வெள்ளி, 9 டிசம்பர், 2016

பஞ்ச பாண்டவர்களில் சகாதேவன் முக்காலமும் அறிந்தது எப்படி? சூதாட ஏன் ஒப்புக்கொண்டார் என்ற கேள்விக்கு இதுவே விடை!



பாண்டவ சகோதரர்களில் அனைவருக்கும் இளையவனான சகாதேவன், முக்காலமும் அறிந்த மிகப்பெரிய சோதிட நிபுணனாக சிறப்புப் பெற்றவன் ஆவான். அவனுக்கு எப்படி இந்த அறிவு கிடைத்தது என்று பார்க்கலாம்.
பாண்டு உயிர் பிரியும் தருணத்தில் மகன்கள் ஐவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் , மாறாகப் பிய்த்து தின்று விடும்படியும் , அப்படிச் செய்தால் முக்காலமும் உணரும் ஆற்றல் கிடைக்கும் என்றும் சொல்லி விட்டு உயிர் துறந்தான்.
பாண்டவர்களும் அதையே செய்ய திட்டமிடும் போது, அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார். விஷயத்தை கேட்டவுடன் பாண்டவர்களை திட்டுகிறார்.
‘’சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகிவிட்டதென்றால் , உங்களுக்கு என்ன ஆனது? யாராவது பிணத்தை தின்பார்களா?,’’ எனக் கண்டித்த கிருஷ்ணன், விறகு எடுத்து வந்து, தந்தையை தகனம் செய்வோம் என்று பாண்டவர்களை அழைத்துச்செல்கிறார்.
எனினும், பாண்டுவின் சடலத்தை மிருகங்கள் இழுத்துச் சென்றுவிடாமல் இருப்பதற்காக, சகாதேவனை மட்டும் காவலுக்கு விட்டுச் சென்றனர்.
அவர்கள் அப்பால் போனவுடன் சகாதேவன் தன் தந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல், அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்றுவிட்டான்.
உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும் சக்தி கிடைக்கிறது. விறகுகளை கஷ்டப்பட்டு தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளை கீழே போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள்.
கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையை தூக்கி வருகிறார். ஆனால் விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது.
அது மற்றவர்கள் கண்களுக்குதெரியவில்லை. சகாதேவனுக்கு மட்டும்தெரிகிறது. கிருஷ்ணரும் மிக களைப்படைந்தவர் போல ‘ஸ்ஸ்ஸப்பா’, என்று விறகை கீழே போட்டுவிட்டு அமர்கிறார்.
அவரருகில் சென்ற சகாதேவன், ‘’கண்ணா. எல்லோரும்விறகை சுமந்துவந்தார்கள். அவர்கள் களைப்படைவது நியாயம். உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்துதானே வந்தது. நீ ஏன் களைத்தது போல நடிக்கிறாய்,’’ என்று கேட்கிறான்.
உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கிவிடுகிறது. சகாதேவனை தனியே அழைத்துச் செல்லும் அவர் கேட்க ,சகாதேவன் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கிறான்.
எதிர்காலம் தேவ ரகசியம் என்றும், இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம் என்றும் கிருஷ்ணர் கூறுகிறார்.
தனக்குத்தெரிந்த விஷயங்களை எப்போதும் , எவரிடமும் சொல்லக்கூடாது என்று சத்தியமும் வாங்கிக் கொள்கிறார்.
சகாதேவன் தன் வாக்கை இறுதி வரை காப்பாற்றுகிறான்.
ஒரே ஒருமுறை மட்டும் யுதிஷ்டிரர் மிகவும் வற்புறுத்திக்கேட்டதால் உங்களால் நம் குலம் அழியும் என்ற ஒரு உண்மையை மட்டும் சொல்கிறான்.
மனம் வருந்தும் அவர் , தன்னால் தன் குலம் அழிய நான் விடமாட்டேன் என்றும் இன்று முதல் யாரிடமும் மோதுவதில்லை என்றும் யார் கோரிக்கையையும் மறுப்பதில்லை என்றும் முடிவு செய்கிறார்.
அதன்காரணமாகவே சூதாட துரியோதனன் விடுத்த அழைப்பை நிராகரிக்காமல் பங்கேற்கிறார்.
சகல தர்மமும் அறிந்த தர்மர் என்று அழைக்கப்பட்ட யுதிஷ்டிரர் சூதாட ஏன் ஒப்புக்கொண்டார் என்ற கேள்விக்கும் இதுவே விடை.
மேலும், முக்காலமும் தெரிந்திருந்தால், போரில் என்ன நடக்கும் என்று உடன் பிறந்தவர்களிடம் ஏன் செல்லவில்லை என்ற கேள்விக்கு, கண்ணன் வாங்கிய சத்தியம்தான் காரணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள