சனி, 11 பிப்ரவரி, 2017

தலைமுறைகள் தழைக்க தமிழகம் காப்போம்.

'ஒரு மாஃபியாவின் கையில் இந்த மாநிலம் சிக்கிவிடக் கூடாது.. அதுதான் முக்கியம்!'
பலருக்கு ஒரு விஷயம் சரியா புரியலைனு தெரியுது.
நம்ம தமிழ்நாடு ரொம்ப காலமா ஒரு நெருக்கடில சிக்கிட்டு இருந்தது. அதாவது கண் முன்னால் நடக்கிற ஒரு தப்பையோ அநியாயத்தையோ யாராலும் தட்டிக்கேட்க முடியாத நிலைமை இருந்தது.
சராசரி மக்கள் மட்டுமில்லை. மிக அதிகமான மக்களை தினமும் எட்டக் கூடிய பத்திரிகைகளாலும் கேள்வி கேட்க முடியாத நிலை. கேள்வி வேண்டாம், நடந்த சம்பவம் இதுதான் அப்டீனு சும்மா செய்தி போடக்கூட முடியாது.
அரசாங்கத்த விட சக்தி வாய்ந்ததுனு நம்மில் பலர் நம்பிட்டு இருக்கிற நீதிமன்றங்களே பல விஷயங்கள பாத்தும் பாக்காம இருந்த பரிதாபம் இங்க இருந்தது. ஊருக்கே தெரியும் இவன் அல்லது இவள் தப்பு செஞ்ச குற்றவாளி அப்டீனு.
போலீஸ் வரும், கைது, ஜெயில், வழக்கு, கோர்ட் எல்லாம் வரிசைப்படி நடக்கும்.
குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் இவரை / இவர்களை விடுதலை செய்கிறேன்னு நீதிபதி தீர்ப்பு வாசிப்பார். லோக்கல் கோர்ட்ல இருந்து சுப்ரீம் கோர்ட் வரைக்கும் இந்த காட்சிகளை நாம பாத்திருக்கோம். அதனால் இது நம்ம தமிழ்நாட்டுக்கு மட்டும் இருந்த பிரச்னைனு சொல்ல முடியாது.
ஆனா, அங்கெல்லாம் கேள்வியாவது கேட்க முடிஞ்சுது. தீர்ப்புக்கோ தண்டனைக்கோ பயப்படலைனாலும் இப்டி ஜனங்களும் மீடியாவும் கேக்குமேனு கேள்விக்கு பயந்தாங்க கிரிமினல்ஸ். ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம் எல்லாமே. நம்மூர்ல அதுகூட இல்லை.
மொத்த சமுதாயத்தையும் ஒரு மூட்டைல கட்டி மூலைல கடாசிட்டு அதிகார வர்க்கம் சுதந்திரமா செயல்பட்டுது. மூச்சு விடக்கூட திணறிகிட்டு கொஞ்சம் கொஞ்சமா செத்துகிட்டு இருந்தது தமிழ்நாடு.
திடீர்னு ஜெயலலிதா மரணம் அடைஞ்சதும் அந்த மூட்டைல பெருசா ஒரு ஓட்டை விழுந்தது. ஆக்சிஜன் கிடைச்சுது. எல்லாரும் மூச்சு விட முடிஞ்சுது. அதோட சேர்ந்து சுதந்திரம், ஜனநாயகம், நியாயம், தர்மம் மாதிரியான சிந்தனைகளும் மறுபிறவி எடுத்தன.
ஜல்லிக்கட்டின் பேரால் மெரினாவில் நடந்த மக்கள் எழுச்சி அந்த சுதந்திரத்தோட வெளிப்பாடு தவிர வேறேதும் இல்லை.
அடுத்த கட்டம் அதுக்குள்ள வந்துருச்சு.
ஜெயலலிதா ஒரு அரசியல்வாதி. நடிகையா இருந்து அரசியலுக்கு வந்து அகில இந்திய அளவில் பல தலைவர்களோட பழகி, வேறுபட்ட அரசியல் அனுபவங்களை சந்திச்சு, கட்சி நிர்வாகம் அரசு நிர்வாகம் எல்லாம் கேட்டும் பார்த்தும் தெரிந்து கொண்டு, மாநிலம் முழுவதும் மக்களை சந்திச்சு, தேர்தல்கள்ல வெற்றி தோல்விகளை சந்திச்சு பக்குவப்பட்ட ஒரு மாஸ் லீடர்.
அப்படிப்பட்ட ஜெயலலிதா ஆட்சியிலேயே தமிழ்நாட்டு மக்கள் சமூகம் ஒரு அழுக்கு மூட்டைக்கு சமமாக சுருட்டி வீசப்பட முடிந்தது என்றால்.. ஜெயலலிதாவுக்கு பின்னால் நிழலில் இருந்து கொண்டே தமிழகத்தின் இயற்கை வளங்களை சுருட்டுவதிலும் பிறர் சொத்தை அபகரிப்பதிலும் தீவிரம் காட்டிய ஒரு மர்மக் கூட்டம் ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டின் கதி என்ன ஆகும், இந்த மக்களின் கதி என்ன ஆகும்?
அடுத்தடுத்து குற்றங்களையும் கொடுமைகளையும் பார்த்துப் பார்த்து நமது மனமும் மூளையும் மரத்து போய்விட்டது. சிறுமிகள் பெண்கள் பாலியல் பலாத்காரம், வீட்டில் தனியாக வசித்த முதியோர் கொலை, ஒரு சாதாரண வார்டு கவுன்சிலர் ஐந்து ஆண்டுக்குள் 500 கோடி சொத்து சேர்த்துவிட்டு பத்து பைசா வரி கட்டாமல் ஏமாற்றுகிறார்.. என்ற செய்திகள் இப்போதெல்லாம் நம்மில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
பையனூர் கிராமத்தில் நான் ஆசையாக வாங்கி அழகுபடுத்திய பண்ணை வீட்டை அடித்துப் பிடுங்கியவர் சசிகலா என்று நேற்று டீவி கேமராக்கள் முன்பு கண்ணீருடன் குமுறிய கங்கை அமரன் பற்றி சமூக ஊடகத்தில்கூட அதிக கமென்டுகளைப் பார்க்க முடியவில்லை. இதெல்லாம் சகஜம் என்ற பக்குவத்தை இவ்வாறு தமிழக மக்களுக்கு ஏற்படுத்தியதில் பெரும் பங்கு சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் சாரும்.
தங்களை வாழவைத்த ஜெயலலிதாவுக்கே அந்தக் குடும்பம் துரோகம் செய்ய முயன்றதும், அதன் விளைவாக அவர்கள் அனைவரும் போயஸ் கார்டனில் இருந்தும் அதிமுகவில் இருந்தும் வெளியேற்றப்பட்டது வெறும் கதையல்ல, நிஜம்.
'அரசிலுக்கே வர மாட்டேன், உங்களுக்கு துரோகம் செய்த என் உறவினர்கள் எவருடனும் இனி ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது' என்று பகிரங்கமாக எழுதிக் கொடுத்துவிட்டு மீண்டும் வேதா நிலையத்தில் புகுந்த சசிகலாதான் இன்று உலகமே வெறுப்புடன் பார்க்க முதலமைச்சர் நாற்காலியில் அமர துடியாய்த் துடிக்கிறார்.
உண்மையில் ஜெயலலிதாவுக்கு சசிகலா மீது நல்ல எண்ணம் இருந்திருந்தால் கட்சியில் ஒரு சிறிய பொறுப்பாவது கொடுத்து பயிற்சி அளித்திருக்க மாட்டாரா? எம்.பி., தலைமை நிலைய நிர்வாகி, கொள்கை பரப்புச் செயலாளர் என ஒவ்வொரு பதவியாக கொடுத்துப் பழக்கப்படுத்தி ஜெயலலிதாவை எம்ஜிஆர் வளர்த்தது போல் சசிகலாவை ஜெயா வளர்த்திருக்க மாட்டாரா?
'அரசியல் ஆசைகளுக்கு இடம் தர மாட்டேன் என்று எழுதிக்கொடு' எனக் கேட்டு, அந்தக் கடிதத்தையும் பொது மக்களுக்கு தெரியப்படுத்தினார் ஜெயலலிதா. சசிகலா அரசியலுக்கு வருவது கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல என்பதை உணர்ந்திருந்த காரணத்தால்தானே ஜெயா அப்படி செய்தார்?
ஜெயலலிதாவை விட சசிகலாவை நன்றாக அறிந்த யாராவது இருக்க முடியுமா, மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஜெயலலிதாவின் விருப்பத்துக்கு மாறாக, அவருக்கே துரோகம் செய்யும் விதமாக அதிமுக கட்சியையும் தமிழக ஆட்சியையும் கைப்பற்ற சசிகலா துடிக்கிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்?
1.இதுவரை அடித்த கொள்ளை போதாது, இன்னும் வேண்டும் என்கிற பேராசை.
2.அடித்த கொள்ளையால் சேர்த்த சொத்துகளை சட்டபூர்வமாக பாதுகாக்க முடியாது என்பதால் ஆட்சி அதிகாரம் தேவை என்ற நம்பிக்கை.
3. தலைக்கு மேல் தொங்கும் வழக்குகள், அதன் மூலமான தண்டனைகளில் இருந்து தப்ப கட்சி மற்றும் ஆட்சி ஆகிய இருவகை பலமும் அவசியம் என்ற நம்பிக்கை.
4.அதிகாரம் கையில் இல்லை என்றால் இதுவரை கூட இருந்தவர்களே நம்மை அழித்து விடுவார்கள் என்ற பயம்.
5.தன்னை விட்டால் அதிமுகவையும் அதிமுக ஆட்சியையும் கட்டிக் காக்கும் திறமையுள்ள ஒருவர் கூட கட்சியில் இல்லை என்ற எண்ணம்.
இந்த காரணங்களில் ஏதோ ஒன்றுதான் அர்த்தமாக இருக்க முடியும், இல்லையா? இதில் ஐந்தாவது மிகப்பெரிய அபத்தம். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலக் கட்சியான அதிமுகவில் முதல்வராக பதவியேற்க ஒருவருக்குமே தகுதி இல்லை என்பது வடிகட்டிய அபத்தமன்றி ஏதுமில்லை.
ஆகவே, இப்படிப்பட்ட மாஃபியாவின் கையில் இந்த மாநிலம் சிக்கிவிடக் கூடாது என்பதுதான் இன்றைய அவசர அவசியத் தேவை. இதில் வழக்கமான ஜாதி, மத, இன, அரசியல் துவேஷங்களை புகுத்த தேவையில்லை. வேறு எந்தக் கட்சி இதில் ஆதாயம் தேட முயன்றாலும் அது இயல்பான ஒன்றுதான். புறவாசல், பின்வழி என்பதெல்லாம் அரசியலுக்கு புதிதல்ல.
முற்றிலும் நல்லவர் ஒருவரே முதல்வராக வர வேண்டும் என்றெல்லாம் எழுதவோ பேசவோ ஆரம்பித்தால் நமது மாநிலத்துக்கு ஒருக்காலும் முதலமைச்சர் கிடைக்கப்போவது இல்லை. இருப்பதில் பரவாயில்லை என சொல்லக்கூடிய ஒருத்தர் இப்போதைக்கு போதும்.
வெளிப்படையானவர். வெட்டி பந்தா செய்யாதவர். மக்களை சந்திக்க தயங்காதவர். ஊடகங்களை வெறுக்காதவர். விமர்சனங்களை எற்றுக் கொள்பவர். கேலி கிண்டலையும் சகித்துக் கொள்பவர்.
அந்த தகுதிகளை அலசினால் இன்றுள்ள ஒரே சாய்ஸ் பன்னீர் செல்வம். பன்னீர் உத்தமர், இதுவரை அதிமுக ஆட்சியில் நடந்த எந்த முறைகேட்டிலும் சம்மந்தப்படாதவர், சொத்து சேர்க்காதவர், நேர்மையின் சிகரம் என்றெல்லாம் எவரும் வாதாடவில்லை.
இதுவரை இருந்த பன்னீராக இனிமேல் அவர் செயல்பட முடியாது. இப்போது மக்களும் ஊடகமும் விழித்துக் கொண்டன. தமிழ்நாடு சுதந்திரக் காற்றை சுவாசிக்கப் பழகி விட்டது. தவறு செய்யும் அரசும், அதை தட்டிக் கேட்காத எதிர்க்கட்சியும், அம்பலப்படுத்தாத ஊடகமும் இனிமேல் இந்த மண்ணில் குப்பைகொட்ட முடியாது.
இன்னும் நாலரை ஆண்டுகள் இருக்க வேண்டிய பதவியை இழந்து விடுவோம் என்கிற ஒரே பயம்தான் சசி அணி பக்கமாக சட்டமன்ற உறுப்பினர்களை அடைய வைத்திருக்கிறது. ஒருக்கால் அவர்கள் ஆதரவுடன் சசிகலா ஆட்சி பீடம் ஏறினால் அது ஒரு மாதம்கூட நீடிப்பது கடினம் என்பதை அவர்கள் தாமதமாக உணரக்கூடும்.
பன்னீர் நல்லவரா கெட்டவரா என்ற பட்டிமன்றத்தை பிற்பாடு வைத்துக் கொள்ளலாம். மன்னார்குடி மாபியா கையில் நாடு சிக்குவதை தடுத்து நிறுத்தியாக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் ஜனநாயக சக்திகள் எல்லாமும் கைகோர்க்க வேண்டிய நேரம் இது.
மக்கள் விருப்பத்துக்கு மாறாக நடக்கும் எந்த செயலும் இறுதியில் வெற்றி பெற்றதாக உதாரணங்கள் இல்லை. வழி தவறிய தலைவர்கள் நிம்மதியாக வாழ்ந்ததாகவும் வரலாறு இல்லை.
Tamilar neethi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள