செவ்வாய், 21 மார்ச், 2017

ஏன் தோற்றார் இரோம் ஷர்மிளா?ஏன் தோற்றார் இரோம் ஷர்மிளா?
மணிப்பூரைத் தாண்டியும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் எதிரொலித்தது இந்தத் தேர்தல் முடிவு. உத்தர பிரதேசத்தில் 325/403 தொகுதிகளைப் பெற்று பாஜக அடைந்த வெற்றிக்கு அடுத்து, உள்நாட்டிலும் அதிகம் பேசப்பட்டது இரோம் ஷர்மிளாவின் தோல்விதான்.
வட கிழக்கு மாநிலங்களைக் கடந்த 60 வருடங்களாகத் தொடரும் ராணுவப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) எதிர்த்து 16 ஆண்டு காலம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய இரோம் ஷர்மிளா, தன்னுடைய உண்ணாவிரத முடிவுக்குப் பின் அரசியலைத் தேர்ந்தெடுத்தார். மணிப்பூர் சட்டசபைத் தேர்தலில் மாநில முதல்வரை எதிர்த்து அவர் நின்றார். தோல்வி அடைந்ததுகூடத் துயரம் அல்ல; நோட்டாவைவிடக் குறைவாக, வெறும் 90 வாக்குகளில் அவர் அடைந்த தோல்வி, எல்லோரையுமே அதிரவைத்தது. பலரைக் கலங்கவும் செய்தது. தோல்வியின் தொடர்ச்சியாக அரசியல் ஓய்வை அறிவித்திருக்கிறார் ஷர்மிளா.
தோல்வி அல்ல; பழிவாங்கல்!
கடந்த ஆண்டின் நடுப் பகுதி வரை, 16 ஆண்டு காலப் போராட்டத்தில் ஆதிக்க சக்திகளைக் குலைநடுங்க வைத்த ஒரு போராளியால், ஏன் தன் இனத்தைச் சேர்ந்த மக்களின் - அந்தக் கொடுங்கோன்மை சட்டத்தின் பாதிப்புகளை அனுதினமும் அனுபவித்துவரும் மக்களின் - நம்பிக்கையை வென்றெடுக்க முடியவில்லை?
முதலில் இரோம் ஷர்மிளா கடந்த ஜூலையில், 16 வருட உண்ணாநோன்பை முறித்துக்கொண்டபோதே, மாநிலத்தில் பெருவாரியான மக்களின் எதிர்ப்பை எதிர்நோக்க வேண்டியிருந்தது. போராட்டத்தை முடித்து, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப அவர் முற்பட்டபோது, அவருடைய அம்மாவும் அண்ணனுமே அவரை வரவேற்கத் தயாராக இல்லை. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஒன்றுகூடி அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
ஏனென்றால், மணிப்பூர் மக்களைப் பொறுத்த அளவில், அவர்களுடைய வரலாற்றுப் போராட்டத்தை உலகம் உற்றுநோக்குவதற்கான மையமாக இருந்தவர் ஷர்மிளா. அவருடைய 16 ஆண்டு காலப் போராட்டமே அதன் மையம். அவருக்குப் புதிதாக உருவான நட்பு, பின் காதலானபோது அதை மக்கள் எதிர்த்தார்கள். அவருடைய காதலர் ‘ஷர்மிளாவின் போராட்டத்தை முறியடிக்க இந்திய அரசு அனுப்பிய உளவாளி’ என்றார்கள் அவர்கள். தனிப்பட்ட ஆசாபாசங்களை ஷர்மிளா கைவிட வேண்டும் என்றார்கள்.
மக்களின் அதிருப்தி
ஷர்மிளா நீண்ட காலம் போராடிவிட்டார். எந்த நல்விளைவையும் அவர் இந்திய அரசிடமிருந்து பெற்றுவிடவில்லை. ‘நானும் ஒரு உயிர்; பெண்; எனக்கும் ஆசாபாசங்கள் இருக்கும்தானே!’ என்று முறையிட்டார் அவர். “நான் என் போராட்டத்தை விடவில்லை; போராட்ட வடிவத்தை மட்டும்தான் மாற்றிக்கொள்கிறேன். உண்ணாவிரதத்தைக் கைவிட்டு அரசியலைத் தேர்ந்தெடுக்கிறேன்” என்றார்.
மக்கள் அதை ஏற்கவில்லை. ஏனென்றால், மணிப்பூர் போன்ற ஒரு சின்ன மாநிலத்தின் குரல், சர்வதேச அளவில் ஒலிப்பது ஷர்மிளாவின் உண்ணாவிரதத்தோடு கேள்விக்குறியாகிவிடும் என்று அவர்கள் நினைத்தார்கள். இறுதியில் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தபோது, மக்கள் கடுமையான அதிருப்திக்கு ஆளாகியிருந்தார்கள். தொடர்ந்து, மக்கள் மறுமலர்ச்சி மற்றும் நீதிக்கான கூட்டணி என்ற பெயரில் ஒரு கட்சியையும் துவக்கினார் ஷர்மிளா. ஆஆக, இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகியவற்றின் ஆதரவும் அவருக்குக் கிடைத்தது.
இந்தத் தேர்தலின்போது மாநிலத்தின் ஆளும் கட்சியான காங்கிரஸ், மத்தியில் ஆளும் கட்சியான பாஜக ஆகிய இரண்டும் ஒரே மாதிரியானவை என்று அவர் அறிவித்தபோதிலும், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் மூன்றில் மட்டுமே (ஷர்மிளா, ஹார்வர்டு பட்டதாரியும் கட்சியின் துணை நிறுவனருமான எரெண்ட்ரோ லீச்சோம்பாம், நஜிமா பீபி என்ற ஒரே முஸ்லிம் பெண் வேட்பாளர்) அவரது கட்சி போட்டியிட்டது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஆட்சியில் இருந்த காங்கிரஸும், ஆட்சியைப் பிடிக்க முனைந்த பாஜகவும் இன மோதல்களைக் கொண்டு காய் நகர்த்திக்கொண்டிருந்த நேரத்தில், மாநிலத்தில் கடும் புயலாக உருவெடுத்துள்ள நாகா குழுக்களின் அச்சுறுத்தல்கள், அதனால் அவரது சொந்த இனமான மீட்டி இனத்தவரின் மனங்களில் எழுந்துள்ள அச்ச உணர்வு ஆகியவை தொடர்பில் ஷர்மிளா எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. மாறாக, முதல்வரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை மட்டுமே மக்கள் முன்வைத்து அவர் போட்டியில் இருந்தார்.
முதிர்ந்த அரசியல் முடிவல்ல!
வட கிழக்குப் பகுதியின் அரசியலைப் பொறுத்தவரையில் தேசியக் கட்சிகளே அங்கு ஆதிக்கம் செலுத்த முடியும். காரணம், அவை நிர்வாகத்துக்கு 90% மத்திய நிதியையே பெருமளவில் நம்பியிருக்கின்றன. சின்ன மாநிலம் என்பதால், ஒவ்வொரு தொகுதியும் முக்கியமானவை. இந்த நிலையில், வெறும் மூன்று தொகுதிகளில் நிற்கும் ஒரு புத்தம் புது கட்சிக்குத் தன் 16 வருடப் போராட்டத்துக்கான அங்கீகாரமாக மக்கள் ஆதரவு தருவார்கள் என்று ஷர்மிளா கணக்கிட்டதே ஒரு முதிர்ந்த அரசியல் முடிவு என்று கருத முடியாது.
மேலும், அரசியல் களம் என்பது தொழில்முறையாக அமைப்பைக் கட்டியெழுப்புவதில் இருக்கிறது. வெறுமனே வேட்பாளராக ஒருவர் நின்றுவிடுவதாலேயே தேர்தலில் வென்றுவிட முடியாது. அப்படியான அமைப்பு பலமோ அல்லது அதை ஈடுசெய்யக்கூடிய பண பலமோ ஷர்மிளாவிடம் இல்லை. மேலதிகம் அவர் ஏற்கெனவே கடுமையான அதிருப்தியையும் சந்தித்திருந்தார்.
அடுத்து, அவர் தேர்ந்தெடுத்த தொகுதி. மூன்று முறை ஆட்சியில் இருக்கும் காங்கிரஸுக்கு எதிராக அதன் முதல்வர் போட்டியிடும் தொகுதியை அவர் தேர்ந்தெடுத்தது மேலும் ஒரு பலவீனம். ஆக, தொழில்முறை அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில், அவர் நகைப்புக்குரியவராகவே பார்க்கப்பட்டார். மக்களைப் பொறுத்தவரையிலோ தான் ஏற்ற சவாலைப் பாதியிலேயே கைவிட்டுவிட்டுப் போனவர் அவர் என்பதாகவே அவர்களின் சிந்தனை இருந்தது. காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் போன்றவற்றில் சட்டசபைத் தேர்தல் என்பது ஒருவகையில் உள்ளாட்சித் தேர்தல்போல. நேரடியாக அவர்களுக்குக் கிடைக்கும் சேவைகளைத் தீர்மானிப்பது அது. யாரால் பேரம் பேச முடியுமோ, யார் பலம் படைத்தவரோ அவரே அவர்களுடைய தேர்வு. இந்தப் பின்னணியில்தான் நாம் ஷர்மிளாவின் தோல்வியை அணுக வேண்டும்.
மணிப்பூர் மக்கள் அவரை வெறுக்கவில்லை. ஆனால், தங்களின் தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.
Tamil Hindu - 21/3/2107