சனி, 4 பிப்ரவரி, 2017

சிறுபான்மை மக்களையும் அரவணைத்து பயணிப்பதே உண்மையான சுதந்திரம்

சிறுபான்மை மக்களையும் அரவணைத்து பயணிப்பதே உண்மையான சுதந்திரம்

சுதந்திரம் என்பது ஒவ்வொருவரதும் பிறப்புரிமை. அதாவது பிறந்த ஒவ்வொருவரும் எதுவித தடையோ, தடுப்போ, அச்சமோ இன்றி வாழ்வதே ஒரு தனிமனிதனின் சுதந்திரமாகின்றது. ‘வாழு, வாழவிடு’ என்ற கோட்பாட்டிற்கமைய தானும் வாழ்ந்து ஏனையவர்களும் நிம்மதியாக வாழ வழிவிடுவதே சுதந்திரத் தத்துவம்.
மற்றையவர்களுக்கு உள்ளத்தாலும், உடலாலும் அதுபோன்ற வேறு எவ்வகையிலாவது இடையூறு செய்யலாம் என்றும், அதற்குத் தமக்குச் சுதந்திரம் உண்டென்றும் எவராவது கருதினால் அவர்கள் சுதந்திரமென்பதன் பொருள் புரியாதவர்களேயாவர். தானும் வாழ்ந்து மற்றவர்களையும் நிம்மதியாக வாழவைப்பதே நாகரிக மனிதன் கண்ட சுதந்திரம். அது தனி மனிதனுக்கு மட்டுமல்ல நாடுகளுக்கும் ஏற்புடையது. அத்துடன் அது மொழி, சமயம் என்று பலவாறாக வேறுபட்ட சமூகத்தவருக்கும் ஒத்ததாகும்.
இன்று நமது நாடு அந்நியர் அதாவது ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுபட்டு சுதந்திரமடைந்த நாளைக் கொண்டாடுகின்றது. சுதேசிகளின் ஆட்சி மலர்ந்த நாளாக இந்நாள் நினைவு கூரப்படுகின்றது. சுதந்திரம் பெற்றுத் தந்த தேசபிதா என்று முன்னாள் பிரதமர் டி. எஸ். சேனாநாயக்க பெருமைப்படுத்தப்படுகின்றார்.
சுதந்திரத்திற்காக அதாவது இந்நாட்டில் சுதேசிகள் ஆட்சி மலர வேண்டுமென்று குரல் கொடுத்தவர் வரிசையிலே டி. எஸ். சேனாநாயக்கவிற்கு முன்பே குரல் கொடுத்தவர்களில் தமிழர்களும் அடங்குகின்றனர். சேர். முத்துக்குமாரசுவாமி, சேர். பொன்னம்பலம் இராமநாதன், சேர்.பொன்னம்பலம் அருணாச்சலம், ஹன்டி பேரின்பநாயகம் போன்றவர்களின் பட்டியலுடன் இந்துப் பெரியார் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரும் அடங்குகின்றார்.
அந்நிய ராட்சியிலிருந்து தேச விடுதலைக்காக குரல் கொடுத்தவர்களைத் தேசபக்தர்களாக, சுதந்திர வீரர்களாக கணிப்பிட்டு மரியாதை செய்யும் இவ்வேளையிலே, இந்நாடு அந்நியராட்சிக்கு அதாவது அந்நியரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அன்று போராடியவர்களையும் இன்று நினைவிற்கொண்டு மரியாதை செய்வது நாம் செலுத்தும் நன்றிக்கடனாகும். அதனால் வரலாற்றை மீட்டிப் பார்ப்பதும் இன்றைய வேளையில் அவசியமாகின்றது.
கி.பி. 1505 நவம்பர் மாதம் 3 ஆந் திகதி லோரன்ஸ் த அல்மேதா என்ற போர்த்துக்கேய மாலுமி இலங்கையின் காலித்துறைமுகத்தில் கரையொதுங்கிய நாளே ஐரோப்பியர் இந்நாட்டை அடிமைப்படுத்த வழிகோலிய முதல் நாளாகும்.
அக்காலத்தில் இலங்கைத்தீவில் மூன்று பிரதான சுதந்திர நாடுகள் இருந்துள்ளன. வடக்கில் யாழ்ப்பாணம் என்ற தமிழரின் ஆதிக்கத்துக்குட்பட்ட நாடும், மேற்கில் கோட்டை இராச்சியமும், மத்தியிலே கண்டி இராச்சியமுமே அவையாகும். வன்னி பகுதியில் வன்னியென்ற தமிழ்ச் சிற்றரசும் இருந்துள்ளதாகப் பதிவுகள் பகர்கின்றன.
வியாபார நோக்கில் இலங்கைக்குள் புகுந்த போர்த்துக்கேசருக்கு கோட்டை இராச்சியம் சுயவிருப்பின் பேரில் அதன் அரசனான தர்மபாலவினால் 1580 ஆகஸ்ட் மாதம் 12ஆந் திகதி ஒப்பந்தம் மூலம் கையளிக்கப்பட்டது.
1602 மே மாதம் 31 ஆம் திகதி ஜேரிஸ் பன்ஸ் பீல் பர்ஜன் என்ற கடற்படைத் தளபதி தலைமையிலான ஒல்லாந்தப் படை மட்டக்களப்புக்குள் பிரவேசித்தது. போர்த்துக்கேயருக்கு எதிராக கண்டி அரசன் 2ஆம் இராச சிங்கனுக்கும் ஒல்லாந்தருக்கு மிடையே 1638 இல் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
1630 வரை சுதந்திரமாக இயங்கிய யாழ்ப்பாணத் தமிழ் அரசைப் போராட்டத்தின் பின்னரே போர்த்துக்கேயர் கைப்பற்றினர். குறித்த யாழ்ப்பாண அரசும், அதன் அரசர்களும் போர்த்துக்கேயருக்கு எதிராக, அவர்களது ஆக்கிரமிப்புக்கு எதிராக இறுதிவரை போரிட்டனர் என்பது வரலாறு.
1630 இல் இடம்பெற்ற போரில் யாழ்ப்பாணத்து அரசன் சங்கிலியனைப் போர்த்துக்கேயர் முறியடித்து கைது செய்து கோவாவிற்கு கொண்டு செல்லும் வரை யாழ்ப்பாண இராச்சியம் அந்நியருக்கு அடிமைப்படாத சுதந்திரத்துடன் திகழ்ந்தது.
இவ்வாறு இருந்த நிலையில் இலங்கைக்குள் புகுந்த போர்த்துக்கேயர் 1639 இல் மட்டக்களப்பு, திருகோணமலைப் பகுதிகளையும் 1640 இல் காலி, நீர்கொழும்புப் பகுதிகளையும் 1656 இல் கொழும்பு கோட்டையையும் 1638 இல் யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றினர்.
இதன்படி இலங்கையின் கரையோரப் பகுதிகள் 1653 இல் போர்த்துக்கேயர் ஆக்கிரமிப்பிலிருந்து ஒல்லாந்தரின் ஆக்கிரமிப்புக்குள்ளாகின. இருந்தபோதிலும் கண்டி இராச்சியமும் வன்னித் தமிழ் சிற்றரசும் ஒல்லாந்தர் இலங்கைத் தீவிலிருந்து வெளியேறிய 1796 பெப்ரவரி 16 ஆந் திகதியிலும் சுதந்திர நாடுகளாகவேயிருந்தன.
1795 ஆகஸ்ட் மாதம் 26 ஆந் திகதி ஒல்லாந்தர் வசம் இருந்த திருகோணமலை பிரித்தானியர் வசமானதுடன் பிரித்தானியர் ஆட்சிக்கு இந்நாட்டில் அடிகோலப்பட்டது. 1796 பெப்ரவரி 16 ஆந் திகதி ஒல்லாந்தருக்கும், பிரித்தானியருக்குமிடையேயான ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கையில் போர்த்துக்கேயர் வசமிருந்த இலங்கையின் பகுதிகள் பிரித்தானியர் வசமாகின.
1815 பெப்ரவரி மாதம் கண்ணுச்சாமி என்ற நாயக்கர் வம்ச தமிழ் அரசன் பிரித்தானியருக்கும் கண்டி சிங்களப் பிரதானிகளுக்கு மிடையிலான இணக்கத்தால் பலத்த போராட்டத்தின் மத்தியில் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவின் வேலூருக்கு நாடுகடத்தப்பட்டமை வரலாறு.
கண்ணுச்சாமியின் அரச வழிப் பெயர் ஸ்ரீவிக்கிரம இராச சிங்கன் என்று அமைந்தது. அவனே இலங்கையின் கடைசி மன்னன் என்று பதிவிலுள்ளது. கண்ணுச்சாமி என்ற ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனும் யாழ்ப்பாண மன்னர்களைப் போன்று அந்நியருக்கு அடிபணியாது இறுதிவரை போரிட்ட வீரமிகு அரசனாகவே விளங்கியுள்ளார். கண்டி இராச்சியம் கைப்பற்றப்பட முன்னர் வன்னித் தமிழ்ச் சிற்றரசன் போரில் வீழ்த்தப்பட்டு வன்னி கைப்பற்றப்பட்டது. வன்னித்தமிழ் சிற்றரசனும் பிரித்தானியருக்கு அடிபணியாது இறுதிவரை போரிட்ட வீரவரலாறு உள்ளது.
ஒப்பந்தங்கள் மூலமும், போராட்டங்கள் மூலமும் இத்தீவு 443 ஆண்டுகள் ஐரோப்பியரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. 1948 பெப்ரவரி மாதம் 4ஆந் திகதி பல நாடுகளாக, சுதந்திர இராச்சியங்களாகப் பிரிந்து செயற்பட்ட நாடு பிரித்தானியரால் ஒரு நாடாக இணைக்கப்பட்டு சுதேசிகளின் கையில் சுதந்திரம் என்ற பெயரில் கையளிக்கப்பட்டது. சுதேசிகளின் ஆட்சியேற்பட்டு எழுபது ஆண்டுகளை எட்டிவிட்டபோதும் நாட்டில் இன ஐக்கியம், சக வாழ்வு, நல்லுறவு, அபிவிருத்தி போன்றவை எட்டப்படாத நிலைமையே காணப்படுகின்றது.
இவற்றைக் கருத்திற்கொண்டு இவ்வாண்டின் சுதந்திர தினத்தின் கருப்பொருளாக இன ஐக்கியம் கூறப்பட்டுள்ளது. உண்மையான சுதந்திரமானது எவரையும் அடக்கியாள்வது அல்ல. பெரும்பான்மை இனத்தவர்கள் சிறுபான்மை மக்களையும் அரவணைத்துச் செல்வதே உண்மையான சுதந்திரத்தின் அர்த்தமாகும். நாட்டு மக்கள் இதனை அனைவரும் புரிந்து செயற்பட்டால் அதுவே நாடு சுதந்திரம் பெற்றதன் பயனாக அமையும். அவ்வாறான நற்சிந்தனை அனைவர் உள்ளங்களிலும் மலரட்டும் என்று சுதந்திர தேவியைப் பிரார்த்திப்போம்.
Thinakaran.lk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள