செவ்வாய், 18 ஜனவரி, 2011

வெள்ள நிவாரணம் படும் பாடு.

வெள்ள  நிவாரணம்  படும்  பாடு. எனது பிரதேசத்தில்,வெள்ளம் வந்து வடிந்து,அது வந்த
சுவடும்கூட அழிந்து மறைய ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள் பட்ட பாடு,பரமசிவனால் கூடப் பார்க்க முடியாது.உடுத்த  உடையுடன்,எடுத்த பையுடனும்,ஓடித்தப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன்,வீட்டைக் கூடத் திரும்பிப் பார்க்காமல்,வீதிக்கு வந்தவர்கள்தான் இந்த மக்கள்.சுனாமி கொடுத்த அனுபவங்கள் பின்னால்  விரட்ட,சொத்துச் சுகங்கள் தேவையில்லை,உயிர் தப்பினால் போதும். என்ற எண்ணத்தில்,தங்கள் அன்றாடத் தேவைக்குத் தேவையான எதையும் கூடக் கவனியாமல்,தற் காலிக நிவாரண முகாம்களுக்குள் காலடிஎடுத்து வைத்தவர்கள் இவர்கள்.இவர்களின் நிலைமை எப்படியிருக்கும் என்பதை நான் விபரிக்கத் தேவையில்லை.

நிவாரணம்,பத்திரிகைகளிலும்,வானொலிகளிலும்,தொலைக் காட்சிகளிலும்.வெகு 
பிரமாதமாக வழங்கப்படுகிறது.பாக்கிஸ்தான் வழங்கியது,சீன வழங்கியது,இந்தியா 
வழங்கியது,இப்படி பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது.சமைத்த உணவு வழங்கியதுடன்,பாடசாலைகளில் தங்கியிருந்தவர்களின் நிவாரணம் முடிந்தது,என்பதை 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  ஒருவர்,மனவருத்தத்துடன் அறியத் தந்தபோது,மனதுக்கு 
வெகு கஷ்டமாகத்தான் இருந்தது.

எனது நண்பர் ஒருவர்,கிராம அபிவிருத்தி நிறுவனம் ஒன்றில்,பொறுப்பான பதவியிலுள்ளார்.இவர் இரவு பகலாக கொப்பியும்,பென்னுமாக,அலைந்து திரிந்தார்,
என்ன விஷயம்,ஏதாவது கவிதை கட்டுரை எழுதுறீங்களா? என்று கேட்டேன்.இல்ல 
நமது பகுதிக்கு,வெள்ள நிவாரணமாக,ஒரு தொகைப் பணம் கிடைத்துள்ளது,அதை எப்படி 
வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு, பகிர்ந்தளிப்பது,என்ன,சாமான் வாங்கிக்
கொடுக்கலாம்.என்று தலையை பிய்த்துக்கொண்டு,திரிவதாகாவும்,எல்லோருக்கும் 
நிவாரணம் சரியாகக் கொடுத்து முடிக்கும்வரை தனக்குப் பெரிய மன உளச்சலாக,
இருப்பதாகவும்,சொன்னார்.

இன்று காலை,அவரைக்கண்டேன்,என்ன, எங்கே,போகிறீர்கள் என்று கேட்டேன்?
சங்கத்தால் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டிருப்பதாகவும.அந்தக் கூட்டத்திற்கு,தன்னையும் 
கலந்து கொள்ளுமாறு,அவசர அழைப்பு வந்ததாகவும்,துண்டைக்காணோம் துணியைக்காணோம். என்று அரக்கப்பரக்க ஓடிக்கொண்டிருந்தார்.நானும்,அக்கம்,பக்கம் 
உள்ளவர்களிடம்,நாளை,அல்லது,மறு நாள்,எல்லோருக்கும் வெள்ள நிவாரணம் 
கிடைக்கும், என்று உசுப்பேற்றி விட்டு விட்டேன்.அனைவரும் நியாயமான எதிர் பார்ப்புகளுடன் காத்திருந்தோம்.நேரம் ஆக ஆக,எதிர்பாப்புகளும் கூடியது.

நேரம் மாலை ஏழு மணியைத்  தாண்டியது.எல்லோரும் பொறுமையைத் தாண்டி,அதற்கு
அப்பாலும் சென்று விட்டார்கள்.நண்பரின் தலை தெரியத் தொடங்கியதும்,எல்லோர் முகங்களிலும் ஒரு சந்தோசம்,ஒரு ஆர்வம்.கற்பனை கலந்த ஒரு கனவு.நண்பர் நெருங்கி
வந்துவிட்டார்,நண்பரின் முகத்தையும்,அவர் என்ன சொல்லப் போகின்றார் என்பதின் எதிர் பார்ப்பு,எல்லோர் முகங்களிலும் தெரிந்தது.

நண்பர் சுரமற்ற   குரலில்,சொல்லத் தொடங்கினார்,நிவாரணம் வழங்க வந்த பணம்,
பெரிய அரசியல் வாதியின் தேவைக்குப் பயன் படுத்த வேண்டியுள்ளதாம்,நிவாரணம் நாங்கள்,வழங்கியதாகவும்,நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டதாகவும்,கையெழுத்து வைத்துத் தரும்படி,அரச ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளதாகவும்,நண்பர் நடந்தவைகளை
தொங்கிய முகத்துடன் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.   



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள