செவ்வாய், 22 நவம்பர், 2016

மாவீரன் பரதன் » sudarshana-krishna

மாவீரன் பரதன்

by amas32


மகாவிஷ்ணுவின் ஐந்து ஆயுதங்கள் சக்கரம், சங்கு, கதை, வாள், வில். இந்த ஐந்து ஆயுதங்களும் மகாவிஷ்ணுவின் பணிகளைச் செய்ய எப்பொழுதும் தயாராக இருக்கும். இதில் முதன்மையானது வலது கரத்தில் தாங்கியுள்ள சக்கரம் என்று சொல்லப்படும் சுதர்சனப் பெருமாள்தான். திருமாலின் அம்சமாகவே இவர் விளங்குகிறார். எனவே, சுதர்சனரை திருமாலாகவே வணங்குகின்றோம். பஞ்ச ஆயுதங்களின் முதன்மையான சுதர்சனத்திற்கு சக்கரத்தாழ்வார் என்று ஆழ்வார் பட்டம் கொடுக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டுள்ளது.
·         கஜேந்திர மோட்சத்தில், யானையின் காலைப் பிடித்துக்கொண்ட மகேந்திரன் என்ற முதலையை சீவித் தள்ளி, கஜேந்திரனைக் காப்பாற்றியது சுதர்சன சக்கரமே.வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய் ஆழி பணி கொண்டான் 2-10-8″
·         மஹாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்த போது கோரைப் பற்களாக அமைந்து தீயவர்களைக் கிழித்து, அந்தக் கோரைப் பற்களால் பூமியை கடலுக்கடியிலிருந்து தூக்கி வருவதற்கு துணையாக இருந்தது சுதர்சன சக்கரமே
·         வாமன அவதாரத்தில், மாவலி சக்கரவர்த்தி வாமனனனுக்கு மூவுலகை தானம் செய்ய தாரை வார்க்க முயலும் போது தண்ணீர் விழும் துவாரத்தை ஒரு வண்டாக மாறி சுக்கிராச்சாரியார், தடை செய்தபோது ஒரு தர்பை கொண்டு அதன் கண்ணினை குத்தியது சக்கரத்தாழ்வார்  – சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கரக் கையனே ! அச்சோ அச்சோ சங்கம் இடத்தானே ! அச்சோ அச்சோ 1-8-7“
·         ஸ்ரீநரசிம்ம அவதாரத்தின் போது சுதர்சன ஆழ்வார்  கூர்மையான கை நகங்களாக அமைந்து இரணியன் வயிற்றைக் கிழித்து வதம் செய்தார்.
·         கிருஷ்ணாவதாரத்தின் போது சிசுபாலனை வதம் செய்ய உதவியதும் சுதர்சன் சக்கரமே. ஜெயத்ரதனை வதம் செய்த போது, சூரியனை மறைத்து, உதவியது ஸ்ரீசுதர்ஸன சக்கரம்தான்தேவகி தன்  சிறுவன் ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப 4-1-8“
·         அம்பரிஷ மகாராஜாவிடம் கோபித்துக்கொண்ட துர்வாச முனிவரை துரத்தித் தாக்கியதும், அவரை திரும்ப அம்பரிஷ  மகாராஜாவிடம் சரண் அடைய செய்ததும் ஸ்ரீ விஷ்ணுவின் சுதர்சன சக்கரமே.
திரேதா யுகத்தில் இராமாவதாரத்தின் போது சக்கரத்தாழ்வாரே பரதனாக அவதாரம் எடுத்தார். அவரையும் பரதாழ்வார் என்றே அழைக்கிறோம். ஸ்ரீராமனின் பாதுகையைத் தன் தலையில் தாங்கிக் கொண்டு சென்ற இளவல் பரதாழ்வார், எம்பெருமானிடத்தில் ஆழ்ந்தவர் என்பதால் தான் அப்பெருமை!
வீரத்தின் உறைவிடம், நேர்மையின் இருப்பிடம் சுதர்சன சக்கரம். அதன் அம்சமாகப் பிறந்த பரதன் அவ்வாறு குணத்துடன் இருப்பது இயல்பே.
இறைவன் எதைத் தந்தாலும் அது நல்லதுக்கே என்று ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் பரதனிடம் இருந்தது. ஒரு மாவீரனுக்கான அடையாளம் அது. இராமன் மேல் அசைக்க முடியாத பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருந்தான் பரதன். ஆனால் இராமனே சொன்னால் கூட, அறம் என்று அவன் நினைத்ததை, பரதன் ஒரு போதும் விலக நினைக்கவில்லை. இராம பக்தியையும் விஞ்சி நிற்கிறது அவனின் அறத்தின் மேல் கொண்ட பிடிப்பு.
அரசு வேண்டாம். தாய் கூட வேண்டாம். இந்த இடத்தில் இராமன் ஒன்றே பிராதானம் என்று நினைக்கிறான். உன் தந்தை தயரதன் இறந்து போனான் என்று கைகேயி பரதனிடம் கூறினாள். அதைக் கேட்ட பரதன் துக்கப் படுகிறான். தான் பெற்ற வரங்களினால் தயரதன் இறக்கவும், இராமன் காடு போக நேர்ந்ததையும் கைகேயி சொல்லக் கேட்ட பரதன் அவளை பலவாறாக வைது தீர்க்கிறான். அழுது புலம்புகிறான். அறம் பிறழ தானும் ஒரு காரணம் என்று உலகம் சொல்லுமே என்று வருந்துகிறான்.
அழுது புலம்புவது ஒரு மாவீரனுக்கு அழகா என்கிற கேள்வி எழலாம்? ஆனால் அவன் நொந்து போய் உட்கார்ந்து விடவில்லை. தவறை சரி செய்ய அடுத்தடுத்த முயற்சிகளை எடுத்து கர்ம வீரனாக செயல் படுகிறான். சோகத்துடன் இருந்த கோசலையை அவன் பார்க்கப் போனான். மேலும் இராமனுக்குப் பதில் தனக்கு அரசாளும் உரிமையும், தன் தாயினால் இராமன் காட்டுக்குப் போகும் அவலமும் ஏற்பட்ட அந்த நிலையில் இராமனின் தாயைப் போய் பார்க்கத் தனித் துணிச்சல் வேண்டும். மாவீரன் பரதன் அதைச் செய்தான்.
பாடல் 2197 கம்பராமாயணம்
மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன்;
செய்யனே என்பது தேரும் சிந்தையாள்
கைகயர் கோமகள் இழைத்த கைதவம்
ஐய! நீ அறிந்திலை போலுமால்?‘ என்றாள்.
பரதா, உன் தாய் செய்த வஞ்சனை உனக்குத் தெரியாதா என்று கேட்கிறாள். அதில் மறைந்து நிற்கும் தொனி, உனக்கு தெரிந்தே இது நடந்திருக்கும் என்பதே. பரதன் குற்றமற்றவன் என்று கோசாலைக்குத் தெரியும். மையறு மனத்தன் என்று அவள் அறிவாள். இருந்தும் "உனக்குத் தெரியாதா" என்று கேட்கிறாள்.
கைகேயி செய்தது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தால், இன்னின்ன பாவங்கள் செய்தவர்கள் போகும் நரகத்திற்கு நான் போகக் கடவேன் என்று மிகப் பெரிய பாவங்களின் பட்டியலைத் தருகிறான். ஒரு அநீதி நடக்கிறது என்றால், அதை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதும் கூட அந்த அநீதிக்கு துணை போவது போலத்தான். ஒன்றும் செய்யாமல் இருப்பதும், அந்த அநீதியை செய்வது போலத்தான் என்பது பரதனின் எண்ணம்.
இதில் தெரிகிறது பரதனின் வீரமும் நேர்மையும்!
அவனால் கைகேயியை அவனால் தண்டிக்க முடியவில்லை. ஏன் என்றால் கைகேயிக்கு ஏதாவது துன்பம் செய்தால் அது இராமனுக்கு பிடிக்காது என்று பரதனுக்குத் தெரியும். கைகேயியைத்தான் ஒன்றும் செய்யவில்லை, தானும் இந்த அறம் வழுவிய செயலைக் கண்டு இறக்கவில்லை என்றால் தானும் இந்த அநீதியை பங்கு கொண்டது போலத்தான் என்கிறான்.
பாடல் 2172 கம்பராமாயணம்
மாண்டனன் எந்தை, என் தம்முன் மா தவம்
பூண்டனன், நின் கொடும் புணர்ப்பினால்; என்றால்,
கீண்டிலென் வாய்; அது கேட்டும், நின்ற யான்
ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்?
இப்படிப் பட்ட வரம் கேட்டது தெரிந்த பின்னும் நானும் இறக்காமல் இருக்கிறேன். இது நான் இந்த அரசை ஆசையோடு ஏற்றுக் கொண்டதற்கு ஒப்பாகும் என்கிறான். தாய் செய்த தவறுக்கும் தார்மீகப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான், ஒரு மாவீரனைப் போல!
இராமன் காட்டுக்குச் செல்லவும் நாட்டை பரதனிடம் கொடுக்கவும் கைகேயி இராமனிடம் அறிவுருத்திய பிறகு இராமன் நேராக கோசலையின் மாளிகைக்குச் செல்கிறான். இராமன் முடி சூடப் போவதில்லை, பரதனே அரசாளப் போகிறான் என்பதை அறிந்து கொள்கிறாள் கோசலை.
1609.
முறைமை அன்று என்பது ஒன்று
உண்டு; மும்மையின்
நிறை குணத்தவன்;
நின்னினும் நல்லனால்;
குறைவு இலன்எனக்
கூறினள் - நால்வர்க்கும்
மறு இல் அன்பினில்,
வேற்றுமை மாற்றினாள்.
இராம இலக்குமண பரத சத்துருக்கனர்களாகிய நால்வரிடத்தும் குற்றம் அற்ற அன்பு செலுத்துவதில் வேறுபாட்டை நீக்கி ஒரே தன்மையவளாய் உள்ள கோசலை மூத்தவன் இருக்கும் போது இளையவன் அரசாளுவது முறைமை இல்லை என்ற ஒரு குறை உண்டு, ஆயினும் மூன்று மடங்கு எல்லாரினும் மேம்பட்டு நிறைந்த குணத்தினை உடையவன், உன்னையும்விட நல்லவன்,   கல்வி, இளமைவீரம், குணம் முதலிய யாவற்றாலும்  யாதொரு குறைவும் இல்லாதவன் பரதன் என்று சொன்னாள். அதாவது அவன் ஆட்சி பீடத்துக்கு வருவதில் தனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்கிறாள்.
கைகேயியின் அன்பு பெரிதும் இராமனுக்கும், கோசலையின் அன்பு
பெரிதும் பரதனுக்கும் அமைந்துள்ளதை இக்காவியத்தில் காணலாம்.
நின்னினும் நல்லன்என்பதைப் பின் வரும் எண்ணில் கோடி இராமர்கள்
என்னினும், அண்ணல் நின் அருளுக்கு அருகாவரோஎன்ற (10181.)
கோசலைக் கூற்றை ஒப்பு நோக்கி நாம் உணர வேண்டும்.  இதில் நாம் கவனிக்க வேண்டியது பரதனைப் பற்றிய கோசலையின் கணிப்பை தான்.
கைகேயி மகனின் பண்பை புரிந்தவளாக இருந்திருந்தால் தயரதனிடம் பரதனுக்காக அரசாளும் வரத்தை கேட்டிருக்க மாட்டாள். தயரதன் இறக்கும் தருவாயில் கைகேயியை தன் மனைவியேயில்லை, பரதனும் தனக்கு இறுதிச் சடங்குகளை செய்யக்கூடாது  என்று வசிட்டரிடம் கூறி விடுகிறார். இந்நிலையில் யாரிடமாவது ஆறுதல் பெற முடியுமா என்று தாயை நோக்கி ஓடும் கன்றினைப் போல பரதன் கோசலையைப் பார்க்கச் செல்கிறான் பரதன். அவளோ உன் அன்னை தீட்டிய திட்டம் உனக்கு முன்பே தெரிந்ததோ என்று கொதிக்கும் சொற்களை அவன் மேல் சொரிகிறாள். அடுத்து பரதனிடம் முடிசூட்டு விழாவை ஏற்பாடு செய்யலாமா என்று வசிட்டர் கேட்கிறார். இராமனைப் போல மரவுரியைத் தரித்துக் கொண்டு கானகம் சென்று இராமனை அழைத்து வர புறப்பட்டுக் கொண்டு இருந்தவனைப் புரிந்து கொள்ளாமல் இவ்வாறு கேட்கிறார் வசிட்டர். கங்கைக் கரையை அடையும் நேரத்தில் பெரும் திரளாக பரதன் வருவதைக் கண்டு குகனும் இராமனை வீழ்த்தத் தான் பரதன் பெரும் படையுடன் வருகிறான் என்று நினைக்கிறான் குகன். எப்பொழுதும் கோபத்துடனே இருக்கும் இளவல் இலக்குவன் புழுதி பறக்க பரதன் அயோத்தி மக்களுடன் வருவதை தூரத்தில் இருந்து பார்த்தவன் தன் வில்லை எடுத்து பரதனுடன் போர் புரிய ஆயத்தமாகிறான்.
தன்னை சுற்றியுள்ள அன்பு நெஞ்சங்களே அவனைப் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், புண்படுத்தினாலும், வரிசையாக அவன் துயரத்தை அனுபவித்தாலும் தன் அறத்தில் இருந்து அவன் ஒரு போதும் பிறழவில்லை. எவ்வித மனச் சோர்வு வந்தாலும் தளர்ந்து விடாமல் இருப்பதும் ஒரு மாவீரனக்கழகே.
பரதனை மிகச் சரியாக, பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொண்டவர்கள், குகனுடைய படை வீரர்கள்தான். வருகிறவனைப் பார்த்தால் சண்டைக்கு வருகிறவன் மாதிரி தெரியவில்லையே. போருக்கான எந்த ஆயுதமும் இல்லை. இவனும் நமது தலைவன் இராமன் மாதிரி மரவுரி கட்டியல்லவா வந்திருக்கிறான் என்று கேட்கிறார்கள். அப்போதுதான், ஆத்திரத்தைத் தணித்துக்கொண்டு அமைதி நிலைக்கு வரும் குகன் ஓடி சென்று பரதனிடம், அண்ணன் இராமனை நேரில் சந்தித்து அவனுக்கு உரிய அரசாங்கத்தை அவனுக்கே திருப்பித் தருவதுதான் முறை என்று முடிவு செய்து இந்த வனத்துக்கு வந்திருக்கிறாய், அந்த நல்ல சிந்தனை உன் முகத்தில் தேங்கியிருக்கிறது என்று கூறுகிறான். ‘பரதா, உன்னுடைய நல்ல குணங்களையெல்லாம் எடை போட்டுப் பார்த்தால், ஆயிரம் இராமர்கள்கூட உனக்கு இணையாகமாட்டார்கள்!’ என்கிறான். பின்  பரதனை  ராமன் இருக்கும் இடத்துக்கு அழைத்து வருகிறான்.
போர் புரிவதில் வருவதில்லை வீரம், போர் புரிய வாய்ப்பிருந்தும் புரியாமல் அற வழி நிற்பதே மாவீரனுக்கழகு!
பரதன், அண்ணனிடம் நீங்கள் வந்து முடிசூட்டி ஆட்சிபுரிய வேண்டும் என்று மன்றாடி கேட்கிறான். இராமனோ தந்தை சொல்லை தன்னால் மீற முடியாது, பதினாலு ஆண்டு வனவாசம் புரிய வேண்டும் என்ற ஆணையை தான் கைவிடக்கூடாது என்கிறார். பதினாலு ஆண்டுகளை பதினாலு நாட்களாகக் கழித்து விட்டு வந்து அரசாட்சியை எடுத்துக் கொள்கிறேன் நீ அயோத்திக்குப் போய் கடமையைச் செய் என்கிறார். தேவர்கள் அசீரியாக இராமர் வனவாசம் புரிதல் வேண்டும் என்று கூறுகிறார்கள். திரும்பி வர பதினாலு ஆண்டுகளுக்கு மேல் ஒரு நொடி அதிகம் ஆனாலும் உயிர் தியாகம் செய்வேன் என்று பரதன் சொல்கிறான். கொள்கைக்கு முன் உயிரை துச்சமெனக் கருதுகிறான் மாவீரன் பரதன். எம்பிரானுடைய பாதுகைகளைப் பெற்றுக் கொண்டு பலமுறை இராமபிரானைத் தொழுது அழுது புறப்படுகிறான் பரதன்.

அயோத்திக்கே செல்லாமல், அருகில் நந்திக் கிராமத்தில் மணி மண்டபம் அமைத்து, இராமனுடைய பாதுகைகளை வைத்து, அப்பாதுகைகளுக்கு முடிசூட்டி வழிபட ஆரம்பிகிறான் பரதன். தென் திசையையன்றி வேறு திசையை நோக்காமல் பொறி புலன்களை அவித்து உப்பில்லாத கஞ்சியைப் பருகி, இராமனின் பாதுகைகளுக்கு தினந்தினம் ஆயிரம் மந்திரங்களால் அர்ச்சனை புரிந்து இடையறாத இராம பக்தியுடன் தவநெறியில் இருந்தான் பரதன்.
இலங்கை வேந்தன் இராவணனை வதம் செய்த பின்னர் இராமபிரான் சீதாதேவியுடன் அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது வழியில் பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில் முன்பே வாக்குக் கொடுத்திருந்தபடியால் அனைவரும் தங்கினார்கள்.
இதற்கிடையில் குறித்த நாளில் ராமபிரான் அயோத்திக்கு வராத காரணத்தால் முன்பு கூறியது போல் பரதன் தீயில் விழுந்து உயிரை விட முற்பட்டான். இதுவும் மாவீரனுக்குரிய ஒரு செயல்! அப்போது ராமனால் அனுப்பப்பட்ட அனுமன், பரதனை தடுத்து தான் கொண்டு வந்திருந்த மோதிரத்தை காட்டினான். இதைக்கண்டு மகிழ்ந்த பரதன், சத்ருக்கனன் ஆகியோர் இராமனை அழைத்து செல்வதற்காக அனுமனுடனே பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்துக்கு சென்றனர்.
இராமனை உயர்த்திக் காட்ட வந்த பல பாத்திரங்களுள் பரதன் மிக முக்கிய பங்கை வகிக்கிறார். இலக்குவன் இராமன் கூடவே இருக்கும் பேற்றினைப் பெற்றான். ஆனால் பரதனோ அவப் பெயரையும் சுமந்து, இராமனையும் பிரிந்து பதினாலு ஆண்டுகள் தவ வாழ்க்கையை வாழ்ந்தான். அவனின் ஒவ்வொரு செயலும் இராமனைப் பெருமை படுத்துவதாகவே அமைந்தது. இராமன் பட்டாபிஷேகம் பின்னொருநாளில் தான் வந்தது. ஆனால் அதற்கு முன்பே இராமனின் திருவடிகளைத் தொட்ட பாதுகைக்கு அளப்பறியா பெருமை சேரும்படி பாதுகா பட்டாபிஷேகத்தை நிகழ்த்தியவன் பரதன். சக்கரத்தாழ்வாராகிய பரதாழ்வாரின் புகழ் இராமன் புகழ் இருக்கும் காலம் வரை இதனால் இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில
nanri amas

ஞாயிறு, 20 நவம்பர், 2016

தனித்திரு விழித்திரு பசித்திரு.....: டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

தனித்திரு விழித்திரு பசித்திரு.....: டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

யார் இந்த ரகுராம் ராஜன்









யார் இந்த ரகுராம் ராஜன்?ஏன் அவர் பதவியை நீட்டிக்காதது பெரிதாக பேச படுகின்றது ?
தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட பொருளாதார வல்லுனரான ராஜன் 2008 உலக பொருளாதார சரிவை மிக சரியாக கணித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார் . மட்டும் இல்லாமல் உலக பொருளாதார இயக்கமான IMF இல் மிகக்குறைந்த வயதில் தலைமை பொருளாதார நிபுணராக பணியாற்றிய பெருமை உடையவர்.
2013 இல் உலகத்தில் பல நிறுவனங்கள் கோடி கணக்கில் சம்பளம் கொடுக்க தயாராக இருந்த போதும் அதை விட்டு விட்டு இந்திய பொருளாதரத்தை நிர்ணயிக்கும் முக்கியமான RBI governor பதவியை ஏற்றுக்கொண்டார்.அவர் செய்த முக்கியமான பணிகள்
1) அவர் பதவி ஏற்ற பொழுது நம் பொருட்களின் விலைவாசியை குறிக்கும் பணவீக்கம் 11 சதவிதத்துக்கு மேல் இருந்தது அதை பாதிக்கு மேல் குறைத்து உள்ளார்.
2) இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பை 25 லட்சம் கோடி(3.6 பில்லியன் அமெரிக்கா டாலர் ) அளவுக்கு உயர்த்தி உள்ளார்.
3) இந்தியா வங்கி துறையில் வார கடன்கள் மிகவும் அதிகமாக உள்ளதை சரி செய்யும் துணிச்சாலான நடவடிக்கைகளில் இறங்கினார் (Banks asset review).
4) இந்திய பொருளாதாரம் மிக சிறந்த ஒரு நிபுணரின் கையில் உள்ளது என்று உலக நிதி நிறுவனங்கள் முதலீடு செய்யும் சூழலை உருவாக்கினார் .
இது எல்லாவிற்றுக்கும் சிகரம் வைத்ததது போல 2016 அம் ஆண்டின் உலக முக்கியத்துவம் வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக Time நாளிதழால் தேர்வு செய்ய பட்டார்.
இவர் இப்போது பதவியை நீட்டிப்பு செய்ய விரும்பவில்லை என்று சொல்ல முக்கியமான காரணங்கள் .
1.துணிச்சலாக தனது முடிவுகளை எடுக்க கூடிய ராஜனின் செயல்கள் இந்தியாவில் உள்ள பல முறைகேடாக கடன் பெற்ற தொழிலதிபர்களின் வயிற்றில் புளியை கரைத்தது.அவர்கொடுத்த அழுத்தம் மூலமாக வங்கிகள் கொடுக்கப்பட்ட வாரா கடன்களை வசூல் செய்ய கிளம்பின.முன் போல் இல்லாமல் பெரும் கடன் வைத்துள்ள பணக்காரர்களிடமும் கடன் வசூல் செய்ய கிளம்பின.இதனால் தான் விஜய் மல்லயா,அணில் அம்பானி போன்ற முறையில்லாமல் கடன் வைத்துள்ள முதலாளிகளுக்கு நெருக்கடி உருவானது.விஜய் மல்லயா நாட்டை விட்டு ஓடினார்.அம்பானி போன்றோர் தங்கள் சொத்துக்களை விற்க வேண்டிய சூழ்நிலை உருவானது.இவர்கள் அரசியல்வாதிகள் மூலமாக ராஜனுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினர்.
2.அரசாங்கம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட தயங்காத ராஜனின் செயல்பாடுகள் அரசியல்வாதிகளை பயம் கொள்ள செய்தது. மோடியின் "Make in India" வில் உள்ள குறைகள் போன்றவற்றை அவர் சுட்டிக்காட்டியது மற்றும் தொழில் அதிபர்கள் எளிதாக கடன் பெற வங்கி வட்டி விகிதத்தை குறைக்க சொல்லிய போது போது அவ்வாறு செய்வது விலை வாசியை உயர்த்தும் மற்றும் ஏழை ,நடுத்தர வர்க்கத்தை வர்கத்தை பாதிக்கும் என்று அவர் மறுத்தது அரசியல் வாதிகளை கோபம் செய்ய தொடங்கியது .
3.இவரால் பாதிக்கப்பட்ட பெரும் பண முதலைகள் சுப்ரமணியன் ஸ்வாமி மூலமாக காய் நகர்த்த தொடங்கினர்.ஸ்வாமி ராஜன் ஒரு தேச துரோகி என்று வெளிப்படையாக பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
இதன் தொடர்ச்சியாக மனம் வெறுத்த ராஜன் ,தான் செப்டம்பர் மாதத்திக்கு பிறகும் தான் விரும்பும் பேராசிரியர் பணிக்கு திரும்ப செல்வதாக அறிவித்து உள்ளார்.
ராஜன் போன்ற திறமைசாலிகள் இந்தியாவை விட்டு வெளியேறுவது இந்தியாவுட்கு பெரும் இழப்பு என்று அமர்த்தியா சென் போன்ற பல பொருளாதார மேதைகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.வரும் காலங்களில் இந்தியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்றும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
எது எப்படியோ இந்திய பண முதலைகள் மற்றும் சுப்ரமணியன் ஸ்வாமி போன்ற அரசியல் தரகர்களுக்கு இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.
இதுதான் நம் தேசத்தின் அவல நிலை!