட்பாட்டை கொண்டதாகும்.
பௌத்த தேரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பத்துவகை ஒழுக்கங்கள் (தசசீலங்கள்) ஆவன.
(1) கொல்லாமை.
(2) கள்ளாமை.
(3) பிறனில் விளையாமை.
(4)பொய் சொல்லாமை.
(5)கள்ளுண்ணாமை.
இவை பஞ்ச சீலம் எனப்படும். இவை துறவறத்தோருக்கும், இல்லறத்தோருக்கும் பொதுவானவை. பௌத்த தேரர்கள் இவற்றுடன் சேர்த்து மேலும் ஐந்து ஒழுக்கங்களை மேற்கொள்ள வேண்டும். அவை
(6) உண்ணத் தகாத வேளையில் உணவு கொள்ளாமை.
(7) இசை, ஆடல், பாடல், நாடகம் முதலியவற்றைக் கேட்டலும் பார்த்தலும் செய்யாமை.
(8) சந்தனம், மலர் முதலிய நறுமணப் பொருள்களை நீக்குதல்
(9) உயரமானதும் விசாலமானதுமான இருக்கைகளை நீக்குதல்.
(10) நாணயங்களையும் வெள்ளி பொன் முதலிய விலையுயர்ந்த பொருள்களையும் நீக்குதல் என்பன.
திரிசரணம், தச சீலம் இவற்றை மேற்கொண்டால் மட்டும் போதாது. நிர்வாணம் அடைவதற்கு இவற்றுடன் நான்கு வாய்மைகளையும் எண்வகையான நெறிகளையும் கைக்கொண்டு ஒழுக வேண்டும்.
பாலி மொழியில் சிகல (Sihala) என்ற சொல் சிங்கத்தைக் குறிப்பதாகும். இந்தச் சொல் முதல் முறையாக தீபவம்சத்தில் குறிப்பிடப்படுகிறது.
நமக்கு நம்முடைய அறிவுதான் வழிகாட்டி - புத்தர்
ஞானம் பெறுவதற்கு முதல் நாள் காலை ஒரு ஆல மரத்தின் கீழ் தியானத்தில் புத்தர் அமர்ந்து இருந்தார். அப்போது அந்த ஊரைச் சேர்ந்த சுஜாதா என்ற பெண் ஒரு முட்டியில் பால்சோறு கொண்டு வந்து சித்தார்த்தருக்குக் கொடுத்தார். அதை அவர் வாங்கி உண்டார். இதுதான் அவர் ஞானம் பெறுவதற்கு முன்னர் உட்கொண்ட கடைசி உணவாகும். உண்ட பின்னர் தனது இறுதி முயற்சியில் இறங்குவது எனத் தீர்மானித்தார்.
மனதில் தேக்கி வைத்திருந்த குறிக்கோளுடன் பகல் பொழுதைக் கழித்த பின் அன்று மாலை அருகாமையில் இருந்த வெள்ளரசு மரத்தின் கீழ் சென்று அமர்ந்து கொண்டார். புத்தர் ஞானம் பெற்ற இந்த வெள்ளரசு மரமே புகழ்பெற்ற மகா போதி மரமாக இன்றும் வழிபட்டு வரப்படுகிறது.
ஸ்ரீமகாபோதி என்பது இலங்கையின் முதல் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள புனித வெள்ளரசு மரம் ஆகும். புத்தர் இருந்து ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளை கிமு கிமு 288 ஆம் ஆண்டில் அசோகப் பேரரசரின் மகளும் பௌத்த பிக்குணியும் ஆன சங்கமித்தை என்பவரால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த மகாபோதி மரம் அனுராதபுரத்திலிருந்த மகாமேகவண்ண பூங்காவில் இலங்கை அரசன் தேவநம்பியதீசன் என்பவனால் நடப்பட்டது.
அவ்வாறு நடப்பட்ட காலம் அறியப்பட்டதுமான மரங்களில் உலகிலேயே மிகப் பழமையான மரம் இதுவே எனச் சொல்லப்படுகிறது.
நில மட்டத்திலிருந்து 6.5 மீட்டர் உயரமான சமதரையில் நடப்பட்டுள்ள இந்த வெள்ளரசு மரத்தைச் சுற்றிப் பாதுகாப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் பௌத்தர்களினால் மிகப் புனிதமாக மதிக்கப்படும் பவுத்த சின்னம் இதுவே. உலகம் முழுவதிலும் உள்ள பவுத்தர்களால் இது பெரிதும் போற்றி வழிபடப்படுகின்றது. இதைச் சுற்றியுள்ள சுவர், கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் என்னும் அரசன் காலத்தில் இம் மரத்தைக் காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காகக் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.
வெள்ளரசு மரத்தின் கீழ் அமர்ந்த சித்தார்த்தர் 'எனது தோல், நார்கள், எலும்புகள் மட்டும் மிஞ்சட்டும். எனது குருதி, எனது தசை வரண்டு போகட்டும். ஆனால் உண்மையைக் கண்டறியும் மட்டும் இந்த இடத்தைவிட்டு நகரப் போவதில்லை” என்ற மன உறுதியுடன் தியானத்தில் அமர்ந்தார்.
அன்றைய இரவின் முதலாவது சாமத்தில் மார யுத்தம் முடிந்ததும், இரண்டாம் சாமத்தில் போதிசத்துவர் சமாபத்தி நிலையிலே தமது பழம் பிறப்புக்களை எல்லாம் தெரிந்து கொண்டார். மூன்றாம் சாமத்தில் 'எனது மனம் விடுதலை அடைந்தது. அஞ்ஞானம் அகன்றது. ஞானம் பிறந்தது. இருள் நீக்கப்பட்டு ஒளி எழுந்தது” எனப் புத்தர் தனது மனதுக்குள் சொல்லிக் கொண்டார். நான்காம் சாமத்தில் ஞானம் முதிர்ந்தது. உயிர்களின் பிறப்பு இறப்புக்களை அறியக் கூடிய ஞானதிருஷ்டி பெற்றார்.
பிறப்பு இறப்பு இரண்டுக்கும் உரிய காரணமும் அதன் நிவாரணமும் மார்க்கமும்; தெளிவாயிற்று. கடைசி இரவில் அஞ்ஞானம் நீங்கப்பெற்று நான்கு உயர்ந்த உண்மைகளை உணர்ந்து கொண்டார். கீழ்த்திசை வானத்தில் ஞாயிறும் எழுந்தான்.
அப்போது சித்தார்த்தருக்கு அகவை 35 மட்டுமே. ஞானம் பெற்றதால் புத்தர் நிலைக்கு உயர்த்தப்பட்டார். அவர் ஞானம் பெற்ற நாள் வைகாசித் திங்கள் பூரணையாகும்.
புத்தர் ஞானம் பெற்ற புத்தகாயா இன்று உலகளாவிய பவுத்தர்கள் யாத்திரை செல்லும் புனித நகராக விளங்குகிறது. இங்கே அசோகன் வந்து வழிபட்டான் என்றும் சொல்லப்படுகிறது.
புத்தரின் உபதேசங்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதில் புத்தரின் அடிப்படைப் போதனைகள் அல்லது பௌத்தத்தின் பிழிவு இருக்கிறது. புத்தரின் உபதேசம் 'தர்ம சக்கரப் பிரவர்த்தனம்' என அழைக்கப்படுகிறது.
'சன்மார்க்கம் தேடித் தவத்தை மேற்கொள்ளும் துறவிகள் தவிர்க்கவேண்டிய இருவித யோக மார்க்கங்கள் உள்ளன - ஒன்று அமிதமான இன்பத்தைப் பற்றி நிற்கும் யோகம். ஐம்பொறிகளின் இயக்கங்களுக்கு முற்றுமே அடிமைப்பட்டு அந்தப் போகத்தில் இன்பம் காணும் மார்க்கம் வெறுக்கத்தக்கது, இழிவானது, சிறுமையுடையது, பயன் விளைக்காதது. இது ஒரு புறம்.
மறு புறம் தவிர்க்கப்பட வேண்டியது உடலை வருத்திக் கடுமையான நோன்புகளைக் கடைப்பிடிக்கும் ஹடயோக மார்க்கம்.
இதுவும் இழிவானது, துன்பத்தை விளைவிப்பது, பயனற்றது.
இந்தப் பயனற்ற, அமிதமான இரு வழிகளின் நடுவிலேதான் மிதமான சன்மார்க்க வழி அமையப் பெற்றிருக்கிறது. இந்த மத்யம மார்க்கம் அல்லது நடுவழி (Middle Path) தான் ததாகதர் கண்ட மார்க்கம். இது அகக் கண்களைத் திறந்து உள்ளொளி பிறப்பிக்கும் அறிவைக் கொடுக்கும் சாந்தியைத் தரும் பூரண மெய்ஞானத்தையும் தத்துவ போதத்ததையும் இறுதியில் நிர்வாண மோட்சமாகிய விமுக்தி நிலையையும் அடையக் கொண்டு செல்லும்.
இங்ஙனம் அகக் கண்களைத் திறந்து உள்ளொளி பிறப்பிப்பதும் அறிவும் சாந்தியும் தருவதும் பூரண மெய்ஞானத்தையும் தத்துவ போதத்ததையும் இறுதியில் நிர்வாண மோட்சமாகிய விமுக்தி நிலையையும் அடையக் கொண்டு செல்வதுமாகிய மத்யம மார்க்கம் எண் வகையான அட்டாங்க மார்க்கம் எனப்படும்.
புத்தரின் உபதேசத்தை செவி மடுத்த அய்ந்து தேரர்களும் பவுத்த சங்கத்தில் சேர்ந்து கொண்டார்கள். இவர்களே வரலாற்றில் பவுத்த சமயத்தில் முதன் முதல் சேர்ந்து கொண்ட தேரர்கள் ஆவர்.
தனது 35 வது அகவையில் ஞானம் பெற்ற புத்தர் அடுத்த 45 ஆண்டு காலம் ஊர் ஊராக, நாடு நாடாகச் சென்று தான் கண்டறிந்த நான்கு வாய்மைகளையும், துக்க பரிகாரத்துக்கு உரிய அட்டாங்க மார்க்கத்தையும் துறவிகளான புத்த தேரர்களும் இல்லறத்தாரும் பின்பற்ற வேண்டிய பஞ்ச சீலத்தையும், புத்த தேரர்களுக்கே உரிய மேலும் ஐந்து சீலங்களையும் மொத்த தசசீலங்களையும் போதித்தார்.
அரசர் ஆண்டியர், ஏழை பணக்காரன், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதமின்றி எல்லோருக்கும் அவர் போதனை செய்தார். தனது போதனைக்கு அன்றைய இலக்கிய வழக்கில்; இருந்த சமஸ்கிருத மொழியைக் கைவிட்டு எல்லோருக்கும் தெரிந்திருந்த பேச்சு மொழியான மகதத்தைப் பயன்படுத்தினார். தனது போதனைகளைப் பரப்ப தேரர்கள் என அழைக்கப்பட்ட சீடர்களை புத்த சங்கத்தில் சேர்த்துக் கொண்டார்.
புத்தர் தன்னை கடவுள் என்றோ, மகான் என்றோ அல்லது கடவுளை வணங்குவதால் துன்பங்கள் தொலையும் என்றோ சொன்னதில்லை. ஒவ்வொருவரின் துன்பங்களையும் அவரவராலேயே போக்கிக்கொள்ளமுடியும். எப்படி? அவராகவே தன்னைத்தானே அறிந்து கொள்வதன் மூலம்.
புத்தர் மீட்சிக்கான வழியை, நாம் எப்படி வாழ வேண்டும் என்ற கேள்விக்கான விடையிலிருந்து தொடங்கினார். எப்படியும் சாகப் போகிறோம். எனவே, சமூக முரண்பாடுகளோடு மோதிவிட்டுச் சாவோம் என்ற கடமையை நோக்கி வாழ்க்கையைத் தொடங்கக் கற்றுக் கொடுத்தவர் புத்தர். அவர் கற்றுக் கொடுத்த வாழ்க்கையை நோக்கி வாழப் புறப்பட்டவர்கள் தான் அச்சத்தின் நோயிலிருந்தும் வழிபாட்டின் மனநோயிலிருந்தும் மீள முடியும்;. மற்றவர்கள் மீளுவதற்கும் துணைபுரிய முடியும்.
தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்க வழக்கம் என்பதற்காகவோ - நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டதனால் அது புனிதமானது என்பதற்காகவோ - தாய் - தந்தையர், ஆசிரியர் சொல்லியது பற்றி நடந்தது என்பதற்காகவோ - எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பது புத்தரின் அறிவுரையாகும்.
புத்தர், நம்டைய அறிவார்ந்த சிந்தனை எப்படி வழி நடத்துகிறதோ, அதைத்தான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்;. நமக்கு நம்முடைய அறிவுதான் வழிகாட்டி என்றார்.
மனிதர்கள் உண்மையையும் மெய்யான உண்மையையும் அறிய வேண்டும். அவர்களுக்குச் சுதந்திரம் மிக மிக அவசியமானதாகும். உண்மையைக் கண்டறிய ஒரே வழி கருத்துச் சுதந்திரமே என்றார் புத்தர். மனிதர்களின் சரியான கருத்துகள் எங்கிருந்து வருகின்றன? அவை வானிலிருந்து விழுகின்றனவா? இல்லை. மூளையில் இயல்பாக உள்ளனவா? அவை சமுதாய நடைமுறையிலிருந்து மட்டும்தான் தோன்றுகின்றன என்றார். மனிதர்களை அவர்களின் மனம் எத்தன்மை உடையதாய் ஆக்குகிறதோ அப்படியே அவர்களாவார்கள்.
மனதின் நன்மையை நாடும் பயிற்சியே அறவழியின் முதற்படிக்கட்டு என்றார் புத்தர். மனிதன் சிந்தனை, அவனியிலிருந்து புறப்பட்டு, கடவுள்களின் உலகத்தை நோக்கி திருப்பப்படுவதை புத்தர் தடை செய்தார். மனிதர்களின் தேடலை உள்நோக்கி வழிநடத்தி, அவர்களுக்குள்ளேயே ஆற்றலை உணரச் செய்தார்.
எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்ட வேண்டும் என்பதே புத்தரின் போதனையாகும்
மனிதன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்பது பவுத்த மதத்தின் அடிநாதமான கோட்பாடாகும். புத்தர் உயிர்கள் மூவகைப்பட்டது என்று சொல்லியிருக்கிறார். அதாவது மனிதர், விலங்குகள், தாவரங்கள். இவற்றில் எதற்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது. தீங்கு விளைவித்தால் அது எல்லா உயிர்களுக்கும் கருணை காட்ட வேண்டும் என்ற கோட்பாட்டுக்கு தீங்கு விளைவித்ததாக முடியும். போரில் இந்த மூவகை உயிர்களும் கொல்லப்படுகின்றன.
இப்படி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்று போதிக்கும் பௌத்த மத தேரர்கள் ஆயுதப் போரை எப்படி ஆதரிக்கலாம் எனறு கேட்கலாம். அதற்கு விடை இலங்கையில் பௌத்தம் சிங்கள – பௌத்தர்களால் திரிபுபடுத்தப்பட்டுவிட்டது.