செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

இலங்கையின் தகவல் அறிவதற்கான உரிமைச்சட்டம் பற்றி அறிய வேண்டியவை

இலங்கையின் தகவல் அறிவதற்கான உரிமைச்சட்டம் பற்றி அறிய வேண்டியவை



இந்த மாத்தத்தின் ஆரம்பத்தில் இலங்கை மக்களுக்கு அரசிலிருந்து கிடைக்கபெற்ற வரப்பிரசாதங்களுள் ஒன்று தகவல் அறிவதற்கான உரிமைச்சட்டம் ஆகும். மாசி மாதம் 3ம் திகதி பல்வேறு தடங்கல்கள் மற்றும் மாற்றங்களுக்கு பின்பு 18 மார்கழி 2015 அன்று வர்த்தகமானியில் உள்வாங்கபட்டு, நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கபட்ட தினமாக மாற்றமடைந்திருந்தது. இதன் மூலமாக, இலங்கையின் குடியுரிமை பெற்ற எந்தவொரு நபரினாலும் பொது அதிகாரசபையின் தகவல்களை அறிந்துகொள்ளக்கூடிய நிலை உருவாக்கபட்டிருக்கிறது.

தகவல் அறிவதற்கான உரிமைச்சட்டம் என்றால் என்ன ?

தனிநபருக்கு இலங்கையின் பொது அதிகாரசபைகளில் (Public Authorities) உள்ள தகவல்களை அறிந்துகொள்வதற்கான அடிப்படை உரிமையை வழங்குகின்ற சட்டம் இதுவாகும்.
இலங்கையின் பொது அதிகாரசபைகள் தன்னகத்தே கொண்டுள்ள பல்வேறு தகவல்கள் தொடர்பிலும் அறிந்துகொள்வதற்கான உரிமை மக்களுக்கு உள்ளது. ஆனால், எத்தகைய தகவல்களை , எத்தகைய செயல்முறை மூலம் மக்கள் பெற்றுகொள்வது என்பது தொடர்பில் பொதுவான செயன்முறையை அமுலாக்குவதன் மூலம், மக்கள் இலகுவாக தகவல்களைக் கையாள இந்த சட்டமானது நடைமுறைபடுத்தப்படுகிறது.

எந்தவகையான தகவலை பெற முடியும்? முடியாது?

தகவல்” என்பது பதிவேடுகள்ஆவணங்கள்குறிப்புகள்மின்அஞ்சல்கள்அபிப்பிராயங்கள்மதியுரைகள்பத்திரிகை வெளியீடுகள்சுற்றுநிருபங்கள்கட்டளைகள்சம்பவத்திரட்டுக்கள்ஒப்பந்தங்கள்அறிக்கைகள்பதத்திரிகைகள்மாதிரிகள்உருப்படிவம்கடிதத் தொடர்புகுறிப்பறிக்கைவிரைவுச்சட்டவாக்கம்புத்தகம்திட்டவரைபுவரைவுவரைபடம்பட அல்லது வரைபட வேலைபுகைப்படம்திரைப்படம்குறும்படம்ஒலிப்பதிவுஒளிநாடாஇயந்திரம் மூலம் வாசிக்கக்கூடிய பதிவுகள்கணணிப்பதிவுகள் மற்றும் வேறு ஆவண பொருள்உள்ளடங்கலாக அதனது பௌதீக படிவம் அல்லது பண்பு பொருள்படுத்தாமல் ஏதேனும் படிவத்திலான ஏதேனும் பொருள் மற்றும் அதன் ஏதேனும் பிரதி என்பவற்றை உள்ளடக்குகின்றது.
இந்த தகவல்களில் மக்களின் பொதுநலனை (PUBLIC INTEREST) பாதிக்ககூடிய தகவல் என தகவல் வழங்கும் அதிகாரியினால் அல்லது அரசினால் தீர்மானிக்கப்பட்டவை, அரசின் பாதுகாப்பு மற்றும் நலன்களை பாதிக்க கூடிய தகவல்கள், அரச கொள்கைகளின் இரகசியத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் தகவல்கள், ஏதேனும் தனிநபரை பாதிக்க செய்யும் தகவல் மற்றும் நாடுகளுக்கிடையிலான உறவுமுறையில் பாதிப்பை ஏற்படுத்தகூடிய தகவல்கள், நீதித்துறையினை பாதிக்கக்கூடிய தகவல்கள் போன்றவை தவிர்த்து ஏனைய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். (குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பெற்றுக்கொள்ளும் விசேட நன்மைகளுக்கான காரணங்கள்தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படுவதற்கான அடிப்படைகள்நேர்முகப் பரீட்சைகளின் புள்ளிகள்பாடசாலை அனுமதி மறுப்புக்கான காரணங்கள்அலுவலகங்களின் உள்ளக செயற்பாடுகள் போன்ற ஏனைய விடயங்களையும் அறியலாம்).
தகவலுக்கான உரிமை சட்டம் மூலம் தகவல் ஒன்றை எவ்வாறு பெறலாம் ?
தகவல் பெற விரும்புபவர்கள் தாம் பெற்றுக்கொள்ளவேண்டிய தகவல் தொடர்பான விபரங்களை எழுத்துமூலமாக தகவல் அதிகாரியிடம் சமர்பிக்க வேண்டும். (ஒவ்வொரு பொது அதிகாரசபையும் தனக்கான தகவல் வழங்கும் அதிகாரியை குறித்த சட்டத்திற்கு அமைவாக கொண்டு இருக்கும்) தகவலை பெறுவதற்கு குறித்த சுட்டியில் உள்ள மாதிரி படிவத்தை பயன்படுத்திகொள்ள முடியும். இது ஒரு மாதிரி படிவம் மாத்திரமே!
தகவல் பெறுனரின் விண்ணப்பத்தில், கோரப்படுகின்ற தகவல் தொடர்பிலான பூரண விடயங்களை உள்ளடக்குவதுடன், தகவலை பெறவிரும்பும் மொழியையும் குறிப்பிட வேண்டும். அதுபோல, தகவல் பெறுநர் குறித்த தகவலை பெற விரும்பும் காரணத்தை குறிப்பிடவேண்டிய அவசியமில்லை. தகவல் வழங்கும் அதிகாரியினால், தகவல் பெறுநரின் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளப்பட்ட 14 வேலை நாட்களுக்குள் தகவலை வழங்க முடியுமா / இல்லையா ? என்கிற விபரம் தெரிவிக்கப்படும்.
தகவலை வழங்கமுடியும் என்பதனை உறுதிசெய்தால், உறுதிசெய்யப்பட்ட தினத்திலிருந்து 14 வேலைநாட்களுக்குள் அல்லது தகவலின் கனதி அடிப்படையில் 21 வேலைநாட்களுக்குள் தகவல் பெறுநர் தகவலை பெற்றுக்கொள்ள முடியும்.
இதனை தவிரவும், ஏதேனும் தகவல்கள் தனிநபர் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் தொடர்பிலானதாக உள்ளபட்சத்தில் குறைந்தது 48 மணிநேரத்தினுள் குறித்த தகவலை வழங்கவேண்டிய பொறுப்பு தகவல் வழங்கும் அதிகாரிக்கு உள்ளது.  

தகவல் பெறுநரின் விண்ணப்பம் மறுக்கப்படுமிடத்து என்ன செய்ய முடியும் ?

தகவல் பெறுநரின் விண்ணப்பம் மறுக்கபடுமிடத்து, தகவல் வழங்கும் அதிகாரி அதற்கான காரணத்தையும், மேன்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் மற்றும் யாருக்கு எதிராக மேன்முறையீடு செய்யவேண்டும் என்பது தொடர்பிலும் அறிவிக்க வேண்டும்.
தகவல் பெறுநருக்கு வழங்கபட்ட தகவல் திருப்பதிகரமாக அமையாத போது அல்லது தகவலானது இரகசியத்தன்மை காரணமாகவோ, மேலதிக கட்டணத்திற்காகவோ அல்லது வேறு ஏதும் பொருத்தமான காரணத்துக்காகவோ மறுக்கப்படுகின்ற போது, தகவல் பெறுநர் அதனை எதிர்த்து தகவல் மறுக்கபட்ட தினத்திலிருந்து 14 வேலைநாட்களுக்குள் மேன்முறையீட்டை செய்ய முடியும்.

தகவல் மேன்முறையீட்டு செயற்பாட்டிலும் திருப்தியடையாதவிடத்து என்ன செய்யலாம் ?

தகவல் பெறுநர் மேன்முறையீட்டு அதிகாரியின் முடிவில் திருப்தி அடையாதவிடத்து அல்லது மேன்முறையீடு செய்து குறித்த காலப்பகுதியில் தகவல் கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்தில் தகவலுக்கான ஆணைக்குழுவிடம் (Information Act Commission) முறையிட முடியும். தகவலுக்கான ஆணைக்குழுவும் திருப்திகரமாக இயங்கவில்லை என தகவல் தருநர் எண்ணினால், குறித்த நாளிலிருந்து ஒரு மாதகாலத்துக்குள் நீதிமன்றத்தின் உதவியை நாடி தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முடியும்.

தகவலை பெற கட்டணம் உண்டா? பெறுகின்ற தகவலின் நம்பகத்தன்மையை உறுதி செய்வது எப்படி?

தகவல் பெறுநர் தகவலை பெறுவதற்காக விண்ணபித்ததன் பின்பு, தகவல் வழங்கும் உத்தியோகத்தர் தகவல் வழங்க முடியும் என்பதனை உறுதிசெய்து, அதனை தகவல் பெறுநருக்கு தெரிவிக்கும்போது அதற்கான கட்டணத்தையும் தெரிவிப்பார்.
தகவலை பெறும்போது, தகவல் வழங்குனர் குறித்த தகவலை பொருத்தமான பொது அதிகாரசபை அல்லது உத்தியோகத்தர்கள் உறுதிசெய்து வழங்குமாறு கேட்டுக்கொள்ள முடியும். வழங்கப்பட்ட தகவலின் நம்பகத்தன்மை குறைவாக இருப்பின், அது தொடர்பிலான மேன்முறையீட்டை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க முடியும்.
தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்துக்கு அமைவாக மாசி மாதம் 3ம் திகதிக்கு பின், இலங்கையின் குடிமக்கள் தகவலை பெறுவது சாத்தியமாகிறது. ஆயினும், தகவலுக்கான உரிமைச்சட்டமானது ஒவ்வரு பொது அதிகாரசபையும் தனக்கென தகவல் வழங்கல் அதிகாரி ஒருவரை கொண்டிருக்கவேண்டும் என வலியுறுத்துகிறது. எனவே, ஒவ்வொரு அதிகாரசபையும் தனக்கான தகவல் வழங்கல் அதிகாரியை நியமித்தல் மற்றும் அதுதொடர்பிலான ஏற்பாடுகளை செய்வதில் காலதாமதம் நிகழும்போது, அது தொடர்பிலான தகவலை பெற்றுகொள்ளுவதிலும் சிரமங்களை எதிர்கொள்ளக் கூடும். தற்சமயம் தகவலுக்கான உரிமை சட்டம் எழுத்து ஆவண வடிவில் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இணையத்தளத்தின் மூலமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ தகவல் பெறுநர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது.
இவைதான், தகவல் அறிவதற்கான உரிமைச்சட்டம் தொடர்பில் அடிப்படையாக அறிந்திருக்கவேண்டிய விடயங்களாக உள்ளன. இதன் அடிப்படையில் நானோ, நீங்களோ இனிவரும் காலங்களில் தகவலுக்கான உரிமைசட்டம் மூலம் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய தகவலை பெற்றுக்கொள்ள முடியும். எனவே, தகவல் அறிவதற்கான உரிமைச்சட்டத்தை முறையான வகையிலும், வினைத்திறன் வாய்ந்தவகையிலும் பயன்படுத்தி கொள்ளுவோமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள