திங்கள், 9 ஜனவரி, 2017

ஆட்சிக்கும் பிரதமருக்கும் அடித்துள்ள அபாய மணி..! - மோசமான விளைவுகளை சந்திக்குமா இலங்கை??


ஆட்சிக்கும் பிரதமருக்கும் அடித்துள்ள அபாய மணி..! - மோசமான விளைவுகளை சந்திக்குமா இலங்கை??

ஆட்சியில் மாற்றம் ஏற்படுத்துவதற்காகவே இனவாதம் மற்றும் இராணுவப்புரட்சி கதைகள் ஆரம்பத்தில் துளிர்விட்டன.
ஆனால் இப்போதைய போராட்டமோ இலங்கை அந்நிய நாட்டுக்கு விற்கப்படுகின்றது என்பதே, இதனை காரணம் காட்டி ஆட்சிக்கு எதிரான அனைத்து சக்திகளும் இணைந்து செயற்படுகின்றன.
ஆரம்பத்தில் பௌத்தம் காக்க வந்த பிக்குகளும் ஞானசார தேரரும் தற்போது இலங்கையை காக்க வேண்டும் என்கின்றார். நேற்றைய தினம் நுகேகொடையில் கூட்டம் ஒன்றில் ஞானசாரர் உரையாற்றிய போது,
பிரதமர் தற்போது மூளையிழந்து செயற்பட்டு கொண்டு வருகின்றார், புது அரசியல் யாப்பு எந்தவகையிலும் சரிப்பட்டு வராது.
அதே போன்று நாட்டின் பாரம்பரிய சொத்துகள் விற்கப்படுகின்றது. இதனால் பிரதமருக்கும் அவருடைய முறைகேடான ஆட்சிக்கும் நாம் கூறுவது யாதெனின் நாட்டின் மீது கைவைக்க வேண்டாம்.
அவ்வாறு கைவைப்பீர்கள் என்றால் இந்தப் பிரச்சினையை நாம் மோசமான வகையில் கையாண்டு தீர்த்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் எச்சரித்துக் கொள்கின்றோம்.
இவை ஞான சார தேரர் நேற்று தெரிவித்தவை. ஆரம்பம் முதலாகவே இவர் குழப்ப நிலையை தோற்றுவிப்பதற்காகவே கருத்து வெளியிட்டு வருகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதே போன்று அப்பாந்தோட்டை சம்பவம் நாட்டின் ஆட்சியை கவிழ்க்கக் கூடியது என்றும் முறைகேடான ஆட்சியே நடைபெற்று வருகின்றது என மகிந்த இன்று கருத்து தெரிவித்துள்ளார். இது ஆட்சி மாற்றத்திற்காக அவர் செயற்படுகின்றார் என்பதை தெளிவு படுத்துகின்றது.
உண்மையில் கடந்த கால ஆட்சியின் போது இதனை விட மோசமான சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் நீதிமன்ற அச்சுறுத்தலைத் தாண்டி ஆர்ப்பாட்ட காரர்கள் செயற்பட்டமையே தாக்குதல்கள் நடைபெற காரணமாக அமைந்தது என்பதே பொலிஸாரின் வாதம்.
ஆனாலும் மகிந்த தரப்பினரும், பிக்குகளும் இது முற்றிலும் பிரதமரின் திட்டம், கொழும்பில் இருந்து அழைத்து வரப்பட்ட ரவுடிக் குழுக்கள் மூலமாகவே தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்துகின்றனர்.
ஆட்சியை கவிழ்ப்பேன் என்று பகிரங்கமாக முன்னாள் ஜனாதிபதி சபதம் செய்த பின்னரே இவை அரங்கேற்றப்படுகின்றது. நாமல் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
அது மட்டும் இல்லாமல் நீதிமன்றத்தின் அனுமதியை தாண்டி நாமல் ராஜபக்ச சென்றமையினாலேயே அவர் மீதும் நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நாமல் மீது தாக்குதல் நடத்திவிட்டார்கள் என்று விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றது.
அனைத்தையும் தாண்டி இப்போது இலங்கையில் நடக்கும் அனைத்து விதமான போராட்டங்களுக்கும் முன்னிலை வகிப்பது பிக்குகளே.
அண்மையில் இராணுவ வீரர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில், சம்பந்தமே இல்லாமல் பிக்குகள் புகுந்து பதற்றத்தை ஏற்படுத்தினர்.
இப்போது அம்பாந்தோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதும் பிக்குகளையே முன்னே செல்லுமாரு ஆர்ப்பாட்ட காரர்கள் கூறுகின்றார்கள்.
இப்படி பிக்குகள் முன்செல்ல அவர்களோடு ஆர்ப்பாட்ட காரர்களும் செல்ல முயற்சி செய்வர் இதன் போது பொலிஸார் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுவார்கள்.
அதற்கு அடுத்து பிக்குகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு விட்டது பௌத்தம் அழிக்கப்படுகின்றது. எனக்கூறி அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பும் நடவடிக்கைகள் அரங்கேற்றப்படும். இதுவே பிக்குகளது திட்டம்.
நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது அம்பாந்தோட்டையில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று இதனை வலுப்படுத்தி கூறுகின்றது. மேலும் பொலிஸார் எச்சரித்தும் வேண்டும் என்றே உத்தரவை மீறியதும் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது. காணொளியைப் பார்க்க இங்கே அழுத்தவும்
ஆர்ப்பாட்டகாரர்கள் பிக்குகளையே முன்னே செல்ல வேண்டும் எனவும் ஏனையவர்கள் அவர்களுக்கு பின்னால் செல்ல வேண்டும் எனவும் கூறுவது தெளிவாக பதிவாகியுள்ளது.
ஆக மொத்தம் பிக்குகள் மற்றும் பௌத்தம் மூலமாகமே ஆட்சிக்கவிழ்ப்பு நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றதாக கூறப்படுகின்றது.
எது எவ்வாறு இருந்தாலும் இந்த ஒட்டு மொத்த பிரச்சினைகளும் ஆட்சி மாற்றத்திற்காகவே உருவாக்கப்பட்டு கொண்டு வருவதாகவும் இதன் பின்னணியில் மகிந்தவே இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
அந்த வகையில் ஆட்சிக் கவிழ்ப்பு திட்டத்தின் முதற்படியே இது, இந்த அம்பாந்தோட்டை பிரச்சினையே இப்போது நாட்டின் பெரும்பாலான பிக்குகள் ஆட்சிக்கும், பிரதமருக்கும் எதிராக கூறிவரும் கருத்து.
ஒட்டுமொத்தமாக நல்லாட்சியையும் பிரதமரையும் குறிவைத்தே இவை செயற்படுத்தப்படுகின்றன. காரணம் இவற்றின் மூலம் பிரதமரை பதவி விலகவைக்க என அடுத்த போராட்டங்களை ஏற்படுத்துவதே.
அதன் படியே அம்பாந்தோட்டை பிரச்சினை இப்போது மீண்டும் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. அடுத்து குற்றச்சாட்டுகள் அனைத்தும் பிரதமர் மீது திணிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.
ஏற்கனவே ரணிலைப் போல ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட என்னாலும் முடியும் என மகிந்த தெரிவித்திருந்தமையும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.
எவ்வாறெனினும் ஆட்சிக்கும், பிரதமருக்கும் அடிக்கும் அபாய மணியாகவே இந்த பிரச்சினை இருக்கப்போகின்றது, அதனால் பல மோசமான விளைவுகள் ஏற்படுத்தப்படும் என்றே அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.