வியாழன், 13 ஏப்ரல், 2023

தூங்காமை,கல்வி,துணிவுடமை.

 இன்றைய குறள்:

பொருட்பால் > அரசியல் > இறைமாட்சி
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.   (383)

நாடாளும் மன்னனுக்கு, விரைவாகச் செயலைச் செய்தலும், அதனை அறியும் அறிவும், செய்யும் துணிவும் என்னும் மூன்று திறனும் நீங்காமல் இருக்க வேண்டும்
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.
— மு. வரதராசன்

செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.
— சாலமன் பாப்பையா

காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்
— மு. கருணாநிதி

செவ்வாய், 11 ஏப்ரல், 2023

வருவிருந்து..

 

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று. 

நாள்தோறும் தன்னை நாடி வரும் விருந்தினரைப் போற்றுகிறவனுடைய இல்வாழ்க்கை துன்பத்தால் பாழ்படுதல் என்றும் இல்லையாகும்  (௮௰௩)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.  (௮௰௩)
— மு. வரதராசன்


நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.  (௮௰௩)
— சாலமன் பாப்பையா

திங்கள், 3 ஏப்ரல், 2023

ஈனருக்கு உரைத்திடாதே

 ஈனருக்கு உரைத்திடாதே .


வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்,
தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும்,
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்,
ஈனருக் குரைத்திடில் இடர தாகுமே.
 (விவேக சிந்தாமணி)

ஒரு குரங்கானது மழையில் நனைந்து துன்பப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்த (முன்னரே கூடுகட்டி வசிக்கும்) தூக்கணம் பறவை ஒன்று, தன்னைப்போல் ஒரு இருப்பிடம் அமைத்து பாதுகாப்பாக வாழக்கூடாதா? என்று கேட்க, கோபம் கொண்ட குரங்கு குருவியின் கூட்டை பிய்த்தெறிந்தது. கீழான குணம் கொண்ட அறிவில்லாதவர்க்கு கல்வியால் தான் பயின்ற நூல்களின் ஞானத்தை உபதேசம் செய்தால் அது துன்பத்தை உண்டாக்கும். 

(கேளாமல், தகுதி பாராமல் எதையும் சொல்லாதே)
நனறி:Purnayogamp0

அகவை தின, வாழ்த்துகள்..!

 


                                                                        24-03-1965

ஐம்பத்தெட்டாவது அகவையில் கால்பதிக்கும்,-திருமதி

எனதருமைத் துணைவிக்கு,இனிய வாழ்த்துக்கள் 

கடந்துவந்த பாதையில்,சாதனைகளையும்-பல

சோதனைகளையும்,சரிசமமாக ஏற்று,

சரித்திரமாக மாற்றும், வல்லமை கொண்ட-எந்தன்

வெற்றித் திருமகளே,! வாயார வாழ்த்துகின்றேன். 

இப்புவியில் இணைந்த நாள் தொட்டு,இனிதாக-நீ

இன்னும் வாழ, இறைவனை பிரார்த்திக்கிறேன்,!