சம்பந்தனுக்கு வீ. ஆனந்தசங்கரி எழுதிய நீண்ட கடிதம்!
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி எதிர்க்கட்சித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனுக்கு கடிதமொன்றை நேற்று அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில்,
நான் எழுதியிருந்த கடிதங்களில் இது ஐந்தாவதாகும். எனது முன்னைய கடிதத்திற்கு உங்களுடைய அமைதி எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.
பொதுவாக எமது மக்களையும் குறிப்பாக இலங்கை அரசாங்கத்தையும் உங்களையும் பாதிக்கின்ற மிக முக்கியமானதென்பதை உங்களால் கவனத்திற்கெடுக்கப்படவில்லை.
2004ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள், அவர்கள் தான் தமிழ் மக்களின் தேசிய தலைவர்கள் என்றும் வெளியிட்டமை பெரும் தவறென இப்போதாவது உணர்வீர்களென நம்புகின்றேன்.
அத் தேர்தல் விஞ்ஞாபனம் பாராளுமன்றத்தில் சில ஆசனங்களை பெற உதவியிருக்கலாம். ஆனால் முழு தமிழ் சமூகத்திற்கும் அதனால் ஏற்பட்ட இழப்புக்கள் கற்பனையில் அடங்கா.
நீங்கள் ஒரு சிரேஷ்ட சட்டத்தரணி என்பதால் இதன் தார்ப்பரியத்தை உணர்ந்திருக்க வேண்டும்.
வேறு எவரிடமிருந்தும் இது சம்பந்தமாக ஆலோசனையை பெற்றிருக்கக்கூடாது. தாம் ஒரு பெரும் அனர்த்தத்தை எதிர்நோக்கி அழைத்துச் செல்லப்படுகின்றோம் என்பதை உணராது நாடும் மக்களும் நன்கு உறக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
எனது முன்னைய கடிதத்தில் தங்களின் சகபாடியொருவர் ஒட்டாவா சமஷ்டி நீதிமன்றத்தின் தீர்ப்பை அறியாமையால் மிகச்சாதாரணமாக எடுத்துக்கொண்டதை சுட்டிக்காட்டியிருந்தேன்.
இத் தீர்ப்பை நான் பாரதூரமாகவே கருதுகிறேன். ஏனெனில் இத் தீர்ப்புத்தான் தொடர்ந்து வரவிருக்கும் மகிழ்ச்சி தாராத சம்பவங்களுக்கு ஆரம்பமாக அமைகிறது.
அது மேலும் சர்வதேச மட்டத்தில் பல்வேறு நாடுகளில் நடக்கின்ற அகதி அந்தஸ்த்து கோரிக்கை வழக்குகளை பாதிக்கும் என்பது மட்டுமல்ல ஏனையோருக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெரும் கஸ்டத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றேன்.
தயவு செய்து விழித்தெழுந்து உங்களை சுற்றி என்ன நடக்கின்றதென்பதை பாருங்கள்.
தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்றங்களில் பதவி வகித்தவர்கள் போட்டியிட உள்ளவர்கள் அனைவரும் தமது உறுப்பினர் அங்கத்துவத்தை இலங்கை தமிழரசு கட்சியிலிருந்தும், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்தும் வாபஸ் பெறுமாறு எனது ஆலோசனையையாக தெரிவிக்கிறேன்.
இந்த அமைப்புக்கள்; விரைவில் சர்வதேசத்தினால் பயங்கரவாத அமைப்புக்களென பிரகடனப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு.
திரு. சம்பந்தன் அவர்களே, தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த மோசமான அறிக்கையை வெளியிடும்போது மறைமுகமாக விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுக்கு ஈடுகொடுக்க வேண்டிவருமென என்றாவது உணர்ந்தீர்களா? நடந்தவை ஒருபுறம் இருக்க இந்த பிரகடனம் செய்யப்பட்ட நாளிலிருந்து விடுதலைப் புலிகள் இறுதியுத்தத்தில் மே 18, 2009 தோற்கடிக்கப்படும் வரை ஏறக்குறைய ஐநூறுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டும் ஆயிரத்து ஐநூற்றுக்கு மேலானோர் காயப்பட்டும் உள்ளனர்.
நான் இதனை ஒரு வேடிக்கையாக கருதவில்லை. ஆனால் இதனையொரு பாராதூரமான விடயமாக கருதும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அதிகமானவர்கள் தெரிவாகியிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியடைந்தவர்களே.
தயவு செய்து இவர்கள் அனைவரும் இலங்கை தமிழரசு கட்சியில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அங்கத்துவம் பெற்றவர்களாவர்.
முன்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் அடையாளத்தையும் தன் நாணயத்தையும் மிக வேகமாக இழந்து வருவதால் அதனை கைவிடும்படி கேட்டிருந்தேன்.
சாத்வீக கொள்கைக்கு கட்டுப்பட்டிருந்த இலங்கை தமிழரசு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவை என்றோ ஒருநாள் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படும் என்று எண்ணிய எனது கணிப்பு கனடா சமஷ்டி நீதிமன்றத்தின் தீர்ப்பினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேறு நாட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு எமது நீதிமன்றங்களை கட்டுப்படுத்தாது எனக் கூறுவீர்கள் என்று எனக்குத் தெரியும்.
ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் இத்தீர்ப்பு பொருத்தமாக இருந்தால் எந்த வழக்கிலும் எந்த நீதிமன்றத்திலும் எந்த நாட்டிலும் உதாரணமாக உறுதிப்படுத்தப் பிரயோகிக்கப்படலாம்.
உங்களுக்கு விருப்பம் இல்லாது போனாலும் சில விடயங்கள் உங்களுடைய கவனத்திற்கு கொண்டுவருவதற்கு வருந்துகிறேன்.
60 ஆண்டுகளுக்கு மேல் நான் அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தும் உங்களைப் போன்று கஷ்டங்கள் எதுவுமில்லாமல் பாராளுமன்றத்துக்கு செல்லும் பாக்கியசாலியல்ல.
தந்தை செல்வா இறந்து மிகக் குறுகிய காலத்திற்குள் 1977ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு மிக அதிகப்படியான வாக்குகளால் பெரும் வெற்றியீட்டினீர்கள்.
ஆனால் நான் கிளிநொச்சித் தொகுதியில் நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்துசென்று மக்களை சந்திப்பதற்காக சுற்றித்திரிந்து பாராளுமன்றம் செல்வதற்கு பத்து ஆண்டுகளாகின.
ஆகையினால் பாராளுமன்ற பதவி என்னால் வருந்தி பெற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் உங்களுக்கு ஓர் ஆசீர்வாதம். தற்போது அப்பதவியை நீங்கள் நினைப்பதிலும், பார்க்க கூடுதலான பெறுமதியாக நினைக்கின்றேன்.
மக்களை ஒன்றிணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் கீழ் கொண்டுவர நாம் எந்தளவுக்கு கஷ்டப்பட்டோம் என்பது பலருக்குத் தெரியாது.
இந்த பணிக்கு உங்களுடைய பங்களிப்பு எதிலும் கிடைக்கவில்லை. ஆனால் நாம் அதனை அடைய எமக்கு பல ஆண்டுகளும் பல தியாகங்களும் செய்ய வேண்டியிருந்தன.
பேராசை பிடித்த அரசியல்வாதிகள் சிலரின் உதவியோடு தமிழர் விடுதலைக் கூட்டணியை சிதைக்க முக்கிய காரணியாக நீங்கள் இருந்தீர்கள்.
தமிழர் விடுதலைக் கூட்டணி எவ்வாறு உருவாகியது என்பதை நீங்கள் அறிய வேண்டும்.
தலைசிறந்த பெரும் தமிழ் தலைவர்களாகிய கௌரவ ஜீ.ஜீ.பொன்னம்பலம், கௌரவ எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஆகியோரால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்பட்ட சிறந்த அந்தக் கட்சிக்கு நீங்கள் செய்த தீங்கை எண்ணி வருந்துகிறேன்.
நீங்கள் உங்கள் கௌரவத்தை இப்பெரும் கட்சியை ஆரம்பித்தவர்களுக்கே வழங்கியிருக்க வேண்டும். ஆனால் உங்களை அரசியலுக்கு கொண்டு வந்தவர்களையே நீங்கள் அவமதித்துள்ளீர்கள்.
இவ்விரு பெருந்தலைவர்களும் மலையகத் தமிழர் தலைவர் கௌரவ எஸ்.தொண்டமான் அவர்களை இணைத்துக்கொண்டதன் பின்னர் இம் மூவரும் முக்கூட்டுத் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
தமிழரசு கட்சியையோ தமிழ் காங்கிரஸ் கட்சியையோ மீளப் புதுப்பிக்கும் எண்ணம் சம்பந்தப்பட்ட அவர்களுக்கு இருக்கவில்லை.
காரணம் தமிழர் விடுதலைக் கூட்டணிதான் தமிழ் மக்களின் பாதுகாவலனாகவும் அவர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தலை கொடுக்க வேண்டும் என்றே தீர்மானித்திருந்தனர்.
ஒட்டாவா சமஷ்டி நீதிமன்றத்தின் தீர்ப்பின் 37வது பந்தியின் பொருத்தமான பகுதியை கீழே தருகின்றேன்.
'தமிழ் தேசிய கூட்டமைப்பு எல்லாத் தமிழர்களையும் இலங்கை தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் ஏனெனில் அது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குவதால்தான்.
நான் கவனத்தில் எடுப்பது திரு.சம்பந்தன், அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியை விட்டு விலகிச் சென்றது தமிழ் தேசிய கூட்டமைப்பையும் இலங்கை தமிழரசு கட்சியையும் வழி நடத்துவதற்கே.
ஏனெனில் தமிழர் விடுதலைக் கூட்டணி விடுதலைப் புலிகளுக்கு தீவிரமாக ஆதரவு வழங்க தயக்கம் காட்டியமையாலேயே'
திரு.சம்பந்தன் அவர்களே இதன் காரணமாகத்தான் நீங்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்தீர்களா? அல்லது கூடுதலாக சில ஆசனங்களை உங்கள் கட்சிக்கு பெற வேண்டும் என்பதற்காகவா?.
உங்களுடைய நடவடிக்கையால் 2004ம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஏறக்குறைய 12 ஆண்டுகள் பாராளுமன்றத்தின் ஊடாக எனது நேர்மையான, விசுவாசமான சேவைகளை, விடுதலைப்புலிகளை தவறாக வழிநடத்தி மக்களுக்கு கிடைக்காது செய்தீர்கள்.
இந்த காலகட்டத்தில் மக்களுக்கு ஆக்கபூர்வமாக எவற்றையும் செய்யாது காலத்தை வீணடித்தீர்கள்.
மக்களை பாதுகாப்பதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தும் அவைகளை புறந்தள்ளி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் மரணத்திற்கும் பகுதியாகவோ முற்றாகவோ பொறுப்பேற்க வேண்டிய நிலைமைக்கும் ஆளாகியுள்ளீர்கள்.
இறுதியாக இந்த விடயத்தை மிக சிறிய விடயமாக கருதி புறக்கணித்து விடாதீர்கள் உடன் நடவடிக்கையெடுக்க தவறுவீர்களேயானால் உங்களுடைய எதிர்கட்சித்தலைவர் பதவி பறிபோவதற்கு வாய்ப்பளிப்பதோடு தேசிய அரசாங்கமும் மிகுந்த நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார்.
எனது பணிவான ஒரு வேண்டுகோள் திரு வீ ஆனந்த சங்கரி ஐயாவுக்கு இந்த
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இதை கழட்டி விட்டுட்டு கடிதம் எழுதுங்கோ
nanri tamilwin.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள