கந்த சஷ்டி விரதம் பற்றிய முழு தகவல்கள்!!

இன்று முதல் கந்த சஷ்டி விரதம் தொடங்குகிறது. முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
கந்த சஷ்டி உருவான கதை
படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சகன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சகன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவவலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் இணைந்து சூரபத்மனும், சிங்கமுகமுடைய சிங்கனும், யானை முகமுடைய தாரகனும், ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.

காசிபர் தன் பிள்ளைகளிடம், சிவபெருமானை நோக்கித் தவம் செய்து வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர். இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாகப் பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன் சிவனிடம் கேட்க, பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தம்மைப் போல் பலரை உருவாக்கி இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர்.
இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக்கண்களைத் திறக்க அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றி, ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர்.

அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க, அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். திருக்கரத்தில் வேலேந்திக்கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை என்றார்.
அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர்.

சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். உலகை ஆள வந்த முருகன் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். முருகன் அசறவில்லை. முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு, அது பாவமென்றும் அவன் கருதினான்.
அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார்.அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. உன்னைப் பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும் என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தைச் சுருக்கி சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலைதூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.

முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். வேல்பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்து, ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார்,சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் அனுஷ்டிக்கப்படும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும். கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப்போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்!.
கந்த சஷ்டி என்னும் போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் விடியற்காலை துயில் எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக்கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, “ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை உச்சரித்தபடி முருகனை மனதில் இருத்தி நீரில் மூழ்கி எழ வேண்டும்.

கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறியவாறு தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும். விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, கந்தர் கலிவெண்பா திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். முருகனாலயங்களில் இவ்விரத நாட்களில் கந்தபுராண படனம் நடைபெறும். இதைத் தவறாது கேட்டல் மிகவும் ஆன்மிக நன்மை பயக்கும்.
இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப “கந்தசஷ்டி” விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கல்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும். கடும் விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் இரவு ஒரு பொழுது பால்பழம் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் உபவாசம் இருக்கலாம். அதுவும் முடியாவதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பகல் ஒரு பொழுது அன்னமும் ஆறாம் நாள் இரவு பால், பழம் அல்லது பலகாரமும் உண்டு விரதமிருக்கலாம்.
ஆறாம் நாள் சஷ்டித்திதியில், சூரசம்ஹாரம் முடிந்த அன்றிரவு முழுவதும் விழித்திருந்து முருகன் பெருமைகளையே பேசியும், வழிபட்டிருக்குமாறு பழம் நூல்கள் விதிக்கின்றன. சிவபிரானுக்குரிய சிவராத்திரியும், மஹாவிஷ்ணுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் போல முருகப்பெருமானுக்குரிய ஸ்கந்தசஷ்டியும் மிக விசேஷமான தினமாதலால் துயில் நீத்தல் (விழித்திருத்தல்) பொருத்தமானதே.
கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும். உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெறுபேறாக அமைகிறது.
ஜோதிடத்தில் சஷ்டி விரதம்
இந்து மதத்தின் பிரிவுகளில் உள்ள ஆறு பெரும் பிரிவு மதங்களில், மிகப் பழைமையானது கௌமாரம். கார்த்திகேயனை வணங்குபவர்கள் கௌமாரம் மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களே முருக பக்தர்கள்! ஒவ்வொரு மாதத்தின் ஆறாம் திதி சஷ்டி. இந்த சஷ்டியும் இந்தக் குமரனுக்கு உரிய நாள். எனவே கௌமாரர்கள் அனைவரும் சஷ்டி விரதம் இருப்பார்கள்.
ஜோதிடத்தில் அழகைக் குறிக்கும் கிரஹம் சுக்கிரன். குழந்தைப் பிறப்பிற்கு தேவையான காமத்திற்கும் சுக்கிலத்திற்கும் அதிபதி சுக்கிரன். சுக்கிரனைக் குறிக்கும் என் ஆறு. தெய்வங்களில் அழகன் எனப் போற்றப்படுபவர் முருகன். முருகனுக்கு ஆறு முகங்கள். முருகனை வளர்த்தவர்கள் ஆறு கார்த்திகை பெண்டீர். முருகனுக்குகந்த திதி ஆறாவது திதியான சஷ்டி. ஆண்மையைக் குறிக்கும் கடவுள்
முருகப்பெருமான் ஆகும். "சுக்கிற்கு மிஞ்சின மருந்தும் இல்லை! சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" எனும் சொலவடை உண்டு. மேலும் எண்ணியல் ஜோதிடத்தில் ஆறாம் எண்ணிற்கு அதிபதியாக சுக்கிரனை கூறுவர்.

ஜாதகத்தில் செவ்வாய் என்பது ஆண்மையையும் வீரியத்தையும் குறிக்கும். சூரியன் ஆன்மா உற்பத்தியாவதை அதாவது கருவளர்ச்சிக்கு தேவையான சீதோஷ்ணத்தை தருவது சூரியன். சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கு மேஷமும் சிம்மமும் மற்றும் அதன் அதிபதிகளான செவ்வாயும் சூரியனும் பலமிழந்துவிடுவார்கள் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.
மேஷம் கால புருஷனுக்கு லக்ன பாவம். செவ்வாயின் மூல த்ரிகோண வீடு. சூரியன் உச்சமாகுமிடம். ஆண்மையைக் குதிரையோடு ஒப்பிடுவது வழக்கம். குதிரையைக் குறிக்கும் அஸ்வினி நக்ஷத்திரம் முதல் நக்ஷத்திரமாக அமைந்திருப்பதும் மேஷத்தில்தான். ஆக ஆண்மைக்கும் செவ்வாய்க்கும் உள்ள தொடர்பு இப்போது புரிந்திருக்கும். அடுத்தது சிம்ம ராசி. சிம்ம ராசி கால புருஷனுக்கு ஐந்தாமிடம் எனப்படும் புத்திரஸ்தானம் ஆகும். அதற்குரிய கிரகம் சூரியன் ஆகும். இந்த இரண்டு ராசிகளும் கிரஹங்களும் நன்றாக இருந்தால் தான் ஒருவர் தகப்பன் ஆகும் பாக்கியம் ஏற்படும்.
விசாகம் குழந்தை வேலப்பராகிய முருகனுக்கும் உகந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கந்த சஷ்டியின் ஆறாம் நாள் முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமையுடன் கூடிய சஷ்டி திதியில் அமைந்திருப்பதும் ஆத்மகாரகனாகிய சூரியனின் நக்ஷத்திரமான உத்திராடத்தில் அமைந்திருப்பதும் கோசாரக குருபகவான் செவ்வாயின் வீட்டில் நின்று காலபுருஷ குடும்ப ஸ்தானம் மற்றும் சுக்கிரனின் வீடாகிய ரிஷபத்தை பார்ப்பதும் இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்குக் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பதை உணரமுடிகிறது.
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாமிடம் ருண ரோஹ சத்ரு ஸ்தானம் எனப்படும். இந்த ஆறாமிடம் மூலம் குறிப்பிட்ட ஜாதகரின் எதிரி எப்படிப்பட்டவர், எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார், ஜாதகர் என்ன காரணங்களுக்காக கடன் வாங்குவார் என்பதை அறியலாம். நோய் தீர்ப்பதில் செவ்வாயும் அதன் அதிபதியான முருக பெருமானும் முக்கியமானவர்கள் ஆகும். முருகனுக்கு செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பது, சஷ்டியில் விரதமிருப்பது மற்றும் கிருத்திகை நக்ஷத்திர நாளில் விரதமிருப்பது ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பாம்பன் குமர குருதாஸ ஸ்வாமிகள் அருளிய “ஓம் ஷண்முக பதயே நமோ நம” எனத் தொடங்கும் குமாரஸ்தவ பாடலைப் படித்தால் நாள் பட்ட தீராத வியாதியும் தீரும். நோய் என்பது தீர்க்கக்கூடியது. ஆனால் பிணி என்பது. தீர்க்க முடியாதது. நோயை மருத்துவர்கள் குணப்படுத்திவிடுவார்கள். பிணியைக் குணப்படுத்துவது சிரமம். பிணி இறையருளால் தான் குணப்படும். வினையும் அப்படித்தான் இறையருளால்தான் தீரும் இங்கே வினை என்பது இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்குக் காரணமாக நம்பப்படும் முற்பிறவியில் நாம் செய்த செயல் ஆறாமிடத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் மூலமும், ஆறாமிடத்தைப் பார்வை செய்யும் கிரகங்கள் மூலமும், அந்த ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதையும் அறிய இயலும். இந்த நோய்களின் தாக்குதல் எப்போது பலமாக தன் இயல்பைக் காட்டும், எந்த கால கட்டங்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதையும் அறியலாம்.
ஜெனன ஜாதகத்திற்கு ஆறாம்வீட்டிற்கு பன்னிரண்டாம் பாவத்தையும் அதன் கிரஹங்களையும் கொண்டு நோய் தீர்க்கும் அமைப்பை அறியலாம். அதேபோல காலபுருஷனுக்கு ஆறாம் வீடான கன்னி ராசிக்கு பன்னிரண்டாம் பாவமான சிம்மம் மற்றும் அதன் திரிகோண ராசிகளான மேஷம், தனுசு ஆகிய ராசிகளும் அதன் அதிபதிளும் நோய் தீர்க்கும் அமைப்பைக் கூறுவார்கள்.
இந்த கந்த ஷஷ்டி விரத முதல் நாளில் வேலைப் பெற விரும்புவோர்கள் மற்றும் சத்ரு, கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கந்த ஷஷ்டி கவசமும், குழந்தை பாக்கியம் பெறவிரும்புபவர்கள் திருப்புகழும், கடும் நோயினால் அவதியுறுபவர்கள் ஷண்முக கவசம் மற்றும் திருமுருகாற்றுப்படையும், திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் திருப்புகழில் குறிப்பிட்ட பாடல்களும் சுப்ரமணிய புஜங்கமும் பாடி முருகனை வணங்கி வர அவரவர் பிரார்த்தனைகளை அந்த முருகப்பெருமான் தட்டாமல் நிறைவேற்றுவார்.
மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத வியாதிகள் நீண்ட நாட்களாக இழுவையில் இருக்கும் வழக்குகள், தொடர்ந்து தொல்லை தரும் சத்ருகள் ஆகியவற்றால் ஏற்படும் தொல்லைகள் இந்த ஆறு நாட்களில் சத்ரு சம்ஹார அர்ச்சனை செய்து வணங்கி வரத் தொல்லைகள் முற்றும் நீங்கி நிம்மதியைத் தரும் என்பது நிதர்சனம்.
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
Mobile 9498098786
WhatsApp 9841595510
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள