சனி, 27 பிப்ரவரி, 2010

"வணக்கம்!,ஐயா!."


ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது நடந்த சம்பவம்,அன்று தபால் காரரின் வருகைக்குப் பிறகு ,பாடசாலை சிறிய மாற்றத்துக்குள்ளானது.எப்படி?என்பது,எங்களையாரும் கூப்பிட்டுச் சொல்லவில்லை.வழமையான வேலையொன்று நேரத்திற்கு முடியவில்லை.அந்தக் காலப் பகுதியில் பாடசாலைக்கு,ஐக்கிய அமெரிக்க குடியரசின் நன்கொடைஎன்று இடைவேளை நேரத்தில் பிஸ்கட் வழங்கப்படும்.அந்த பிஸ்கட் தலைமை ஆசிரியரின் வீட்டில்தான் இருக்கும்,அதை எடுத்து வருவதற்கும், பாடசாலையில் கொண்டுவந்து  பகிர்ந்து கொடுப்பதற்கும்,அந்தப் பாடசாலையின் பெரிய வகுப்பு,மாணவர்களை அழைப்பது வழக்கம்,அன்று அழைக்கப்படவில்லை.இது பெரிய வகுப்பு மாணவர்களுக்கு பெரிய சங்கடமாகப் போச்சு,பெரிய வகுப்பு மாணவர்கள்,எவ்வளவு முயற்சி எடுத்தும்,அதற்குப் பொறுப்பான தலைமை ஆசிரியரும்,அவர் மனைவியும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.இன்னும் இருபது நிமிடங்கள் இடை வேளை மணி  அடிப்பதற்கு,இருந்த வேளை, பாடம் நடத்திக் கொண்டிருந்த,கணித பாட ஆசிரியர் பெரிய வகுப்பு மாணவர்களின் அவதியை அறிந்து,வினவினார்,விஷயம் விளக்கத்திற்கு வந்ததும்.அவரே தலைமையாசிரியரிடம்,கதைத்துஅருகில் இருந்த,தலைமையாசிரியரின் வீட்டிற்குப் போய்,எடுத்து வந்து,பங்கிட்டு கொடுக்கவும்  சொன்னார். ஆனால்,தலைமை ஆசிரியரும் மனைவியும்,எதையோ பறிகொடுத்தவர்கள் மாதிரித்தான் காணப்பட்டார்கள்.வழமையாக பாடசாலை கலையும் நேரம் வந்தது,எல்லாம் வழமைபோல நடந்தாலும் தலைமை ஆசிரியருடைய முகத்திலும்,அவர் மனைவி முகத்திலும்,வழமைக்கு மாறாக வித்தியாசம் தெரிந்தது.

அடுத்த நாள் வழமைபோல்,பாடசாலைக்கு வந்தபோது,இரண்டாவது தலைமை ஆசிரியர் தான் அலுவல்களைக் கவனித்தார்.வழக்கம்போல் பிஸ்கட் எடுக்கச் சென்றபோதுதான்,உண்மை தெரிந்தது,தலைமை ஆசிரியருக்கு இடமாற்றம்,என்பது அதனால்தான் இந்த  களபேரம்.என்று.

இதுவரை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் எங்கள் பாடசாலையின் நிலைமையை,ஐந்தாம் வகுப்புத்தான் பெரிய வகுப்பு,நாங்கள் தான் பெரிய மாணவர்கள்.பாடசாலையில் மாற்றங்கள் நடந்தது,புதிய தலைமை ஆசிரியர் பாடசாலைக்கு வந்ததும்,ஒவ்வொரு வகுப்புக்கும் வந்து தன்னை அறிமுகப்படித்தி தனது வேலையை ஆரம்பித்தார்.அடுத்த நாள் காலையில் கடவுள் வணக்கம் முடிந்தவுடன்,முதன் முதலாக தலைமை ஆசிரியர் தனது பேச்சை ஆரம்பித்தார்.தினமும் காலையில் கடவுள் வணக்கம் முடிந்தவுடன் சிலநிமிடங்கள்,பாடசாலை ஒழுங்குகள் பற்றிக் கதைத்தார்.மாணவர்கள் ஆசிரியரைக் கண்டவுடன் வணக்கம் செலுத்துவது,பாடசாலைக்கு வரும்போது கடைப் பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறை,இப்படி பல விசயங்கள்,எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.அன்றிலிருந்து பாடசாலையில் ஒவ்வொரு ஆசிரியரும்,காலை வணக்கத்தின் பின் சில நிமிடங்கள்,நல்ல போதனைகள் உபதேசித்தார்கள்.

பாடசாலையில் சில முன்னேற்றங்களும்,பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் மாற்றங்கள் இடம்பெறத் தொடங்கியது.ஆசிரியர்களை கண்டால் "வணக்கம்!, ஐயா!'
சொல்வது,என்று நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக வளர்ச்சி கண்டோம்.தலைமை ஆசிரியர் காலை வணக்கத்தின் பின்னர் தான் வரும்போது இருந்த நிலைமைக்கும்,தற்போது மாணவர்களின் தகமையும்,திறமையும் அதிகரித்துள்ளதாகவும்,பெருமைப்பட்டார்.தன்னைக் காணும் எல்லா மாணவர்களும்,மாணவிகளும்,"வணக்கம் ஐயா!"சொல்வதாகவும்,சந்தோசப்பட்டார்,அத்துடன் நில்லாது,குறிப்பிட்ட ஒரு மாணவனைக்காட்டி, தான் இவரைக் கோயிலடியில் கண்டதாகவும்,இவர் தனக்கு மரியாதை செய்யவில்லைஎன்றும்,இனிமேல் அப்படி நடக்கக் கூடாது என்று புத்திமதியும்   கூறினார்.

வழமைபோல்,நாட்களும் பாடசாலையும் நடைபெற்றது,அன்று ஞாயிற்றுக் கிழமை தலைமை ஆசிரியர் சந்தைக்குச் சென்று சாமான்கள் வாங்குவதற்கு குறித்த மாணவனின்  வீட்டிற்கு எதிரில் உள்ள வீதியால் துவிச்சக்கர வண்டியில் போய்க்கொண்டிருக்கும் போது ,மாணவன் தலைமை ஆசிரியரைக் கண்டு "வணக்கம் ஐயா!'சொன்னான் தலைமை ஆசிரியர் கவனிக்கவில்லை,ஆசிரியர் சென்றுவிட்டார்.

மாணவன் நிலை தடுமாறிவிட்டான்.மீண்டும் ஆசிரியர் நம்மளைக் கேள்வி கேட்க வைத்து விட்டோமே என்று பதைபதைத்தான்.யோசிக்கத் தொடங்கினான்.திங்கட் கிழமை கடவுள் வாழ்த்தின் பின் நடக்கப்போவதை நினைத்து மனவருத்தப் பட்டான்.ஒருமுடிவுக்கு வந்தான் எப்படியும் இன்று தலைமை ஆசிரியருக்கு "வணக்கம், ஐயா! கூறியே ஆகுவது என்று முடிவெடுத்து செயலிலும் இறங்கத்தொடங்கினான்.தலைமை ஆசிரியர் வரும் வழியை ஆவலுடன் எதிர் நோக்கினான்.தலைமை ஆசிரியர் வருவதை அறிந்ததும்,செயல்படத் தொடங்கினான்.ஏற்கனவே தெரிவு செய்து வைத்திருந்த ,ஒரு அளவான முருங்கக் கட்டையை எடுத்து வீதியின் குறுக்கே போட்டு,ஓரத்தில் அவன் நின்று,தலைமை ஆசிரியர் அருகே வருமுன்னே,"வணக்கம்,ஐயா"என்றான்.தலைமை ஆசிரியர் பலத்த சிந்தனையுடன்,துவிச்சக்கர வண்டியில் வந்ததால்,தனக்கு முன்னால் நடந்த எதையும் கவனிக்கவில்லை,திடீரென்று சத்தம் வந்ததால் நிலை குலைந்து விட்டார்.மாணவனை உற்று நோக்கியதால் வீதியில் கிடந்த கட்டையின் மேல் துவிச்சக்கர வண்டியின்  முன் சக்கரம் ஏறி தலைமை ஆசிரியர்,ஸ்தலத்திலேயே விழுந்தார்,அவருடன் துவிச்சக்கர வண்டி,வாங்கிவந்த பொருட்கள் எல்லாம் சிதறி,அல்லோல கல்லோலம்.

அடுத்து வந்த திங்கட் கிழமை, காலை வணக்கத்தின் பின் தலைமை ஆசிரியர்,உரையாற்றவில்லை,விபத்தில் காயமடைந்து  ஆசுபத்திரியில் அனுமதிக்கப்பட்டதால்,இரண்டாவது தலைமை ஆசிரியரால் ஒரு வேண்டுகோளும் விடுக்கப் பட்டது,இனிமேல் பாடசாலை தவிர்ந்த,எந்த இடத்திலும் "வணக்கம்!,ஐயா."சொல்லக்கூடாது என்று.





























6 கருத்துகள்:

  1. வணக்கம் அய்யா...நான் தான் முதல் வணக்கம். நல்லா இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. எனது பாடசாலை நாட்களில் நடந்த உண்மைச் சம்பவம்,முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. தங்களின் வருகைக்கும்,பொன்னான கருத்துரைக்கும்,நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  4. நாங்கள் 5 வகுப்புவரை ஆசிரியர்களை வாத்தியார் எனவே விழித்தோம். ஆசிரியைகளை அக்கா என அழைத்தோம்.
    கட்டையைப் போட்டு; ஆசிரியரைக் கட்டுப் போட வைத்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கும்,புதிய உறவாக இணைந்தமைக்கும்,நன்றிகள்!

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துரைகள