ஞாயிறு, 26 டிசம்பர், 2010

.இதயத்தைவிட்டகலாத ஈழத்துப் பூராடனார்

இதயத்தைவிட்டகலாத ஈழத்துப் பூராடனார் 
துள்ளுறாலுந் தேனிறாலும் தோகையர்தம் துவரிறாலும்
     அள்ளுசுவை மயக்கினிலே அகப்பொருளின் சிறப்போங்கும் 
விள்ளுதமிழ் தோழ் வலியார் வீரமதிற் புரமொளிரும்
வெள்ளமெனக் கவிப்பாடி விரிநிலமார் இருதிணையே.
ஈழத்துப் பூராடனார்.        
(மட்டக்களப்பு மாநிலத்தின் வளம் -02 -11 -1991 )


                                                    
                                   இலக்கிய மணி திரு.சாமுவேல் கதிர்காமத்தம்பி செல்வராசகோபால்.
                                                           (13.12.1928 -- 20.12.2010)

மீன் பாடும் தேனாட்டின்-இன்பத்
தேன்பாயத் தமிழ் யாத்த,
வானுயர் பெருமை கொண்ட -எங்கள்
தேனூர் பூராடன் புகழ் வாழ்கவே.

காலத்தின் கட்டாயம் உன்னை விரட்டினாலும்
கோலத்தைக் கொண்ட கொள்கையாய்க் கொண்டு
ஞாலத்தைத் திரும்பவைத்த தெய்வத் தமிழ்மகனே,-தமிழ்ப்
 பாலத்தைத்  திறந்துவைத்துப் பரலோகம் சென்றாயோ?

இங்கிருந்தாலும் இப்படி இந்தச்சேவை செய்யமுடியாது -ஆனாலும்
அங்கிருந்து தமிழ் அவனிக்கு ஆற்றியது பல்லாயிரம்
எங்கிருந்தாலும் இன்பத்தமிழ், உன் உயிர் மூச்சு!--என்றும்
மங்காது உனது புகழ், மறவாது உனது தமிழ்ப் பேச்சு!

தித்திக்கும் இன்பத்தமிழ் இணைந்திருக்க --உலகின்
எத்திக்கும் யுன் புகழ் பரந்திருக்க
பக்திக்கு தமிழ் மக்கள் பரந்திருக்க --ஜீவ
முத்திக்கு எங்கு சென்று நீ முயன்றாய்?

வார்த்தைகளை வளைக்க முடியவில்லை யுன் --தமிழ்ப்
போர்த் துடிப்பை மதிக்க முடியவில்லை
யார் நினைத்தார் இம் முடிவை --பாரில்
மார்தட்டி வாழ வழி வகுத்தவனே. !

நான் ஆரம்பப் பாடசாலையில் (மட் /தேற்றாத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன்
பாடசாலையில்)முதலாம் வகுப்பிருந்து ஐந்தாம் வகுப்புவரை படித்த நேரம்,1962 -1966 எனக்கு படிப்பித்த, வகுப்பாசிரியராக இருந்தவர்களில் திருமதி பசுபதி செல்வராசகோபால் அவர்களும் ஒருவர். அத்துடன் அவரது கடைசி மகன் ரிச்சட் சந்திரா எனது வகுப்பில் தான் படித்திருந்தார். அந்நாளில் அவர்களது வீட்டில்,மனோகரா அச்சகம் இருந்தது.அங்கு
அச்சடிக்கப்பட்ட "சாந்தி மார்க்கம்" ஜீவா பிரசுரம் என்ற புத்தகத்தின் உறை இந்த ரிச்சட் சந்திரா என்பவரால் பாடசாலையில் படிக்கும் அவரது நண்பர்களுக்கு வழங்கப்படும இவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு மனோகரா அச்சகத்திற்க்குச் சென்றதுண்டு,அந்
நேரம் அச்சு இயந்திரங்களைப் பார்த்து வியந்ததுண்டு. இன்றும் கல்முனைக்குப் போகும்போது அந்த இடத்தைப் பார்த்து பெருமூச்சு விடுவதுடன்,பசுபதி அக்காவையும்
நினைப்பதுண்டு. தேற்றாத்தீவில் ஆரம்பக்கல்வியை அனைவருக்கும் ஆரம்பித்து வைத்தவர் அல்லவா.

திரு செல்வராசகோபால் அவர்களை நான் அறிந்திருந்தாலும்,அந்த வயதில் அவர் பெருமை எனக்குத் தெரியவில்லை. பின்னர் அவரது மைத்துனர் திரு.பிரவுன் கிரகெரி
இராஜதுரை (இராஜ பாரதி) அவர்கள் மூலம்தான் இவர பெருமைகளைஅறியக்கூடியதாக இருந்தது.  காலங் கடந்த ஞானம் என்றாலும்,இவரது புத்தகங்களைத் தேடிப்பிடித்துப்
படிப்பதன் மூலம் அந்தக் குறை நிறைவேறியது. ஆனாலும் அவரது ஆக்கங்கள் மட்டக்களப்பு மக்கள் கைகளில் கிடைக்காமல், சூறவளியும், சுனாமியும் சதி செய்தது,
காலத்தின் கொடுமை.

இலக்கியமணியின் இனிய வாழ்க்கைக்குறிப்புகளை கீழ்வரும் இணைய தளங்களில்
சென்று பாருங்கள்.
  http://muelangovan.blogspot.com/2010/12/blog-post_941.html
http://www.palakani.com/showthread.php?tid=453

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள