வெள்ளி, 10 மார்ச், 2017

சிறீலங்காவில் தொடரும் சித்திரவதை!! நாடு கடத்தவேண்டாமென ஐநா கோரிக்கை!


சிறீலங்காவில் தொடரும் சித்திரவதை!! நாடு கடத்தவேண்டாமென ஐநா கோரிக்கை!


சிறீலங்காவில் சித்திரவதைகள் தொடர்வதால் அச்சுறுத்தலுக்குள்ளாகக்கூடிய தமிழ் மக்களை நாடுகடத்தவேண்டாமென வெளிநாடுகளிடம் ஐநா கோரிக்கைவிடுத்துள்ளது.
சிறீலங்காவில் கடந்த ஏப்ரல் மாதத்திலும் வெள்ளைவான் கடத்தல்கள் இடம்பெற்றதாக ஆதாரத்துடன் வெளியிட்ட சித்திரவதைகளுக்கெதிரான ஐநாவின் உயர்மட்டக் குழு, சிறீலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களம், காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் குழுவினரை விமர்சித்து நீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
சிறீலங்காவில் தற்போது ஆட்சிசெய்யும் மைத்திரி – ரணில் அரசாங்கத்திலும் வெள்ளைவான் கடத்தல்கள் உட்பட பாலியல் ரீதியான சித்திரவதைகள் தொடர்வதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், படைத்தரப்பினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடடமைப்பு ரீதியான விசாரணை செய்வதற்கு முடியாமை, சட்டமா அதிபர் திணைக்களம் சுயாதீன நிறுவனமாக இயங்காமை ஆகிய விடயங்கள் நீதியை நிலைநாட்டுவதற்கு பெரும் தடையாக இருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய சட்டக் கட்டமைப்பு, இராணுவம் உட்பட முப்படையினர், காவல்துறை, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றை மறுசீரமைப்புக்குட்படுத்தாமையால் சித்திரவதைகள் தொடரக்கூடிய ஆபத்து நீடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிஐடி மற்றம் ரிஐடி எனப்படும் புலனாய்வாளர்களால் தற்போதும் உடல் மற்றும் உளரீதியான துன்புறுத்தல்கள் தொடர்வாகதாகவும்  சுட்டிக்காட்டிய சித்திரவதைகளுக்கெதிரான ஐநாவின் சிறப்பு அதிகாரி ஜூவான் மென்டஸ் அது குறித்து தனது விசனத்தையும் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் சித்திரவதைக்குட்படுத்தி பெறப்படும் வாக்குமூலத்தை அப்படியே சாட்சியாக ஏற்றுக்கொள்ளும் நீதிமன்றத்தின் நடைமுறையை கடுமையாக விமர்சித்த ஜூவான் மென்டஸ் இவ்வாறான செயற்பாடுகள் சித்திரவதையை தொடர்ந்தும் ஊக்குவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சித்திரவதைக்குத் துணையாயிருக்கும் பங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்கி உத்தேசச் சட்டமூலம் சர்வதேச விதிமுறைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டதாக இருக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
சித்திரவதைகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வழக்குத் தொடர்ந்து தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை உண்மையான அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள