வெண்பாவுக்கும் படத்திற்கும் சத்தியமா சம்பந்தமில்லை, ரஜனியின் ஸ்டைல்போல் இருந்தது எடுத்துப் போட்டேன்.
இப்புவிமேல் ஓட்டில் இறங்கிய நாள்-ஒப்பிவந்து
வாழ்த்திவரித்த சுற்றம் வருந்தும்படி குடியை
வீழ்த்தி விடப் பெற்றேன் விசர்!
அல்லும் பகலும் அநியாய வன்செயல்கள்
கொள்ளும் அயல்வீட்டுத் தோழர் குழாம்-சொல்லும்
படி ஆடிப் பெற்ற பழிபாவம் தாங்க
முடியாது வேண்டாம் இம் மூச்சு.
நாட்டைக் கெடுக்கும் நடத்தைகளால் ஆட்கொண்ட
கூட்டைச் சுமக்குங் கொடியோனின் -சீட்டைக்
கிழித்துக் நரகக் கிடங்கிற்குள் தள்ளா(து)
ஒழித்துள்ள கூற்றே....உணர்!..
பொய்யும் களவும் புரட்டும் அழுக்காறும்
செய்யும் எனது சிரந்தனைக் -கொய்யும்
திருநாட் பதிவேட்டைத் தேடித் திருத்தும்
கருமத்தைச் செய்வாய் கடிது.
கள்ளனைய கன்னியரின் கற்பார் மனஉணர்வை
மண்ணாக்கி விட்டே மறுதலித்த -என்னுயிரைக்
கொள்ளாத கூற்றம் கொடுங்குற்ற மென்றுலகம்
சொல்லாதோ? வீசாய் சுருக்கு....
சூது சுரண்டல் சுகமற்ற வாதுரைத்தல்
பாதகரின் பக்கம் பரிந்து நிற்றல் -வேதனையைக்
கூட்டிப் பெருக்குங் குடிப் பழக்கம் இத்தனையும்
கேட்டுக் கொள் என்றன் மெய்க் கீர்த்தி!
ஊரைக்க முடியா உலகத்தின் தீமைச்
சரக்கெல்லாம் சேர்ந்த சரிதம் -ஒறுக்குதின்(று)
ஒட்டிவா கூற்றே உமக்கென் குறைக் கதையைக்
பாடுகின்றேன் இல்லைப் பயம் ....
(வேறு)
நடை புதிது ...கதை புதிது ...நயந்துரைக்கும் யாப்பின் தொடை புதிது ....
இப்பா, இது வரையும் பிரசுரமோ ஒலிபரப்போ பெற்றதில்லை ..உண்மை !
தடை எதுவும் விதியாமல் தங்கள் கவிதைப் போட்டிப் படையலுக்குள்
சேர்த்தருள்க; பணிந்துரைத்தேன்.
வணக்கம்.
இவ்வண்ணம்,
இடையீடு இல்லாமற் கவிபுனையுந் அடியேன் ...
இராஜ பாரதி.
(எனது குருவின் கவிதை அவர் எழுதிய ஒரு கையெழுத்துப் பிரதியின் பிரதி வடிவம்.)
உண்மைதான் பாட்டிற்கும்,படத்திற்கும் சம்பந்தமே இல்லை.
பதிலளிநீக்கு