திங்கள், 6 பிப்ரவரி, 2017

“என்னை முட்டாள் என்பீர்கள்... சசிகலாவும் ஒரு நாள் முதல்வர் ஆவார்!” - 20 ஆண்டுகளுக்கு முந்தைய குரல்.

“என்னை முட்டாள் என்பீர்கள்... சசிகலாவும் ஒரு நாள் முதல்வர் ஆவார்!” - 20 ஆண்டுகளுக்கு முந்தைய குரல்.
Image result for valampuri john
பிரபல ஜோதிடர் அவர். எம்.ஜி.ஆர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பிரபலங்களுக்கும் எதிர்காலத்தை கணித்துச்சொன்னவர். திரைத்துறையில் ஈடுபட்டு பெரிய நடிகரான எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்து பெரிய அளவில் பொருளாதார ஏற்றம் கண்ட அவர் பின்னாளில் சில படங்களில் கையை சுட்டுக்கொண்டார்.
சினிமாத்துறையில் எல்லோருக்கும் அதிர்ச்சி. பலரது எதிர்காலத்தை சரியாக கணித்துச் சொன்னவர், தனது எதிர்காலத்தை கணிப்பதில் கோட்டை விட்டது ஏன்... இந்த கேள்வியை அவரது சக தயாரிப்பாளர் ஒருவர் மனம் கேட்காமல் அவரிடமே ஒருநாள் கேட்டுவிட்டார். பெருமூச்சை இழுத்து விட்டபடி இப்படி சொன்னார் தயாரிப்பாளர். “ஜோதிடம், ஜாதகம் என்பதெல்லாம் ஒரு கட்டம் வரைக்கும்தான் பலிக்கும். ஏதோ பெரிய நட்டத்தில் இருந்து சுதாரித்துக்கொள்ளலாமே தவிர...எல்லாவற்றையும் தவிர்த்துக்கொள்ளமுடியாது. எவ்வளவுதான் எச்சரிக்கை உணர்வோடு நீங்கள் நடந்துகொண்டாலும் ஒரு மனிதனுக்கு கெட்டநேரம் என்று வந்துவிட்டால் காலம் அவனது கண்ணைக் கட்டி நடுத்தெருவுக்கு கொண்டுவந்து நிறுத்திவிடும்” என்றார் வேதனையான குரலில்.
அவர் சொன்னது நிஜம்தான் என்பது தமிழக அரசியல் நிலவரம் நமக்கு இன்று புரியவைக்கிறது. தமிழகத்தின் கண்களை காலம் கட்டிவிட்டு சில சம்பவங்களை அரங்கேற்றத்துவங்கியிருக்கிறது இப்போது. சசிகலா இன்னும் சில தினங்களில் கோட்டையில் குடியேற இருக்கிறார்.!
தமிழகம் சந்திக்கப்போகும் இந்த அபாயத்தை ஜோதிடங்களை கற்றுத்தேர்ந்த நிபுணர்களும், ஜாதக பலாபலன்களை ஆய்ந்து அதில் ஜல்லிக்கட்டு விளையாடும் பண்டிதர்களே கூட நேற்றுவரை சொல்ல முடியாத நிலையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே வலம்புரிஜான் அழுத்தந்திருத்தமாக பதிவு செய்திருக்கிறார் என்பது ஆச்சர்யமான விஷயம். வார்த்தைச் சித்தரான வலம்புரிஜான் தமிழக மெத்தப் படித்த மேதைகளின் வரிசையில் இடம்பெறத் தகுதிபெற்றவர். ஜெயலலிதாவுக்கு அவரது அரசியலின் ஆரம்பநாளில் நெருங்கிய நண்பர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சசிகலா இவர்களுக்கிடையேயான மூன்று முடிச்சுகளை அவிழ்க்கும் விதமாக பல கட்டுரைகளை 90 களின் மத்தியில் விறுவிறுப்பாக எழுதியவர்.
சசிகலா, ஜெயலலிதாவின் தோழி என்ற பிம்பத்தில் மட்டுமே தமிழக மக்களால் பார்க்கப்பட்டுவந்த 90 களின் மத்தியில் பிரபல வார இதழ் ஒன்றில் அவர் எழுதிய கட்டுரையில் இப்படி சொல்லியிருந்தார் வலம்புரிஜான். “ஒரு நடிகையாக இருந்து தனது சக குருவின் அரசியல் வாழ்வில் இணைந்து ஜெயலலிதா இன்று தமிழகத்தின் முதல்வராக ஆனதையே நம்மால் ஜீரணித்துக்கொள்ளமுடியாமல் இருக்கிறோம். ஆனால் ஜெயலலிதா முதல்வரானது கூட அதிக ஆச்சர்யம் அடையவேண்டிய விஷயமில்லை. திறமையான நிர்வாகி, படிப்பாளி, ஒரு கட்சியில் பெருந்தலைகளுடன் போராடி இந்த இடத்திற்கு வந்தார். ஆனால் இதையெல்லாம் விட ஒரு ஆச்சர்யமும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் ஒன்று. இன்று இல்லையென்றாலும் என்றேனும் ஒருநாள் நடந்தே தீரும். அது சசிகலா முதல்வராகும் நாள்!...
நான் இதை சொல்வதால் என்னை பைத்தியக்காரன் என்று கூட சொல்லலாம். ஆனால் தனது பலஹீனங்களை எல்லாம் பலமாக்கிக்கொண்டு ஜெயலலிதா ஒருநாள் முதல்வரானதுபோல் அவருடைய நிழலாகவே இருக்கிற சசிகலாவும் ஒருநாள் முதல்வராவார். அதற்கான பால பாடங்களை ஜெயலலிதாவிடமிருந்தே அவர் கற்றுக்கொண்டிருக்கிறார். சசிகலா முதல்வராவதற்கு இன்று ஜெயலலிதாவால் விரட்டி விரட்டி அடிக்கப்படும் நடராஜனே முக்கிய பங்கு வகிப்பார். தமிழகம் இந்த துயரையும் சந்தித்துத்தான் தீரவேண்டும். அப்படி ஒருநாள் வரும்போது என்னை நினைத்துப் பார்ப்பார்கள் தமிழர்கள்” - 'கல்லறைகள் பிளக்கும் நாற்காலிகள் நடுங்கும்' என்ற தலைப்பில் அந்த வார இதழில் தனது அரசியல் பயணத்தையும் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும் எழுதிய தொடரில்தான் இப்படி பதிவு செய்திருந்தார் வலம்புரிஜான்.
வலம்புரிஜான் அன்று சொன்னது அச்சு பிசகாமல் கிட்டதட்ட 20 வருடங்களுக்குப்பின் நடந்தேறியதை பார்க்கிறபோது வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் உண்மையிலேயே தீர்க்கதரிசி என்றே சொல்லத்தோன்றுகிறது. ஆனால் ஒரே குழப்பம், வலம்புரிஜான் இப்படி கணித்தது, சசிகலாவின் சாதுர்யத்தை அடிப்படையாக கொண்டா...அல்லது, தமிழகத்தின் விதி இப்படித்தான் இருக்கும் என கடந்தகாலத்தை கணக்குப்போட்டா என்று தீர்க்கதரிசி வலம்புரிஜானுக்கு மட்டுமே வெளிச்சம்!
- எஸ்.கிருபாகரன்
© COPYRIGHT VIKATAN.COM 2016. ALL RIGHTS RESERVED

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள