வெள்ளி, 19 மே, 2017

தமிழன் என்றொரு இனமுண்டு!

தமிழன் என்றொரு இனமுண்டு
நாமக்கல் கவிஞர் 

தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அவனே மாந்தன் முதலேடு
அளித்தான் உலகப் பண்பாடு
ஒன்றே குலமெனும் உயர்வோடு
உரைத்தான் தெய்வம் ஒன்றென்று
யாதும் ஊரே என்றுரைத்தான்
யாவரும் கேளிர் என்றழைத்தான்
அறமே வாழ்வின் நெறியென்றான்
அருளே பொருளின் முதலென்றான்
அன்பின் வழியது உலகென்றான்
ஆசைப் பெருகின் அழிவென்றான்
ஒழுக்க வாழ்வே உயர்வென்றான்
அழுக்கா றின்றி வாழென்றான்
ஒன்று பட்டால் வாழ்வென்றான்
ஒற்றுமை இன்றேல் தாழ்வென்றான்
பணிதல் யார்க்கும் நன்றென்றான்
பகையே வாழ்வின் இருளென்றான்
சினமே உயிர்க்குப் பகையென்றான்
சீற்றம் தவிர்ப்பது சிறப்பென்றான்
இன்சொல் யார்க்கும் அணியென்றான்
இன்னா செய்தல் பழியென்றான்
வாய்மை வாழ்வின் நெறியென்றான்
தூய்மை வாழ்வின் விளக்கென்றான்
அமிழ்தின் இனிய பண்பெல்லாம்
அணியாய்க் கொண்ட தமிழன்தான்
தன்னை இழந்து வாழ்கின்றான்
தமிழை மறந்து அழிகின்றான்
ஆங்கில மொழியின் தாக்கத்தால்
ஆன்ற பெருமை இழக்கின்றான்
கற்றோர் கொண்ட கலக்கத்தால்
கல்விச் சிக்கல் எழுந்திங்கே
ஆங்கில வழியில் கற்றால்தான்
அறிவைப் பெறலாம் என்றவர்கள்
உலகைப் புரிந்து கொள்ளாமல்
உளறி வைத்தனர் மக்களிடம்
ஓங்கிய தமிழ்வழி இல்லாமல்
ஆங்கில மொழிவழிக் கல்வியினால்
ஈங்குநம் குழந்தைகள் இழந்தார்கள்
இயல்பாய் படைக்கும் ஆற்றலினை
கருத்தறி வில்லாக் கல்வியினால்
காரிருள் சூழ்ந்தது இம்மண்ணில்
படிப்பில் பதவியில் உயர்ந்தவர்கள்
பழக்கத் தாலே இம்மண்ணில்
படிக்கா தவரும் ஆங்கிலத்தின்
பிடிக்குள் ளானார் படிப்படியாய்.
ஆங்கில மொழியின் அடிமைகளாய்
ஆயினர்  தமிழர்  அதனாலே
வழக்குச் சொற்கள் பலயிழந்தோம்
வாழ்வின் நெறிகளும் மறந்துவிட்டோம்
தமிங்கில மக்களாய் வாழ்கின்றோம்
தமிழ்வழி மாறிச் செல்கின்றோம்.
இந்நிலை தடுத்து நிறுத்தோமேல்
எந்நிலை யாகும் இந்நாடு
மண்ணின் மக்கள் தமிழர்களாய்
மாறுவ தெப்போ திந்நாட்டில்.
தமிழைத் தமிழாய்ப் பேசும்நிலை
தழைப்ப தெப்போ திந்நாட்டில்
படிப்பில் பதவியில் உயர்ந்தவர்கள்
பழக்கம் மாறின் நிலைமாறும்
துறைகள் தோறும் தமிழாட்சி
தொடங்கின் நாட்டின் நிலைமாறும்
கல்வி மொழியும் தமிழாயின்
கடிதில் இம்மண் கதைமாறும்
கோயில் மொழியும் தமிழாயின்
குடிகள் மாறும் தமிழ்வழியில்
ஆயின் இவற்றைச் செய்வதற்கு
ஆரே யுள்ளார் இம்மண்ணில்
மக்கள் எழுச்சி பெறவேண்டும்
மண்ணில் மாற்றம் எழவேண்டும்
மக்கள் புரட்சி எழுமானால்
மாற்றம் விரைவில் உண்டாகும். 

வியாழன், 18 மே, 2017

“வாழை இலை"

“வாழை இலை"




அன்புடன் உச்சி
“வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே ... அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”
# புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் கோடு கிடையாதாம்..
இராமாயண காலத்தில் .... ஒரு முறை ராமன் சாப்பிடும்போது , அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம் . இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம் .
அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி ,வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு கோட்டைக் கிழித்தாராம் ராமன்.
ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும் , அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம் .
அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான் , இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம் .
வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,
சாப்பிடும் முன் ...
ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.
“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..? இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?”
சிம்பிள் ...
இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.
ஏன்..?
நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால் , இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!
சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?
உப்பு, ஊறுகாய், இனிப்பு .. இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது . கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !
சாதம் , காய் கறிகள் ... இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் . அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.
சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா ..?
இல்லை..!
இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது .
நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.
# அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது ...
எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..?
😀😃

புதன், 17 மே, 2017

55முதல் 65 வயதாகிவிட்டதா?

உங்களுக்கு 55முதல் 65 வயதாகிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!
உடனே மனது ஏற்காது. ஆனால் உன்மை.
நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.
போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை
ஆகவே சிக்கனமாக
இருக்காதீர்கள்.
செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.
உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!
எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்!
நாம் இறந்த பிறகு, நமது
உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ
உங்களுக்குத் தெரியப் போவதில்லை.
நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும்.
உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.
உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின்
வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும்.
அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை!
சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள்.
பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம்.
பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது!
ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு
அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது.
அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே
போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!
ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்?
ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
பணம், புகழ்,
சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும்
இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!
யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.
அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்.
நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி,
அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
மன மகிழ்ச்சிதான் ஆரோக்கியத்திற்கு அடிப்படை !
உற்சாகத்தோடு இருக்கும்போது நோய் நொடிகள் குணமாகும். அனுதினமும் உற்சாகத்தோடு இருப்பவர்களை நோய் நொடிகள் அண்டாது.
நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகள் உங்களை
வாழவைக்கும்!!
அதற்கு மேல் என்ன வேண்டும் சொல்லுங்கள்?
எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை நல்லவைகளாகவே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் மனைவி, மக்கள்,
நண்பர்கள் என்ற பெரிய வட்டம் உங்களுக்கு அதைக் கொடுக்கும். அவர்கள்தான் உங்களை இளைமையாகவும்,
அனைவரும் விரும்புபடியாகவும் வைத்துக்கொள்வார்கள்!!!!
வரும் நாட்கள் நலமாக இருக்க வாழ்த்துக்கள்!!!!!

செவ்வாய், 16 மே, 2017

சாரதிப் பயிற்சி உத்தியோகத்தருக்கான போட்டிப் பரீட்சை 2016/2017

சாரதிப் பயிற்சி உத்தியோகத்தருக்கான போட்டிப் பரீட்சை 2016/2017
மாதிரி வினா விடை


Image result for road signs in sri lanka

01.நீங்கள் ஒரு சந்தியை நெருங்குகிறீர்கள் சந்தியிலுள்ள சைகை விளக்குகள்
தொழிற்பட வில்லை?
எந்தச் சூழ்நிலையிலும்  (போக்கு வரத்து )வாகனத்தைநிறுத்துவற்கு தாயாராக இருக்க வேண்டும்

02.எந்த மூன்று இடங்களில் வாகனங்கள் தரித்து நிற்க்கக் கூடாது?
1.பேருந்து தரிப்பு நிலையம் ,2.வலது குறைந்தோர் தரிப்பு நிலையம் 3.மலை  மறைவு உள்ள வளைவுகளில்

03.நீங்கள் ஒருபக்கச் சாலையில் இடது பக்கமாக உங்கள் வாகனத்தைத் திருப்புகிறீர்கள்,அந்த வேளையில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய து  இதில்?
பாதசாரிகள்

04. காற்றழுத்தம் குறைந்த சக்கரங்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் இரண்டு?
எரிபொருள் பாவனை கூடல், சக்கரம்  தேய்தல் நிறுத்தம் தவறுதல்.

05.சாலைப்பரப்பில் ஏன் இடப்பெயர்கள் முன் கூட்டியே காட்ச்சிப் படுத்தப் படுகிறது?
உங்கள் பிரயாணத்திற்கு ஏற்ற வழிகளின் ஒழுங்குகளைச் சரியாகத் தீர்மானிப்பதற்கு

06.வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகள்  ஏன் குவிவாக வளைந்து காணப்படுகின்றது?
ஒரு பரந்த பார்வையை வெளிக்காட்டுவதற்காக

07.வீதிப் பாதுகாப்புக் குறித்த தேசிய சபையின் தலைவர் யார்?
டாக்டர் சிசிர கொத்தாக கொட 

08.மஞ்சள் நிற வீதிக் கடைவைகள் வெள்ளை  நிறமாக மாற்றப்படக் காரணம்?
பனிப்பொழிவுள்ள நாடுகளுக்கு ஏற்றவை மஞ்சள் நிற வீதிக்கடவைகள்.இலங்கையில் பனிப்பொழிவுகள் இல்லாதபடியால்.

09..வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்?
நிகால் சூரிய ஆராய்ச்சி

10.இலங்கையில் சாதாரண வாகனமொன்று சராசரியாக மணிக்கு எத்தனை கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கலாம்?
70 கிமீ

11.பின்பக்கச் சில்லு வழுக்கினால் நீர் கடடாயமாகச் செய்ய வேண்டியது?
எந்தப் பக்கம் வழுக்கியதோ அதற்கு எதிர்த் திசையை நோக்கி நகர்த்த வேண்டும்.

12..தேசிய போக்கு வரத்து ஆணைக்குழு.

மாகாணங்களுக்கிடையில்  போக்குவரத்து வழித்தட அனுமதிப் பத்திரம்
வழங்கல்.

பிரயாணிகள் போக்குவரத்தை உறுதிப்படுத்தல்.

பணம் அறவிடுதல்.

13..போக்குவரத்து சிவில் விமானப் போக்குவரத்து அமைசசர் ?
நிமல் சிறி பால சில்வா

14.08.04/04/2017ல்  தேசிய போக்குவாரத்துச் சட்ட மூலம் எதற்காகத் திருத்தப்
பட்டது?
வழித்தட அனுமதி பத்திரம் இல்லாமல் செலுத்தப்படும் பிரயாணிகள் வண்டிகளை தடை செய்வதற்காக 10000/=இருந்த தண்டத்   தொகை
200000/=மாக அதிகரிக்கப் பட்டது.

15..மாகாணங்களுக்குள்ளான பேருந்துப் பயணத்திற்கு வழித்தட அனுமதிப்
பத்திரம் வழங்குவது?
மாகாண பயணிகள் போக்கு வரத்து அதிகார சபை.

16.மாகாணத்தில் இருந்து வேறு மாகாணத்திற்கு வழித்தட அனுமதிப் பத்திரம்
வழங்குவது?
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு.

17.2009ஆம் ஆண்டின் மோட்டர் போக்குவரத்துத் திருத்தச் சட்டமூலம்
மோட்டார் வாகனங்களைப்  பதிவுசெய்தலும்,உடைமையில் வைத்திருத்தலும் பயன் படுத்தாலும்.

18.பழகுநர் அனுமதிப் பத்திரம் வைத்துள்ளவர் எத்தனை மாதங்களுக்குள் கிராமமான சாரதி அனுமதிப் பத்திரம் பெற விண்ணப்பிக்க வேண்டும்?
மூன்று மாதத்திற்கு மேல்.

19.பழகுநர் சாரதி  அனுமதி பத்திரம்,   கிரமமான  சாரதி அனுமதிப் பத்திரம்
பெற விண்ணப்பிக்கும்போது  விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டிய ஆவணம் எது?
மருத்துவச்  தகுதிச்  சான்றிதழ்


20.நீங்கள் ஒரு வழிப் பாதையால் சென்றுகொண்டு வலது பக்கம் வாகனத்தைத் திருப்புவதற்கு நீங்கள் எடுக்கும் வழிவகை என்ன?
வலது புற ஒழுங்கையைத் தெரிவு செய்யவேண்டும்


21.முதியோர் ஒருவர் செலுத்தும் வாகனமொன்றைப் பித்தொடர்கிறீர்கள்  நீங்கள் அவர் சம்பந்தமாக என்ன முடிவு செய்வீர்கள்?
வாலிபர்கள் போல் திடகாத்திரமாக,வேகமாக செயல் பட மாட்டார்கள்

22.கடுகதி பாதையில் பயணிக்க அனுமதிக்காத வாகனங்கள்?
டிராக்டர்,100 CC ற்கு குறைந்த மோட்டார் சைக்கிள் மிதி வண்டி முற்சக்கரவண்டி

23.பனி விழும் பிரதேசங்களில் உள்ள பாதைகளில் வாகனங்களைச் செலுத்தும்
போது சாரதி
சாதாரண நிலைமையை விட பத்து மடங்கு வாகன இடைவெளியைக் கொண்டதாக வைத்திருத்தல் வேண்டும்.

24.முதல் வாகன விபத்து ?
150 வருடங்களுக்கு முன் அயர்லாந்தில் ஒரு பெண்ணின் மோதலுடன் ஆரம்பமானது.

25.வாகன விபத்து  ஏற்படுவதற்கான காரணங்கள்?
வேகம்,பாதகமான கால நிலை,சாரதிகளின் கவலையீனம் வசதிகளற்ற பாதையமைப்பு, சாலை விதி மீறல்கள்.

26.ஒரு வழிப் பாதையில் பிரயாணிக்கும் நீங்கள் வலதுபக்க பாதைக்கு மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
வலதுபுற ஒழுங்கையைத் தெரிவு செய்ய வேண்டும்.

பின்புற சக்கரச் சறுக்கலைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?
அதை நோக்கி சமம் செய்ய வேண்டும்


27.ஒரு பாத சாரி வெள்ளைப் பிரம்பும் சிவப்புப் பட்டியும் அணிந்திருந்தாள்?
செவிடும் குருடும் உடையவர்.

28.சாலைகளில் மிருகங்களைக் கடக்கும்போது நினைவில் வைத்திருக்க வேண்டியவை?
போதியளவு இடைவெளிகளை அனுமதியுங்கள்.
வாகனத்தை மெதுவாகச் செலுத்திடுங்கள்.
எந்த வினாடியும் வாகனத்தை நிறுத்தத் தாயார் நிலையில்
இருங்கள்.

29.கிளச் எங்கு அமைந்துள்ளது?
பரிமாற்ரிக்கும் இயந்திரத்துக்கும் இடையில்


30.எந்த வகைப் பாதசாரிக் கடவை தானாக பாத சாரிகளை அடையாளம் கண்டு கொள்ளும்?
Puffin

31.உங்கள் வாகனத்தின் வானொலிப் பெட்டி திருடு போவதைத் தடுக்க?
பாதுகாப்புக் குறீயீட்டு வசதியுள்ளதை நிறுவவும்

32.ஒரு பாடசாலை ரோந்து நடவடிக்கையை எப்படி அறீவீர்கள்?
நிறுத்து,அடையாளாச் சைகை மூலம்.

33.மாநகர எல்லைக்கு அப்பால் ஒரு மோட்டார் காரினதும் மோட்டார் சைக்கி   ளினதும் வேகம் எவ்வளவு?
70 K M /

34.ஒரு முற்சக்கர வண்டியின் அதிகபட்ச வேகம்  எல்லா இடங்களிலும் ?
40KMPH

35.வைத்தியசாலை, பாடசாலை, நீதிமன்றம் இவைகளை நெருங்கும் போது
வாகனத்தின் வேகம் எத்தனை  km க்கு மேல் செலுத்தக் கூடாது?
30km

36.மோட்டார் வாகனப் பயிற்சியின் போது மாணவர்கள் விட்ட  தவறுகளை அவதானித்து
அதையே பாடத்தின் முக்கிய எடுகோள்களாகப் பாவித்து வாகன ஆசிரிய
ஆலோசகர் செயல்பட வேண்டும்.

37.வாகனத்தை தரித்து வைப்பதற்கு முதல் வாகனத்திலிருந்து வாகன ஆவணங்களைப் பத்திர படுத்த வேண்டும் வாகனத்  திருடர்களின் கைகளில் சிக்காமல்

38.ஒரு மாணவன் தங்களது ஒரு  கேள்விக்கு பகுதியளவான சரியான  விடையை
தந்தால் என்னசெய்ய வேண்டும்?
சரியான விடையை விளக்கி அந்த மாணவனையும் பாராட்ட வேண்டும் . இது
மாணவர்களின் நம்பிக்கையையும் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்தலையும் அதிகரிக்கும்.

39.மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் மிகவும் பிராகாசமான ஆடைகளை அணிவார்கள் இவர்களை இலகுவில் அடையாளம் காண பாதையை பயன்படுத்துபவர்கள் விசேடமாக சந்திகளில்


40.வாகனச் செலுத்தற் பயிற்சியின் போது வாகனத்தை பின்னால் செலுத்துவது
சம்பந்தமாக அதி கூடிய கவனம் செலுத்தல் ?
பின்னால் ,இரண்டு தோள்பட்டைப் பக்கமும்

41.பாட வேளையின் போது வாகன செலுத்தற் போதனையாளர்,மாணவர்களின்
முன்னேற்றத்திற்கு தான் அறிந்துவைத்துள்ளதை அவர்களுக்கு புரியும்
வகையிலும் பரீட்சசைக்கு உறுதுணையானவகையிலும் போதிக்க வேண்டும்.

42.பாதையில் வாகனச்  சாரதி தங்களை நோக்கி தனது வாகனத்தின் தலை விளக்கை உயிரூட்டிக்காட்டுவது?
தங்களது வருகையை அறிவிற்பதற்காக  


43.தலை விளக்குகள் பயன் படுத்துவதை சாரதி பயிற்சி மாணவர்கள் மனதில் பதியும்படி விளக்க வேண்டும்?
மற்ற சாரதி தான் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதை உணர்த்தல்.

44.எங்கிருந்து பாடத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதை மாணவர்களின் அறிவைவைத்தே தீர்மானிக்க வேண்டும்.அதற்கு  அவர்களின் அறிவுத் திறனை  அறிந்திருப்பது அவ சியம்.

45.வீதியால் வாகனத்தில் விரைந்து கொண்டிருக்கும் நீங்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்துவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?
பின் கண்ணாடி இரு சைட் கண்ணாடிகளையும் பார்க்கவேண்டும்

46.ஒரு மாணவனுக்கு உதவும் வகையில் நீங்கள் எவ்வாறு பயனுள்ள கருத்துக்களை வழங்க முடியும்?
பாட வேளையின் போது அவர்களின் முன்னேற்றத்தை அவர்களுக்கு அறிவிப்பதன் மூலம்.


47.உங்கள் வாகனத்தில் அளவுக்கு அதிகமான சுமைகளை ஏற்றுவதால்
பாதிக்கப்படுவது?
வாகனத்தைக் கையாளுதல்,வாயு வளையம்

48.கற்பித்தல் முறையாக  செயல் விளக்கம் கொடுத்துப் படிப்பித்தல் வளமையாகத் தொடர்ந்து வருகிறது
நடைமுறை மூலம் திறமைகளை ஒருங்கிணைத்தல்

49.நீங்கள் ஒரு வீதியில் இருந்து வெளியேறக் காத்திருக்கிறீர்கள் அவ் வேளையில் ஏன் மோட்டார் சைக்கிள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்?
மோட்டார் சைக்கிள் காரை விட ஒரு சிறிய வாகனம் சில நேரங்களில் கண்களுக்குத் தென்படுவதில்லை

50.உங்கள் வாகனம் அதிக எரிபொருள் பயன்படுத்தப் படுவதன் காரணம் தங்களது வாகனத்தின் வாயு வளையங்களில் குறைந்தளவு வாயு அழுத்தம்
காணப்படுவதனால்,

51.வாகனத்தின் சைகை காட்டிகள் தேவை முடிவில் சரியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும் ஏன்னெனில் ?
பாதையைப் பயன் படுத்தும் ஏனையவர்களை பிழையான முடிவுகளை
எடுப்பதற்கு தூண்டுகோலாக அமையும்,

52.ஒரு வாகனச் சாரதியாக, இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதில் எவ்விதம் உதவ முடியும்?
போக்கு வரத்தை முன் கூட்டியே திட்டமிடுவதால்.

53.பொதுவாக வாகனத்தின் விளக்குகள் நிறுத்தல் விளக்கு உட்பட எப்பொழுதுபரிசீலிக்கப் படவேண்டும்?

தினமும்.

54.ஒரு வீதியில் இருந்து பிரதான வீதிக்கு வாகனத்தை பின்புறமாகச் செலுத்திடுவதற்கு யாது செய்ய வேண்டும்?
ஒரு பொழுதும் செய்ய முடியாது.

55.மழை  அதிகமாகப் பெய்து கொண்டிருக்கும்பொழுது,சாதாரண காலநிலையில் இருந்ததைவிட   உங்களது வாகனத்திற்கும்  முன்னால்  செல்லும் வாகனத்திற்கும் எவ்வளவு இடைவெளி
ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்?
வழமையைவிட இரு மடங்கு


56.வாகனமொன்றை முந்துவதற்கு தவிர்த்துக் கொள்ள வேண்டிய முக்கிய இரு
சந்தர்ப்பங்கள்?
சந்தியை அண்மிக்கும் பொழுது, முன்னால் பாதை சரியாக   தெரியாமல்
இருக்கும்பொழுதும்

57.பாதையில் பனிப்பொழிவு இருக்கும் பொழுது உங்கள் கவனம்?  வாகனத்தின் செலுத்தற் சக்கரத்தை கூடிய கவனத்துடன் கையாள

58.வரிக்குதிரை( சீப்ரா) பாதசாரிக் கடவையில் நீங்கள் கடக்க முனைகையில் வயது போன மூதாட்டி கடப்பதற்கு காத்திருக்கிறாள் நீங்கள் என்ன செய்வீர்கள் ?

நிறுத்தி வழி  விடுவேன்

59.உங்கள் வாகனத்தின் இயந்திரத்தை (பிறேக்) நிறுத்தற் கருவியாகப் பயன் படுத்தலாம்?
குறைந்த  வேகமுள்ள  (lower gear)வேகமாற்றியை பாவிப்பதன் மூலம்

60.கட்டுக்கடங்காத காற்று வீசும்போது , வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை அண்மிக்கும் பொழுது, ஏன்  அதிகமான இடைவெளியை அனுமதிக்கிறீர்கள்?
காற்றினுடைய தாக்கத்தால் நான் செல்லுத்தும் பாதைக்குள் தள்ளப்படலாம்
 
61.1991ஆம்  ஆண்டின் 37ம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச்  சட்டத்த்தை,  போக்குவரத்து  சிவில் விமான சேவைகள் அமைச்சர்  2017,பெப்ரவரி 26ந் திகதியன்று பாராளுமன்றில்  திருத்தமொன்றைச் சமர்ப்பித்தார் எதற்க்கான  திருத்தம் ?
பேருந்து பயணத்தில் வழித்தட பத்திரம்  இல்லாத வண்டிகளின் தண்டப்பணம் 10,000/= ரூபாவாக இருந்ததை 200,000/=ஆகாத திருத்த

62.மின்கலத்தின் திரவ மட்டம் குறைந்து காணப்பட்டால் எதனை ஊற்றி சமன் செய்யப்பட்ட வேண்டும்?
காய்ச்சி வட்டி கட்டிய நீர்

63.ஒரு வண்டியின் பிரதானமான நான்கு பாகங்கள் எவை?
1.முண்டம்  11.செலுத்தல் தொகுதி 111. என்ஜின் 1v அடிச்சட்டப் பரல்

64..வாயு வளையங்களை ஏன் நல்ல நிலைமையில் வைத்திருக்க வேண்டும்.?
வண்டியின் பாதுகாப்பும் வண்டியிலுள்ளவர்களின் பாதுகாப்பும், தெருவில் செல்வோர்களின் பாதுகாப்பும் வாயு வளையங்களிலேயே தங்கியுள்ளது.

65..செலுத்தல் பகுதியிலிருந்து என்னை ஒளிகினால் என்ன செய்யவேண்டும்?
இணைப்புக்கள் இறுக்கப் பூட்டப்படல் வேண்டும்; அல்லது இணைப்புக்கள் மாற்றப்பட்டல் வேணடும்.தேவையானால் இரண்டுமே செய்யப்பட்டால் வேண்டும்.

66..அதிற்சியுறிஞ்சிகள்{shock  absorb er  } ஏன் பொருத்தப் படுகின்றன?
வாகனத்தின் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தி வாகனத்திற்கும் பிரயாணம் செய்பவர்களுக்கும் பாதையிலுள்ள அதிர்வுகளை, தாக்கங்களை பிரதி பலிக்காமல் செய்வதற்கு.

66..அமைதியாக்கியில் ஏற்படும் துவாரம் அல்லது உடைவு ஏற்பட்டால்  உடனடியாக சீர்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன?
எஞ்சின் இயங்கும்போது உருவாகும் சத்தம்.எரிபொருட்களின் கழிவுகள் வெப்பத்துடன் அகற்றியின்  மூலம்  அமைதியாக்கியினூடாக  வெளியேற்றப் படும் போது, அமைதியாக்கியின்  குழாய்கள் சேதமடைந்து. புகையும் சத்தமும் வாகனத்திற்குள்ளிருக்கும் பிரயாணிகளையும் தாக்கும்,எரிபொருட்களின் கழிவும் புகையும் மனிதர்களின் சுவசாத் தொகுதியத் தாக்கும்.


67...கதிர் வீசியில் {Radiator] நீர் இல்லாமால் வாகனத்தைச் செலுத்திச் செல்வதால் ஏற்படும் தீமை என்ன?
இயந்திரம் {Engine} சூடாகும்.

68.{.Differential} டிஃபரென்சல்  வேற்றுமைப் படுத்தி மூலம் நிகழ்வது என்ன?
இரு சில்லுகளினதும் வேகத்தைக் கட்டுப்படுத்தல்

69..விசிறிப் பட்டியைச் சீர் படுத்துவது எப்படி?
எஞ்சினுடன் இணைக்கப் பட்டுள்ள மின்னாக்கியுடன் சேர்த்து சரிசெய்யும் கருவி உள்ளது (Adjuster} இதன் மூலம் மின்னாக்கியின்  முற்புறத்திலும்  பிற புறத்திலும் உள்ள ஆணிகள் மூலம்

70வீதிக் குறியீடுகள் போக்குவரத்து சமிக்கைகள், குறியீடுகள்  பற்றிய சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது எப்போது?
 Gazette Extraordinary No. 444/18 of March 13, 1987,

71.வீதிக் குறியீடுகள் போக்குவரத்து சமிக்கைகள், குறியீடுகள்  பற்றிய சட்டங்கள் பாராளுமன்றத்தில் மறு  சீரமைக்கப்பட்டது எப்போது?
No. 1779/17 — WEDNESDAY, OCTOBER 10, 2012

72.வீதி போக்குவரத்தில் தடை செய்யப்பட்ட, கட்டுப்பாடான கட்டாய ,முன்னுரிமை அறிகுறிகளை அனுசரித்து வாகணங்களைச் செலுத்தாமல் விடுவதால் ஏற்படுவது?.

வாகன விபத்து.


73.வீயன்னா வாகனப் போக்குவரத்து உடன்படிக்கை செய்யப்பட்ட காலங்கள்?
1968, நவம்பர் 08,1995 `நவம்பர் 30.

74.எல்லாவகையான வாகனங்களும் வைத்திய சாலை,பாடசாலைகளை
அண்மிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வேகம் என்ன?

30KM க்கும் குறைவாக

75.இக்குறியீட்டால் நீர் அறிந்து கொள்வது என்ன?


76.சிறிதளவு மது அருந்திய ஒரு சாரதிக்கு நீங்கள் கூறும் அறிவுரை?
வாகனம் செலுத்தக் கூடாது


77.கடுகதிப் பாதையில் செலுத்த அனுமதிக்கப் படாத வாகனங்கள்?
ட்ராக்டர், சாரதிப்  பயிற்சிவாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள்

78.இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையின் பெயர்?
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை

79.தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நீளம் ?
.
80.நீங்கள் செலுத்தும் வாகனத்தின் முன் வாயு வளையம் வெடித்தால்
உடனடியாக நீங்கள்  என்ன செய்ய வேண்டும்?
செலுத்தல் சக்கரத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ,வாகனத்தை மெதுவாக ஓடவிட்டு இடது பக்கம் கொண்டுவந்து நிறுத்த வேண்டும் .

81.நீங்கள் ஈரலிப்பான ஒரு நெடுஞ்சாலையில் பனிப்பொழிவு உள்ள வேளையில் என்ன செய்வீர்கள்?
தலை வெளிச் சத்தை மங்கலாக  இட்டு எனது வருகையைத் தெரிவிப்பேன்.

82.நீங்கள் வாகனத்தின் வேகத்தை அதிகரிப்பதால் உங்கள் வாகனத்தின் மீதுள்ள   கட்டுப்பாட்டை  இளக்கிண்றீர்கள்

83.வாகனத்தில் (roof rack)பொதி சுமப்பான் ஒன்றை இணைப்பதால்,  ஏரி  பொருள் பாவனையை அதிகரிக்கிறீர்கள்.

84.உமக்கு முன்னால்  சென்று கொண்டிருக்கும் வாகனம்,வாகனச் சைகை
ஒன்றை வலது புறமாக  இயக்கியதை கவலையீனமாக மறந்து விட்டார்,
இச் சந்தப்பர்த்தில் நீங்கள் அவ் வாகனத்தை முன்திச் செல்ல முடியுமா?
இல்லை,பொறுமையுடன் பின்தொடரலாம்.

85.நீங்கள் ஒரு பெருவளியில் இருந்து சிறிய பாதைக்கு உங்கள் வாகனத்தைத் திருப்ப முனைகையில் பாதசாரிக் கடவையில் பாத சாரிகள் கடக்க ஆரம்பிக்கிறார்கள்,நீங்கள் என்ன செய்வீர்கள்?
பாத சாரிகளை கடக்க அனுமதிப்பேன்

86.60 Km வேகத்தில் சீரான பாதையில் பயணிக்கும் ஒரு வாகனம் தீடீரென்று
நிறுத்த வேண்டுமென்றால் எத்தனை மீற்றர் தூரம் இழுபட்டுப் போகும்?
73 மீற்றர்

87.பின்பக்க வாயு வளையம் சறுக்கினால் skid ?
அதை நோக்கி செலுத்தும் வளையத்தை விரைவாக செலுத்த வேண்டும்.

88.ஒரு நகர் புறத்தின் வெளிப்புறத்தில் இலகு  வாகனங்களின் வேக அளவு
எவ்வளவு?
70 Km

89.பரந்த வெளிப் பாதையில் வீசும் காற்றின் தாக்கத்தால் பாதிக்கப் படும் வாகனம் எது?
மோட்டார் கார்

90.சாலைகளின் இடப்பரப்புகளில் ஊர் பெயர்கள் காட்சிப்படுத்துவதன் நோக்கம்வயத்துக்குட்பட்டோர் ?
தேவைக்கு ஏற்ற வகையில் வாகனச் சாலைகளைத் தெரிவு செய்து வீண்
 குறைப்பதற்கு

91.உமது வாகனத்தில்பெறுமதியான    பொருட்களை பத்திரப்படுத்த என்ன
செய்ய வேண்டும்?
வெளியில் தெரியாத முறையில் மறைத்து வைக்க வேண்டும்.

92.விபத்துக்களைத் தேடிப்போய் சந்திக்கும் பருவ வயதினர் யார்?
17வயதிலிருந்து 25 வயத்துக்குட்பட்டோர்

93.ஒற்றைவழிப் பாதையில் வாகனத்தில்  சென்று கொண்டிருக்கும் நீங்கள்
வலது பக்க வளைவில் திரும்ப என்ன செய்ய வேண்டும்?
வலது பக்க ஒழுங்கையை எடுக்கவேண்டும்  தெரிவு செய்து

94.மிருகங்கள் நடமாடும் பகுதியில் வாகனங்களைச்  செலுத்தும் போதுகைக்கொள்ள வேண்டிய நடைமுறை?
வேகத்தைக் குறைத்தல்,போதியளவு இடப்பரப்பை நிறுவகித்தல்
எந்த வேளையிலும் வாகனத்தை நிறுத்த தயார் நிலையில் இருத்தல்

95.வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கும்போது களைப்பை யுணர்ந்தால்?
பாதுகாப்பான இடதத்தைத் தெரிவு செய்து ஓய்வை எடுக்கலாம்

96.வாகனத்தில் தடுப்பான்களில்  ஏற்படும் முக்கிய  பிரச்சனை ஒன்று?
தடுப்பு சூடாகுதல்,தடுப்புத் தவறுதல்

97.விபத்தில் சிக்கிய    ஒருவரை ஆசுவாசப்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சி
என்ன?
தகுதி வாய்ந்த உதவி கிட்டும்வரை தேவையான முதலுதவியை வழங்கல்

98.எந்தப் பாதசாரிக்கடவையின் மூலம் சைக்கிள்  வண்டிகளும் கடக்கலாம்?
டௌகன் கடைவைகள்  மூலம் 

99.வாகன மோதலின்போது கழுத்தில்  ஏற்படும் ஆபத்தான   தாக்கத்தை
தவிர்த்துக் கொள்ள?
ஒழுங்காக  சரி  செய்யப்பட்ட தலைக் காப்பான்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்

100.மூன்று வளிப்  பாதையுள்ள  ஒரு நெடுஞ்சாலையில் வலதுபக்க சாலையை எதற்குப் பாவிக்க வேண்டும்?
வாகனங்களை முந்துவதற்கு

101.ஒரு நீண்ட வாகனம் ஒன்றை முந்துவதற்கு சிறிய வாகனத்தைச் செலுத்துபவர்கள் செய்யவேண்டியது?
நீண்ட இடைவெளியை ஏற்படுத்தி வாகனத்தின் சாரதிக்கு விளங்கத்தக்கதாக  தங்களின் கோரிக்கையை சைகை மூலம் வெளிப்படுத்த வேண்டும்.

102.மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் ஏன் கலர் மேலாடைகள் அணிய வேண்டும்?
இலகுவாக மற்றைய சாரதிகள் அடையாளம் காண்பதற்கு.

103. ஒரு வாகனத்தை பின்னோக்கி ஒரு பொழுதும் செலுத்த முற்படக்கூடாது
அவசர தேவையேற்பட்டாலொழிய

104.புதிய பெற்ரோலில் இயங்கும் கார்கள் இயந்திரத்துடன் வினையூக்கிகளைப் பொருத்துதல் வேண்டும் ?
பெற்ரோலில்  இருந்து வெளியாகும் தீங்கு விளைவிக்கும் உமிழ்வுகளை தீங்கில்லாமல் வேலையற்ற.

105.நீங்கள் ஈரமான சாலையில் நிறுத்த முனைந்தபோது வாகனம் சறுக்கிச்
செல்ல ஆரம்பிக்கிறது உங்கள் வாகனத்தில் (anti-lock brakes)  எதிர் இழுவைத் தடைகள்  இல்லை  சமாளிக்க என்ன செய்யலாம்?
உடனடியாக கைத்தட்டுப்பானைப் பாவிக்க வேண்டும்.



106.இதனால் அறிவது ?
பேருந்தும் சைக்கிளும் அனுமதிக்கப்பட்டது.





107..

சந்திக் குறுக்குகளில் காணப்படும் குறுக்கு வரிகளின் நோக்கம்?
சந்நிதிகளை ஏற்படும் நெரிசல்களைத் தடுக்க.

108.கால் தடுப்பானின் திரவத் தாங்கியின் (fluid in the brake fluid reservoir)அளவில் ஏற்படும் குறைபாடு?
கால்தடுப்பான் முற்றாக செயல்பட முடியாத நிலமையைக் காட்டும்..

109.நெடுஞ்சாலை ஒன்றில் வாகனத்தை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஒன்று?
எல்லா சிவப்பு விளக்குகளும் ஒரு சேர எரிந்தால்.

110.எரிபொருள் நிரப்பும்போது ஏன்?அதி கூடிய கவனம் செலுத்தப் பாடல் வேண்டும்?
சிந்தும் டீசலால் தரை வழுக்கும், விரைவில் தீப்பிடிக்கும்

111.ஒரு இரட்டைத் தடுப்பு முறை (A dual-braking system) முழுத் தடுப்புத் தோல்வி முறையைத் தடுக்கிறது.

112.சாலை ஓரத்தில் காணப்படும் ஒற்றை வெள்ளைக்கோடு?
சார்த்திகளுக்கு சாலையின் ஓரத்தை அறிவுறுத்துகிறது.

113.இது  எதைப்  குறிக்கிறது ?

தடை செய்யப்பட்ட வாகனங்களை

114.வாகனமொன்றை சாதாரணமாக நிறுத்துவற்கு தடுப்பானை எப்படி உபயோகிக்க வேண்டும்?
வாகனத்தை ஓய்வுநிலைக்குக் கொண்டுவருவதற்கு முற்றாக தடுப்பானை
அமர்த்தி ,பின்னர் சீராக அழுத்தவேண்டும்.

115.நீங்கள் தானியங்கி செலுத்தலுடன் கூடிய காரைப்பற்றி விளக்கம் கொடுக்கிறீர்கள் அவ் வாகனத்தை தரித்து நிறுத்திவைக்க என்ன வேக மாற்றியைப் பாவிக்க வேண்டும் ?
தரித்தல்(பார்க்கிங்) மாற்றியைப் பாவிக்க வேண்டும்

115.மூன்று வழிப்பாதையுள்ள நெடுஞ்சாலையின் வலது புறத்தால்  செல்ல அனுமதிக்கப்படாத  வாகனம் எது?
 ட்ரையிலர் 

திங்கள், 15 மே, 2017

ஐரோப்பாவின் காதல் முறிவு

ஐரோப்பாவின் காதல் முறிவு.



அண்மைக்காலத்தில் இணையம் உட்பட அனைத்து தகவல் முறைமைகளிலும் பேசுபொருளாக மாறியிருந்த ஒரு விடயம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், ஐக்கிய இராச்சியத்துக்குமான காதல் முறிவாகும். கடந்தகாலங்களில் விரும்பியோ, விரும்பாமலோ புறக்காரணங்களால் இணைந்திருந்த காதலர்களில் ஒருவர் இனியும் சேர்ந்திருக்க முடியாது என பிரிந்து செல்லும் நிலைக்கு ஒப்பான காட்சியே தற்போது ஐரோப்பாவில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற Brexit மீதான மக்கள் வாக்கெடுப்பின் முடிவுகள் (Image courtesy: weforum.org)
கடந்த ஆண்டு இடம்பெற்ற மக்கள் வாக்கெடுப்பு மூலமாக, ஐரோப்பிய ஒன்றியத்தை பிரிவதாக ஐக்கிய இராச்சியம் முடிவுக்கு வந்தபோதிலும், அதற்கான உத்தியோகபூர்வ செயற்பாடுகள் அண்மையில்தான் அவர்களது பிரதமர் திரேசா மே (Theresa May) அவர்களின் உத்தியோகபூர்வ கையெழுத்துடன் ஆரம்பமாகி இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தை பிரிவதற்கான இந்த செயற்பாடு நிறைவுபெற குறைந்தது இரண்டு வருடங்களாவது செல்லக்கூடும் என எதிர்பார்க்கபடுகிறது. இவ் எதிர்பார்க்கபடும் இரண்டு வருடங்களுமே, ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சரி, ஐக்கிய இராச்சியத்துக்கும் சரி மதில்மேல் பூனையாக உள்ள காலப்பகுதியாகும். காரணம், பிரிவுக்கான பேர்ச்சுவார்த்தைகள் சுமூகமாக செல்லாதபட்சத்தில், இருசாராருக்கும் தீர்க்கமுடியாத பிரச்சனைகளை அது ஏற்படுத்தகூடும் என எதிர்பார்க்கபடுகிறது. அப்படி, ஒருவேளை சுமுகமாக முடிவுகள் எட்டப்படாதவிடத்து, ஐரோப்பாவாழ் சமூகத்தினர் கீழ்வரும் விடயங்கள் தொடர்பில், அதிகம் கவலைகொள்ளவேண்டி ஏற்படலாம்.
சரத்து 50இன் மூலமாக ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார் பிரித்தானிய பிரதமர் (image courtesy imgix.net)

பிரிவுக்கான வரைபுகள்

ஐரோப்பிய ஒன்றியம் என்பது, ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான நாடுகளை உறுப்பினராக கொண்டு உருவாக்கபட்ட அமைப்பாகும். இந்த அமைப்பின் நிர்வாக செலவீனங்கள் அனைத்துமே, அனைத்து நாடுகளுக்கும் அதன் தன்மைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படுகிறது. உட்கட்டுமான திட்டங்கள், சமூக திட்டங்கள், ஆய்வுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஊழியர்களின் வேதனம் மற்றும் ஓய்வூதியங்கள் என்பனவும் இதில் உள்ளடங்குகிறது.
தற்போதைய பாதீட்டு திட்டமானது 2020ம் ஆண்டுவரை முன்கூட்டியே திட்டமிடப்பட்டு வருடம்தோறும் அனைத்து நாடுகளாலும் நிதியளிப்பு செய்யப்படுகிறது. இந்தநிலையில், ஐக்கிய இராச்சியம் இடைநடுவே பிரிந்துசெல்வதால், சுமார் 63 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தவேண்டி ஏற்படும் என கணக்கிடபட்டுள்ளது. இது ஒரே தடவையில் செலுத்தமுடியாத மிகப்பெரிய தொகையாக ஐக்கிய இராசியத்துக்கு இருக்கும். எனவே, இது தொடர்பில், இருசாராரும் முடிவொன்றுக்கு வராதபடசத்தில், ஐக்கிய இராச்சியம் நிதிரீதியாக பலவீனப்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நீங்குவதால் தாக்கத்திற்கு உள்ளாகக்கூடிய சில விடயங்கள் (image courtesy pwc.ie)

வர்த்தக செயற்பாடுகள்

ஐரோப்பிய ஒன்றிய அங்கத்தவராக உள்ளமட்டும், ஐக்கிய இராசியமானது இலவச வர்த்தக ஒப்பந்தங்களூடாக எவ்வித வரிகளுமின்றி ஐரோப்பிய நாடுகளுக்குள் வர்த்தக தொடர்பை கொண்டிருந்தது. இந்த நடைமுறையின் கீழ், ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் மாத்திரம் சுமார் 44%மான ஏற்றுமதி சந்தையையும், 53%மான இறக்குமதி சந்தையையும் கொண்டுள்ளது.
தற்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரிவதாக முடிவாகியுள்ள நிலையில், இந்த சலுகைகளை முழுமையாக அனுபவிக்க முடியாதநிலை இருசாராருக்குமே ஏற்படும். இதன் விளைவாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழ்கின்ற மக்கள், இதுவரை காலம் பயன்படுத்திய பொருட்களை இனி அதிகவிலைகொடுத்து வாங்கவேண்டிய துர்பாக்கியநிலை ஏற்படும்.
பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமான வர்த்தக உறவுகள் (image courtesy: licdn.com)
இதனை கருத்தில்கொண்டுதான், ஐக்கிய இராச்சிய பிரதமர், ஒன்றியத்தின் விலகல் பேச்சுவார்த்தைகளில் புதிய வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடையாக அமையகூடாது என்கிற தொனியில் கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகிகள், ஐக்கிய இராச்சியத்தின் விலகல் சுமூகமாக அமையும்பட்சத்தில் மட்டுமே, இதுதொடர்பில் விவாதிக்க முடியும் என கருத்தினை வெளியிட்டு, சர்ச்சைகளுக்கான தொடக்கத்தினை விதைத்து இருக்கிறார்கள்.

குடியேற்ற உரிமைகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டவிதிகள் பிரகாரம், ஒன்றிய அங்கத்துவம் வகிக்கும் நாடுகளில் உள்ள எவரும், ஐக்கிய இராச்சியத்தில் குடியேறவும், ஐக்கிய இராசியத்தில் உள்ளவர்கள் அங்கத்துவ நாடுகளில் குடியேறவும் அனுமதியளித்து இருக்கிறது.
தற்சமயம், ஐக்கிய இராச்சியத்தின் பிரிவு முடிவானது இந்த சுதந்திர குடியேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக அமையவுள்ளது. இதன் விளைவாக, இருபக்கங்களையும் சார்ந்த சுமார் 4 மில்லியன் மக்கள் பாதிப்படையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய இராசியத்தில் உள்ளவர்கள் அங்கத்துவ நாடுகளில் சுதந்திரமாக குடியேற முட்டுக்கட்டையாகியுள்ள Brexit (image courtesy- artoncapital.com )
மேற்கூறிய விடயங்கள் அனைத்துமே, இருபக்கமும் பாதிப்பினை ஏற்படுத்தும் விடயங்களாக உள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்தினை பிரிவதன் விளைவாக, கீழ்வரும் விளைவுகளை மேலதிகமாக எதிர்கொள்ளவேண்டிய துர்பாக்கியநிலையை கொண்டுள்ளது.

வளர்ச்சியில் தேக்கநிலை

ஐக்கிய இராச்சிய நாட்டின் பாதீட்டு குழுவானது, எதிர்வரும் காலத்தில் நாட்டின் அபிவிருத்தியானது அல்லது வளர்ச்சி நிலையானது முன்னைய காலங்களுடன் ஒப்பிடுமிடத்து குறைவடையும் என கணக்கிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை பிரிவதற்கான வாக்கெடுப்பு நடந்து முடிந்தபின்பு இடம்பெற்ற கணிப்பீட்டில் ஐக்கிய இராச்சியத்தின் வளர்ச்சியானது 2.2% என மதிப்பிடபட்டபோதிலும், தற்போது அது 2%மாக அமையும் என பொருளியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதுபோல, 2018ம் ஆண்டில் இது மேலும் குறைவடைந்து 1.6% வளர்ச்சியையே கொண்டிருக்கும் என குறிப்பிடுகிறார்கள். இந்தநிலை, ஜரோப்பாவிலிருந்து ஐக்கிய இராச்சியம் தனித்து இயங்க முடிவு செய்துள்ள ஆரம்பகாலகட்டத்தில் மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்த வல்லதாகும்.

அதிகரிக்கும் கடன்சுமை

எதிர்வுகூறப்படும் மிகமெதுவான வளர்ச்சியானது அரச வருமானத்தை பாதிப்படைய செய்யும். இதன் விளைவாக, செலவினங்களை ஈடுசெய்வதற்கும், வருமான-செலவின இடைவெளியை ஈடுசெய்யவும் மேலதிகமாக கடன்பெறுவதனை தடுக்க இயலாதநிலை ஏற்படும்.
இதன்பிரகாரம், 2016ல் சுமார் 1.74 திரில்லியனாக உள்ள கடன்சுமையானது 2021ல் 1.9 திரில்லியனாக அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த கடன் அதிகரிப்பானது அரசின் மேலதிக கடன்வாங்கல்கள் மூலமாக பூர்த்தி செய்யப்பட்டாலும், நீண்டகலத்தில் இறுக்கமான நிதிக்கொள்கைகள் மூலமாக, மக்கள் மீது சுமத்தபடவே அதிக வாய்ப்புக்களை கொண்டதாக உள்ளது.

வேலைவாய்ப்பில் மந்தநிலை

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் பிரிந்துசெல்வதன் விளைவாக, ஜக்கிய இராச்சியவாசிகளுக்கு உடனடியாக வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என நாம் எண்ணக்கூடும். ஆனால், யதார்த்தநிலை வேறுவிதமாக உள்ளதாக அந்நாட்டின் பாதீட்டு குழுவினர் சுட்டிகாட்டுகிறார்கள். குறிப்பாக, 2016ம் ஆண்டளவில் ஐக்கிய இராச்சியத்தில் சுமார் 830,000பேர் வேலையில்லா தீர்வையை பெற்று இருந்தார்கள் இந்த நிலையானது, 2020ம் ஆண்டளவில் சுமார் 880,000 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறபட்டுள்ளதுடன், 2018ம் ஆண்டளவில் நாட்டின் வேலையில்லாதவர்கள் சதவீதமானது சுமார் 5.2%மாக அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இணைந்திருந்த காதலர்கள் இனியும் சேர்ந்திருக்க முடியாது என பிரிந்து செல்லும் நிலைக்கு ஒப்பான காட்சியே தற்போது ஐரோப்பாவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. (image courtesy- alexedmans.com)
ஐரோப்பிய ஒன்றியத்தை பிரிவதுதான் ஐக்கிய இராச்சிய நலனுக்கு நன்மைபயக்கும் என ஒற்றை வார்த்தையில் கூறிவிட்டாலும், அந்த நலனை நீண்டகாலத்தில் அனுபவிக்க மிகப்பயங்கரமான பாதையை ஐக்கிய இராச்சியம் கடந்துவர வேண்டியிருக்கும் என்பது தற்போது நிதர்சனமான உண்மையாகியிருக்கிறது.
இரு காதலர்களும் இணைந்திருப்பதிலும் பார்க்க, பிரிந்திருப்பதே சிறந்தது என முடிவுக்கு வந்துள்ளநிலையில், அந்த பிரிவுக்கு மிகப்பெரும் விலையையும், சிலபல தியாகங்களையும் இருதரப்பினரும் செய்தே ஆகவேண்டிய கட்டாய நிலைக்கு வந்துவிட்டனர். இனி, இரு தரப்பினரும் எப்படி ஒருவரை ஒருவர் காயப்படுத்தாமல் விலகி செல்வது என்பதிலேயே அவர்களது வெற்றி தங்கியிருக்கிறது. யார் ஒருவரும், மற்றொருவருக்கு பாதிப்பை ஏற்படுத்த நினைத்தாலும், இருவரும் அதற்கான விலையை கொடுக்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, இதில் விரும்பியோ விரும்பாமலோ இணைந்துவிட்ட ஐரோப்பிய வாழ்மக்களும், இந்த பிரிவு சுமுகமாக இடம்பெறும்வரை வெறும் பார்வையாளர்களாக இறுதிவரை பொறுமையாக இருந்தே முடிவு செய்யவேண்டியதாக இருக்கும்.

போதையில் பட்டதாரிகள்

போதையில் பட்டதாரிகள்

ஏன்டா!, ஏதோ பொறியியல் படிக்கிறதும் படிக்க வைக்கிறதும் தேச விரோத செயல் மாதிரி எழுதிருக்க! மொதல எல்லாத்தையும் எதிர்மறை பார்வையிலிருந்து பார்காதிங்கடா! என்று கொஞ்சம் கூட இடைவெளி இல்லாமல் திட்டிக்கொண்டே இருந்தான் நண்பன். (அப்பாடா நம்ப கட்டுரையை ஒரு பொறியியலாளன் படுச்சு கோபம் வந்துருக்குனா உருப்படியா எழுதிருக்கோம் என்று எண்ணியபடி பேச ஆரம்பித்தேன்.)
உனக்கு என்னடா புடிக்கல அந்த கட்டுரையில்? என்றேன்.
எல்லாமேதான் புடிக்கல!,பொறியியல் படிச்சா மட்டும் தான் வேலை கிடைக்காதுனு மாதிரி எழுதிருக்க . இப்போ எந்த படிப்பு படிச்சாலும்தான் வேலை கிடைக்காது! அப்றம் ஏதோ பெரிய ட்விஸ்ட்  வச்சு முடிக்கனும்னு பில்டப் கொடுத்து முடுச்சியே, எங்க சொல்லுடா பார்ப்போம் என்று கோபமாக என் முன் அமரந்தான். (இவன்ட அடிவாங்கமா தப்பிகனுமே என்று எண்ணியபடி ஆரம்பித்தேன்)
எல்லா படிப்புக்கும் வேலை இல்லை என்பது உண்மைதான் ஆனால் ஏன்?. எல்லா இடத்திலும் எந்த வேலைனாலும் பரவாயில்லை என்று பொறியியல் படித்தவர் போய் வேலை கேட்பதும் குறைந்த ஊதியத்தில் அவர்களை பயன்படுத்திக்கொள்வதும்தான். ஒரு உணவக விளம்பரம் ஒன்றில் புரோட்டா போட ஆட்கள் தேவை பொறியாளர்கள் விண்ணப்பிக்காதீர்கள் என்று போட்டிருந்தார்கள் இதை பகடி என்று கடந்து விட முடியாது! காரணம், கடந்த ஆண்டு ஒரு மாநிலத்தில் நகர சுத்தி (cleaners) தொழிலாளர்கள் பணிக்கு வந்த விண்ணப்பத்தில் 80% பொறியியல் மாணவர்களின் விண்ணப்பம். இதை விட சிறந்த விளக்கம் எப்படித் தர முடியும்?
BPO வில் 90% இரவுப் பணி மட்டும் தான், முழுக்க முழுக்க இரவுப் பணி பார்க்கும் இளைஞர்களின் மனநிலை வேறு மாதிரியாக மாறுகிறது! (digitaltrends.com)
வேற வழி இல்லாமல் இப்ப இருக்க 80% பொறியியல் மாணவர்கள் BPO வை நோக்கி போகிறார்கள், வெறும் ஆங்கில அறிவும் 12ஆம் வகுப்பு தேர்ச்சியும் மட்டுமே அதுக்கு போதுமே!,டேய் நீ மறுபடியும் வேலை இல்லா திண்டாட்டத்தை வச்சே ஒப்பேத்துர!, இத தாண்டி ஒரு அதிர்ச்சி இருக்குனு பில்டப் குடுத்தேல அத பத்தி சொல்லு என்று இடை மறித்ததான்.
அதுக்கு தான்டா வரேன் இரு! BPO வில் 90% இரவுப் பணி மட்டும் தான், முழுக்க முழுக்க இரவுப் பணி பார்க்கும் இளைஞர்களின் மனநிலை வேறு மாதிரியாக மாறுகிறது!. அவர்கள் மன உளைச்சல் காரணமாக போதையின் பிடியில் சிக்குகிறார்கள். சென்னைப் போன்ற பெருநகரங்களில், பெற்றோர்களிடம் இருந்து தொலைவில் இருக்கும் இளைஞர்கள் கஞ்சா போன்ற வஸ்துக்களையே நாடுகின்றனர்.
கஞ்சாவுல அப்டி என்னதான் இருக்கு என்று ஒருமுறை அதை பயன்படுத்தும் நபர் ஒருவரைக் கேட்க, கஞ்சா அடுச்சுட்டு சீலிங் பேன படுத்துக்கிட்டு பார்த்தா அது மூஞ்சி பக்கத்துல வர மாதிரி தெரியும் தம்பி என்று  அவர் சிரித்தது எனக்கு வயிற்றில் புளியை கரைத்தது.
தேவைக்கு அதிகமான பணம், பற்று இல்லாத வேலை, தட்டிக் கேட்க ஆள் இல்லாத சூழல். இந்த உட்சக்கட்ட சுதந்திரம் அவர்களை “குரோதத்தின்” எல்லைவரை கொண்டு செல்கிறது. இதன் கேவலமான உதாரணம் தான் சென்னையில் ஒரு IT மாணவன் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதும் எரித்ததும்!.
ஒரு குழந்தையை அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் மன நிலையை அவனுக்கு ஏற்படுத்தியது எது?
தேவைக்கு அதிகமான பணம், பற்று இல்லாத வேலை, தட்டிக் கேட்க ஆள் இல்லாத சூழல். இந்த உட்சக்கட்ட சுதந்திரம் அவர்களை “குரோதத்தின்” எல்லைவரை கொண்டு செல்கிறது. (pixabay.com)
நான் சிறுவனாக இருக்கும் போது பார்த்த பல திரைப்படங்களில்  “படிச்ச” பிள்ளை வருது அது முன்னாடி “பீடி ” குடிக்கிறியே அத தூக்கி போடு. என்ற காட்சிகள் வரும், ஆனால் இன்று மாணவர்களுக்கு உருவாக்கப்பட்டதே “மது ” என்று விளம்பரம் செய்கின்றன சினிமா!. என் பையனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்று பெண் பார்த்த காலம் போய் என் பையன் “Social Drinker ” (எப்போதாவது குடிப்பவர்) என்று இணையத்தில் பெண் தேடுகிறார்கள்.
புகையும், குடியும் பிள்ளைகளுக்கான சுதந்திரம் என்று பெற்றோர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். அவர்களின் இப்போதைய கண்டிப்பு அவர்களின் கண்முன் தவறுகளை செய்யாதிருப்பது மட்டுமே (பிள்ளைகளை கவனிக்க நேரமில்லை என்று காரணம் கூறும் பெற்றோர்கள்தான் அதிகம்) இப்பொழுது  தந்தையும் மகனும் இணைந்து மது அருந்தும் காட்சி படங்களில் வருவதைப் பார்க்கும்போது பயமாக உள்ளது.
சரி சினிமா, சமூகம் மற்றும் குடும்பம்தானே இளைஞர்கள் பாதை மாறுவதற்கான காரணம் இதில் பொறியியல் படிப்பை மட்டும் குறிப்பிட்டு சொல்வதற்கு காரணம் என்ன? என்று தோன்றலாம்!. பொறியியல் படிப்பை தேர்வு செய்யும் மாணவனின் மனநிலை பட்டம் பெற்று வெளியே வரும்போது வேறு விதமாக உள்ளது. அறிவியல் மற்றும் கலை பிரிவு படிக்கும் மாணவனிடம் இருக்கும் “Experimentation ” (தான் எதற்கு சரியானவன் என்று சோதிப்பது) பொறியியல் மாணவர்களிடம் சுத்தமாக இல்லை!. ஒரு கட்டிடக்கலை பயின்ற (Civil Engineering) பொறியியல் மாணவனுக்கு “ஒரு ஏக்கருக்கு எத்தனை சென்ட் ” என்று கூட தெரியவில்லை. இவர் எப்படி தன் துறை சார்ந்த வேலையை திறம்பட செய்வார்?, இவர் எளிதாக பணம் பெறும் துறை என்று BPOவை மட்டுமே நாடுவார். கல்லூரியில் 4 ஆண்டுகள் படித்தது போதாது என்று நேர்முகத் தேர்விற்கு சிறப்பு வகுப்புகள் வேறு!, என்ன தான் செய்கிறது கல்லூரிகள்?.
அவர்கள் வாழ்கையை அவர்கள் தீர்மானிக்கிறார்கள் என்று விட்டு விட முடியாது! 2020 இந்தியாவின் மக்கள் தொகையில் சரி பாதி இளைஞர்களே அதில் 65% பேர் வருமானம் ஈட்டக் கூடியவர்களாக இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. மற்றொரு ஆய்வு உலக ” காசநோயாளிகளில்”  30% பேர் இந்தியாவில் தான் உள்ளார்கள் என்றும் அதில் பெரும்பான்மை இளைஞர்கள் என்றும் கூறுகிறது. இந்திய இளைஞர்கள் மது குடிக்க ஆரம்பிக்கும் வயது 16 என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது ஆனால் இங்கு 18 வயதிற்கு குறைந்தவர்க்கு போதை பொருட்கள் விற்பது குற்றம் ஆகும், பின் எப்படி இது நடக்குறது?.
இந்திய இளைஞர்கள் மது குடிக்க ஆரம்பிக்கும் வயது 16 என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது ஆனால் இங்கு 18 வயதிற்கு குறைந்தவர்க்கு போதை பொருட்கள் விற்பது குற்றம் ஆகும், பின் எப்படி இது நடக்குறது? (pixabay.com)
பள்ளியில் இருந்து கல்லூரி வரை ஒன்றாக படித்த நண்பனை சமீபத்தில் சந்தித்தேன் பேசும் போது பந்தாவாக “சிகரெட்டை” எடுத்து பற்ற வைத்தான். டேய் உனக்கு எப்ப இருந்துடா இந்த பழக்கம்? என்றேன். இல்ல பங்காளி “பாஸ்” (boss) கூட நெருங்கி பழக week end party-ல அடுச்சு பழகிட்டேன் நிறுத்த முடியல என்றான், வீட்டுக்கு தெரியுமா என்றேன் தெரியும் ஆனா காட்டிக்க மாட்டாங்க என்றான்!..
நோயாளி இளைஞர்களைக் கொண்டு இந்தியாவின் பலமான எதிர்காலத்தை உருவாக்க முடியாது. இதை அரசு சிந்திக்க வேண்டும் ஆனால் இங்கு அரசு தானே மதுக்கடைகளையே நடத்துகின்றன!. சரி குடி, புகை இது இரண்டும் தனி நபரைத்தானே பாதிக்கிறது என்று கடந்து போகிறவர்களும் உண்டு. ஆனால் இதனால் “பாதிப்படைவது பெண்களே” குடித்துவிட்டு இரவு நேரங்களில் பெண்களிடம் தவறாக நடப்பது அதிகமாகி உள்ளது. இதன் விளைவாக கர்நாடக அரசு எல்லா நிறுவனங்களும் இரவு பணிகளில் பெண்களை அமர்த்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது . இது எப்படி நிரந்தர தீர்வாக அமையும்?. முன்பு எல்லாம் தவறு செய்பவர்கள் படிப்பறிவு குறைந்தவர்களாக இருப்பார்கள் ஆனால் இன்று பட்டதாரிகள் அல்லவா அதிகமாக உள்ளார்கள்.
தன் வேலையின் மீதான காழ்ப்புணர்வை எந்த வழியில் வெளிப்படுத்துவது என்று தெரியாமல் எல்லா தீய பழக்கத்திற்கும் ஆளாகிறார்கள். அதற்கு இப்பொழுது இருக்கும் தொழில்நுட்பம் எளிதில் வழி காட்டுகிறது,  இதற்கும் பொறியியல் படிப்பை தேர்வு செய்வதற்கும் என்ன சம்பந்தம்?,
“ஒரு மீனின் இயல்பு என்பது நீந்துவது அதை மரம் ஏறச் சொல்லி கட்டாயப் படுத்தினால் அது இறந்து போகும்”, அது போல பள்ளிப் பருவத்திலேயே குழந்தைகளின் திறன் கண்டு அவர்களின் மேற்படிப்பை தேர்ந்தெடுக்க வைக்க வேண்டும். அப்படி இல்லையேல் அந்த மீனின் நிலைதான் அவர்களுக்கும்.
சரி விருப்பமான துறையில் பயிலும் மாணவன் தவறு செய்ய மாட்டான் என்று உறுதி கூற முடியுமா? என்றால், தனக்குப் பிடித்த துறையை தேர்வு செய்யும் மாணவன் அதில் சாதனைகள் செய்ய புதுப்புது உத்திகளை பயிலவும், பயன்படுத்தவுமே எண்ணுவான். கண்டிப்பாக தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் விகிதம் குறையும்.
தன் வேலையின் மீதான காழ்ப்புணர்வை எந்த வழியில் வெளிப்படுத்துவது என்று தெரியாமல் எல்லா தீய பழக்கத்திற்கும் ஆளாகிறார்கள். அதற்கு இப்பொழுது இருக்கும் தொழில்நுட்பம் எளிதில் வழி காட்டுகிறது (pixabay.com)
டேய் உண்மையிலயே! BPO- ல வேலை பார்க்குறவங்க கஞ்சா அடிக்கிறாங்களா? உனக்கு தெரியுமா? பொய் தானே சொல்ற அப்பதான் நிறையா பேர் படிப்பாங்கனு! என்றான் நண்பன். 100% அடிப்பாங்கனு சொல்லலடா ஆனா பெரும்பான்மையான நபர்கள் அடிக்கிறாங்க என்று தெரிந்த ஒரு நண்பனின் அறைக்கு அவனை அழைத்துச் சென்றேன். விடுமுறை தினம் வேறு, அறை முழுவதும் ஒரே புகை மூட்டம். தொலைக் காட்சியில் ஒரு புரியாத ஆங்கிலப் பாடல் அதிலும் கஞ்சா புகைத்துக் கொண்டுதான் ஆடுகிறார்கள். வாயடைத்து நின்றான் நண்பன். உள்ளே இருக்கும் 5 பேர்களும் கோயம்பத்தூரில் ஒரு சிறந்த கல்லூரியில் (அப்படித்தான் விளம்பரம் செய்து கொள்கிறார்கள்) பொறியியல் படித்தவர்கள். மாதம் வாங்கும் 25,000 சம்பளத்தில் 15,000 இப்படித்தான் போகிறது என்று கூறிய போது ஐவரில் ஒருவன் நான் வந்ததை இப்பொழுதுதான் கவனித்தான் (15  நிமிடம் கழித்து) யோவ் டைரக்டர் எப்பயா வந்த? என்று என் அருகில் வந்தான்.
யோவ் டைரக்டர், நானும் எவ்ளோ நாள் சொல்றேன் இதுல இரண்டு இழுவ இழுத்தனு வையி (கஞ்சா) ஜேம்ஸ் கேமரூன், ஸபீல் பெர்க் எல்லாம் உன்னட்ட பிச்சைதான் எடுக்கணும் என்று சிகரெட்டைக் காட்ட, கட்டுரை எழுத வந்தவனை காவு வாங்கிடுவான்க போலயே என்று நண்பனையும் இழுத்துக் கொண்டு பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடி வந்தேன். (என்னுடன் ஒரு புது நபர் வந்திருந்ததை அவர்களில் யாருமே கவனிக்கவில்லை அவ்வளவு போதை)

பகிஷ்கரிப்புக்களை பகிஷ்கரிப்போம்

பகிஷ்கரிப்புக்களை பகிஷ்கரிப்போம்


Jude Prakash


“கான மயிலாட கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் தானுந்தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி”
மூதுரையில் ஒளவையார்
வரலாற்றில் தமிழர் பிரதேசத்தில் நடந்த முதலாவது பகிஷ்கரிப்பாக 1931ல் யாழ்ப்பாண இளைஞர் பேரவை (Jaffna Youth Congress, JYC), முன்னின்று நடாத்திய தேர்தல் பகிஷ்கரிப்பு பதிவாகிறது. டொனமூர் யாப்பிற்கமைய, நடாத்தப்பட்ட சர்வஜன வாக்குரிமையடிப்படையிலான  தேர்தலை, யாழ்ப்பாணத் தமிழர்கள் புறக்கணித்தார்கள்.
சாதி, மத, பால் பாகுபாடின்றி, ஆசிய கண்டத்திலேயே இலங்கையில்தான் முதன் முதலாக அனைவருக்குமான வாக்குரிமை (universal suffrage) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் 1950 வரை அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்படவில்லை. சுவிஸ்லாந்து 1971ல் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும்போது, உலகின் முதலாவது பெண் பிரதமராக சிறிமாவோ பதவியேற்று ஆறாண்டுகள் கடந்துவிட்டிருந்தன.
இரண்டாவது ஸ்பானிய குடியரசில் வாக்குரிமை பயிற்ச்சியில் ஈடுபடும் பெண்கள் (wikimedia.org)
“கீழ் சாதியினருக்கும் படிப்பறிவில்லாதவர்களுக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை அளிப்பது முட்டாள்தனமானது” என்று சேர் பொன் இராமநாதன் எதிர்ப்பு தெரிவிக்க, இலங்கையிலேயே எழுத்தறிவில் முன்னணியில் திகழ்ந்த யாழ்ப்பாண மாவட்டமோ, வேறொரு காரணத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட முதலாவது ஜனநாயக உரிமையை பகிஷ்கரிக்கத் தயாரானது.
இந்திய தேசிய காங்கிரஸின் வழிநின்ற யாழ்ப்பாண இளைஞர் பேரவை, பிரித்தானியா இலங்கைக்கு சுயராஜ்ஜியம் வழங்காததால் தேர்தலை புறக்கணிக்குமாறு அழைப்பு விட, யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நான்கு ஆசனங்களும் வெற்றிடமாயின. யாழ்ப்பாணத்தில் போட்டியிட முடியாத ஜீஜி பொன்னம்பலம், மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோற்றுப்போனார்.
தேர்தல் புறக்கணிப்பால் தேசிய சட்ட சபையில் தங்கள் உரிமைகளும் நலன்களும் புறக்கணிக்கப்படுவதையும்
பாதிக்கப்படுவதையும் காலங்கடந்து உணர்ந்த யாழ்ப்பாண மக்கள், அடுத்து வந்த காலங்களில் யாழ்ப்பாண இளைஞர் பேரவையை புறந்தள்ளினார்கள் என்பது வரலாறு.
இந்த தேர்தல் புறக்கணிப்பு பற்றி Jane Russell எனும் வரலாற்றாசிரியர் எழுதிய விரிவான கட்டுரைக்கு அவர் இட்ட தலைப்பு “The dance of the Turkey-cock: the Jaffna Boycott 1931”, அதாவது “வான் கோழியின் நடனம்: யாழ்ப்பாண பகிஷ்கரிப்பு 1931”. இந்திய தேசிய காங்கிரஸ் என்ற மயிலைப் பார்த்து யாழ்ப்பாண இளைஞர் பேரவை என்ற வான் கோழி ஆடிய நடனமே 1931ம் ஆண்டு தேர்தல் பகிஷ்கரிப்பு என்று Jane Russell விபரிக்கிறார்.
1980களின் மத்தியில் இயக்கங்களின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாண தீபகற்பம் இருந்த காலங்களில், இயக்கங்களின் மாணவர் அமைப்புக்கள் நடத்திய பகீஷ்கரிப்புக்களையும் ஹர்த்தால்களையும் ஊர்வலங்களையும் அந்தக் காலப்பகுதியில் வாழ்ந்த யாரும் மறந்திருக்க மாட்டார்கள். பெரும்பாலான பகீஷ்கரிப்புக்களை முன்னின்று நடத்தியது PLOTE அமைப்பின் மாணவர் அணியான TESO, EROS அமைப்பின் GUYS மற்றும் EPRLFன் GUES.
“இன்று ஹர்த்தால்” என்று காலை எழுந்ததும் ஈழநாடு பத்திரிகையில் கொட்டை எழுத்தில் தலையங்கம் மிரட்டும். இலங்கை அரசாங்கம் நிகழ்த்திய ஏதோ ஒரு அநியாயத்தை கண்டித்து, நாங்கள் பள்ளிக்கூடங்களை பகிஷ்கரித்து, கடைகளை அடைத்து, அலுவலகங்களை மூடி, கண்டி வீதியால் கச்சேரியை நோக்கி, “மாணவர் சக்தி… மாபெரும் சக்தி” என்று தொண்டை கிழிய கோஷம் எழுப்பிக்கொண்டு, கொளுத்தும் வெயிலில் ஊர்வலம் போக, கொழும்பில் அத்துலத்முதலியும் ஜெயவர்த்தனாவும் சுடச்சுட தேத்தண்ணியோடு கொக்கீஸ் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.
அதே காலப்பகுதியில், மலையகத்திலும் வேலைநிறுத்த போராட்டங்கள் இடம்பெற்றன. அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகித்துக்கொண்டே, பெருந்தோட்டங்களில் வேலைநிறுத்த போராட்டங்களுக்கு செளமியமூர்த்தி தொண்டமான் அறைகூவல் விடுப்பார். இலங்கைப் பிரஜாவுரிமை கோரியும் சம்பள உயர்வு கேட்டும் மலையகத் தமிழர்கள் நடாத்திய போராட்டங்கள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுத்தந்தது.  இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தோட்டத்துறையின் வகிபாகமும் அந்தத் துறையில் மலையகத் தமிழர்களின் உழைப்பின்  முக்கியத்துவமும் அவர்களடைந்த வெற்றிகளுக்கு பிரதான காரணிகளாகின.
கடந்த ஏப்ரல் 24ம் திகதி, இலங்கையின் பெற்றோலியத்துறை தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் விடுத்த வேலைநிறுத்த கோரிக்கைக்கும், அரசாங்கம் 24 மணித்தியாலங்களுக்குள் அடிபணிந்தது. பெற்றோல் நிரப்பு நிலையங்களுக்கு வெளியே ஏற்பட்ட வாகன நெரிசலும் பொருளாதாரத்தையே முடக்கவல்ல அறிகுறிகளும் இலங்கை அரசாங்கத்தை, தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளை செவிமடுக்கச் செய்தது.
பெற்றோலிய தொழிற்சங்கத்தின் பணிப் பகிஷ்கரிப்பு மட்டுமன்றி தென்னிலங்கையில் இடம்பெறும் பெரும்பாலான போராட்டங்கள் வெற்றி பெறுவதற்கான காரணம், அவை பெரும்பான்மையின சிங்களவர்களால் மேற்கொள்ளப்படுவது மட்டுமன்றி, அந்த போராடங்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் செலுத்தவல்ல எதிர்மறையான தாக்கமும்தான்.
பெற்றோலியத் தொழிலார்களின் பகிஷ்கரிப்பு நடந்து மூன்று நாட்கள் கழித்து, காணாமல் போனவர்கள் பிரச்சினைக்கு ஆதரவாக தமிழர் பிரதேசங்களில் நடந்த பகிஷ்கரிப்பிற்கு இலங்கை அரசின் பதில், “நல்லாட்சி அரசில் ஜனநாயக வழியில் போராட ஏற்பட்டுள்ள பொது வெளியை இந்த பகிஷ்கிரிப்பு பிரதிபலிக்கிறது” என்பதாக அமைந்தது.

எங்களது பகிஷ்கரிப்புகளும் ஹர்த்தால்களும் கடையடைப்புக்களும் வெற்றி பெற வேண்டுமென்றால், நாங்கள் முதலில் பொருளாதார ரீதியில் பலம் பெற வேண்டும். (tamilguardian.com)
இலங்கைத் தீவின் மூன்றிலொரு பங்கு நிலப்பரப்பையும் மூன்றிலிரண்டு பங்கு கடற்பரப்பையும் தன்னகத்தே கொண்ட, தமிழர் தாயகப் பகுதியில் இடம்பெறும் பகிஷ்கரிப்புகள், வெற்றி பெறாமல் போவதற்கான மிகப் பிரதான காரணம், வட-கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் செலுத்தும் தாக்கம் எதுவுமில்லை என்ற கசப்பான உண்மையே. இலங்கையின் 2015ம் ஆண்டிற்கான GDPயில் கிழக்கு மாகாணம் 6.0% ஐயும் வட மாகாணம் 3.5% ஐயும் பங்களிப்பு செய்திருந்ததாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை கூறுகிறது.
இந்த உண்மைகளை அறிந்தும் தங்கள் சொந்த அரசியல் நலன்களுக்காகவும் அரசியல் சாகஸத்திற்காகவும் (political stunt) ஹர்தால்களுக்கு அழைப்பு விடுக்கும் தமிழ் தலைமைகளைப் பற்றி என்னத்தைச் சொல்ல?
யுத்தத்தில் அழிவுண்டு சிதைவுண்டு போயிருக்கும் தமிழர்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எந்தவித ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் மேற்கொள்ளாத அதே வேளை, பகிஷ்கரிப்புக்களை நடாத்தி, வட-கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் முதலீட்டாளர்களையும் துரத்தி விடும் கைங்கரியத்தை, இந்த தமிழ் தலைமகள் செவ்வனே செய்கின்றன.
பொருளாதார அபிவிருத்திக்கும் அதனுடனான மக்களின் சுபீட்சமான வாழ்விற்கும் அடிப்படையாக அமைவது தொழில்சார் முதலீடுகளே. இந்த முதலீடுகளை தங்கள் தங்கள் நாடுகளுக்கு கவர உலகிலுள்ள 190 சொச்ச நாடுகளோடு இலங்கையும் போட்டி போடுகிறது. அவ்வாறு இலங்கைக்குள் வரும் முதலீடுகளை தங்கள் தங்கள் மாகாணங்களுக்குள் உள்வாங்க ஒன்பது மாகாணங்களும் முட்டி மோத வேண்டும்.
எங்களது பகிஷ்கரிப்புகளும் ஹர்த்தால்களும் கடையடைப்புக்களும் வெற்றி பெற வேண்டுமென்றால், நாங்கள் முதலில் பொருளாதார ரீதியில் பலம் பெற வேண்டும். புலம்பெயர்ந்த எங்களுறவுகளின் முதலீடுகளுக்கும் வெளிநாட்டு உள்நாட்டு நிறுவனங்களின் முதலீடுகளுக்கும் உகந்த பிரதேசமாக வட-கிழக்கு மாகாணங்களை மாற்ற வேண்டும்.
முதலீட்டாளர்கள் ரஜினிகாந்தை வரவழைத்து வவுனியாவில் திறப்பு விழா நடாத்தவும் டென்டுல்கரை கூப்பிட்டு கிளிநொச்சியில் கிரிக்கெட் போட்டி நடாத்தவும் எதிர்ப்பு தெரிவிப்பதை நிறுத்த வேண்டும். அதைவிட முக்கியமாக எங்கள் தலையில் நாங்களே மண் வாரியிறைக்கும் பகிஷ்கரிப்புக்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
ஒரு விதத்தில் இன்று நாங்கள் அரங்கேற்றும் பகிஷ்கரிப்புகளும், 1931ம் ஆண்டு தேர்தல் பகீஷ்கரிப்பைப் போல், வான் கோழி நடனங்களே. எந்தவித பொருளாதார வலுவுமற்று, ஹர்த்தால் நடாத்துவதால் எதிரிக்கு எந்த வித பாதிப்பும் நேராது என்றறிந்தும், கடையடைப்பு நடாத்தி வியாபாரத்தை முடக்கி, அன்றாட வேதனத்தில் வாழும் எம்மவர்களை நாங்களே நிர்க்கதியாக்கும் செயற்பாடுகளை நாங்கள் நிறுத்த வேண்டும்.
நீதியும் நியாயமுமான எங்கள் கோரிக்கைகளை உலகுக்கு எடுத்துரைக்க, எழுக தமிழ் போன்ற பேரணிகளுக்கும் உண்ணாவிரதங்களுக்கும் பகிஷ்கரிப்புகளுக்கும் அழைப்பு விடுக்கும் அரசியல் தலைவர்களை, எங்களுக்காக ஒரு நாளேனும் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாகவும் அலரி மாளிகைக்கு பின்பாகவும் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் உண்ணாவிரதம் இருக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.
ஒரு விதத்தில் இன்று நாங்கள் அரங்கேற்றும் பகிஷ்கரிப்புகளும், 1931ம் ஆண்டு தேர்தல் பகீஷ்கரிப்பைப் போல், வான் கோழி நடனங்களே (slguardian.org)
ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள், அந்த மக்களின் உரிமைக்காக தங்களை வருத்தி போராட வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா?
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக “ஊர் வாழ வேண்டுமென்ற, உன்னத நோக்கம் கொண்டு, ஏராளமான துயர் தாங்கி நின்று” களமாடிய ஆயிரமாயிரம் போராளிகள் உலாவிய எங்கள் தேசத்தில்,  அரசியல் உரிமைகளுமின்றி, ஆக்கிரமிக்கப்பட்ட தங்கள் காணிகளை மீட்கவும் காணாமல் போன தங்கள் உறவுகளை தேடியும் போராடும் எம்மக்களுக்கு தலைமை தாங்கவென முன்வரும் எவரும் அந்த மக்களுக்காக தியாகங்கள் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா?
“கான மயிலாட கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் தானுந்தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினார் போலுமே” என்றுள்ள எங்கள் பகிஷ்கரிப்புகளுக்கு விடை கொடுப்போம். எங்கள் போராட்ட வடிவங்களை மாற்றி எங்கள் தலைவர்களை முன்னிறுத்தி  போராடங்களில் ஈடுபடுவோம். அதேவேளை எங்கள் பொருளாதாரத்தை வளப்படுத்தி வான்கோழிகளாக எங்களைப் பார்ப்பவர் கண்களில் நாங்களும் கான மயில்களாக அவதாரம் எடுப்போம்.
போலிப் பகிஷ்கரிப்புகளை பகிஷ்கரிப்போம் !