சனி, 11 ஜூலை, 2020

ஜோதிட ரீதியாக ஒருவருக்கு திருமண வாழ்வு எப்படி அமையும்?

ஜோதிட ரீதியாக ஒருவருக்கு திருமண வாழ்வு எப்படி அமையும்?


ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில், ஏழாம் வீட்டு அதிபதி, ஆட்சி பலத்துடன் இருந்தாலும் அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் நல்ல திருமண வாழ்க்கை அமையும். அதே சமயம் அந்த ஏழாம் வீட்டு அதிபதி, 6, 8, 12ஆம் வீடுகளில் இருப்பதுடன், அது அவருடைய சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இல்லாத நிலைமையில், ஜாதகனின் மனைவி நோயாளியாக இருப்பாள். மேலும் ஜாதகனைப் படுத்தி எடுப்பாள்.


திருமண வாழ்வில் மகிழ்ச்சியைக்கூட்டும் ஜாதக அமைப்பு:- 
ஏழாம் அதிபதி சுபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று வலுவாக இருந்தால், ஜாதகனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஏழாம் வீட்டு அதிபதி அமர்ந்திருக்கும் வீட்டின் இருபக்க வீடுகளிலும் சுபக் கிரகங்கள் இருந்தால், ஜாதகனுக்கு இனிமையான மணவாழ்வு அமையும். ஏழாம் வீட்டு அதிபதி, நவாம்சத்தில், சுபகிரகத்தின் வீட்டில் அமர்ந்திருந்தால் நல்ல திருமண வாழ்வு அமையும். 
திருமண வாழ்வில் மகிழ்ச்சியைக் குறைக்கும் ஜாதக அமைப்பு :-
சுக்கிரன் எந்த வீட்டில் இருந்தாலும் சரி, உடன் பாபக் கிரகங்களின் கூட்டு இல்லாமல் இருக்க வேண்டும். தவறி கூட்டாக இருந்தால், ஜாதகனின் மனைவிக்கு, அந்தக் கூட்டு அமைப்பால் மரணத்தை ஏற்படுத்தும். அதற்கு மாறாக ஏழாம் அதிபதி தீய கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்றிருந்தால், அல்லது பகை வீட்டில் இருந்தால் அல்லது உச்சமடைந்திருந்தால், அல்லது அஸ்தமனம் பெற்று வலுவிழந்து இருந்தால், ஜாதகனின் மனைவி நோயுற்றவளாக இருப்பாள் அல்லது பலவீனமாக இருப்பாள். அத்துடன் இந்த அமைப்புள்ள ஜாதகன், பல பெண்களுடன் தகாத உறவை ஏற்படுத்திக்கொள்வான். 
ஏழாம் வீட்டு அதிபதி, 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து, தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையுடன் இருக்கும் நிலைமை, நல்ல மணவாழ்க்கையை தராது. அப்படிப்பட்ட ஜாதகரின் திருமண வாழ்க்கை அவதி நிறைந்ததாக இருக்கும். மொத்தத்தில், ஏழாம் வீட்டு அதிபதி எந்த விதத்திலாவது பாதிக்கப்பெற்றிருந்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இராது. சண்டை சச்சரவுகள் நிறைந்ததாக இருக்கும். 
ஏழாம் வீட்டில் ஒரு தீய கிரகம் அமர்ந்து, அது ஏழாம் அதிபதிக்கோ அல்லது லக்கினாதிபதிக்கோ பகைவன் என்னும் நிலைமையில் இருப்பின் , திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இராது. செவ்வாயும், சுக்கிரனும் எந்த விதத்திலாவது ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால், திருமண வாழ்க்கை அமைதி நிறைந்ததாக இருக்காது. ஏழில் சனீஸ்வரன் இருந்து, அது அவருடைய சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இல்லாமல் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது. 
மேலே குறிப்பிட்டவை யாவும் சில முக்கியமான விதிகள் தான். இவை யாவும் பொது விதிகள். எனவே, ஒருவரின் (ஆண் / பெண்) ஜாதகத்தில் ஏழாம் வீட்டின் அமைப்பை வைத்தும், குடும்ப ஸ்தானத்தின் அமைப்பை வைத்தும், அஷ்டக வர்க்க பரல்கள், ஏழாம் அதிபதியின் சுயவவர்க பரல்கள் வைத்தும், இந்த விதிகளின் பலன்கள் (நல்லது / கெட்டது) சற்றே மாறுபடும். அதாவது கூடலாம் அல்லது குறையலாம். சிலபோது அவை இல்லாமலும் போகலாம்.
திருமண வாழ்வில் ஆண்களுக்கு, பாதிப்பு ஏற்படுத்தும் ஜாதக நிலைகள் :- 
ஜென்ம லக்கினத்திற்கு, 2, 6, 7, 8 போன்ற வீடுகளில் பாவ கிரகங்கள் அமையப்பெற்று அதன் தசை புத்திகள் நடைபெற்றால், ஜாதகரின் மனைவிக்கு உடல் ஆரோக்கிய ரீதியாகப் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்படும். 
செவ்வாயும், சனியும் சேர்ந்து 7ல் இருந்து சுபரால் பார்க்கப்பட லக்கினத்தில் ஏதேனும் கிரகம் இருந்தால், ஜாதகர் காலம் கடந்து தன்னை விட மூத்தப் பெண்ணை திருமணம் செய்ய நேரிடும். 
லக்கினாதிபதியும், 7-ஆம் அதிபதியும் சேர்ந்து 4-ல் இருந்தால், தன்னுடன் படிப்பவரையும், 10ல் இருந்தால், தன்னுடன் வேலை பார்ப்பவரையும் மணப்பார். லக்கினமும் , 7 ஆம் இடமும் உபய ராசி ஆகி அவற்றின் அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் இரு தாரம் அமையும். 
சந்திரனும், செவ்வையும் கூடி 7-ல் இருந்தாலும் குரு உச்சமும் சனி அஸ்தங்கமும் பெற்றால் ஜாதகர், விதவையை மணப்பார். 
திருமண வாழ்வில் பெண்களுக்கு, பாதிப்பு ஏற்படுத்தும் ஜாதக  நிலைகள்:- 
ஒரு பெண்ணின் ஜாதகத்தில், செவ்வாய் ஏழாம் வீட்டில் இருந்து, அது அவருக்குப் பகை வீடு என்னும் நிலைமை, விதவை யோகத்தைக் குறிக்கும். அதே போல் ஏழில் அமர்ந்திருக்கும் கேதுவும், அதே காரியத்தைச் செய்யும். வலுவிழந்து, பபாகர்தாரியோகத்துடன், ஜாதகத்தில் இருக்கும் சுக்கிரனும் அந்த வேலையைச் செய்வார்.
பிரசன்ன மார்கத்தை எழுதிய முனிவர், பெண்களுக்கு, சனி தான் கணவனுக்காக காரகன் என்கிறார். அத்துடன், பெண்ணின் ஜாதகத்தில் சனீஸ்வரன் செவ்வாய் அல்லது கேதுவுடன் சேர்ந்து ஏழில் இருந்தால், பெண் சீக்கிரம் விதவை ஆகிவிடுவாள், என்கிறார். 
பெண்களின் ஜாதகத்தில், எட்டாம் வீடு மாங்கல்யஸ்தானம். அந்த ஸ்தானத்தை, அதாவது அந்த வீட்டை, செவ்வாயோ அல்லது கேதுவோ பார்த்தால், பெண்ணிற்கு மாங்கல்ய தோஷம். இது எல்லாம் பொது விதி தான். விதி விலக்கு உண்டா என்றால் நிச்சயம் உண்டு. அதாவது, பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு இரண்டாம் வீட்டில் சுபக் கிரகங்கள் இருந்தால், அது அவளை விதவையாகாமல் காப்பாற்றி விடும். அதே போல் மேற்கண்ட வீடுகளை குரு பகவான் தன்னுடைய நேரடிப் பார்வையில்  வைத்திருந்தாலும், அந்த அமைப்பு ஜாதகியைக் காப்பாற்றும். 
7-ல் சூரியனும், சுக்கிரனும் அல்லது சூரியனும், செவ்வாயும் சேர்ந்து இருந்தால், அந்தப் பெண் இரண்டாவது திருமணம் செய்ய நேரிடும். மனைவியை இழந்தவரை, திருமணம் செய்யும் அமைப்பு. மனைவியை இழந்த குழந்தை உடையவரை மணம் முடிக்கும் அமைப்பு. வயோதிகரை மணம் முடிக்கும் அமைப்பு. விலை மாதரின் வீட்டிலேயே தங்கும் அமைப்பு. அப்படி தங்குபவரை நேசிக்கும் மனைவியின் ஜாதக அமைப்பு. இப்படி ஏராளம் ஏராளம்.
மொத்தத்தில் இப்படி தாறுமாறு ஏன், எதனால்?
களத்திர காரகனும், காமத்துக்கு காரகனுமாகிய சுக்கிரன், சுப கோள்களின் சம்பந்தத்தில் இருந்தால் ஒருவருக்கு உண்டாகக் கூடிய உடல் உணர்ச்சிகள், தேவைகள் போன்றவை அளவாக அமைந்து, தாம்பத்திய வாழ்க்கையும் இனிப்பாக இருக்கும். அதுவே, பாப கோள்களின் சம்பந்தத்தில் இருந்தால் உடல் தேவைகள் அதிகரிக்கும். அந்தக் கோள்களின் தன்மைக்கு ஏற்ப தேவைகளை பூர்த்தி செய்ய மிகவும் கடினமாக நடந்துகொள்வர். 
சுக்கிரன் அலிகோள்களுடன் (சனி, புதன், கேது) சம்பந்தத்தில் இருந்தால், தாம்பத்திய வாழ்வில் ஈடுபாடு குறையவே செய்யும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சில பேர்களுக்கு விவாகரத்து வரையிலும் செல்லவேண்டி வரும். ஆனால், இந்த அலி கோள்கள், சுய சாரம் அன்றி நல்ல கோள்களின் சாரத்தில் அமைந்தால், தாம்பத்திய வாழ்க்கை சற்று மகிழ்ச்சிகரமாகவே இருக்கும். 
சாயியைப் பணிவோம் நன்மைகள் அடைவோம். 
- ஜோதிட ரத்னா தையூர்.சி.வே.லோகநாதன்


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    உங்களின் கருத்துரைகள