நாற்பத்திரண்டில் நான் செய்த காதல்-சவூதி
நண்பர்களுக்கெல்லாம் நல்லதொரு பாடம்
எப்பொழுது விடியுமென்று ஏங்கி இருப்பேன்-நாளை
எந்த சட்டை போடுவதென்று எண்ணி இருப்பன்.
தொலை பேசிக்கரிகில் தொன்கியிருந்தேன்–போன
தொழிலையும் மறந்து தூங்காது இருந்தேன்
வந்ததே வசந்தம் வடிவாக என்று–வாகாக
வாய் நிறையப் பேசி வந்தவர்களை அறுத்தேன்
நித்திரை இழந்தேன் மன நிம்மதி இழந்தேன்-ஒரு
முத்தமொன்று பெறுவதற்காக மூச்சு விட மறந்தேன்
சித்திரமென்றேன் நீ சிரித்தால் தீபாவளி என்றேன்—எங்கும்
போவதென்றால் பத்திரமாய் போய்வா பாவாய் என்பேன்
கண்ணா என்றாள் கணப் பொழுதில்–நல்ல
கணவன் எனக்கு நீதான் என்றாள்
உண்ணும் உணவின் உருசி நீ என்றாள்—இந்த
உடலில் இருக்கும் உயிர்க் காற்று என்றாள்
பொன்னும் பொருளும் வேண்டாமென்றாள்-பெரிய
பொக்கிஷம் எனக்கு நீதான் என்றாள்
கண்ணும் கருத்தும் அவளாகிப் போனாள்—வந்த
கடமையை மறந்து நானும் அவலாகிப்போனேன்
நண்பருக்கு என்றால் நாலு பணம் நாநீயேன்-காதல்
நாயகியல்லவா நன்றாகத் தாரைவார்த்தேன்
சோப்பு என்ன? சுகந்தமான கிறிமென்ன?-பட்டு
சொகுசான துணி என்ன? விலை என்ன?
இருபதுஅல்லவா அவளது இளமை-ஆஹா
இன்னும் அலைக்கழித்தது அவளது இனிமை
நூறு இருநூறு ஆயிரமாகியது –நல்ல
நோயே இல்லாத என்னுடம்பு நூலாகியது
வைத்தியசாலையில் எனக்கு வைத்தியம் –நான்
வைத்திருந்த பணத்தால் பைத்தியம்
பிரஷர் ஏறி பேயாகக்கத்தி-இன்னும்
பிதற்றி நேனாம் பெரிதாக எதோ சொல்லி.
வைத்தியர் சொன்ன எதையும் கேட்கவில்லை-என்
சித்திரம் சொன்னது எல்லாம் கேட்டேன்.
சிகரட் குடிக்க வேண்டாமென்றால்-நீ
சீக்காக இருக்கக் கூடாதாம் என்றாள்
சோக்காக சொன்னதெல்லாம் கேட்டேன் -அவள்
சொல்லாமலே சில வாங்கியும் கொடுத்தேன்
கேக்குமா எந்தன் கேனப்பய மனம் –நல்லா
சொக்கிவிட்டேன் சுந்தரியிடம் சுகம் பெறாமலே
அன்பே! நீ இன்று போனால் --ஈழம்
அடுத்த பிளேனில் நான் விரைவேன்
என்னவாவோ இருந்தது எனக்கு –அதை
எண்ணியே சிந்தை கலைந்தது எனக்கு.
எங்களுக்காகவே கண்டுபிடிக்கப்பட்டது தொலைபேசி-என்று
இருவருக்கும் ஒரு பெரிய நினைப்பு
நேரமில்லை காலமில்லை காசுமில்லை–ஒரு
நிமிஷமும் அதற்கு நிம்மதியுமில்லை
கல்யாணம் வரை வந்து விட்டோம்-நல்ல
காலமும் சவுதியும் கை தரவில்லை
மார்கழி மாதமும் மாற்றவில்லை எங்களை-இரு
மனமொற்ற காதலை பிரிக்கவும் இல்லை
பெரிய திட்டங்கள்,பெரும் கனவுகள்–என்
பெண்சாதி பிள்ளைகளை மறந்தேன்
நான் உழைப்பேன் நன்றாகப் பார்ப்பேன்–அந்த
நல்லது நாலும் எனக்குத் தெரியும் என்றேன்
நல்லது சொல்ல வந்த நண்பர்களை அதட்டினேன்–எனக்கு
நன்மை செய்ய வந்தவர்களை நாயாக விரட்டினேன்
நாய் வாலை நிமித்தியவர்கள் யார்?-சவுதியில்
நானும் திருந்தவில்லை என்றால் பார்
நாளும் பொழுதும் நன்றாகத்தான் போனது-காதல்
நீளமாக நீண்டது நினைத்தாலே இனித்தது
இலங்கை விலாசங்கள் தெரு இலக்கங்கள் -வந்தால்
இப்படித்தான் அழைக்க வேண்டுமென்ற விளக்கங்கள்
சொல்லவே முடியாத சந்தோஷங்கள்-ஆனாலும்
சொல்லித் திரிய வேண்டிய சங்கோசங்கள்
புலரிக்கும் புதுப் புது வசனங்கள்–அதற்கு
புதுமையாக இருந்தது விமர்சனங்கள்
வீதியில் நான் நிற்கும்போது–வெகு
விரைவாக வந்ததொரு மகிழுந்து!
வந்த மகிழுந்தில் மகாராணி மையமிருந்தாள்-நான்
சிந்தை மகிழ்ந்து சிரித்து மிளிர்ந்தேன்
உள்ளே பார்த்தேன் என் உயிரையே-சிரித்து
அள்ளி வீசினாள் அம்பது கிலோ தங்கத்தை
எனக்குத் தெரியாமல் எங்கு இவள் போகிறாள்-வேறு
ஏதாவது அலுவலாக இருக்குமோ என்நெஞ்சம்
பொழுதும் முடிந்தது யெந்யோசனையும் தொடர்ந்தது–தொலை
பேசியும் பேசவில்லை போராட்டமும் நடந்தது
தொண்டையிலும் நாதமில்லை சொல்லி அழ-நடந்த
வண்டவாளத்தை வார்த்தையில் அள்ளி மாள
எதற்கும் நாம் எடுத்துப் பார்ப்போம்-அவள்
அங்கிருந்தால் அடுத்ததை பேசிப் பாப்போம்
துணிந்து யான் எடுத்து விட்டேன்–அங்கு
தூய உயிர் பேசவும் இல்லை
உரிமை அரபி உறுக்கிப் பேசினாள் –பெரிதாக
"இந்தா மீன் ?" என்று எரிந்து விழுந்தாள்
தலையில் அடித்து வைத்தேன் டெலிபோனை-உடன்
தலைவலி பிடித்து தலையும் சுழன்றது
விரைவில் கிடைத்தது விந்தையான மேசஜ்-பிள்ளை
விரைந்து விட்டாள் விமானத்தில் என்று
பேயறைந்தது என்பார்கள் சிலர்-எனக்கு
பிசாசு அறைந்தது போலிருந்தது.
நான் சவூதி அரேபியாவில் வேலை பார்த்தபோது , எனது அருமை நண்பர் ஒருவருக்கு கிடைத்த அனுபவம் இது. இன்னமும் அவர் அங்குதான் இருக்கின்றார்.வேலைக்கு போன இடத்தில் எங்கள் கண்முன்னால் நடந்த காவியம் என்பதால் தொகுத்து இருக்கிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.கடைசியில் அவள் கொடுத்த விலாசமே பொய் என்பதும் அவர் ஸ்ரீலங்கா போனபோதுதான் அறிந்து கொண்டார். சவூதி அரேபியா செல்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை பாடமாகவும் இருக்கும். குறிப்பாக வீட்டு சாரதியாக போவவர்களுக்கு. படம் வழமைபோல பொறக்கிப் போட்டதுதான். பிடித்து இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.பிடிக்கவில்லை என்றால் அதற்கும் பின்னூட்டம் இடுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள